தமிழர்களுக்கான அரசியல் தீர்வானது கோட்பாட்டு அடிப்படையில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சிப் பொறிமுறை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.
அமுதன்:- தேசிய இனம் என்றால் என்ன?
நிலவன் :- தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் ஆகும். இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த ஒரு தேசிய இனத்தை (Linguistic Nationality) நான்கு முதனிலை பண்புக் கூறுகளால் வரையறுக்கிறார். அவையாவன. 1. பொதுமொழி 2. தொடர்ச்சியான ஆட்சி எல்லை 3. பொதுவான பொருளாதார வாழ்க்கை அமைவு 4. பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஓரினம் என்கிற உளவியல். தேசிய இன வரையறையில் முதன்மை அம்சமாக மொழியை கருதுவது மார்க்சிய அணுகுமுறை ஆகும்.
ஒரு மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர்நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால் அது தேசிய இனமாகிறது. ஒரு தேசிய இனம் என்பது ஒருமைப்பாட்டு உணர்வாலும், பொது பண்பாட்டாலும், தேசிய பிரச்சினைகளாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் தொகை கொண்ட சமூகப் பிரிவாகும் என வாட்சன் என்பவர் குறிப்பிட்டுள்ளார். லெனினின் கருத்துப்படி சமுதாய வளர்ச்சிப் படிகளில் ஒரு கட்டத்தில் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத ஒரு கட்டமாக தேசிய இனங்கள் உருப்பெற்றன என்றார்.
ஒரு இனக்குழு என்பது அம்மக்களால் ஒரு பொதுவான மரபுவழியில் (Common descent) வந்தவர்கள் என்று நம்பிக்கையின் அடிப்படையில் கருதப்படுகிறது, ஒரு இன அடையாளம் என்பது வரலாறு மற்றும் பண்பாட்டின் வழியாக கற்பிதங்களின் துணையோடு உருவாக்கப்படுகிறது.வரலாற்றைப் பற்றிய நினைவுகள், நம்பிக்கைகள், புனைவுகள், குறியீடுகளைக் கொண்டு இன அடையாளத்தையும், அந்த இன அடையாளத்திற்கான பொருளையும் தீர்மானிக்கிறது.
அமுதன்:- தமிழ் என்பது இனமா? அல்லது தேசிய இனமா?
நிலவன் :- தமிழர்கள் என்பது ஓர் இனம் அல்ல. அது ஒரு தேசிய இனம். தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்!”
தேசிய இனம் என்ற சொல்லுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று தகுதிவாய்ந்த தனித்த ஒரு தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் திகழ்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறான பொதுமொழி அடிப்படையில் நம் தாய்மொழியாம் தமிழ் தொன்மையான சிறப்பியல்பு வாய்ந்த தேசிய இனத்தின் தாய்மொழியாக விளங்குகிறது
தமிழ்த்தேசிய இனமாக தன்னை ஒரு தனித்த தேசிய இனமாக அடையாளப்படுத்துதலில் மாபெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தமிழர் என்ற அடையாளம் மையப் படுத்தப்படாமல், சாதி மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பிரிந்து கிடக்கின்றனர்நமது பண்பாடு என்பது அனைவரையும் அரவணைத்து ஏற்றுச் செல்லும் பண்பாடு. இது நமது பலவீனம் அல்ல, இதுதான் நமது பலமே. வரலாறு சொல்லும் பாடமும் அதுதான். நமது பண்பாட்டைக் கொண்டு எவ்வாறு அனைவரையும் இணைத்து தமிழர் என்ற அடையாளத்தை மையப் படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி தங்கியிருக்கிறது.
தமிழ்த்தேசியம் ஓர் இனம் என்கிற தேசிய இன உளவியல் தன்மைதான் ஈழ விடுதலைக்கு ஆதரவான மனநிலையை தமிழர் மண்ணில் எழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் இரண்டு பெரும் தாய்நிலங்களாக ஈழமும், தாய்த் தமிழகமும் திகழ்கின்றன. எனவே வரலாற்றின் வீதியில் தமிழர் என்கிற தேசிய இனம் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு தனித்த தேசிய இனமாக உருக்கொண்டு நிற்கிறது.
அமுதன்:- எண்ணிக்கையில் ஒரு இனக்குழுமம் சிறுபான்மையாக இருக்கும் பொழுது ஏன் போராடுகிறது?
