வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.
அமுதன்:- தமிழீழப் போராட்டத்தை சுருக்கமாக கூறுங்கள்?
நிலவன்:- தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் (1983 – 2009) தமிழ் மக்கள் தமது தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து மூன்று சகாப்தங்களாக நடந்த ஆயுத விடுதலைப் போராட்டம், தமிழர்களை ஒரு தேசமாக, தேசியமாக வளர்ச்சியடையச் செய்திருந்தது. ஒரு தேசிய இனமாகிய தமிழ் இனத்தின் மொழி, கலை, பண்பாட்டு, வளக்காறு விழுமியங்கள் கொண்ட தமிழர்தேசத்தின் பொருளாதார வடிவமானது நிலமானிய சமூகத்தன்மையைக் கொண்டிருந்த போதும் தனக்கே உரித்தான தனிப் பண்புகளுடைய உற்பத்தி உறவுகளில் கட்டப்பட்டிருந்த யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இன அழிப்பு ,இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என தமிழ் இனத்தை அழிக்க பல்வேறு வழிகளில் 75 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறி அரசுகள் செயற்பட்டு வருகின்றது.
சிங்கள அரசுகளின் ஆட்சிகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து சிங்கள அரசுகள் விதித்திருந்த பொருளாதார, உணவு, மருந்து, போக்குவரத்து தடைகளினாலும் மிகுந்த இன்னல் மிக்க வாழ்வினை மேற்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கான அடிப்படை வாழ்வியல் தேவைகளைக் கூடத்தர மறுத்து வருகின்றனர் .
அமுதன்:- அகிம்சை வழியாக தொடங்கிய தமிழ் மக்களின் தமிழீழப் போராட்டம் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டமாக எவ்வாறு மாறியது.
நிலவன்:- இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட பேரினவாதம் சார்பான சட்டங்களும் மற்றும் சட்டத் திருத்தங்களும், உதாரணமாக தனிச் சிங்களச் சட்டம், பெளத்தம் அரச மதமாக்கப்படல், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இனக் கலவரங்கள், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, ஆட்கடத்தல்களும் காணாமல் ஆக்கப்படுதல் படுகொலைகள், சிறை சித்திரவதை. எனத் தமிழ் இளைஞர்களை இலங்கை அரசிற்கு எதிராக ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுக்க தூண்டின.
தமிழர்களைத் தலை நிமிரச் செய்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் –தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்தியவர்கள். 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய தமிழ் இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (LTTE) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தழிம் மக்களுக்கான தமிழ் இராணுவமாக உலக அரங்கில் செயல் வடிவம் கொடுத்தார்.
அன்றுதொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு தமிழ் இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் தான் இயக்க கொடியாக இருந்த புலிக்கொடி, அதில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு, தமிழீழ தேசிய கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அமுதன்:- தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுற்ற பிறகு விடுதலை வேட்கைக்காக என்ன செய்ய வேண்டும்.
நிலவன்:- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே – வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் நாசகாரத் திட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் – எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் – சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கச்செய்ய சிங்களம் “எம் கையை வைத்து எம் கண்களைக் குத்துவதைப்போல” சுயநல நோக்கில், வாழ்வரசியல் அடிமைகளான தமிழ் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தியே தங்களது நிகழ்ச்சித்திட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
தமிழினத்தின் இறையாண்மையை பாதுகாத்து, சிங்களப் போரினவாதிகளின் சவால்களை சாணக்கியமாக எதிர்கொண்டு, இந்த சவால்களை ஒற்றுமையாக முறியடித்து தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை தமிழீழ மக்கள் அனவரும் உணர்வோடும் எழுச்சியோடும், தமிழீழத் தனியரசை அமைத்திடும் உறுதியோடும் தமிழீழத் தேசியக்கொடியினை நம் கைகளில் ஏந்தி செயற்பட வேண்டும்.
அமுதன்:-தமிழீழ தேசிய விடுதலை போராட்ட வரலாறு எவ்வாறு உள்ளது?
