வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் (30.08.2023) அன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் மாதம் 30 திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வருடம் எதிர்வரும் (30.08.2023)ஆம் திகதி புதன்கிழமை ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இடடம்பெறவுள்ளது.
இத்தினத்தன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யுத்த காலத்தின் இறுதி கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான தொடர்ச்சியாக 2300 நாட்களுக்கு மேலாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது. கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை உள்ளடக்கி தெற்கில் இயங்கிவரும் அமைப்பான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் (31 .08.2023)ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளது.
அதுமாத்திரமன்றி அன்றைய தினம் மாலை ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போவதற்கு இடமளிக்காதிருப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுகூரல் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.