நிலவன் :- “இனக்குழுமம்” என்பது இன்று சர்வதேச அளவில் பாரிய விவாதத்தினை தோற்றுவித்துள்ள பதமாக காட்சியளிக்கின்றது. இனம் அல்லது இனக்குழுமம் என்பதை “அந்தோனி ஸ்மித்”பின்வருமாறு வரையறை செய்கின்றார்.“கற்பனையான பொது மரபுரிமை, பொதுவான ஞாபகங்கள், கலாசார கூறுகள், வரலாற்று ரீதியான தாயகம் என்பவற்றைக் கொண்டுள்ளதோடு தமக்கென ஒரு பெயரையும் கொண்டுள்ள மக்கள் குழுவே இனக்குழுமம் ஆகும்.” இவ்வாறு தோற்றம் பெற்ற ஒவ்வொரு இனக்குழுமமும் பல்வேறு காரணங்களின் நிமித்தம் தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றன.
.இத்தகைய சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி போராடும் இனங்களில் “சிறுபான்மை இனம்”முதன்மையானதாகும் “குறிப்பிட்ட நிலப்பிரதேசத்தில் வாழும் மக்களில் சனத்தொகையில் குறைவாக உள்ள இனமே சிறுபான்மையினம்” என அறிஞர்கள் வரையறை செய்கின்றனர். இன, மத, மொழி,புவியியல், பண்பாடு ரீதியான ஒருமைப்பாட்டினை தோற்றுவிக்கும் அம்சங்களை அமையப்போகும் அரசியல் திட்டத்தில் சேர்ப்பதோடு ஆழமான முறையில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, பங்குபற்றல் ஜனநாயகத்தினை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு இனக்குழுமம் தனது தொடர்ச்சியான நிலைத்திருத்தலினை உறுதிப்படுத்தக்கொள்ள வேண்டுமாயின் தூர சிந்தனையுடன் கூடிய குறுங்கால மற்றும் நீண்டகாலத் தந்திரோபாயங்களை வகுத்து செயற்படுத்தல் அவசியம். அது அரசியல் செயற்பாடாக இருக்கலாம், சமூகம் சார்ந்த செயற்பாடாக இருக்கலாம், கலை கலாச்சாரம் சார்ந்த முன்னெடுப்பதற்காக இருக்கலாம். அல்லது பொருளாதாரம் சார்ந்த செயற்பாடுகளாக இருக்கலாம். இவற்றில் எந்த விடயமாக இருப்பினும் அவ் இனக்குழுமம் சார்ந்த தலைமைகள் பொருத்தமான குறுங்கால மற்றும் நீண்டகால தந்திரோபாயங்களை வகுத்து திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருதல் அவசியம். எந்தவொரு இனக் குழுமம் இந்த விடயத்தை செய்யத் தவறுகின்றதோ அந்த இனக்குழுமத்தின் தொடர்ச்சியான நிலைத்திருத்தல் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு அழிவடையும் அல்லது பின்தள்ளப்படும் நிலைமைக்கு இட்டுச் செல்லலாம்.
அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின், விருத்தியடைந்த நிலை இனக்குழுமம் ஒன்றின் வாழ்வு, இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது, அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று, விடுதலைப் போராட்டமாக வடிவம் பெறுகிறது.
அமுதன்:- தன்னாட்சி என்றால்…
நிலவன் :- தன்னாட்சி என்ற சொல்லைக் காட்டிலும் சுயநிர்யண உரிமை என்ற சொல்லே தமிழ் சூழலில் அதிகமும் பயன்பாட்டில் உள்ளது. தன்னாட்சி அல்லது சுயநிர்யணம் (Self-determination) எனப்படுவது ஒரு மக்கள் குழு அல்லது ஒரு இனம், சுயமாக, சுதந்திரமாக தமது அரசியல் ஏற்பாட்டைத் தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது. குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை ஆகும்.
எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமை. அந்ந உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் தழிழ்த் தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செல்வதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் எனப் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமையே தனி அரசாக தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். ஈழத் தமிழ் மக்கள் கடந்த எழுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சுயநிர்யண உரிமையைக் கோரிப் போராடி வருகிறார்கள்.
