அமுதன் :- ஈழத்தீவில் தமிழர்களின் வரலாறு என்பது எங்கிருந்து தொடங்குகிறது?
நிலவன் :- ஏறத்தாழ 30,000 (முப்பதாயிரம்) ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் புகழ் பெற்று சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். இந்தியாவும் ஈழமும் ஒரே நிலப்பரப்பில் இருந்த காலம் முதலே தமிழர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்க எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.தொல்லியல் அடிப்படையிலே தமிழர் பண்பாடு தொடர்பான மிக காலத்தால் முற்பட்ட தொல்பொருள் சின்னங்கள் பெருங்கற்கால பண்பாட்டை சேர்ந்தவை. அண்மைக் காலத்தில் பெருந்தொகையான இடங்களில் நாட்டின் பலபாகங்களிலும் இந்தச் சின்னங்கள் அகழ்வாய்வுகளின் மூலமாக அறியப்பட்டுள்ளன.
இலங்கையானது வரலாற்று ரீதியாக இரண்டு வேறுபட்ட தேசங்களாகவே இருந்து. ஆயினும் இன்று தீவின் வரலாறு ஒரே தேசம் என்றே குறிப்பிடப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இங்கு சிங்களவர், தமிழர் என்ற இரு தேசிய இனங்கள் வரலாற்றுக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வாழ்கிறன.இவ் இரு இனங்களிற்கும் தெளிவான வேறுபட்ட சுய மத, மொழி, கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல் விழுமியங்கள் காணப்படுகிறது. தத்தம் தாய் நிலங்களில் வேறுபட்ட இராச்சியங்களை நிறுவியுள்ளனர்.
இலங்கையில் சிங்களவர்கள் குடியேறத் தொடங்குவதற்கு முன்னரே தமிழர்கள் குடியேறி விட்டார்கள் என்று கூறலாம். தமிழர்களின் வரலாறோ, பண்டைக் காலம் முதற்கொண்டு பின்னாளில் சிங்களவர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், இறுதியாகப் பிரித்தானியர் ஆட்சிக் காலங்களிலும் நிலைபெற்று நின்றதாகும். 1505இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயரும், 1660 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயரிடமிருந்து கரையோர மாகாணங்களை கைப்பற்றித் தமது ஆட்சியை நிறுவிய ஒல்லாந்தரும், தமிழர் வாழ்பகுதிகளான வடக்கு – கிழக்கு மாகாணங்களை சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து வேறுபட்ட நிர்வாக அலகாகவும் ஆட்சிப் பகுதியாகவும் நிர்வகித்தனர்.
இலங்கையை போர்த்துக்கேயர்கள் வந்தடைந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ் இராச்சியம் ஒன்றும், மேற்குக் கரையில் கோட்டையை (தற்பொழுது கொழும்பின் புறநகரில் உள்ளது) மையப்படுத்திய சிங்கள இராச்சியம் ஒன்றும், கண்டியின் மலைப் பகுதிகளை மையப்படுத்திய இன்னொரு சிங்கள இராச்சியமும் இயங்கின. 19ஆம் நூற்றாண்டில் தேசியவாதம் தோற்றம் பெறுவதற்கு முன்னராகவே இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் தனித்துவமான இனக்குழுமமாக இருந்து வந்தனர் என்பதை எடுத்துக்கூறுவதன் மூலம் ’தேசியவாதம் திடீரென வானில் இருந்து குதித்த விடயம் அல்ல. அதற்கு இனக்குழுமம் என்ற பௌதிக அடிப்படை இருந்தது.
தமிழருக்கு சுய நிர்ணய உரிமைக்கான நியாயபூர்வமான உரிமைகள் எதுவும் இல்லையென்ற வாதம் சிங்கள மக்களால் முன் வைக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ் தமது சுயநிர்ணய உரிமைக்காக போரடிக் கொண் டிருக்கும் நேரத்தில் அவர்களின் தேசிய அடையாளத்தையும் அவர்க ளைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்கும் போர ட்ட த்தின் நியா யத் தன்மையை அறிந்து கொள்ள உதவும்.
