சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாம் என அந்நாட்டு குடிமக்கள் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள பேர்ன் மாகாண குடிமக்கள் தான் அகதிகளுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
பேர்ன் மாகாணத்தில் புகலிடம் கோரி வரும் அகதிகள், குறிப்பாக ஆதரவின்றி வரும் வாலிபர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக 105 மில்லியன் பிராங்க் நிதியை அம்மாகாண அரசு ஒதுக்கீடு செய்தது.
ஏனெனில், ஆதரவின்றி வரும் வாலிபர்கள் தனித் தனியான அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவதால் இவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கு கூடுதலான நிதி தேவைப்படுகிறது என்பதற்காக மாகாண அரசு இத்திட்டத்தை அறிவித்தது.
ஆனால், குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி அகதிகளுக்காக செலவு செய்வது தவறு என அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இவ்வாக்கெடுப்பில் பங்கேற்ற குடிமக்களில் 54.3 சதவிகித மக்கள் இத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
சுவிஸ் சட்டப்படி குடிமக்கள் ஒரு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டத்தை அரசு செயல்படுத்த முடியாது. எனவே, அகதிகளுக்காக செயல்படுத்த இருந்த இத்திட்டமும் தற்போது அகதிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.