தமிழீழ விடுதலைப்புலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவைத் திட்டம்
( சனிக்கிழமை, ௦1 நவம்பர், 2௦௦3 )
இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவையை நிறுவுவதற்கான ஓர் உடன்படிக்கைக்குத் தமிழ் மக்கள் சார்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் ஆலோசனைகளின் முழுவிவரம் –
சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடுகள், மனித உரிமைகள், அனைத்து மக்களின் சமத்துவம் மற்றும் மக்களது சுயநிர்ணய உரிமைக்கு அமைவாகவும் இலங்கைத் தீவின் அனைத்து மக்களுக்கும் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு உறுதி பூண்டும்,
இத்தீவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாண்புமிகு நோர்வே அரசும், நோர்வே மக்களும் அனைத்துலக சமூகமும் ஆற்றும் சேவைகளை பாராட்டி ஏற்றுக்கொண்டு, தமிழ்மக்களுக்கும் சிங்களமக்களுக்கும் இடையிலான அமைதி நடவடிக்கைகள், சவால்கள் நிறைந்த வரலாறாக அமைந்திருந்தாலும் அமைதி வழியிலான தீர்வுக்கு உண்மையான வாய்ப்பு இருப்பதை இனம்கண்டும்,
இறுதித்தீர்வை அடைவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்து, வடக்கு-கிழக்கிலே மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகள் அனைத்தையும் செயல்திறனுடன் விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் வடக்கு-கிழக்கு மக்களது உடனடித்தேவைகளை வழங்குவதற்காக வடக்கு-கிழக்கு பிராந்தியத்திற்கு ஓர் இடைக்கால தன்னாட்சி அதிகார அவையை நிறுவுவதற்கு உறுதிபூண்டும்,
தமிழ்மக்களுக்கும் சிங்களமக்களுக்கு் இடையிலான இணக்க முயற்சி வரலாறு, வாக்குறுதியை மீறிய ஒரு செயல்முறை தொடராக இருந்தமையையும் இலங்கை அரசாங்கத்திற்கும் தேர்தல் மூலம் தெரிவான தமிழ்மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே காத்திரமாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசுகளினால் ஒருதலைப்பட்சமாக மதிக்கப்படாது முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையையும் கவனத்திலெடுத்தும்,
அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகள் அனைத்துமே தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அடிப்படையிலான துன்புறுத்தல்கள், பாராபட்சம், அரசவன்முறைகள் மற்றும் அரசுகள் பின்னிருந்து நடத்திய வன்முறைகள் ஆகியனவற்றை மனதில் நிறுத்தியும்,
1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற ஓர் அரசை தமிழ்மக்களுக்காக அமைக்குமாறு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமது பிரதிநிதிகளுக்கு தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருதமையை கவனத்திலெடுத்தும்,
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வன்முறையின்றி அமைதி வழியில் மேற்கொண்ட அரசியலமைப்பு வரையறைக்குள் நிகழ்த்தப்பட்ட போராட்டங்கள் பயனற்றதென மெய்ப்பித்து, முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போன பின்னர்தான், ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தமிழ்மக்களினது தன்னுரிமையை பெற்றுத்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவும் தமிழ்மக்களினது ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது என்பதை மனதில் நிறுத்தியும்,