அமுதன் :- தமிழர் பகுதியின் இறையாண்மை சிங்களவர் வசம் எவ்வாறு சென்றது?
நிலவன் :- பிரித்தானியரின் ஏகாதிபத்திய வெறியும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுமே தமிழரின் பாரம்பரிய தமிழ்த் தேசத்தை யும் சுதந்திரத்தையும் அவர்களை இழக்கச் செய்ததுடன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சீர்குலைத்தன. தமிழரின வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் ஒரு தனியான தமிழர் தேசம் என்பதை1796 ஆம் ஆண்டு கிளைக்கோன் என்பவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரித்தனியர் காலத்தில் தமது நிர்வாக வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும்,பொருளாதார நலன்களிற்காகவும் மேற்படி பிரதேசங்களின் தமிழ் அடைளானத்தை சீர் குலைத்து சிங்களப் பிரதேங்களோடு இரண்டறக் கலக்க வைத்தனர்.அவ்வாறில்லாமல் பிரித்தானியர் உண்மையில் தமிழரின் எதிர்காலம் பற்றிய அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் தொடர்ந்தும் மேற்படி பிரதேசங்களை தனி அலகுகளாகவே செயற்பட வைத்திருப்பர்.
1947 நவம்பர் 26 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ”சுதந்திரச் சட்டம்” (The Ceylon Independence Act 1947) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இலங்கையில் 1947 டிசம்பர் 1ஆம் திகதி சிங்கள நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு 3ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்துக்கு 59 வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 29 பேர் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சட்டத்தின் பின் தான் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி ”சுதந்திரம்” என்ற கேலி நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலனித்துவத்திலிருந்து நவ காலனித்துவத்திற்கு பரிமாறப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சிங்கள – பௌத்த கொவிகம – ஆணாதிக்க – சுரண்டும் – வர்க்கத்துக்கு கைமாறப்பட்டது. உலக ஏகாதிபத்திய முதலாளிய நவகாலனித்துவத்திற்கு படிப்படியே இலங்கை பலியாக்கப்பட்டது இந்த சக்திகளினாலேயே.
ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இலங்கைத் தீவில், தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தினை மேதகு வே பிரபாகரன் கட்டியெழுப்பினார். தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக இலங்கைத் தீவின் சிங்கள-பெளத்த பேரினவாத அரசுடன், உலக வல்லரசுகளை எதிர்த்தும் எமத்து விடுதலைக்காக நடத்திய வீரச் சமர், உலக நாடுகளின் தேசிய இனப் போராட்டத்திற்கு மிக முக்கிய படிப்பினைகளை வழங்கியுள்ளது.
தமிழர்கள் தாம் ஒரு தனித்த தேசிய இனக்குழுமத்தினர் என்ற உணர்வுடையவர்களாக இலங்கையில் வாழ்ந்து வந்தனர்.தமிழருக்கு அவர்களுக்கே சொந்தமான மொழி, மதம், கலாச்சாரம்,பாரம்பரியம்,தாய்நிலம் என்பவற்றுடன் உன்னதமிக்க ஒரு கட்ந்த காலமும் உண்டு. அவர்களின் இந்த உணர்வு காலனிய ஆட்சிக் காலத்தில் தேசிய உணர்வாகப் பரிணமித்தது. தமிழர்கள் தமது தனித்துவமான பண்பாட்டையும், தனித்துவமான நாகரிகத்தையும், மொழியையும் உடையவர்கள் என்ற உணர்வுடையவராக வாழ்ந்தனர். அவர்களது வாழ்விடங்கள் அடையாளம் காணக்கூடிய எல்லைகளையுடைய பிராந்தியங்களாக (Territories) நீண்ட காலம் இருந்து வந்துள்ளது.
அமுதன் :- ஈழ தேசத்தை ஆக்கிரமித்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின அழிப்பை எப்படி தொடங்கினர்?
