பல தசாப்தங்களாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைவிதி மற்றும் இருப்பிடத்தை கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் சம்பவங்களில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் நடவடிக்கை வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பிரச்சினை தொடர்பில் அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொள்ளவும், பகிரங்க மன்னிப்பு கேட்கவும் இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை இந்த அறிக்கை நினைவூட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்
அவர்களுடைய குடும்பங்களும் அவர்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களும் இவ்வளவு காலமாக காத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் உண்மையை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும். இந்தக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
இந்தக் குற்றங்கள் அவர்களின் அன்புக்குரியவர்களை மட்டுமல்ல, முழு சமூகங்களையும் ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தையும் பாதிப்பதாக உரிமைகள் அலுவலவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிலிருந்து அனைவரையும்; பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை நிறுவுதல் போன்ற விடயங்களில் அரசாங்கங்களின் சில சாதகமான நடவடிக்கைகள் இருந்தன.
எனினும் வழக்குகளை தீர்ப்பதற்கான முனைப்புகள்; குறைவாகவே இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1970கள் மற்றும் 2009 க்கு இடையில், பரவலான பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள், முதன்மையாக இலங்கை பாதுகாப்புப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளும் கடத்தல்களில் ஈடுபட்டனர். இதனையும் வலுக்கட்டாயமாக அல்லது விருப்பமில்லாமல் காணாமல் போதல்களுக்குச் சமமானது என்று ஐக்கிய நாடுகளின் செயற்குழு குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்ததால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் போன்ற அபாயங்கள் பெண்களுக்கு ஏற்பட்டன.
இந்தநிலையில் பெண்களின் பங்கேற்புக்கு பல தடைகளை ஏற்படுத்தும் தொழிலாளர் சூழலிலும்; பெண்கள் பெரும்பாலும் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர்களாக மாறியுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் முன்னணியில் இருந்த பல பெண்கள், இராணுவம் மற்றும் பொலிஸாரால் துன்புறுத்தல், மிரட்டல், கண்காணிப்பு, தன்னிச்சையான தடுப்புக்காவல், அடித்தல் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மீறல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் சர்வதேச சட்டத்தின் கீழ், காணாமல் போனவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடம் தெளிவுபடுத்தப்படும் வரை, பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பது அரசின் தெளிவான கடமையாகும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்
இலங்கை அரசாங்கத்தால் அடுத்தடுத்து விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இருப்பினும், அவர்களின் சில அறிக்கைகள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன, வெளியிடப்பட்டாலும் கூட, அணுகல் பொதுவாக குறைவாகவே இருந்தன. பெரும்பாலான பரிந்துரைகள், குறிப்பாக குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பானவை, செயல்படுத்தப்படவில்லை.
தற்போதைய மற்றும் முன்னாள் மூத்த அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் தொடர்ந்து நீதியில் இருந்து தவிர்க்கப்பட்டு வருகின்றனர் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.