முதலில் டிசம்பர் 2௦௦௦ஆம் ஆண்டிலும் பின்னர் டிசம்பர் 2௦௦1ஆம் ஆண்டிலும் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைச் சாற்றி நெடுஞ்சாலைகளை திறந்து வணிகத்திற்கும் மக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கும் வாய்ப்பு நல்கி இயல்புநிலை திரும்புவதற்கான ஒரு உகந்த சூழ்நிலையையும் முரண்பாட்டிற்கு ஒரு நீதியான தீர்வையும் காணும் நம்பிக்கையோடு சமாதான பேச்சுகளுக்குள் நேர்மையாக இறங்கி, சமாதானத்தை நோக்கிய நடவடிக்கைகளை தமிழீழ விடுதலை புலிகளே முதலில் முன்னெடுத்தார்கள் என்பதனை மீளநினைவுபடுத்தியும்,
2௦௦1 போர்நிறுத்த அறிவிப்பிற்கு மதிப்பளித்து தற்போதைய இலங்கை அரசு தானும் ஓர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ள அரசியல் துணிவை கவனத்தில் கொண்டும்,
இலங்கைத்தீவிலுள்ள வடக்கு – கிழக்குப் பகுதியின் சமூக, பொருளாதார ஆட்சி மற்றும் கட்டடக்கட்டுமானங்களுக்கு அழிவுகளை விளைவித்த போர் வடக்கு – கிழக்கிற்கே பிரதானமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு வடக்கு-கிழக்கே இலங்கைத்தீவின் போரினால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதியாக தொடர்ந்தும் என்பதையும் உணர்ந்தும்,
2௦௦௦ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் உள்ள பொரும்பான்மையான தமிழ்மக்கள் தமது செயல்களின் மூலம் தமிழீழவிடுதலைப்புலிகளை தங்களுடைய அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டே தஙகளுடைய வாக்கை வழங்கினார்கள் என்பதை இனங்கண்டும்,
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கின் பெரும்பான்மையான நிலப்பகுதிகளின் மீது தமிழீழவிடுதலைப்புலிகளின் ஆட்சி ஆதிக்கமும் கட்டுப்பாடும் செயல்திறனுடன் நடைமுறையாக உள்ளதை கருத்தில் கொண்டும்,
பேச்சுவார்த்தை மூலமாக ஒரு இறுதித்தீர்வை அடைவதும் அதனை நிறைவேற்றுவதும் ஒரு நீண்டகால பணியாக அமையலாம் என்பதை உனர்ந்தும்,
ஏதிலிகளானோர், இடம்பெயர்ந்தோர் அனைவரும் பாதுகாப்பாகவும் தன்னிச்சையாகவும் தத்தம் இடங்களுக்கு மீள்வதற்கான கட்டாயத்தையும் அவர்கள் வடக்கு-கிழக்கிலுள்ள தங்கள் வீடுகளுக்கு தங்குதடையின்றி சென்று, தரையிலும் கடலிலும் தமது வாழ்வாதாரங்களை பெற்றுககொள்வதற்கான அவர்களது உடனடித்தேவைகளையும் வலியுறுத்தியும்,
இலங்கை அரசின் நிறுவனங்களும் அவை வழங்குகின்ற சேவைகளும் வடக்கு – கிழக்கு மக்களது உடனடித்தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையல்ல என உனரப்பட்டுள்ளமையை மனதிற்கொண்டும்,
அவசர மனிதாபிமான புனர்வாழ்வுத் தேவைகளுக்காக அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது அமைக்கப்பட்ட துணைக்குழுவும் (சிரான்- SIHRN) ஏனைய துணைக்குழுக்களும் தோல்வியுற்றமையையும் மீண்டும் மீண்டும் செயலற்ற நிலைக்கு இட்டுச்சென்ற இந்தத்துணைக்குழுக்களது அமைப்புமுறையே அந்தத்தோல்விகளுக்கு காரணம் என்பதையும் இனங்கண்டும்,
தற்போதைய இலங்கை அரசு தனது 2௦௦௦ஆம் ஆண்டுத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு ஓர் இடைக்கால அதிகார அவைக்கான தேவையை ஒப்பியமைக்க மதிப்பளித்தும்,
சட்டம், ஒழுங்கைப்பேணுவதும் நீதியானதும் தன்னிறைவுற்றதுமான சமூகத்திற்கு இன்றியமையாத ஒரு கூறு என்பதை உனர்ந்தும்,
போரினால் சிதைந்துள்ள வடக்கு-கிழக்கு நிலப்பரப்பில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பதற்கு நிலத்தின் மீதான கட்டுப்பாடு முக்கியம் என்பதை இனங்கண்டும்,
1972ஆம், 197 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களது உருவாக்கத்தில் தமிழ்மக்கள் பங்குபெறவில்லை என்பதையும் அவை பாகுபாடான ஆட்சியியலை நிறுவனப்படுத்தி தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் காத்திரமான பங்கினை தமிழ்மக்களுக்கு வழங்க மறுத்ததையும் மனதிற்கொண்டும்,
