வடமத்திய மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட சபை முதல்வர் பத்தே வினாடிகளில் பதவி விலக நேர்ந்த சுவாரஷ்ய சம்பவமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
வடமத்திய மாகாண சபையின் சபை முதல்வர் பதவியில் இருந்த சம்பத் ஸ்ரீ நிலந்த விக்கிரமஆராச்சி என்பவர் அண்மையில் மாகாண அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய மாகாண சபை அமர்வின் போது காலியாக இருந்த சபை முதல்வர் பதவிக்கு பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் என்.வி. சமந்த என்பவரை நியமிப்பதாக மாகாண சபைத் தலைவர் சிரிபால அறிவித்துள்ளார்.
அதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.பத்துவினாடிகள் கழிந்து சபைக்குள் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய சபை முதல்வர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு, கட்சித்தலைவர்களின் ஆலோசனை இன்றி புதிய சபை முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து ஐந்து நிமிடங்களுக்கு சபை அமர்வை ஒத்திவைத்த சபைத் தலைவர் சிரிபால, புதிய சபை முதல்வரின் நியமனத்துக்கு கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்தார்.
எனினும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான உறுப்பினர்களின் வெளிநடப்பு காரணமாக பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் விடயமும் சிக்கலடைந்தது.
இதன் காரணமாக சபை முதல்வராக அறிவிக்கப்பட்ட என்.வி. சமந்த பத்து நிமிடத்திலேயே தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அடுத்த அமர்வின் போது அவர் முறைப்படி சபை முதல்வர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.