பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை ஒருபோதும் மறக்ககூடாது என்பதனை இந்த அறிக்கை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் டேர்க் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்கள் குறித்து அக்கறையுள்ளவர்களும் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருக்கும் பதில்சொல்லவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது,என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைஆணையாளர் இந்த குற்றங்களை முழுமையாக விசாரிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றங்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அன்புக்குரியவர்களை மாத்திரம் வேதனைக்குள்ளாக்கவில்லை ஒட்டு மொத்த சமூகங்களையும் இலங்கை சமூகத்தை முழுமையாகவும் வேதனைப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்து 18ம் திகதியுடன் 15 வருடங்களாகின்றது என தெரிவிக்கும் ஐநாவின் அறிக்கை 1970கள் முதல் 2009 வரை இலங்கையில் பரந்துபட்ட அளவிலான வலிந்து காணமாலாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன இதில் இலங்கையின் பாதுகாப்பு படையினரும் துணை இராணுவகுழுக்களும் ஈடுபட்டன எனவும் குறிப்பிட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கும் சிறிய எண்ணிக்கையிலான நடவடிக்கைகளில் அரசாங்கத்தை எதிர்த்த ஆயுத குழுக்களும் ஈடுபட்டன எனவும் ஐநா தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுசெவ்விகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்ட ஐநாவின் அறிக்கை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் உளவியல் சமூக பொருளாதார தாக்கங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளது.
ஏப்ரல் 2024ம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தின் முன்னால் வழங்கிய பேட்டியில் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கணவர் 2009 இல் காணாமல்போனது குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அன்று காலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து சென்றார் ஐந்தரை மணியளவில் அவர் கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டார் என்ற தகவல்கள் கிடைத்தன கடற்படையினர் அவரை கைதுசெய்வதை அவருடன் சென்றவர்கள் பார்த்துள்ளனர், அவரை கப்பலிற்குள் வீசியுள்ளனர் அவர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக காணப்பட்டார் என சாந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய விசாரணை ஆணைக்குழு மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் அவர் தனது கணவர் காணாமல் போனமை குறித்து முறையிட்டுள்ளார்.
நான் எனது முறைப்பாட்டை ஐநா செஞ்சிலுவை சங்கம் அரசாங்கத்திடம் பதிவு செய்தேன் நான் எனது கணவர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டார் என்பதை உறுதிசெய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்