திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள், சுனாமி மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிந்துபோயுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் வாய் மூல வினா விடைக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த பொலிஸார், பொலிஸ் நிலையங்கள் குறித்த விபரங்களை சபைக்கு வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாகல ரத்னாயக்க,
“இது குறித்த தகவல்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் பயங்கரவாத தாக்குல் காரணமாக அழிவடைந்துள்ளன.
இதன் காரணமாக அது குறித்த முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவே, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக விபரங்களை தெரிவிப்பதாக” கூறியிருந்தார்.
எனினும், இதன் போது குறுக்கிட்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த,
“நீங்கள் எப்போதும் இந்த பதிலையே சொல்லி வருகின்றீர்கள். மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை பெற்று வைத்திருப்பது அவசியமானது” என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாகல ரத்னாயக்க
“இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.