நிலவன் :- ஈழ தேசம் 1948-ல் சிங்கள இனவாதிகளின் கைகளில் கொடுக்கப்பட்டது. விடுதலை அடைந்த உடனேயே, சிங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட இலங்கையின் இனவாதக் கொடியைத் தங்களுக்குச் சொந்தமானதாகச் சிங்கள ஆட்சியாளர்கள் வடிவமைத்துக் கொண்டனர். சிங்கத்திடம் இருந்து பிறந்தவர்களே சிங்களவர்கள் என்னும் கருத்தைப் புத்த துறவிகள் பரப்பி வந்தனர். அந்தக் கற்பனையான கருத்துதான் வரலாற்று உண்மையாக சிங்கக் கொடி மூலம் நிலைநாட்டப்பட்டது. இதுபற்றி புத்த துறவிகளின் “மகாவம்சம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள- பெளத்த மேலாதிக்கத்தை அரசியல் சாசனமாக உருவாக்கினர். இலங்கை அரசியல் சாசனத்தால் தமிழும், தமிழர்களும் இரண்டாம் தரத்தினராக நடத்தப்பட்டனர். சிங்கள பெளத்த மேலாதிக்கம் சிங்கள- பெளத்த இனவெறியாக சிங்களவர்களிடையே வெறியூட்டப்பட்டு அப்பாவித் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலை நிகழ்த்தியது. அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு ரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர்.
தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம். காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி இப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்டது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்று புரியாமல் உலகத்தின் மனச்சாட்சி கலங்கி நின்றவேளை அது.
1983 ஜூலையில் இடம்பெற்ற இது ஈழதேசத்தில் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் ஈழதேசத்தில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின. அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறை, வெறியாட்டங்களாக இடம்பெற்ற இனப்படுகொலைகள் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே பார்க்க முடியும்.
1983 ஆடிக் கலவரமும் இதற்கு விதி விலக்கல்ல. 1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந்திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழிடங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனிலேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது.
பொதுமக்கள் அங்கு இலங்கை அரச படை சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். கொடூர இன வன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தமிழரின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது.
அமுதன் :- இன அழிப்பை எந்தெந்த வழிமுறைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்?
நிலவன் :- 1948 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தீவை ஆட்சிசெய்த பல்வேறு அரசுகள் திட்டமிட்டு தமிழர்கள்மீது ஓர் இன அழிப்பை நடத்தினர். உலக நாடுகளிலிருந்து வளர்ச்சித் திட்ட உதவிகளைப் பெற்று, தமிழர்களின் அடையாளத்தை அந்த மண்ணில் அழித்தும் தமிழர்களின் வரலாற்று மரபு இடங்களை சிங்கள பௌத்த இடங்களாக மாற்றி வருகின்றார்கள்.
தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின. பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங்கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன. இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களினதும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித்திரம் பகிர்கின்றது.
தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகியவற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விடவில்லை. தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருககத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது.
சிங்களக் கைதிகளும், சிங்களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டுகளை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற்படுத்திய கறுப்பு ஜூலைக் கலவரம் “பேரழிவிலும் ஒரு நன்மை’ என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ்வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.
தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக்கின்றது. இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களம் புரிந்த பல் பரிமான ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது
அமுதன் :- பெரும்பான்மை சிங்கள பௌத்த இனவாதம் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராகச் செயல்களில் கட்டவிழ்த்து விடப்பட்டது?