இனங்களுக்கிடையிலான முரன்பாடுகளை தீர்க்க புதுமையானது பரந்த சிந்தனையுடையதுமான நடைமுறைகளூடே சமத்துவத்தின் அடிப்படையில் முரன்பட்ட தரப்புகளுக்கிடையே உடன்படிக்கையினை ஏற்படுத்துவதன் மூலமாக கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் உலகெங்கும் ஏற்பட்டு வரும் சிறந்த வழமைகளை கவனத்தில்கொண்டும்,
இலங்கைக் கண்காணிப்புக்குழுவின் (SLMM) பணியை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் (SIHRN) மற்றும் வடக்கு-கிழக்கு மீள்கட்டுமான நிதியம் (NERF) அமைக்கப்பட்டமை போன்ற நடைமுறைகள் இத்தகைய ஒழுங்குகளை ஏற்படுத்துவதற்குரிய பெறுமதியான முன்னுதாரணங்களாக அமைகின்றன என்பதை கவனத்தில் கொண்டும்,
மேலே கூறியவற்றின் அடித்தளத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தரப்பினரான தமிழீழவிடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் கீழ்வரும் ஏற்பாடுகளுக்கு இதன்மூலம் இணங்குகின்றன.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவை ( இ.த.அ.அ )
பேச்சுவார்த்தை மூலமான இறுதித்தீர்வு எட்டப்பட்டு நடைமுறைக்கு வரும்வரை, வடக்கு-கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய எட்டு ஆட்சி மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவை [ (Interim Self – Governing Authority – (ISGA) ] நிறுவப்படும். இதில் முஸ்லிம் சமுகத்தின் பங்கை உருவாக்கம் செய்வதில் கலந்துகொள்ளவதற்கு அவர்களது பிரதிநிதிகளுக்கு உரமை உண்டு.
இ.த.அ.அ. இன் உறுப்பமைப்பு
2.1 இந்த உடன்படிக்கைக்கு தொடர்பான இருதரப்பினராலும் தீர்மானிக்கப்படும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை இ.த.அ.அ. கொண்டிருக்கும்.
2.2 இ.த.அ.அ.வின் கீழ்வருமாறு அமையும்.
2.2 (அ) தமிழீழவிடுதலைப்புலிகள் நியமிக்கும் உறுப்பினர்கள்,
2.2 (ஆ) இலங்கை அரசு நியமிக்கும் உறுப்பினர்கள்,
2.2 (இ) வடக்கு-கிழக்கிலுள்ள முஸ்லீம் சமூகத்தினர் நியமிக்கும் உறுப்பினர்கள்.
2.3 கீழ்வருவனவற்றை உறுதிசெய்க்கூடிய விதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
2.3 (அ) இ.த.அ.அ. வில் தமிழீழவிடுதலைப்புலிகள் நியமித்த உறுப்பினர்களே அறுதிப்பெரும்பான்மை எண்ணிக்கையினராக இருப்பார்கள்.
2.3 (ஆ) மேலுள்ள துணை விதி (அ)விற்குப் பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு-கிழக்கிலுள்ள முஸ்லீம் மற்றும் சிஙகள சமூகங்கள் இ.த.அ.அ.வில் பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும்.
2.4 தலைவர் (Chairperson) இ.த.அ.அ.விலுள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவாகி இ.த.அ.அ. வின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயல்படுவார்.
2.5 வடக்குகிழக்கிற்கான தலைமைச் செயலாட்சியரையும் அவரது கடமைகளை ஆற்றுவதில் உதவுவதற்கு தேவையான ஏனைய அதிகாரிகளையும் தலைவரே நியமிப்பார். இந்த நியமனம் எதனையும் இடைநிறுத்துவதற்கோ அல்லது முடிவுக்கு கொண்டுவருவதற்கோ தேவையான அதிகாரங்களையும் தலைவர் கொண்டிருப்பார்.
3 தேர்தல்கள்
விதிகள் 2.2 மற்றும் 2.3இன் ஏற்பாடுகள் இ.த.அ.அ.விற்கான தேர்தல்கள் நடக்கும்வரை தொடரும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டுகளின் முடிவில் இறுதித்தீர்வு எதுவும் எட்டப்படாமலும் நிறைவேற்றப்படாமலும் இருப்பின் இந்த ஐந்தாண்டுக் காலப்பகுதி முடிவடைகையில் தேர்தல்கள் நடத்தப்படும். இ.த.அ.அ. வினால் நியமிக்கப்படும் ஒரு தன்னதிகாரமுள்ள தேர்தல் ஆணக்குழு, சுதந்திரமானதும் நேரடியானதுமான தேர்தல்களை அனைத்துலகக் கண்காணிப்பின் கீழ் அனைத்துலக மக்களாட்சிக் கோட்பாடுகள் மற்றும் நியமனங்களுக்கு அமைவாக நடத்தும்.
