இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி ….
நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி.
“நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….”
“அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே …..”
அம்மாவையும், அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள், அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால், அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலிருப்பாள். அவளது மனம் புழுங்கிக் கொண்டிருக்கும்.
வழமைபோல அன்றும் அவர்கள் வந்தார்கள். அம்மா வாசலில் இருந்தால். அருகில் அக்கா , வீட்டுக்குள்ளே அக்காவின் பிள்ளைகள். அவர்கள் படலையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள்….
“நேற்று மாவிட்டபுரத்தில் உன்ரமகனைச் சுட்டுப்போட்டம் , உடம்பு இருக்கு வந்து எடு ….” ஒருவன் வெற்றிக் களிப்போடு உறுமினான். தலையில் இடி விழுந்தது போல இருந்தது அம்மாவுக்கு. அக்கா அதிர்ந்து போனாள். அக்காவின் பிள்ளைகள்…. அழுது குழறினார்கள். ஊர் அழுதது. ஆனால் அம்மா மெளனமாகவே இருந்தாள். அவளால் அழ முடிவதில்லை. அவள் அழமாட்டாள்; இழப்புக்களால் உறுதியான தாய்.
“எங்கட வீட்டில்தானே ஒரு ஆம்பிளையனையும் நீங்கள் இல்லாமல் செய்து போட்டியள்…. வந்தெடுக்கிறத்துக்கு இங்க ஆக்கள் இல்ல …..” கண்ணீரோடு ஆனால் கடுமையாக அக்கா கூறி முடித்தபோது , அவர்கள் போய் விட்டார்கள்.
அக்கா அம்மாவின் இரண்டாவது பிள்ளை. ஆறு ஆண் சகோதரர்களுக்கு ஒரு பெண் பிள்ளை.
நெடுமாறனைக் கட்டிலில் படுக்கவைத்திருந்தார்கள் – அருகில் கதிரையிலிருந்து தன்வீரமகனின் உடலை அம்மா கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அழவில்லை. பிள்ளைகள் போராட்டத்தோடு கலந்தபோது , அவர்கள் பிணமாகத்தான் வருவார்கள் என்பதை , அம்மா தெரிந்திருந்தாள்.
11.08.1984 – சுன்னாகம் ஊரிலிருந்து மக்களைப் பிடித்துவந்து காவல் நிலையத்தினுள் அடைத்து – வாசல் கதவுடன் வெடிகுண்டை இணைத்துவிட்டு சிங்களப் படையினர் போய்விட்டனர்.
செய்தியை அறிந்த புலிகள் மக்களை மீட்பதற்காக அங்கு விரைந்தனர்.
சஞ்சீவியும் , நிக்கியும் இன்னும் சில தோழர்களும் , வாசல் கதவிற்குப் பின்னாலிருந்த வெடிகுண்டின் அபாயத்தை தெரிந்திருக்காத நிலையில் உள்ளே புகமுயன்றபோது அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களுடன் , சஞ்சீவியும் , நிக்கியும் வீரச்சாவை அணைத்துக் கொண்டண்டார்கள்.
சிதைந்து போன சஞ்சீவியின் உடலைச் சேர்த்து எடுத்து – ஒன்றாக்கி , அம்மாவிடம் கொண்டு வந்தனர் தோழர்கள். தனது செல்வங்களில் ஒன்றை அம்மா முதலில் இழந்து விட்டாள். அம்மா அழுதாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன்தான் அம்மாவின் செல்லப் பிள்ளை. சஞ்சீவியின் அக்கா கதறினாள். உடன்பிறந்தவர்கள் , உறவினர்கள் , சுற்றத்தார் , தோழர்கள் எல்லோருமே துயரத் தாங்கிய விழிகளில் கண்ணீரோடு நின்றார்கள்.
1982 – 1983 காலங்களில் இயக்கத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தி , விடுதலைப்பணியை ஆற்றத் துவங்கினான் சஞ்சீவி.
ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான் : ” ஆறு ஆம்பிளையள் இருக்கிறமம்மா …. ஒரு ஆள் எண்டாலும் போராடப் போகலாம் தானே …. ” என்று. அம்மா ஏற்றுக்கொள்ள முடியாமலும் , ஆனால் மறுக்காமலும் சமாளித்துக் கொண்டாள்.
1983 – ஜூலை நிகழ்வுகளுக்குப் பின் இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து , புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பிரிவில் பயிற்றி பெற்றான்.
சஞ்சீவி , அம்மாவின் ஆறாவது பிள்ளை , நெடுமாறனுக்கு நேரே மூத்தவன். அண்ணனின் உடலைக் கண்ட போது , அண்ணன் மரணித்த அதே இலட்சியத்திற்காக தானும் போராடுவேன் என்ற உறுதியுடன் தான் , நெடுமாறன் போராடப் புறப்பட்டான்.
இயக்கத்தின் ஆறாவது பயிற்சிப் பிரிவில் பயிற்சியை முடித்த நெடுமாறன் , கடற்புலிகள் பிரிவில் சேர்க்கப்பட்டான். கடற்சண்டைகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட முதலாவது குழுவில் ஒருவனாக இருந்து – கடற்புலிகளின் முதலாவது பயிற்சிப் பிரிவில் – பயிற்சிகள் பெற்றான். சிங்களப்படைகளும் இந்தியப் படைகளுக்கும் எதிரான போர்களின் போது – பல முக்கிய சமர்களில் , ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நெடுமாறன் இருந்திருக்கிறான்.
மயிலிட்டிப் பகுதியில் , இந்தியர்களும் அடிவருடிகளும் நிலைகொண்டிருந்த சுமார் பத்து முகாம்களுக்கு நடுவில் , அவன் புயலாக வீசினான். இந்தியப் படையினரையும் , அவர்களுக்குத் துணைபோய் தேசத்திற்குத் துரோகம் இழைத்தவர்களையும் அவனது துப்பாக்கி தண்டித்தது.
30.08.1989 அன்று மாவிட்டபுரத்தில் நடந்த ஒரு வெற்றிகரமான தாக்குதலின்போது கப்டன் நெடுமாறன் எம்மை பிரிந்தான்.
ஒ ருவர் அல்லது இருவர் போராளியாக இருக்கின்ற குடும்பங்களை நாம் பார்க்கின்றோம். எமது தேசத்தின் எல்லா இடங்களிலும் , இவ்வாறான குடும்பங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் , ஒரு குடும்பமே போராளிகளாக நிற்கிற நிகழ்வுகளை , சில இடங்களில் மட்டுமே நாம் காணமுடியும். அவ்வாறான குடும்பங்களில் ஒன்றுதான் அம்மாவின் குடும்பம். அம்மா , தன் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலோடு வீரத்தையும் , துணிவையும் ஊட்டித்தான் வளர்த்திருக்கிறாள். தேசப்பற்றையும் , விடுதலை உணர்வையும் அவர்களுக்கு அம்மா கொடுத்தாள். ஆனாலும் எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் இயல்பைப் போலவே , சஞ்சீவியும் , நெடுமாறனும் போராடப் புறப்பட்டபோது , அம்மாவின் மனம் கவலை கொண்டது. அழுதும் கூட இருக்கிறாள். ஆனால் அம்மா தடுக்கவில்லை. திரும்பி வாங்கோ என்று கேட்கவில்லை.
சோதி அண்ணன் , அம்மாவின் மூன்றாவது பிள்ளை. இந்தியப்படை வளைத்து நின்ற நாட்களில் புலிகளின் தகவல் தொடர்பாளராகச் செயற்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப் பகுதிக்குச் சென்று வந்து – புலிகளுக்கிடையில் முக்கியமான தகல்வல்களைப் பரிமாறினார்.
