முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் உள்ள காட்டுப் பகுதியில் தொல்பொருள் சான்றுகளுடன் காணப்படும் ஆதிசிவன் ஆலயத்தின் வரலாறு தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
சிவ வழிபாட்டிற்கு முன்னுரிமை பெற்ற ஒட்டுசுட்டானில், வரலாற்றுச் சிறப்புமிக்க தான்றோன்றீஸ்வரர் சிவ ஆலயம் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயத்தின் உற்சவம் ஆரம்பிக்கப்படும் தருணத்தில், வனப்பகுதியில் உள்ள சிவன் ஆலயம் ஒன்றில் அதே நேரம் பூஜை வழிபாடுகளை நடத்துவதை அப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியான வாவெட்டி மலைப் பகுதியிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
ஒட்டுசுட்டானில் இருந்து மாங்குளம் வீதி வழியாக பயணிக்கும் போது 14 ஆம் மைல் பகுதியில் இடது பக்கமாக குண்டும் குழியுமாக வீதியொன்று காணப்படுகிறது.
இந்த வீதியூடாகப் பயணிக்கும் போது இந்தச் சிவன் ஆலயத்திற்கான வழி அமைந்துள்ளது. வாவெட்டி மலை ஆதி சிவன் அய்யனார் ஆலயம் என இந்த ஆலயம் பெயர் பெற்றுள்ளது.
பிரதான வீதியில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லும்போது பல தொல்பொருட் பெறுமதி மிக்க அடையாளங்களை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்களை அங்கே அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக புத்தக வடிவிலான கல் ஒன்று அங்கியிருப்பதாகவும் இந்தக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை வெற்றுக்கண்ணால் பார்வையிட முடியாது எனவும் அப்பிரதேச வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மை தடவியே அந்த எழுத்துக்களை வாசிக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த இடத்திலிருந்து காட்டு வழியாக உள்ளே சென்றால் இயற்கையாகவே அமைந்த பாரிய கருங்கற்களை காண முடியும்.
குகை வடிவில் அமைந்துள்ள இந்தக் கல்லுக்கு கீழ் சிவலிங்கம் வடிவில் இந்தச் சிவ ஆலயம் அமையப்பெற்றுள்ளது.
இந்தச் சிவலிங்கத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டதன் பின்னரே ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்தின் உற்சவம் ஆரம்பிக்கப்படும் என பிரதேசத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.