மனித உரிமைகள்
அனைத்துலக மனித உரிமைகள் பட்டயத்தில் கூறியுள்ள அனைத்து உரிமைகளையும் வடக்கு-கிழக்கில் உள்ள மக்கள் பெற உரிமையுடையவர்கள். இ.த.அ.அ.வினால் இயற்றப்படும் சட்டம், ஒழுங்குமுறை, தீர்ப்பு, கட்டளை, தீர்மானம் எல்லாம் மனிதஉரிமைகள் பாதுகாப்பிற்கென அனைத்துலகம் ஏற்ற நியமங்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். இ.த.அ.அ.வினால் நியமிக்கப்படும் ஒரு தன்னதிகார ஆணைக்குழு இந்த மனிதஉரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் யாவும் பேணப்படுவதை உறுதி செய்யும். மனிதஉரிமைகளை பாதுகாப்பதற்கு ஒரு காத்திரமான ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கு இந்த ஆணைக்குழு அனைத்துலக மனிதஉரிமைகள் அமைப்பின் உதவியை நாடும். இந்த ஆணைக்குழு எந்தவொரு தனிநபரிடமிருந்தும் முறைப்பாடுகளை ஏற்று விசாரணை செய்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்கப்படவேண்டிய இழப்பீட்டை பரிந்துரைத்தது அவர்களின் உரிமைகள் மீள நிலைநிறுத்தபடுவதை உறுதிசெய்யும்.
மதச்சார்பின்மை
வடக்கு-கிழக்கில் எந்தவொரு மதத்திற்கும் சிறப்பிடம் இல்லை.
பாகுபாட்டிற்கெதிரான தடை
இன, மத, சாதி, தேசிய அல்லது பிராந்தியம், வயது, அல்லது ஆண், பெண் என்பனவற்றின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் பாகுபாடு காட்டப்படாதிருப்பதை இ.த.அ.அ உறுதிசெய்யும்.
லஞ்ச ஊழலை தடுத்தல்
இ.த.அ.அ தனது ஆட்சியில் அல்லது தனது ஆட்சியின் கீழ் கையூட்டு அல்லது ஊழல் எதுவும் இடம்பெறாததை உறுதிசெய்யும்.
அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு
பன்பாடு அல்லது மதம் தொடர்பாக ஒரு சமூகத்திற்கு வழங்காத தனிச்சலுகைகளை அல்லது அவர்கள் மீது திணிக்காத இன்னல்களை இன்னொரு சமூகத்திற்கு வழங்கும் அல்லது திணிக்கும் சட்டம், ஒழுங்குமுறை, விதி, கட்டளை அல்லது தீர்மானம் எதையும் இ.த.அ.அ மேற்கொள்ளாது.
இ.த.அ.அ இன் ஆட்சி வரைவு
9.1 மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தற்போதுள்ள சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்தி உயர்த்துதல் உள்ளடங்களான வளர்ச்சி இதன்பின்னால் மீ.பு..பு.வ ( தததஉ) எனக் குறிப்பிடுகிறது. வரிவிதித்தல் உள்ளடங்கலான வருவாய் ஈட்டல், வருமானம், தீர்வையும் சுங்கவரியும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் காணி தொடர்பான அதிகாரங்கள் உள்ளடங்கலான வடக்கு-கிழக்கை ஆளுகை செய்வதற்கு வேண்டிய அனைத்து அதிகாரங்களையும் இ.த.அ.அ கொண்டிருக்கும். இந்த அதிகாரங்களுக்குள் வடக்கு-கிழக்கிலும் வடக்கு- கிழக்கிற்காகவும் மாகாண ஆட்சி தொடர்பாக இலங்கை அரசினால் செயல்படு்த்தப்படும் அனைத்து அதிகாரங்களும் செயல்பாடுகளும் உள்ளடக்கும்.
