வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமது தமிழின தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன .ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான்,ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கான நீதியினைக் கோரும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரம் அனுஷ்டிப்பதும் அந்த இனப்படுகொலை,2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்சவும் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது.
இதனை நினைவு கூறும் விதமாக மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை .அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு உணவு,கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ”தன்சல் ”உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள் என்றார்.