சுயநிர்ணய உரிமையின் தன்மை இவ்வாறானதாக இருக்க, சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவை வழங்குவதன்படி சுயநிர்ணய உரிமையானது அரசுகளுக்கு, தேசங்களுக்கு, இனக்குழுக்களுக்கு, தனிமனிதர்களுக்கு உரியதல்ல; மாறாக மக்களுக்கு உரியது. சுய நிர்ணய உரிமையைக் கோரும் உரித்துடையவர்கள் ஈழத் தமிழ் மக்கள் என்பதை கடந்காலத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய தலைவர்களும் சரி, ஆயுதப் போராட்டமும் சரி, ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்தைய நிலையிலும் வலியுறுத்தி வருகின்றோம்.
வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை” என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிற அத்தனை கூறுகளையும் கொண்ட தமிழர்களாய் தொடர்ந்து சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை முன் நிறுத்தி வருகின்றோம்.
அமுதன்:- சுயநிர்ணய உரிமைன் தேவை என்ன ?
நிலவன் :- 1960 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் பிரகாரம், அந்தக் காலம் முடிவடைந்துவிட்டது என்று சொல்கின்றார்கள். அதுக்குப் பிறகு வருகின்ற காலத்திலே ஒரு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களாக இருந்தால் – சுயநிர்ணய உரித்துடைய மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களாக இருந்தால் – அல்லது அவர்களுக்கு அவர்கள் வாழ்கின்ற நாட்டிலே சுயமாகத் தங்களைத் தாங்களே ஆளுகின்ற கட்டமைப்பு மறுக்கப்பட்டிருந்தால் – அவர்கள் வெளியான சுயநிர்ணய உரித்துக்கு ஏற்புடையவர்கள். அது இன்றைய சர்வதேச சட்டம்.
1966இல் சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றின் உருவாக்கத்துடன் மாற்றமடைகிறது.
சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுரிமையின் பாலாக, அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையைத் தீர்மானிப்பதுடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை முன்னெடுக்கிறார்கள்’ என்று வழங்கியது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1970ஆம் ஆண்டின் 26/25(XXV) பிரகடனமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது, எந்தவகையிலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள சமவுரிமையையும் இன, சமய, நிறப் பாகுபாடுகள் எதுவுமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாங்கத்தை கொண்டுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதாக பொருள்கொள்ளப்படாது’ என்று தீர்மானித்தது.
ஐக்கிய நாடுகள் சபை தன்னாட்சி குறித்து கூறும் விடயமும் முக்கியமானது. “அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR). ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: “எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.” என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்திலும் தன்னாட்சி குறித்து பதிவு செய்திருக்கிறது.
இவ்வொப்பந்தங்களின் இந்தச் சரத்துகளின் ஊடாக, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது’ நேர்மறையானதோர் உரிமையாகச் சர்வதேச அங்கிகாரம் பெற்றது. சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR), ‘மக்களின் சுயநிர்ணய’ உரிமையை அங்கிகரித்திருந்தாலும், குறித்த உரிமை தொடர்பிலான பொருள்கோடல்களில் சிக்கல்கள் நிறையவே இருந்தன.
சுயநிர்யண கட்டமைப்பிலே தங்களைத் தாங்களே ஆளுகின்ற உரித்து மறுக்கப்பட்டவர்கள் என்ற இந்த இரண்டு அம்சங்களும் தமிழ் மக்களிடத்திலே இருக்கின்றது என்று நாங்கள் சர்வதேசத்தில் நிரூபித்து சுயநிர்ணய உரித்தை நாங்கள் பெறுவதற்கு ஏற்புடையவர்கள் என்பதை வலியுறுத்த வோண்டும்.
அமுதன்:- தமிழீழ தனி நாட்டின் அடிப்படை என்ன?
நிலவன்:- தமிழினம் மனித இனத்தில் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரிகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. மூத்த இனமாக வரலாற்றில் இடம்பிடித்த ஒரு இனம், இன்னொரு இனத்தின் கீழ் தமது அடையாளங்களை இழந்து வாழ விரும்பவில்லை. எனவேதான் தாயகம், தேசியம், மற்றும் தன்னாட்சி கோரி ,போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் தோல்விகளில் முடிய அரச படைகளின் ஆயுதமுனைப் போராட்ட அடக்குமுறைகள் காரணமாக ஆயுத ரீதியான தமிழீழ இன விடுதலைக்கான போர் இடம்பெற்றது.