9.2 இவ்வாறான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் செயல்ப்பாடுகளை செயல்படுத்துவதற்குமான விரிவான வழிமுறைகள் இந்த ஒப்பந்தத்திற்கு தொடர்புடைய இருதரப்பினராலும் மேலும் பேசி முடிவெடுக்கப்படும்.
நீதி
10.1 அதிகாரங்களை வகை பிரித்தல்
வடக்கு-கிழக்கில் நீதி நடைமுறைக்கான தனியான அமைப்புகளை உருவாக்கி அந்த அமைப்புகளுக்கு நீதி அதிகாரங்கள் உரித்தாக்கப்படும், நீதிபதிகளது தன்னதிகாரத்தை உறுதி செய்வதற்கு இ.த.அ.அ பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்,
இந்த ஒப்பந்தத்தின் விதி மற்றும் மனிதஉரிமைகள் இற்கு பிணக்கு தீர்த்தல் பங்கம் ஏற்படாதவாறு இந்த விதியின் கீழ் உருவாகும் அமைப்புகளே இந்த உடன்படிக்கையின் மெய்ப்பொருளை தெரிந்து நிறைவேற்றுவதில் எழும் அனைத்து பிணக்குகளையும் இந்த உடன்படிக்கையில் அல்லது இந்த உடன்படிக்கையின் கீழ் அல்லது இந்த உடன்படிக்கையின் ஏதெனும் ஏற்பாட்டில் தனித்துவமான ஆட்சியுரிமையை கொண்டிருக்கும்.
நிதி
இ.த.அ.அ வருடாந்தர வரவு-செலவு ஒன்றைத்தயாரிக்கும்.
இ.த.அ.அ வினால் நியமிக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட நிதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த உறுப்பினர்கள் நிதி, ஆட்சி அல்லது வணிகம் போன்ற துறைகளில் உயர்பதவி வகித்தவர்களாகவோ அல்லது இத்துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள் என இனங்காணப்பட்டவர்களாகவோ இருக்க வேண்டும். இலங்கை அரசின் ஒன்றுதிரட்டிய நிதியத்திலிருந்து ( Consolidated Fund ) வடக்கு-கிழக்கிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவை இந்த ஆணைக்குழு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரைகளை செயல்படுத்த இலங்கை அரசு நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்ளும்.
சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு உரிய கவனம் செலுத்தி இ.த.அ.அ தன்வசமுள்ள நிதியங்களை எப்படி பயன்படுத்துவதென தீர்மானிக்கும். இ.த.அ.அ வசமுள்ள நிதிகளுள் வடக்கு-கிழக்கு பொதுநிதியம், வடக்கு-கிழக்கு மீள்கட்டுமான நிதியம், சிறப்பு நிதியம் ஆகியன உள்ளடங்கியிருக்கும்.
வடக்கு-கிழக்கில் அல்லது வடக்கு-கிழக்கிற்காக இலங்கை அரசு செய்யும் அனைத்து செலவுகளும் இ.த.அ.அ வின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறது.
11.1 வடக்கு – கிழக்கு பொது நிதியம்
வடக்கு-கிழக்கு பொது நிதியம் இ.த.அ.அ வின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்.
11.1(அ) ஏதேனும் குறித்த நோக்கங்களுக்காக இலங்கை அரசு வழங்கும் அனைத்து உதவிகளிலிருந்தும் கடன்களிலிருந்தும் கிடைக்கும் பணம் மற்றும் இ.த.அ.அ விற்கு வழங்கப்படும் ஏனைய பிற கடன்களின் மூலம் பெறப்படும் பணம்,
11.1(ஆ) அரசுகளுடனோ, நிறுவனங்களுடனோ ஏனைய அமைப்புகளுடனோ ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வடக்கு-கிழக்கிற்கென இலங்கை அரசால் குறித்தொதுக்கப்படும் நிதிகள்,
11.1(இ) கீழே குறிப்பிடப்படும் நிதியங்கள் தவிர்ந்த இ.த.அ.அ விற்கு கிடைக்கும் ஏனைய வரவுகள்,
11.2 வடக்கு – கிழக்கு மீள்கட்டுமான நிதியம் (வ.கி.மீ.நி)
இ.த.அ.அ அமைப்பு, கட்டுப்பாடு இ.த.அ.அ விற்கு மாற்றப்படுவது தவிர, ஏனைய கூறுகளில் அதன் தற்போதைய வடிவத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்.