நிலவன்:- தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. அரச ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான எழுச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகிறது. ஈழத்தமிழர் சுதந்திர இயக்கம் ஆரம்ப காலகட்டத்தில் அமைதிவழிப் போராட்டமாகவும், பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் முதிர்ச்சியடைந்து உயர்வடிவம் பெற்றது. அரச ஒடுக்குமுறை இனப்படுகொலையாகத் தீவிரமடைந்ததன் எதிர்விளைவாகவே, தமிழரின் எழுச்சிப் போராட்டம் ஆயுதம் தாங்கிய யுத்தமாக விரிவாக்கம் அடைந்து முனைப்புப் பெற்றது
1976–77 ஆம் ஆண்டில், தமிழர், தம் பூர்வீக நிலமான வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழம் எனும் நாட்டை, சனநாயக முறையில் உருவாக்க முடிவு செய்தனர். சனநாயக அடிப்படையில் தமிழரால் வழங்கப்பட்ட உறுதியான இந்த ஆணையானது, தமிழ் மக்களைப் பெருந்தொகையில் படுகொலை செய்து அழிப்பது. இலங்கையில் தலைதூக்கிய இனக்கலவரங்கள் அனைத்தும் இந்த இரண்டாவது ரக இன ஒழிப்பின் கோர வெளிப்பாடுகளாகவே அமைந்தன. 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983ஆம் ஆண்டுகளில் வெடித்த இனப்பூகம்பங்கள், சிங்கள அரசின் மேற்பார்வையில் இனப் படுகொலை யாவும் தமிழர்களை இன அழிப்புச் செய்யும் நோக்குடன் மிகவும் திட்டமிட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ் இனத்தை அழித் தொழித்து இலங்கைத்தீவிலிருந்து துடைத் தெறியவும் ஈழத் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இந்தப் படுகொலையின் உச்ச கட்டமாக காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற தழிழ் இனப் படுகொலையில் தமிழீழ மக்கள் ஈவிரக்கமின்றி கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு, இந்திய வல்லாதிக்க துணையுடன் இலங்கை அரசு நடாத்திய தமிழினப் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் காணமல் செய்தல் என்பனவற்றில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், நோயற்றவர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி வகைதொகை இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக மண்ணில் (தாய்மண்) கொன்றொழித்த வரலாறு நிகழ்கால சாட்சியத்துக்கானது. இதற்கான பொறுப்புக் கூறலையும், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையையும் ஒப்புக் கொள்ளவே மறுத்துவரும் சிங்கள பௌத்த அரசாங்கங்கள், தமிழரின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வழங்கும்? யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கூடுதலான நாடுகள் இலங்கை மீது வெறுப்பைக்கொண்டுள்ளன. தாம் சார்ந்த நலனையும் இறைமையினையும் பாதுகாக்க வீற்றோ பவர் உள்ள சீனா, ரஷ்யாவுடன் இணைய வேண்டியது இலங்கையின் கட்டாயத் தேவையாகியுள்ளது. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையினை தடுக்கும் வல்லமை சீனா, ரஷ்யா போன்ற தமது நேசநாடுகளுடன் இருக்கின்றது என்பதை இலங்கை நன்கு அறிந்து வைத்துள்ளது. இதனால் இவைகளின் பின்னால் ஒழிந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு காணப்படுகின்றது. இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் உறைநிலை கண்டது.
அமுதன்:- தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமை எனும் ஆழ்ந்த கருத்தை தேசிய தலைவர் எவ்வாறு விதைத்தார்.