தேசியம், சுயநிர்ணம் என்று பேசுவது வெறுமனே ஒரு கருத்தியல் சார்ந்த நிலைப்பாடல்ல.இத்தகைய எண்ணக்கருக்களை முன்னிறுத்திய வலியுறுத்தல் அரசியல் தீர்வு தொடர்பில் உண்மையான அர்த்தம் சேர்க்கும் தன்மையிலானவை .தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்ற சொற்பதங்கள் மக்கள் மத்தியில் அவரவர் அறிவுக்கு ஏற்ப பரவலாகப் பேசப்படும் பதங்களாகும். எமது இன விடுதலை தொடர்பிலும் இந்த சொற்பதங்கள் ஆழமான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன. தமிழர்களை, ஒரு தேசமாக அங்கிகரித்தல் என்பதைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத்துவம் வாய்ந்த திம்புக் கோட்பாடாக அமைவது, ‘தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல்’ என்பதாகும்.
தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் தலையீடு, ஆதிக்கம் இன்றி சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி தமது இன அடையாளத்தை பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளம் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றர்கள். இதுவே எமது மக்களின் வேட்கையாகும். உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியுள்ளது.
தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைகளிற்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தி, இலங்கையில் தற்போது தமிழ்த் தேசியம் என ஒன்றில்லை என்று நிறுவுவதனுடாக இலங்கையை ஒற்றைக்கலப்பு தேசிய நாடாக காட்ட முற்படுகின்றது சிங்கள பௌத்த பேரினவாதமும் அயல் நாடன இந்திய ஒன்றிய அரசும்.
அமுதன்:- தனித்தமிழினக் கோரிக்கை வலுப்பெற்று ஆயுதப் போராட்டமாக காரணம்..?
நிலவன்:- ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமென்றால், அந்த தேசிய இனத்தின் வாழும் நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் அங்கு வாழும் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்யும்போது அந்த தேசிய இனம் அழிவடையும், இந்த அழிப்புத்தான் இனப்பிரச்சினை. இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு இருக்கவேண்டுமெனில் ஒரு தேசிய இனத்தை குறித்த அழிவுகளிலிருந்து பாதுகாப்பதே தீர்வாக காணப்படும்.
எமது மக்களுக்கு எதிராகப் பேரினவாத ஒடுக்குமுறை இனவழிப்பாக உருவெடுத்த போது சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி விரிசல் உண்டானபோது, ஒற்றையாட்சி முறையின் கீழ் ஐக்கியமாக வாழ முடியாது என்ற நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்ட போது, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில் தமிழர்கள் பிரிந்து செல்லும் கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலக தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சியமைத்த பௌத்த சிங்கள அரசுகளால் மனிதாபிமானமற்ற மகாபாதக அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதுடன், ஈழத் தமிழ் மக்கள்மீது பாரிய இன ஒடுக்குமுறைகளும் நிகழ்த்தப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம் ஒரு உரிமை மறுப்பாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஈழத் தமிழ் மக்கள் போராடிய வேளை இனக் கலவரங்களான 1956, 1958, 1977,1983தொடராக 2009 இல் நான்கு கட்ட ஈழப்போர் என வார்த்தையில் வர்ணிக்க முடியாத இனப்படுகொலை துயரத்தை எதிர்கொண்டோம். இதனால் ஈழத் தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கை இன்னமும் வலுப்பெற்றது.
ஒரு தேசிய இனத்தின் அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் நான்கு விடயங்களை கொண்டிருக்க வேண்டும். ”முதலாவதாக குறித்த இனத்தை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது அந்த தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும். மூன்றாவது குறித்த இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். நான்காவது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஆட்சிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்”.
பௌத்த சிங்கள பேரினவாத தேசம், ஈழத் தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தை அதிகரித்ததுடன், தொடர்ந்தும் தமிழர்களை, இனப்படுகொலையை செய்யும் வழியில் தன்னைத் தீவிரப்படுத்தியது. இதனால் கடந்த காலத்தில் வரலாறு முழுவதும் பல இனப்படுகொலை நிகழ்வுகளை தமிழ் மக்கள் சந்தித்தனர். இந்த நிலையில் தான் தமிழ் மக்கள் தனி ஈழமே தீர்வென்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநாடு கோரிப் போராடி, பல வெற்றிகளை குவித்து தமிழீழ நிழல் அரசை ஏற்படுத்திய போதும் பல தடவைகள் தமிழர்களின் சுயநிர்யண உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தீர்வொன்றை முன்வைக்குமாறு பேச்சுவார்த்தைகளின் வழி வலியுறுத்தினர். ஆனாலும் ஏமாற்றுதலும் இழுத்தபடியும் தொடர்கின்றது. எனவே, இலங்கைத் தீவில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் தமது தலைவிதியை தீர்மானிக்கும் தன்னாட்சி ஒன்றே தீர்வு என்பதையே காலமும் சூழலும் தொடர்ந்தும் கணித்து வலியுறுத்துகிறது.