வடக்கு-கிழக்கு மீள்கட்டுமானத்திற்காக கொடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் வ.கி.மீ.நிதியத்தினூடாகப்பெறப்படும். வ.கி.மீ.நிதியத்திலிருந்து பெறப்படும் வளங்களை பயன்படுத்துவது தொடர்பாக இ.த.அ.அ நேரடியாக முடிவுகளை எடுத்து கண்காணிக்கும்.
11.3 சிறப்பு நிதியம்
மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கென்றே வரும் கடன்களும் கொடுப்பனவுகளும் வ.கி.மீ.நிதியத்தினூடாக உள்வர முடியாதவிடத்து இந்த சிறப்பு நிதியத்தில் உள்வாங்கப்படும். ஏனைய நிதியங்களை போலவே இந்த சிறப்பு நிதியமும் இ.த.அ.அ வின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
12 வணிகம்
கடன்பெறுவதற்கும் உதவிபெறுவதற்கும் வணிகத்துக்குமான அதிகாரங்கள் உள்ளூரிலும் வெளியூரிலும் கடன் பெறுதல், உறுதிமொழிகளையும் இழப்பீடுகளையும் வழங்குதல், நேரடியாக உதவிகளை பெறுதல், உள்ளூர் மற்றும் வெளியூர் வணிகத்தில் ஈடுபடுதல் அல்லது அதனை ஒழுங்கமைத்தல் போன்றவற்றிற்கான அதிகாரங்களை இ.த.அ.அ கொண்டிருக்கும்.
13 நிதிக்கணக்கீடும் கணக்காய்வும்
13.1 இ.த.அ.அவையானது கணக்காளர்கள் நாயகம் ஒருவரை நியமிக்கும்.
13.2 இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளார் அனைத்து நிதியங்களும் அனைத்துலக வழமைகளு்க்கமைந்த கணக்கீடு மற்றும் கணக்காய்வுகளுக்கு அமைவாக செயல்பட்டு, பேணிக்கணக்கீடு செய்யப்படும். கணக்காளர் நாயகத்தால் இந்த கணக்குகள் ஆய்வுகள்செய்யப்படும். அனைத்துலக மூலகங்களிலிருந்து பெறப்படும் அனைத்து நிதிகளது கணக்காய்வும் இ.த.அ.அவையினால் பணிக்கமர்த்தப்படும் அனைத்துலக புகழ்பெற்ற நிறுவனத்தின் ஒப்புதலை பெறவேண்டும்.
14 மாவட்ட குழுக்கள்
14.1 தனது சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை காத்திரமாக செயல்படுத்துகையில் மாவட்டங்களின் ஆள்கையை மேற்கொள்வதற்காக இ.த.அ.அவை மாவட்ட குழுக்களை உருவாக்கி இந்த குழுக்களுக்குத்தான் தீர்மானிக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்தளிக்கலாம்.
இ.த.அ.அவைக்கும் குழுக்களுக்கும் இடையிலான ஒரு இனைப்பாளராக சேவையாற்றக்கூடியவாறு இ.த.அ.அவையின் உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இ.த.அ.அவை இந்தக்குழுக்களினது தலைவர்களை பதவியில் அமர்த்தும்.
14.2 குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இ.த.அ.அவையினால் நியமிக்கப்படுவதோடு இந்தபதவி அமர்த்தல் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்கு கொண்டுவருவதற்க்கான அதிகாரங்களையும் இ.த.அ.அவை கொண்டிருக்கும். இந்த உறுப்பினர்களை பதவிஅமர்த்துகையில் அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு உரிய கவனம் செலுத்தப்படும்.
14.3 இநதக்குழுக்கள் இ.த.அ.அ வின் கீழ் நேரடியாக செயல்படும்.
