ஆதித்தனார் இலக்கியப் பரிசு: தமிழ் அறிஞருக்கு ரூ.3 லட்சம்!
தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் நினைவாக இந்த ஆண்டு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ.2 லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.
தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ.2 லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும். ஆதித்தனாரின் 36-வது நினைவு நாள் இன்று(24) கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு ‘ஞானபீட விருது’. அதுபோல் சிறந்த தமிழ் இலக்கியத்துக்கு வழங் கப்படும் மிகப்பெரிய பரிசு ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு’.
சென்ற ஆண்டு முனைவர் அருகோவுக்கு மூத்த தமிழ் அறிஞர் விருதுக்கான ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. ‘அவ்வையார் படைப்புக்களஞ்சியம்’ என்ற நூலை எழுதிய முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு சிறந்த இலக்கியத்துக்கான ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் ஆக மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந் திகதி நடக்கும் விழாவில் இந்த பரிசுகள் கொடுக்கப்படும்.
கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.
கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கங்களுக்கு குறையக் கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம். ஜூன் 30-ந் திகதிக்குள் வந்து சேர வேண்டும்.
அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு தேர்வுக்குழு பரிசுக்குரிய நூலை தேர்ந்து எடுக்கும். பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து எழுதி அனுப்பலாம். அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.
பரிசுக்குரிய ஒரு தமிழ் அறிஞரை தேர்வுக்குழு தேர்ந்து எடுக்கும். “ஆதித்தனார் இலக்கியப் பரிசு, தினத்தந்தி, சென்னை- 600007” என்ற முகவரிக்கு எழுதி மேல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.