அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு முதன் முதலாக டொனால்ட் டிரம்ப் தற்போது வெளிநாட்டு பயணங்களில் ஈடுப்பட்டு வருகிறார்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி பதவியேற்றதும் முதல் வெளிநாட்டு பயணமாக இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவிற்கு சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.
சவுதி அரேபிய பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் நேற்று இஸ்ரேல் நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.
சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் எதிரி நாடுகளாக இருந்து வருவதால் இரு நாடுகளுக்கு மத்தியில் நேரடி விமான சேவை கிடையாது.
இஸ்ரேல் நாட்டை ஒரு தனி நாடாக சவுதி அரேபியா அங்கீகரிக்க வில்லை என்பதால் இதுவரை இரு நாடுகளுக்கு இடையே எவ்வித விமானமும் பயணம் செய்தது இல்லை.
ஆனால், சவுதியில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் அங்கிருந்து நேரடியாக இஸ்ரேல் நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.
இதன் மூலம், சவுதி அரேபியாவில் இருந்து இஸ்ரேல் நாட்டிற்கு நேரடியாக பறந்து சென்ற விமானம் என்ற பெயரை டொனால்ட் டிரம்பின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம் பெற்றுள்ளது.
இதுமட்டுமில்லாமல், இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டொனால்ட் டிரம்ப் மற்றொரு வரலாற்று சாதனையை நிகழ்த்த உள்ளார்.
ஜெரூசலேம் நகரில் உள்ள யூதர்களின் புனித சுவற்றிற்கு இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் சென்றது இல்லை. ஆனால், தற்போது இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் யூதர்களின் புனித சுவற்றை நேரில் பார்க்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.