கட்டம், கட்டமாக விண்ணப்பம் கோரும் நடைமுறையை எதிர்க்கின்றோம். வேதனத்தை வேண்டுமானால் கட்டம் கட்டமாக வழங்குங்கள் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
நிரந்தர தொழில்வாய்ப்பினைக்கோரி அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் காரைதீவில் முன்னெடுத்து வரும் போராட்டம் 87ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
இந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே பட்டதாரிகள் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபை வேலையில்லாப் பட்டதாரிகளை தொழிலுக்கு இணைத்து கொள்தற்கான விண்ணப்பங்களை இன்றிலிருந்து கட்டம், கட்டமாக கோரப்படவுள்ளது.
அதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம், கண்டிக்கின்றோம். ஒரே தடவையில் எங்கள் அனைவரையும் உள்வாங்கி விண்ணப்பங்களைக் கோர வேண்டும்.
வேண்டுமானால் வேதனத்தைக் கட்டம், கட்டமாக வழங்குங்கள். இல்லாதவிடத்து நாம் அனைவரும் அதனை நிராகரிப்போம்.
கிழக்குமாகாண முதலமைச்சர் இன்று 1000 பட்டதாரிகளை உள்ளீர்க்க விண்ணப்பங்களை கோரவுள்ளார். நாம் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். 2012 முதல் 2017 வரையிலான அத்தனை பட்டதாரிகளையும் உள்ளீர்க்கும் வகையில் விண்ணப்பங்களைக் கோர வேண்டும்.
நாம் தொடர்ந்து 87ஆவது நாளாகவும் பேராட்டத்தில் ஈடுபடுவது வெறுமனே 1000 பட்டதாரிகளுக்கு மாத்திரம் தொழில் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல.
மத்திய அரசு திறைசேரி முகாமைத்துவப் பிரிவு சுமார் 5000 பட்டதாரிகளை உள்ளீர்க்கத் தேவையான அங்கீகாரத்தை அனுமதியை வழங்கியிருப்பதாகச் சொன்ன முதலமைச்சர் ஏன் இவ்வாறு கட்டம், கட்டமாக என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றார் எனக் கேட்க விரும்புகின்றோம்.
நிதி இல்லாவிட்டால் நாம் முதல் ஒருவருடத்திற்கு இலவசமாக அரசுக்காக பணியாற்ற விரும்புகின்றோம். ஆனால் அனைவருக்கும் நியமனம் தரவேண்டும். சம்பளத்தை வேண்டுமானால் கட்டம், கட்டமாக வழங்குங்கள்.
வருட முறைப்படி நாம் சம்பளத்தை கட்டம், கட்டமாகப் பெற சித்தமாயிருக்கின்றோம். ஆனால் நியமனத்தைக் கட்டம், கட்டமாக வழங்க ஒருபோதும் சம்மதியோம்.
வேதனமில்லாமல் ஒரு வருடகாலம் நாட்டிற்காகச் சேவையாற்ற தயாராகவிருக்கின்றோம். இதனை பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பேராசிரியர் மாரசிங்கவிடம் கூறினோம்.
அவர் நெகிழ்ந்துபோனார். இன்று அவரது சத்தத்தையும் காணவில்லை. எதிர் கட்சித்தலைவர் சம்பந்தனின் சத்தத்தையும் காணவில்லை. காலஅவகாசம் தந்ததுதான் மிச்சம்.
ஏதோ ஒரு விடயத்தில் உறுதியாயிருக்கின்றோம். அனைவருக்கும் அரச தொழில் கிடைக்கும் வரை நாம் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம். என அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்திருந்தனர்.
மேலும் பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பட்டதாரிகள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.