நிலவன்:-தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வானது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையின் ஊடாக காணப்பட வேண்டும் என்கின்ற கருத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்து சுமார் 35ஆண்டுகளுக்கு முன்னரேயே பகிரங்கமாக அறிவித்திருந்தார், 22 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் சரி 1989ஆண்டு முதல் மாவீரர் தினப் பேருரைகளின் போதும் சரி தமிழீழத் தேசியத் தலைவர் சுயநிர்ணய உரிமை குறித்து வலியுறுத்தியே வந்திருக்கின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழரின் சுயநிர்ணய உரிமை குறித்து வலியுறுத்தி வந்திருந்ததன் முக்கியத்துவத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற இடத்தில் முதல்முதலாக தமிழீழ மக்கள் முன் ஆற்றிய பகிரங்க உரையின் போதும் சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசியிருந்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தஉரை சுதுமலைப்பிரகடனம் என்று பின்னாளில் பெயர்பெற்றது.அன்றைய தினம் தேசியத்தலைவர் சுதுமலையில் பேசும்போது இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கு உரிமை எதனையும் பெற்றுத் தராது என்றும் இந்த ஒப்பந்தத்தை தாம் ஏற்கவில்லை என்றும் தெவரிவித்திருந்தார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவம் குறித்து தன்னுடைய மாவீரர் தினப்பேருரைகளின் போதும் தொடர்ந்தும் குறிப்பிட்டு வந்துள்ளார். சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு நடைபெற்ற அதே ஆண்டின் மாவீரர் தினப் பேருரையின் போதும் அதாவது 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்திகதியன்றும் சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசியிருந்தார். சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின்போது சுயநிர்ணய உரிமை குறித்தத் தெரிவிக்கப்பட்ட கருத்தை மீள்உறுதி செய்யும் வகையிலேயே தன்னுடைய 2002ம் ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போது சுயநிர்ணய உரிமை குறித்துத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தினப் பேருரைகளைத் தவறாது கூர்மையாக கவனித்து வருபவர்கள் அவர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்துத் தொடர்ந்தும் பேசி வந்திருப்பதை உணர்வார்கள்.
அமுதன்:- ஆயுதப் போராட்டத்தின் ஊடாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற புலிகள் ஏன் அமைதி கால உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
நிலவன்:- இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அப்போதைய நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்கு விஜயம் செய்து, விடுதலைப் புலிகளை சந்தித்த போது இந்த அமைதி முயற்சிகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் இராணுவச்சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்டு இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், அவர்கள் தன்னாட்சி உரிமையுடைய தேசிய இனம் என்பதை 2002 ம் நோர்வே நாட்டின் அனுசரணையால் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின்னர் நடைபெற்ற ஒஸ்லோ பிரகடனதத்தில் சிங்கள பேரினவாதம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. நோர்வேயின் அனுசரணையில் இலங்கையானது யுத்தத்திற்கு முன்னர் பல நாடுகளின் உதவியினைப் பெற்று.
அடுக்கடுக்கான இராணுவ நகர்வுகள் மூலம், அலை அலையாக பல வெற்றிகளை அடைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவப்பலத்தின் உச்சியில் இருக்கின்ற போதிலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய அரசியல் தீர்வு ஒன்றினூடாக தமிழரின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் மனப்பூர்வமாக விரும்பி மிகுந்த நெகிழ்ச்சிப் போக்கினை கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் நிதானமாகவும், அவதானமாகவும் செயற்பட்டது. 2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி வரைபு (ISGA) எனும் முன்மொழிவை சர்வதேச அளவில் அமைதிக்கான சமாதான செயல்முறையின் ஒரு பகுதியாக முன்வைத்தனர்.
அமுதன்:-அமைதி கால சமாதான பேச்சு வார்த்தை நிகழ்வுகளில் சிங்களத்தின் சூழ்ச்சிகள் எவ்வாறு இருந்தது.
நிலவன்:- தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பலத்தைப் பெற்றுள்ள அதே வேளையில் அரசியல் ரீதியாகவும் பலமுற்று விளங்கிட சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக வரக்கூடிய நீதியான, நியாயமான தீர்வின் படி தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளக்கூடிய சுயாட்சி உரிமையைப்பெற கூடியதாக இருக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையின் இந்த அர்த்த பரிமாணத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலம் தமிழர்களுடைய தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு எதுவும் வரப்போவதில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்கள். சமாதானப் பேச்சு வார்த்தைகளை இதய சுத்தியுடனும், நேர்மையுடனும் நடாத்துதற்கு இலங்கை பௌத சிங்கள பேரினவாத ஆட்சி பீடங்கள் அரசும் தயாரில்லை என்பதையே அதனுடைய செயற்பாடுகள் சுட்டிக் காட்டின.
