ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள் நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில்,
வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர்.