புலிகளின் உற்ற துணையாக நின்று இவர் செயற்படுகின்றார் என்பது , துரோகிகளுக்குத் தெரிந்திருந்தது. இந்த விடயம் அவர்களுக்குத் தெரியும் என்பது சோதி அண்ணனுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் , அவர் துணிவோடு இயங்கினார்.
01.01.1988 அன்று , சோதி அண்ணனின் வீடு.
சாவு அவரின் கதவைத் தட்டியது.
” சோதி அண்ண …. … சோதி அண்ண …. … ”
‘ எங்கட பொடியல் போலக்கிடக்கு ‘ என்று தனக்குள் எண்ணிக்கொண்டு , ” ஆரது தம்பி …. உங்களுக்கை வாங்கோவன் …. ” என்றபடி படலையை எட்டிப் பார்த்தார் ; அதிர்ந்தார். நெஞ்சு விறைத்தது – அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
” அண்ணை …. உங்களில் ஒரு விசாரணை ….. எங்களோட வாங்கோ திருப்பிக் கொண்டுவந்துவிடுறம் ” – ஒரு தாடிக்காரன் சொன்னான். மனைவி ஓடிவந்து தடுத்தாள்- கதறினாள். பிள்ளைகள் அழுதார்கள் ; ஆனாலும் அவர்கள் கூடிச் சென்றார்கள்.
சில மணித்துளிகள் கழிந்தன. நடு வீதியிலே …. துப்பாக்கி வேட்டோசை ஊரெங்கும் எதிரொலித்தது.
அ ம்மாவின் நாலாவது பிள்ளை குட்டி அண்ணன். புலிகளோடு சேர்ந்து நின்றதால் இந்தியப் படையும் , துரோகிகளும் அவரைக் துரோகிகளும் அவரைக் குறிபார்த்துத் திரிந்தார்கள். அடிக்கடி அவரின் வீட்டுக்குப் போனார்கள் ; கேள்விகளால் துளைத்தார்கள். அவர்களின் தொடர்ச்சியான தொல்லைகள் , அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய நோயை இன்னும் அதிகரித்தது. ஒருநாள் கடலில் தொழிலுக்குப் போயிருந்த குட்டி அண்ணனுக்கு மாரடைப்பு வந்து , அம்மாவிடமிருந்தும் எம்மிடமிருந்தும் பிரிந்து விட்டது. இப்போது குட்டி அண்ணனின் மகள் துப்பாக்கியோடு களத்தில் நிற்கிறாள்.
அக்காவின் கணவர் சிறீதரன்.
இந்தியப் படையினரும், கூடித்திரிந்த கும்பல்களும் அவரை அடிக்கடி பிடித்துச் சென்றார்கள். அப்போதெல்லாம் அவர்களது இரும்புக்கம்பிகளும் , எஸ்லோன் குழாய்களும் தான் அவருடன் பேசின.
1989 இன் நடுப்பகுதியில் ஒரு இரவு.
வழமைபோல அவர்கள் அவரைப் பிடித்துச் சென்றார்கள். மறு நாள் அவர் திரும்பி வரும்போது – உடலில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய உட்காயங்களோடு வந்தார்.
மிகவும் ஆபத்தான நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனாலும்… அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எமைப் பிரிந்து திரும்பி வரமுடியாதாத தொலைவுக்குச் சென்றுவிட்டார். அதன்பின்பு அவரினதும் , அக்காவினது பிள்ளை சுபாஜினி , பதுமநிதியாகி சண்டைக்களங்களில் நின்றாள்.
அம்மா கட்டிலில் இருந்து கொண்டே , முன்னால் தொங்கிக் கொண்டிருக்கும் பதுமநிதியின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பதுமநிதி அம்மாவின் பேரப்பிள்ளை. ஆனையிறவுப் பெருஞ்சமரில் ஒரு நாள் சண்டையில் – அவள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.