அமுதன்:- ஆயுத வழி போராட்டம் மௌனித்த இன்றைய சூழலில் தமிழீழ விடுதலைக்காக செய்ய வேண்டியவை எவை?
நிலவன்:- தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும் அர்த்தமுள்ள தீர்வை சர்வதேச சமூகம் வழங்க முடியாவிட்டால், தமிழ்த் தேசம் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கான அமோகமான மக்களாணை சனநாயக ரீதியாக முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசிய இனத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் அவர்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்குமான நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வதற்கும் பல்வேறு பிராந்தியங்களின் பிரிந்துள்ள தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்க வேண்டிய தேவை எம்முன்னே உள்ளது. ஆனால் அதற்கான சிந்தனை மாற்றமும் காத்திரமாக நடவடிக்கையும் இன்னமும் ஏற்கடவில்லை என்பது புலனாகின்றது. சர்வதேசச் சட்ட மற்றும் சர்வதேச அரசியல் ஒழுங்கில் போருக்குப் பிந்திய தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு உள்ளக,வெளியகக் கொள்கைகளில் தெளிவுவேண்டும்.வெளியகக் கொள்கை என்பது சர்வதேச சக்திகள் விரும்பியதைச் செய்வது என்றவாறாகவன்றி தமிழர்களது நலன்கள் என்ன என்பதனை முன்வைத்ததாக இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய நலன்சார் வெளியுறவுக் கொள்கை ஒன்று உருவாக்கம் பெறுதல் வேண்டும். தமிழர்களின் நீதி பூர்வமான வாழ்வியல் சுய இருப்பின் சமாந்தர சமத்துவ இருப்பை ஏற்றுணர்ந்து இந்த தேசத்தில் உரிமையுள்ள நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ள இனக்குழுமமாக தமிழர்களை ஏற்று சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத வரை இந்த தேசத்தை அறம் நின்று கொல்லும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வானது கோட்பாட்டு அடிப்படையில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சிப் பொறிமுறை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேச பங்குபற்றவதற்கான பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டும். எமது இனத்தினதும், எம் இனவிடுதலைக்காய் தம் இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களதும் சத்திய இலட்சியத்தின் வழி, தமிழ்த்தேசிய அரசியற்தளத்தை இனவிடுதலை நோக்கி, தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக பற்றுறுதி மிக்க தமிழ்த்தேசியப் பாதையில்தமிழ்த் தேசத்திற்கின் விடிவிற்காய் களப் பணியாற்ற அனைவரும் அணி திரள வேண்டும்.
அமுதன்:- இவ்வளவு இழப்பிற்கு பின்பும் விடுதலை தாகம் உயிர்ப்புடன் இருக்க காரணம் என்ன?
நிலவன்:-விடுதலைப்புலிகளே தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமது வாழ்வை நாமே தீர்மானிப்போம் என்றும் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் பொதுத் தேர்தல் ஊடாகவும் தமது எண்ணத்தை சனநாயக வழியினூடாகத் தெரிவித்து விட்டார்கள். பொது மக்களின் எழுச்சி நிகழ்வுகளான பொங்கு தமிழ், மற்றும் தேசிய எழுச்சி போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தும் நோக்கில் தாம் இருப்பதைத் தொடர்ந்தும் தெளிவு படுத்தி வருகின்றார்கள். ஆகவே விரைவில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும்படி கோரி உலகளாவிய வகையில் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை நிகழ்த்த வேண்டிய தார்மீகக் கடமைக்குரிய வேளை நெருங்கி வரும். அந்த எழுச்சிக்குரிய காலம் விரைவில் வரும் என்றே நாம் கருதுகின்றோம்.