14.4 இ.த.அ.அ வின் தலைமை செயலாளர் மாவட்டங்களில் முதன்மை நிறைவேற்று அதிகாரிகளை நியமிப்பதோடு இந்த முதன்மை நிறைவேற்று அதிகாரிகள் அவ்வக்குழுக்களுக்கு செயலாளர்களாகவும் செயல்படுவார்கள். இந்த பதவியமர்தல் எதனையும் இடையில் அல்லது முடிவுக்கு கொண்டுவருவதற்கான அதிகாரங்களை தலைமைச்செயலாளர் தன்னகத்தே கொண்டிருப்பார்.
14.5 குழுக்களினது அனைத்து நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஆந்தந்த குழுக்களின் செயளாளர்களூடாக ஒருங்கிணைக்கப்படும்.
14.6 ஆள்கைக்கு உதவியாக இருப்பதற்காக துணைக்குழுக்களும் அமைக்கப்படலாம்.
ஆள்கை
தனது நிறைவேற்று அதிகாரங்களை செயல்படுத்தும் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் 9வது விதியில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களுடன் தொடர்புபட்ட வடக்கு-கிழக்கிலுள்ள அனைத்து ஆளுகை அமைப்புகளும் ஆளணியும் இ.த.அ.அ வின் கட்டுப்பாட்டிலும் நெறிப்படுத்தலிலும் அமையும்.
இ.த.அ.அ தற்றுணிவுடன் தேவையான துறைகளில் நிபுணர்களினது ஆலோசனை குழுக்களை உருவாக்கலாம். இந்த ஆலோசனை குழுக்கள் பொருளாதார விபகாரங்கள் நீதி விபகாரங்கள், நிதி விபகாரங்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு விபகாரங்கள் அடிப்படை கட்டுமானங்களை வளர்த்தல் மற்றும் கட்டாய சேவைகள் ஆகியவற்றிற்கும் இவற்றிற்கென மட்டுப்படுத்தப்படாமல் மேலும் தேவையான துறைகளுக்கும் அமைக்கப்படலாம்.
16 காணி ஆள்கை
9 வது விதியில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துவதற்கு காணி முக்கியம் என்பதால் வடக்கு-கிழக்கிலுள்ள தனியாருக்கு சொந்தமானவை தவிர்ந்த அனைத்து காணிகளையும் பகிர்ந்தளிப்பதறற்கும் மற்றும் பொருத்தமான தேவைகளுக்கு பயன்படுத்துவதை தீர்மானிப்பததற்குமான அதிகாரத்தை இ.த.அ.அ கொண்டிருக்கும்.
காணிகளிலிருந்து விரட்டப்பட்ட மக்களினது காணிகளின் உரிமை, அத்துமீறி குடியேறியோர் வசிக்கும் காணிகளின் உரிமை போன்றவற்றை, காலம் எவ்வளவு கடந்தாலும் விசாரித்து அறிக்கை வழங்கவென காணி ஆள்கை தொடர்பான சிறப்பு ஆணைக்குழு ஒன்றை இ.த.அ.அ நியமிக்கும்.
சிறப்பு ஆணைக்குழு செய்படுகிற காலவரையறையை இ.த.அ.அ தீர்மானிக்கும்.
17 அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில் மீள்குடியமர்வு
இலங்கை அரசின் ஆயுத படையினர் காணிகளை அடாத்தாக பறித்தெடுத்துத்துள்ளமையும் இந்த காணிகளுக்கு உரிமையுடைய பொதுமக்கள் தங்களது காணிகளுக்கு செல்வதை மறுப்பது அனைத்துலக சட்ட விதிகளை மீறும் செயலாகும். இந்த காணிகள் உடனடியாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். சொந்தக்காரர்களிடமிருந்து அவர்களது காணிகளை கடந்தகாலங்களில் பறித்துவைத்திருந்தமைக்காக இலங்கை அரசு அவர்களுக்கு கட்டாயம் இழப்பீடு செலுத்த வேண்டும். இந்த காணிகளில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களையும் அகதிகளையும் மீள்குடியமர்த்தி புனர்வாழ்வு அளிப்பதற்கு இ.த.அ.அ. பொறுப்பாக இருக்கும்.
கடல் மற்றும் கரையோர வளங்கள்
வடக்கு-கிழக்கு நிலப்பகுதியை அண்டிய கடல் மற்றும் கரையோர வளங்கள் மீது .இ.த.அ.அ. கட்டுப்பாட்டை கொண்டிருப்பதோடு இந்த வளங்களை பயன்படுத்துவது தொடர்பாக தேவைப்படும் கட்டுப்பாடுகளை ஒருங்கமைப்பதற்காக அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.