அரசுக் கட்டுமானத்தில் பிரதமர் ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், ஜனாதிபதி இன்னொரு கட்சியைச் சார்ந்தவராகவும், ஒருவர் முடிவை மற்றவர் எதிர்க்கும் வகையிலான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது . பிரதமர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறார். சமாதானப்பேச்சு வார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாக வேண்டுமென்றால் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முறையான அமலாக்கம் குறித்தே பேச வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்ததன் காரணமும் சமாதானப் பேச்சுக்களின் ஊடாக தீர்வுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்கின்ற அவர்களின் விருப்பம்தான்.!ஆனால் ஜனாதிபதியின் சம்மதம் இல்லை பிரதமர் தலைமையிலான அரசுடன் பேசி முடிந்ததைப் பெற முயற்சிக்க இன்னொரு சாரார் பழிவாங்கும் தருணத்திற்கு தயாராகிய பின்புலத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
அமுதன்:- யுத்தம் நிறுத்த அமைதி கால கட்டத்தில் சிங்களமும் சர்வதேச நாடுகளும் எவ்வாறு தமிழிழ போராட்டத்தை ஒடுக்க ஆரம்பித்தது
நிலவன்:- அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மட்டுமேயல்ல, நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட மிகக் கொந்தளிப்பான வரலாறு. நோர்வேயின் அனுசரனையின் போது ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியவாறு வெளிநாடுகளிலேயே இடம்பெற்றது. இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டது. 2006 சமாதானப் பேச்சு வார்த்தைகளும் முறிவடைந்து நோர்வேயின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன. சமாதானப் பணிகளில் நோர்வே பாரிய தோல்வியினை தழுவியது. உண்மையும், நீதியும், சத்தியமும் அறவுணர்வும் தமிழர்களின் கோரிக்கையில் இருந்த போதும் சிங்கள தேசம் அதை முழுமையாக புறக்கணித்தது. 2006- 2009 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் கண்ணியமான நீதியான சமாதானக் கனவுகளுக்கு முற்றிலும் நேர்எதிராக இருந்தது.
உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். “தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. ஆயுதக் கடத்தலை இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம் என இந்தியா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் இராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது.
அமுதன்:- தமிழ் ஈழ மக்களுக்கு எதிரான 2009 இனப்படுகொலை யுத்தத்தை பற்றி கூறுங்கள்.
நிலவன்:- வார்த்தையில் வர்ணிக்க முடியாத துயரத்தை காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சிங்கள இனவெறி பவுத்த அரசால், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் 16,17,18-ஆம் நாள்களில், பல்லாயிரம் அப்பாவி தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். சரணடைபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்கப்பட்டும் சரணடையச் சென்றோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 21-ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?
இனப் படுகொலையில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எந்த விதமான பாகுபாடும் இன்றி கொலை, கைது, கடத்தல், என வகை தொகையின்றி உங்கள் வஞ்சத்தை தீர்க்க 2009 இறுதி யுத்தத்தில் 146,679 பேரை இனப்படுகொலை செய்தார்கள். உணவு, மருந்து உறைவிடம் இல்லாமல் கொத்துக் குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளும் வீசி எம்மை அழித்தார்கள். பல ஆயிரம் பேரை காணாமல் போகச் செய்தார்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை இன்றுவரை காணவில்லை. தமிழீழ மக்கள் ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கப்பட்டார்கள்.
தாயகத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட போரும் பேரழிவுகளும் நடந்து கொண்டிருந்த பொழுது போராட்டத்தின் நியாயத்தை உலக அரங்குகளில் நின்று புலம்பெயர்ந்த மக்கள் ஒலிக்கச் செய்தவர்கள். எம் மக்களைக் காக்க வீதி வீதியாக உலகத் தேசங்களிடம் தலையிடக் கோரி மன்றாடி பல போராட்டங்களைச் செய்தார்கள். தமிழ் நினைவுகள் மற்றும் புனிதக் கல்லறைகள் உட்பட போராட்டத்தின் அனைத்து தடயங்களும் போர் முடிந்த பின் அழிக்கப்பட்டன. இவ்வாறாக தமிழீழ நடைமுறை அரசை அழித்த நிலையில், சர்வதேச சமூகத்தால், புலிகள் மீதான தடை, தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டு நடைமுறையில் வைத்திருப்பதன் நோக்கத்தைப் பற்றிய பல கேள்விகளைத் தூண்டுகிறது.