பாரம்பரிய பூமியையும் தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள எமது மக்கள் ஒரு தேசிய இனத்தவர்கள் ஆவார்கள். அந்த தேசிய இனத்தவர்கள் தமது அரசியல் பொருளாதார வாழ்வை தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள் அந்த உரிமைக் கோட்பாடுதான் சயநிர்ணய உரிமையாகும். அது உள்ளான சுயநிர்ணயம், புறம்பான சுயநிர்ணயம் என்ற இரண்டு அம்சங்களை கொண்டதாகும். உள்ளான சுயநிர்ணயம் என்பதானது ஒரு மக்கள் சமூகம் தமது பிரதேசத்தை தாமே சுயமாக ஆட்சிசெய்யும் உரிமையைக் கொண்டதாகும். புறமான சுயநிர்ணயம் என்பதானது பிரிந்து சென்று தனி அரசை அமைக்கும் உரிமையை கொண்டதாகும்.
சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பற்றித் தெளிவு படுத்திய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சுயநிர்ணய உரிமையையும் தமிழீழ மக்களையும் இணைத்து மிக முக்கியமான விடயத்தைச் சொல்லியிருந்தார். அதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப் படவேண்டும். இச்சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல் போனல் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் எனும் உலகத் தமிழர்களின் பெருவிருப்பினை உலகின் முன் பறைசாற்றும் பொருட்டு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவுள்ளது.
அமுதன்:-தனித்த தேசிய இனமான தமிழினத்தை சக தேசிய இனமான சிங்களம் அங்கீகரிக்க மறுப்பது ஏன்?
நிலவன்:- ஒரு தேசிய இனத்தினை தாங்கும் தூண்களாக இருப்பவை தேசிய இனம் , வாழும் நிலம், மொழி ,பொருளாதாரம் , பண்பாடு என்ற நான்கையும் அழிப்பது தான் இனப்பிரச்சினை. ஏன் அவர்கள் அதனை அழிக்கின்றார்கள் என்றால் இலங்கையில் சிங்கள பௌத்த தேசம் மட்டுமன்றி, இனம், மதம், மொழி, கலாசார வேறுபாடுகள் கொண்ட தமிழர் தேசமும் இருப்பதுதான் பிரச்சினை. இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என கருதுகின்றார்கள்.
இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவரால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. ஆகவே ஏனைய இனங்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவிட்டு போகலாம் ஆனால் ஒரு தேசிய இனமாக இருக்க முடியாது என்பது அவர்களது கருத்து .
ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த தேசிய இனத்தின் வாழும் நிலம், மொழி, பொருளாதாரம் , பண்பாடு மற்றும் அங்கு வாழும் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்யுங்கள் அந்த தேசிய இனம் அழியும். ஆகவே இந்த அழிப்புத்தான் இனப்பிரச்சினை. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை நிலைப்பாடுகளை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளும்வரை தமிழின அழிப்பு திட்டத்தை சிங்களம் கைவிடப்போவதில்லை.
வடக்கு–கிழக்கு மக்களின் முதலாவது தெரிவு இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு இருக்கவேண்டுமெனில் குறித்த அழிவுகளிலிருந்து பாதுகாப்பதே இனப்பிரச்சினைக்காக தீர்வாக காணப்படும். அவ்வாறு நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவோமாக இருந்தால் ஒரு தேசிய இனத்தின் அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் கொண்டிருக்க வேண்டும். இனத்தை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரித்தல், இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரித்தல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஆட்சிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினையை, நீதியான முறையில் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியல் கட்சியிடமும் இல்லையென்பது, கடந்த 75 ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்து, இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களை தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உட்பட தீர்வு வடிவங்களை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தி தேசியப்பிரச்சனைக்கு தீர்வு காண எந்த ஆட்சி முன்வருகிறதோ அந்த ஆட்சி மட்டுமே நல்லாட்சியாக இருக்க முடியும்,
தமிழ் மக்கள் கௌரவமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும், தமது அரசியல் முடிவுகளைத் தமக்காகத் தாமே எடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதை நாம் இவ்விடத்தில் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறது.
வட-கிழக்கு தமிழர்களின் பலம் என்பது தாயக நிலத்தின் மீது குடியிருக்கும் தமிழ் மக்களின் இருப்பிலேயே தங்கியுள்ளது. எனவே தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவது, அவர்களின் இனப்பரம்பல் செறிவை குறைப்பதுவும் சிங்கள பௌத்த இனவாதத்திற்கு அவசியமாகிறது. தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை கட்டுவதிலும், தமிழர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும், தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கிகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தொடரும்…