இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் – மதவாச்சி பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் – மதவாச்சி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி வாகனமொன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்திய நிலையில், போலீஸாரின் கட்டளை சமிக்ஞையை மீறி வாகனத்தை அந்த ஓட்டுநர் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து, வாகனத்தைப் பின்தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள், வாகனத்தை இடைமறித்து, அதில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தனது ஆணுறுப்பு விதையொன்று அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகின்றார்.
தனக்கும் தனது நண்பனுக்கும் தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தை போலீஸார் கூறவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
”ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நானும் எனது நண்பனும் நகரத்திற்கு சென்று வரும் போது, போக்குவரத்து போலீஸார் இருப்பதை அவதானித்தோம். நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை கடந்து நாங்கள் எமது வாகனத்தை செலுத்தினோம். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பயணித்திருப்போம்,” என்றார்.
ஏன் என்று சொல்லாமல் தாக்கினர்’
மேலும் பேசிய அவர், “அப்போது எம்மைப் பின்தொடர்ந்து வந்த போக்குவரத்து போலீஸார் வாகனத்திற்கு முன்பாக சென்று எம்மை இடைமறித்தனர். இவ்வாறு வந்த போலீஸ் அதிகாரிகள் என்னையும், எனது நண்பனையும் வாகனத்திலிருந்து வெளியில் இழுத்து தாக்கினார்கள். எனது கைகளை கட்டி தாக்கினார்கள்,” என்றார்.
“பின்னர் வாகனத்திற்குள் தள்ளி விட்டு கதவை மூடினார்கள். எம்மை கைது செய்தார்கள். அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் குழுவொன்று வந்தது. அவர்கள் என் நண்பன் மீது தாக்குதல் நடத்தினார்கள். கைது செய்த பின்னர் எனது உடல் நிலை சரியில்லை. என்னை மருத்துவரிடம் காண்பித்தனர். எனது நிலைமை மோசம் என மருத்துவர் கூறினார். அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்,” என பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகின்றார்.
அதனை தொடர்ந்து, அந்த இளைஞர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
”அநுராதபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தார்கள். எனது கீழ் பகுதி சேதமாகி, இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். சத்திர சிகிச்சையொன்று நடத்த வேண்டும் என கூறினார்கள். இப்போது அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது,” எனவும் அவர் கூறினார்.
”மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரும், முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த இருவரும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். காரணம் கூறவில்லை. வாகனங்களை முந்தி வந்தமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். எனது கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் கடுமையாக வலி இருக்கின்றது. சத்திர சிகிச்சையும் நடத்தப்பட்டுள்ளது,” என அவர் தெரிவிக்கின்றார்.
‘என் மகன் வாழ்க்கையை இழந்துவிட்டார்’
தனது மகனின் ஆண் உறுப்பின் விதையொன்று அகற்றப்பட்டுள்ளதால், தனது மகன் வாழ்க்கையை இழந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் கே.பீ.சந்திரிகா பிரியதர்ஷினி தெரிவிக்கின்றார்.
”டிமோ பட்டா (Dimo Batta) வாகனத்தில் தனது நண்பனுடன் வேலை இருப்பதாக கூறிவிட்டு என் மகன் வெளியே சென்றார். திரும்பி வரும் போது போலீஸார் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகின்றது. எனினும், அவர்கள் அதனை காணவில்லை. அதன்பின்னர் மதவாச்சி போலீஸ் நிலைய போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து வாகனத்தை இடைமறித்துள்ளனர்,” என்றார்.
“வாகனத்திலிருந்து என் மகனை இறக்கி, இரண்டு கைகளையும் பின்புறமாக கட்டி, கீழே தள்ளி, அடி வயிற்றில் மிதித்துள்ளனர். மகனின் நிலைமை கவலைக்கிடமானவுடன், மதவாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றி, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இப்போது அவரது விதையொன்று அகற்றப்பட்டுள்ளது. இதை நான் யாரிடம் சென்று கூறுவது.” என சந்திரிகா குறிப்பிடுகின்றார்.
தனது மகன் கொரியாவிற்கு வேலைக்குச் செல்ல தயாராகி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
”இப்போது அவரது எதிர்காலம் என்னவாகும். எதிர்காலமே இல்லாமல் போய்விட்டது,” அவர் கூறுகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பிரதி போலீஸ் மாஅதிபர் அலுவலகத்தில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக தாய் குறிப்பிடுகின்றார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என போலீஸார் உறுதி வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.