நிலவன் :- சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமைக்குள் இனப்படுகொலை, கட்டமைப்பு வாதம் இறுக்கமாக கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இனப்படுகொலை முறைமைக்குள் இலங்கை தீவில் உள்ளே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விருப்புக்கள் அல்லது அபிலாசைகள் பூர்த்தி செய்வதற்கு சிங்கள தேசத்தின் அரசியலில் கட்சிகளோ தலைவர்களோ தயாராக இருக்கவில்லை
1956 யூன் 5ம் திகதி தமிழினப் படுகொலை கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழான இங்கினியாகலவில் இடம்பெற்றது. இதில் 156 தமிழர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர். 1958ம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை சர்வதேசத்தின் வரலாற்றுப் பதிவுக்குச் சென்றது. மே மாதம் 24ம் திகதி முதல் 26ம் திகதி வரை வவுனியாவில் தமிழரசுக் கட்சி நடத்திய மாநாட்டை ஒட்டியதாக இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அவசரகாலச் சட்டத்தையோ ஊரடங்குச் சட்டத்தையோ பிறப்பிக்க விரும்பாத அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, தமிழர்கள் நன்கு அனுபவித்து பாடம் கற்கட்டும் என்று விரும்பியிருந்தார்.
1977, 1979, 1981களிலும் தமிழர் படுகொலை ஆங்காங்கு இடம்பெற்றது. 1977ல் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர் 24 மணிநேரத்தில் கொலையுண்டது பதிவில் உள்ளது. இது ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இதே ஆண்டு யூன் முதலாம் திகதிதான் யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைச்சர்கள் மேற்பார்வையில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.
1983ம் ஆண்டு தமிழினப் படுகொலை முன்னவைகளைவிட மோசமானதாக நடந்தேறியது. திட்டமிட்டு தேர்தல் இடாப்பைக் கைகளில் ஏந்தியவாறு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தூக்கிக் கொண்டு வீதிகளையும், வீடுகளையும் அடையாளமிட்டு தமிழர் கொல்லப்பட்டனர். பண்டாரநாயக்க பாணியில் ஜெயவர்த்தனவும், ஊரடங்கைப் பிறப்பிக்காது நடப்பவை நன்றாக நடக்கட்டும் என்று பார்த்திருந்தார். நாலாயிரம் வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சொத்தழிப்பு, உடைமை அழிப்பு என்பவை பலகோடி ரூபாக்கள் பெறுமதியானவை. ஆண்டுவரலாற்று அழிப்பில் எண்பத்தி மூன்றாம் ஆண்டு இரத்தக் கறைகள் படிந்த. மோசமான ஆண்டாக இன்றும் நினைவு கொள்ளப் படுகின்றது
அமுதன் :- சுதந்திர இலங்கையின் தொடக்க காலங்களில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை எவ்வாறு கட்டமைக்கப்பட்டது?
நிலவன் :-இனப்படுகொலை அல்லது இனவழிப்பு என்பது தமிழர் வரலாற்றில் முக்கியமானதாக ஆகிவிட்டது.1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்தித்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத் திட்டம், அல்லைக் குடியேற்றத்திட்டம் போன்ற குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு காவற்துறை – இராணுவம் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் விகாரைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பௌத்த விகாரைகளில் பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டு மணியோசை கேட்கும் தூரம் மட்டும் சிங்கள பௌத்தர்களுக்குரிய பிரதேசமாக உத்தியோகப் பற்றற்ற வகையில் கணிக்கப்பட்டது. இந்த வகையில் தமிழ்மக்களிற்கு சொந்தமான நிலங்கள் சூறையாடப்பட்டன.
1949ல் டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயகம் எங்கும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் குறிப்பாக கல்ஓயா, கந்தளாய், அல்லை என்கின்ற தமிழ்ப் பிரதேசங்களை சிங்களக் கிராமங்களாக்கியது.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காலஞ் சென்ற எஸ். டபிள்யூ.ஆர்.டி பணட்ரநாயக்கா இலங்கையின் பிரதமரானார். அவரது தேர்தல் வாக்குறுதிகளிலொன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கு எதிராக அக்காலகட்டத்தில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடிவுசெய்தது.