இயற்கை வளங்கள்
வடக்கு-கிழக்கிலுள்ள இயற்கை வளங்கள் மீது இ.த.அ.அ. கட்டுப்பாட்டை கொண்டிருக்கும். அத்தகைய இயற்கை வளங்கள் தொடர்பாக ஏற்கனவே செய்த ஒப்பந்தங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். அத்தகைய ஒப்பந்தங்களில் கீழ் வரவேண்டிய பணம் அனைத்தும் இ.த.அ.அ. வுக்கு செலுத்தப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்யும். நடைமுறையில் இருக்கும் அத்தகைய ஒப்பந்தங்களில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் யாவும் இ.த.அ.அ. வின் ஒப்புதலுடனேயே செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவற்றுக்கான வேறு புதிய ஒப்பந்தங்களை இ.த.அ.அ. வுடன் செய்யவேண்டும்.
நீர்ப்பயன்பாடு
ஆறுகளின் கடைமடைப்பகுதிகளில் நீர் பெறுவோருக்கு நீதியாகவும் நியாயமாகவும் சம அளவிலும் நீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு ஆறுகளின் தோற்றுவாய் பகுதிகளில் நீர் பெறுவோருக்கு உண்டு. இலங்கை அரசும் இ.த.அ.அ வும் உலகெங்கும் ஏற்று நடைமுறையில் இருக்கும் நீர்வளப்பயனுறுத்து கோட்பாடுகளை பின்பற்றுமாறு உறுதி பூணவேண்டும்.
ஒப்பந்தங்களும் குத்தகைகளும்
இ.த.அ.அ வின் ஆட்சி வரைவினுள் வருவன தொடர்பாக எதிர்காலத்தில் எய்தப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் இ.த.அ.அ வுடன் மேற்க்கொள்ளபட வேண்டும்.
பிணக்குத்தீர்த்தல்
இந்த ஒப்பந்த விதிகளுக்கு பொருள் காண்பதிலேயோ நடைமுறைப்படுத்துவதிலோ இருதரப்பினரிடையேயும் பிணக்கு ஏதேனும் ஏற்பட்டு அப்பிணக்கு நோர்வே அரசின் நல்லிணக்கம் உட்பட இருதரப்பினருக்கும் ஏற்புடையதான வேறு ஏதாவது வழியில் தீர்க்கப்பட முடியாவிட்டால் மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஓர் இணக்க மனறில் விசாரிக்கப்படும். இதில் இருவர், தரப்பிற்கு ஒருவராக இரு தரப்பினராலும் பதவியில் அமர்த்தப்படுவர். இருதரப்பினராலும் பதவி அமர்த்தப்பெறும் மூன்றாவது உறுப்பினர் மன்றின் தலைவராக செயல்படுவார். தலைவர் நியமனத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படுமிடத்து மன்றின் தலைவரை நியமிக்குமாறு அனைத்துலக நீதிமன்றத்தின் தலைவரை (President of the international Court of justice) இருதரப்பினரும் கோருவர்..
எந்தவொரு பிணக்கு பற்றியும் தீர்மானம் எடுக்கையில், பிணக்கு தீர்ப்பவர்கள் தமிழீழவிடுதலைப்புலிகளினதும் இலங்கை அரசினதும் சமத்துவமான நிலையை உறுதிசெய்வதோடு இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை மாத்திரமே உசாத்துணையாகக்கொண்டு பிணக்குகளை தீர்ப்பர். பிணக்கு தீர்ப்பவர்களது தீர்மானம் இறுதியானதாகவும் முடிவானதாகவும் இருப்பதோடு, பிணக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும்.
செயற்படும் காலம்
பேச்சுவார்த்தை மூலமான நிலையான தீர்வொன்றின் விளைவாக வடக்கு-கிழக்கிற்கென ஓர் புதிதான அரசாங்கம் நிறுவப்படும்வரை இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அத்தகைய ஒரு தீர்வை எவ்வளவு விரைவாக அடையமுடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதற்கு இருதரப்பினரும் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்.