அமுதன்:- ஆயுதப் போராட்ட மௌனத்திற்கு பின்பு சர்வதேச சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் செய்ய வேண்டியது என்ன?
நிலவன்:- தமிழீழ அரசாங்கம் தான் எங்கள் இலட்சியமாக இருந்த காரணத்தால் ஒரு நிழல் அரசாங்கத்தையே விடுதலைப்புலிகள் நடத்தி வந்தார்கள். தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடினார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஆதரவுடன், சர்வதேச மட்டத்தில், தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். ஈழத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் ஈழப் போராட்டத்தில் பங்களித்தவர்களாக இருக்கிறார்கள்.
இலங்கை போன்ற அரசாங்கங்கள் இனப்படுகொலை குற்றங்களைச் செய்யச் ஊக்குவிக்கப்படும் அதேநேரம், அபிவிருத்தி என்ற பெயரால் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு, இதற்கு உடந்தையாக அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளும் உதவுகின்றன. ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நோர்வே, சுவிட்சர்லந்து, கனடா ஏன் நாங்கள் வெகுவாக நம்பிய தென்னாஃப்ரிக்கா கூட உயர் தத்துவம் பேசினவே ஒழிய ஒருபோதும் உயர்ந்து நின்று எமக்காகப் பேசவில்லை. திட்டமிட்டு இனப்படுகொலையை நடைமுறைப்படுத்தும் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து குரல் எழுப்பும்போது பயங்கரவாத தடுப்பு என்ற பெயரில் அக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இதனால் குறிப்பாக இளைஞர்கள் அதிகாரத்தடன் இணங்கிச் செல்லும் போக்கே காணப்படுகிறது.
தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும், அங்கீகாரத்துடனும் ஒரு தீ்ர்வு எட்டப்பட்டால் அப்பொழுது விடுதலைப் புலிகள் ஆயுதம் வைத்திருப்பதற்கான அவசியம் ஏதும் இருந்திருக்காது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவையாக உள்ளன” என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி, புலிகள் மீதான தடை தடையை நீட்டித்திருக்கிறது. சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் மீதான தொடர்ச்சியான தடையானது, பயங்கரவாதிகள் என்ற அவப்பெயரால் களங்கத்தை உணரும் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. தனி நாடு கோரும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆதரிக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.
தமிழ்- சிங்கள இனப் பிரச்சனைக்கு தனி நாடு மட்டுமே ஒரே தீர்வு என்று தமிழ்த் தேசியம் எழுச்சி கொண்டு, வளர்ச்சி பெற்று, சுயநிர்ணயத்திற்கான ஆயுதப் போராட்டமாக வடிவம் எடுத்த தமிழ் மக்களின் புரட்சிகரமான அரசியற் போராட்ட வரலாறு சர்வதேசமயப் படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் இலட்சிய கனவை அடைய, ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்து அனையா நெருப்பை நெஞ்சில் சுமந்து, கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு நீதி வேண்டி, அதற்கான முன்னெடுப்புகளை சர்வதேச தமிழர்கள் நாம் களம் காண வேண்டும்.
அமுதன்:- தற்கால புவிசார் அரசியலில் தமிழீழ விடுதலையின் தேவை அதற்கான முன்னெடுப்புகள் எவைகளாக அமையும்.
நிலவன்:- உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அசாதாரண நிலையை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படுத்த வழி வகுக்கும். இந்தோ-பசுபிக் பிராந்திய அரசியலில் இன்றும் தமிழர்கள் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பதால் சர்வதேசம் இனியாவது நேர்மையாக தமிழருக்கான நிரந்தர அரசியற் தீர்வை ஈட்டித்தர இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.