அம்மாவுக்கு ஏற்பட்ட இந்தத் தொடர் இழப்ப்புக்கள் , அவளை வேதனையில் ஆழ்த்தின. ஆனாலும் அவள் உறுதியோடும் , நம்பிக்கையோடும் வாழ்கிறார்.
அம்மாவின் மற்றைய மூன்று பிள்ளைள் இப்போதும் புலிகளோடு நிற்கின்றார்கள் ; தமது உடன்பிறந்தவர்களின் நினைவுகளோடு , தேசத்திற்காக உழைகின்றார்கள்.
அம்மா கதிரையில் வாழத்தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அதில் இருந்து கொண்டுதான் துயரங்களைத் தாங்கிக்கொண்டாள்.
உண்மைதான் …. அம்மாவால் நடக்க முடியாது.
அவளை அந்த கொடியநோய் முடக்கிவிட்டது. அசையாமல் இருந்து இரவுகளில் மட்டும் மனதிற்குள் அழும் அம்மாவின் மனதிற்குள்ளும் , நிறைவான சம்பவங்கள் உண்டு.
ஒரு இரவு , அம்மா வழமைபோலவே இருளுக்குள் தன் பிள்ளைகளை இதயத்தால் தேடிக்கொண்டிருந்த போது , கதவு தட்டப்பட்டது. விழித்தால்…யாரோ ஓடிச்சென்று கதவைத் திறந்தனர் ; வெளிச்சம் பரவியது. தேசியத்தலைவர் பிரபாகரன் வந்தார்.
அம்மாவால் நம்பமுடியவில்லை. ஏதோவொரு பரவசத்தில் அம்மா ….தன்னுடைய கட்டிலின் அருகில் வந்திருந்த அவரை , வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா ! உங்கட கையால நான் சாப்பிட்டிருக்கிறன்” – அவர் சொன்னார்.
உண்மைதான் . போராட்டத்தின் ஆரம்பநாட்களில் , தேசியத்தலைவரை சிறீலங்கா காவல்படை கடுமையாகத் தேடிக் கொண்டிருந்த போது – பலாலி படைத்தளத்தின் எல்லையோடு இருந்த பாழடைந்த ஒரு பாடசாலைக் கட்டிடத்தினுள் மறைத்து வாழ நேரிட்ட பொழுது – அம்மாவின் மகன்களில் ஒருவர்தான் தேசியத்தலைவருக்கு உணவு , தண்ணீர் கொடுத்தார்.
இக்கட்டான காலப்பகுதிகளில் , போராட்டப் பயிருக்குக் கவசமாக நின்று பேணி வளர்த்த தேசபக்தர்கள் அவர்கள்.
தனது வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சியை , அம்மா அந்த நாளில் கண்டாள். தேசியத்தலைவர் வந்து தன்னைப் பார்த்துக் கதைத்துவிட்டுச் சென்ற அந்த நாளை , அவள் எப்போதுமே நினைவு கூர்ந்து பெருமைப்படுவாள்.
அக்காவின் வீட்டில்தான் அம்மா இப்போதும் இருக்கிறாள். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. கட்டிலில் இருப்பாள். அவளைப் பார்க்க – அவளுடன் கதைக்க – எமது தோழர்கள் எப்போதும் அங்கே போவார்கள். எங்களை அருகில் இருத்தி – அணைத்துக் கதைப்பாள். பெற்ற தாயின் அரவணைப்பைப் – பாசத்தை – நாங்கள் அதில் உணர்வோம்.
அந்த வீட்டில் எப்போதுமே புலிகளுக்காக அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். அங்கு போகின்ற எந்தப் போராளியும் ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும். இது அம்மாவின் கட்டளை.
அம்மா எங்களிடம் அடிக்கடி சொல்லுவாள். “நீங்கள் எல்லோரும் தான்ரா என்ற பிள்ளையள்” – அதில் ஒரு பெருமிதமும் திருப்தியும் இருக்கும்.
– களத்தில் (தை 1993) .