முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்;வு மீண்டும் ஜீலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.
புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.
அதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் அகழ்வு முன்னனெடுக்கப்படவுள்ளது.
அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.