சீனா தனது Belt and Road (BRI)என்ற பெரும் வணிக போக்குவரத்துகளுக்கான தரை மற்றும் கடல் ஊடாக பெரும் கட்டுமான முன்முயற்சி மூலம் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் மத்தியில் இராணுவ, தொழிநுட்ப மற்றும் பொருளாதார முனைகளில் முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. ஒரு பரந்த ஆசிய அமைப்பில் சீனா ஒரு முக்கிய சக்தியாக ஆசிய கண்டத்தின் ஒரு எழுச்சியாக உலக அரங்கில் தோற்றம் பெற்றுள்ளது.
சீனாவின் ஒரு பட்டி ஒரு வீதி முன்முயற்சி (Belt and Road Initiative) ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய நுழைவாயில் (Global Gateway) போன்ற சர்வதேசத்தின் பொருளாதார முன்னெடுப்புகளில் ஈழத்தமிழரின் பங்கு தவிர்க்க முடியாதது. இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் கேந்திர இடத்தில் இருக்கின்றது. இது மட்டுமல்ல தமிழகமும் கேந்திர இடத்தில் தான் இருக்கின்றது. இந்த இரண்டு கேந்திரப் பலமும் இணையும் போது தமிழ் மக்களின் கேந்திரப்பலம் உச்சமாகும்.
இந்தோ, பசுபிக் பெருங்கடல் பிராந்தியங்களில் இந்து சமுத்திரம் ஒரு முக்கிய மூலோபாய சந்தியாகும். இத்தகைய சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தின் நடுநாயகமாக திகழும் இலங்கையின் புவியியல் நிலையம் இந்தியப் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புபட்டதாகும்.
பூகோள அரசியலில் பிராந்திய பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கிய விவகாரமாகவும் இது தரைவழி, வான்வழி, கடல்வழி போக்குவரத்துடன் தொடர்புடையது மட்டுமல்லாது குறிப்பிட தக்க பதற்ற காலங்களில் இடம் பெறகூடிய தகவல் பரிமாற்றம், கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த நிலைகளின் உபயோகம் ஆகியவற்றுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டதாகும்.
அமுதன்:- சர்வதேச நாடுகளிடம் தமிழீழ விவகாரத்தில் இறுதி முடிவு எட்டும் காலம் வரை இடைக்கால தீர்வாக தமிழீழ விடுதலை புலிகள் அளித்த இடைக்கால தன்னாட்சி அதிகார அவை திட்டம் என்பது என்ன?
நிலவன்:- இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவையை நிறுவுவதற்கான ஓர் உடன்படிக்கைக்குத் தமிழ் மக்கள் சார்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் ஆலோசனை 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற ஓர் அரசை தமிழ்மக்களுக்காக அமைக்குமாறு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமது பிரதிநிதிகளுக்கு தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருதமையை கவனத்திலெடுத்தும், 2௦௦௦ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் உள்ள பொரும்பான்மையான தமிழ்மக்கள் தமது செயல்களின் மூலம் தமிழீழவிடுதலைப்புலிகளை தங்களுடைய அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டே தஙகளுடைய வாக்கை வழங்கினார்கள் என்பதை இனங்கண்டும்,
இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவை ( இ.த.அ.அ ) பேச்சுவார்த்தை மூலமான இறுதித்தீர்வு எட்டப்பட்டு நடைமுறைக்கு வரும்வரை, வடக்கு-கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய எட்டு ஆட்சி மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவை [ (Interim Self – Governing Authority – (ISGA) ] நிறுவப்படும். இதில் முஸ்லிம் சமுகத்தின் பங்கை உருவாக்கம் செய்வதில் கலந்துகொள்ளவதற்கு அவர்களது பிரதிநிதிகளுக்கு உரமை உண்டு.
