உறவுகளின் போராட்டம் 2050 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்மொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2050 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (01.10.2022) ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, எல்லோரும் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வாக இருக்கிறார்கள். நாங்கள் சிறுவர் தினத்தை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றோம்.
நாம் 2050 நாளாக இருப்பது யாருக்கும் தெரியாதா, இன்று நாம் தெருவில் இருந்து கண்ணீர் சிந்துகின்றோம். எமது பிள்ளைகள் வராமையால் எங்களுக்கு நிம்மதி இல்லை.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வந்து தீர்வு பெற்று தர வேண்டும்.
எமது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது தான் காணாமல் ஆக்கப்பட்டார்கள். எங்களது கண்ணீர் பொல்லாத கண்ணீர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
எமது தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தர வேண்டும். அவ்வாறு தராவிடின் எமது கண்ணீர் அவர்களை நிம்மதியாக இருக்க விடாது.
எமக்கு நீதி வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிங்களவர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகள் என வெளிப்படுத்தும் பதாதையையும், அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!!
காணாமல்போன பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை. என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வவுனியாவில் அவர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகிறோம் சுமார் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்போருக்கு முன்னும், பின்னும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
எனவே சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே நாம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை பற்றிய உண்மையினை வெளிப்படுத்த முடியும்.
அத்துடன் 40ஆண்டுகளுக்கும் மேலாக, கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களைக் கைது செய்வதற்கு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இலங்கை நம்பியுள்ளது.
இது தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. இதுவே பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.
போரின் போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழு ஒன்று வன்னியில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்தது. அந்த துணை ராணுவப் படைத் தலைவர் இப்போது எம்.பி.யாக இருப்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.
இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழ் குழந்தைகள் அருகில் உள்ள புத்த மடங்களில் பயிற்சி பெற்று இளம் பௌத்தபிக்குகளாய் ஆகியுள்ளனர். அவர்கள் சிங்களக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு இப்போது சிங்களவர்களாக வாழ்கிறார்கள்.
காணாமல்போன 10 பேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் கடந்தவாரம் எங்களுக்கு அறிவித்தனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை.எனினும், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் உண்மையில் பாதுகாப்பாகவும் உயிருடன் இருப்பதாகவும் நாங்கள் கூறிய விடயம் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக எமது தமிழ்த் தலைவர்களும், மக்களும் அமெரிக்காவையும்
ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும். இது நம் குழந்தைகளை தேடுவதற்கு உதவும்.
தமிழ் இனத்திற்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் பங்களிப்பை நாம் பாராட்டுகின்றோம்.அவர் சர்வதேச இராஜதந்திரிகளுடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உதவியை எமக்கு செய்யவேண்டும்.அங்கு தமிழர் இறையாண்மைக்கான எங்கள் விருப்பத்தை திறம்பட வெளிப்படுத்த முடியும். என்றனர்.
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி உறவுகளின் போராட்டம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம்(30) புதன் கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது.
வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்டப் பாதை ஊடாக தபாலகம் வைத்தியசாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
இப்போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.