இ.த.அ.அ. இன் உறுப்பமைப்பு, தேர்தல்கள், மனித உரிமைகள், மதச்சார்பின்மை. லஞ்ச ஊழலை தடுத்தல், அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு, இ.த.அ.அ இன் ஆட்சி வரைவு, நீதி, அதிகாரங்களை வகை பிரித்தல், நிதி, இ.த.அ.அ வருடாந்தர வரவு-செலவு , வடக்கு – கிழக்கு பொது நிதியம், வடக்கு – கிழக்கு மீள்கட்டுமான நிதியம் (வ.கி.மீ.நி), சிறப்பு நிதியம், வணிகம், நிதிக்கணக்கீடும் கணக்காய்வும், மாவட்ட குழுக்கள் ஆள்கை, காணி ஆள்கை, அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில் மீள்குடியமர்வு, கடல் மற்றும் கரையோர வளங்கள், இயற்கை வளங்கள், , நீர்ப்பயன்பாடு, ஒப்பந்தங்களும் குத்தகைகளும், பிணக்குத்தீர்த்தல் என உள்ளகக் கூறுகளைக் கொண்ட தமிழீழ விடுதலைப் போராளிகளை போன்ற அறம் சார்ந்த கொள்கைகளை உடைய விடுதலைப் போராளிகளை இனி உலகம் காண்பதரிது.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழு மூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புகளோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, தமிழீழநாட்டை அமைக்க வேண்டுமென கோரியது.
மேலதிகமான விடங்களை தெரிந்து கொள்வதாக இருந்தால் (விடுதலைப் புலிகள் பத்திரிகை குரல் 111 மற்றும் ஈழநாதம் ஓசை- 257, ௦3 நவம்பர், 2௦௦3 பார்க்க முடியும் )பேச்சுவார்த்தை மூலமான நிலையான தீர்வொன்றின் விளைவாக வடக்கு-கிழக்கிற்கென ஓர் புதிதான அரசாங்கம் நிறுவப்படும்வரை இந்த ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப்புலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவைத் திட்டம் ஆகும்.
அமுதன்:- பல்வேறு அரசியல் சூழல்கள் மாறி உள்ள இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் தமிழ் ஈழ தன்னாட்சிக்கு ஆதரவுகள் எவ்வாறு உள்ளது
நிலவன்:- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 12.12.2019 அன்று பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற இருக்கும் நிலையில் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் 21.11.2019 அக் கட்சியின் தலைவரும், தமிழ் மக்களுக்காகக் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக ஓயாது குரல் கொடுத்து வருபவருமான ஜெரமி கோர்பின் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஈழத் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அவசியம் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே கூறியிருக்கிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்து நடந்த விவாதத்தில் பங்கு கொண்டு உரையாற்றி சமயத்தில் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே இந்தக் கருத்தை கூறியிருப்பது, ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவான உலகக் குரலாகும்.
“தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான் மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளையும் மற்றும் அவர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங் களையும் பொபினி நகரசபை வன்மையாகக் கண்டிக்கிறது”
05-02- 2021.இலங்கைத்தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் – கனடிய நாடாளுமன்றில் ஹரி ஆனந்தசங்கரி உரையாற்றினார்
12-12-2023ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொன் டேவிஸ் கூறியுள்ளார்.
21_11-2023தமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது – பிரம்டன் மேயர் கனடா.
அமுதன்:- இலங்கை தீவில் ஸ்ரீலங்கா எனும் ஒற்றை ஆட்சி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வாக அமையுமா?
நிலவன்:- ஒற்றையாட்சி முறையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை. இலங்கையின் ஒற்றையாட்சி குடியரசு அரசியலமைப்பு, முதலில் 1972 இல் உருவாக்கப்பட்டு 1978 இல் அனைத்து திருத்தங்களுடனும் அமுல்படுத்துப்பட்டது. இந்த அரசியல் அமைப்பானது தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இயற்றப்பட்டது. 1947 இல் கொண்டுவரப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு ஈழத் தமிழர்களின் ஆணையைக் கொண்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், இது குறைந்தபட்சப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதியைத் (பிரிவு 29) தமிழர்களுக்கு வழங்கியது.
மேலும் இந்த அரசியலமைப்பால் வழங்கப்படும் பாதுகாப்புக்கள் மீறப்பட்டால், ஐக்கியராச்சியத்தில் உள்ள கோமறை மன்றத்தில் (Privy Council) மேன் முறையிடும் உரித்தை தமிழர்களுக்கு வழங்கியிருந்தது. இலங்கைக் குடியரசின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு பிரித்தானிய முடி அரசுடனான உறவுகளைத் துண்டித்ததோடு இங்கிலாந்தில் உள்ள கோமறை மன்றத்தில் (Privy Council) தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அத்துமீறல்களிற்கும் மேல்முறையீடு செய்யும் தமிழ் மக்களின் உரிமையைப் பறித்தெடுத்தது
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டமானது இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியம் இருப்பதை முறையாக அங்கீகரிக்கத் தவறிவிட்டது. சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் அரசு முதன்மைப்படுத்தியதனூடாக, சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கான அடிப்படையை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தியது. பல் தேசிய இனங்களின் உண்மையான சமத்துவத்தை உறுதி செய்யாத அரசியலமைப்பாகும்.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியத்தின் இருப்பை சிதைக்கும் நோக்கிலான கொள்கையை முன்னெடுத்து வருகின்றன. தமிழர்களைத் துன்புறுத்துதல், பாகுபாடு காட்டுதல், அரச வன்முறை, அரசால் கட்டவிழ்த்து விடப்படும் குழு வன்முறைகள், இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு நில அபகரிப்புகள், பௌத்தமயமாக்கல் மறுதலிக்கப்பட்டு வரும் தமிழர் உரிமைகள் என்பன திட்டமிட்டு தொடர்ந்து இடம் பெறுகின்றது. எனவே, தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்காத எந்த ஒரு தீர்வுத்திட்டத்தாலும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியாது.
அமுதன்:- தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான நீதி மற்றும் அவர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட சர்வதேச சமூகம் செய்ய வேண்டியது என்ன?
இலங்கையில் தமிழ் மக்களது நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வதேசத்திற்கு தார்மீக கடமை இருக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசத்தின் இருப்பை சிதைப்பதற்காக விடுதலைக்காகவும் நிலத்தின் உரிமைக்காகவும் போராடிய ஒரு இனம், தொகுதி தொகுதியாய் கொன்று அழிக்கப்பட்டர்கள். சிங்கள தேசம் இனவழிப்பு செயற்திட்டத்தை இன்று வரை முன்னெடுத்து வருகின்றது.
இன அழிப்பின் வரலாறு, தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் உள்ளடக்கம். தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வினை காண்பதற்கு தங்களது பங்களிப்பினை சர்வதேச சமூகம் செய்ய வேண்டும். அரசுகள் தங்களுடைய நலன்களிலிருந்து செயற்பட்டாலும் சர்வதேச சமூகம் சர்வதேச ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் வெற்றியை சர்வதேச அரசியலே தீர்மானிப்பதாக இருப்பதால் இது மிக மிக அவசியமாகும்.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வைக் காண்பதில் சர்வதேச சமூகம் தோல்வியடைந்தால் தமிழ் மக்கள் நிரந்தரமாக சகல உரிமைகளையும் இழக்க வைக்கும் திசையில் இலங்கை அரசாங்கத்தைச் செல்ல ஊக்குவிக்கும். இலங்கையில் நீண்ட காலமாக புரையோடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்காக சர்வதேசத்தால் ஒழுங்கமைக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதுமான ஒரு சர்வசன வாக்கெடுப்பினை நடார்த்த வேண்டும்.
இலங்கை அரசினால் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்படும் மனித கொடுமைகள் மீளவும் நடைபெறாதிருக்க இலங்கையில் நீண்ட காலமாக தீர்க்கப்படமலிருக்கும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் சர்வதேச ஒழுங்கமைப்புடன் சர்வதேசத்தால் கண்காணிக்கும் வகையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுதல் வேண்டும். தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டு. தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமான தீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்பட வேண்டும்
வரலாற்று ரீதியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் திம்புக் கோட்பாடு, சுதுமலைப் பிரகடனம், மாற்றமடையாத தமிழரின் இலட்சிய எழுச்சியை உலகங் கண்டு கொண்டுள்ளது. அதனைப் போல பொங்குதமிழ் முதல் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணிப் பிரகடனங்களும் மக்கள் எழுச்சிப் பேரணி எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் நியாயமான கோரிக்கைகளாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வா தன்னாட்சியுரிமையை கோரி சர்வதேசத்திடம் அழுத்தமாக பறைசாற்றி உள்ளனர். தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.