இதன் விளைவாக அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956ம் ஆண்டு யூன் மாதம் 05ம் திகதி கொழும்பிலுள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு முன்னால் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது. இதில் தமிழ்த் தலைவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் கலந்துகொண்டார்கள். அக்கால கட்டத்தில் புகழ் பெற்றிருந்த தமிழ் கல்விமான் வணபிதா தனிநாயகம் அடிகளும் இந்தச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அன்றைய தினம் சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதுடன், சிங்களவர்களால் தமிழர்கள் மீதான இனக்கொலை தூண்டி விடப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். பல தமிழ் மக்கள் மோசமான வகையிலும், கோரமாகவும் கொல்லப்பட்டதுடன், கொழும்பிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் கொள்ளையடிக்கப் பட்டபின் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இலங்கைத்தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வு மேலோங்கிக் காணப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் குடியேற்றபட்ட சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இதில் இங்கினியாகலை என்ற இடத்திலிருந்த கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த நூற்றிஐம்பது தமிழ்த் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டார்கள். பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அரை குறை உயிருடன் இருந்தவர்களும் இறந்தவர்களும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டார்கள். இங்கு நடைபெற்ற இனப் படுகொலையே இங்கினியாகலை இனப் படுகொலையென வர்ணிக்கப்படுகின்றது. இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலில் பெருந் தொகையாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும்
அமுதன் :- சமகாலத்தில் தமிழரின் தாயக பகுதியில் சிங்களமயமாக்களின் தாக்கம் எவ்வாறு உள்ளது?
நிலவன் :- தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதனை அரசாங்க திணைக்களங்களான தொல்லியல் திணைக்களமும் வனவள திணைக்களமும் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றன. வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தம் இன்றிப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கப்பட்ட வண்ண மேயுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ஆள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இரு திணைக்களங்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ஆள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறு 127 கிராம சேவகர்கள் பிரிவினையும், 115,024 மக்களையும் உள்ளடக்கிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இம் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி நிலங்களைச் சிங்களம் விழுங்கி விட்டது.
அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நில ஆக்கிரமிப்பு, மதஆக்கிரமிப்பு ,அத்துமீறும் கடற்தொழில் நடவடிக்கை என்று தொடர்ந்து செல்லும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
இவ்வாறன நிலையில் சிங்கள இனவெறிபிடித்தவர்கள் தமிழர்களின் பூர்வீகங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்துகொண்டே செல்கின்றது. இந்த நிலை தொடருமா மாறுமா என்ற அச்சத்தில் எல்லைக்கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் இன்னும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்கள்
அமுதன் :- தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் எவ்வாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது ?
நிலவன் :- இம் மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து தமிழ்மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வளம் மிக்க பகுதிகளெனச் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் 1980ஆம் ஆண்டிற்கு முன்பு அபகரிக்கப்பட்டு 6 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு இம் மாவட்டத்தின் ஆறாவது பிரதேச செயலாளர் பிரிவாக நிர்வகிக்கப்படுகின்றது. ஆறாவதாக உருவாக்கப்பட்ட இந்தப் பிரதேச செயலகமானது முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் சுற்றுநிருபம் மட்டுமே உள்ளபோதும் இப் பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இயங்குமென எந்தவித வர்த்தமானி அறிவித்தலும் கிடையாது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட உத்தியோகப் பற்றற்ற சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று 9 ஆயிரத்து 560. சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வாய்ப்புக்களுக்காகத் தமிழ்மக்களின் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு டொலர்பாம்,கென்பாம் என்ற மிகப்பெரும் இரு பண்ணைகள் உருவாக்கப்பட்டு இவர்களுக்கான தொழில் மையங்களும் அமைக்கப்பட்டன. இன்று இப்பிரதேசங்கள் மிகவும் வளர்ச்சி கண்டு உட்கட்டுமான வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுப் பாடசாலைகள் முதல்,சந்தை வாய்ப்புக்கள் வரையும் முல்லைத்தீவு நகரத்தினையும் மிஞ்சி நிற்கின்றது.
இதன் பின்பு இறுதி யுத்த காலத்திலும் இதனை அண்டிய பகுதிகள் மற்றும் ஒதியமலையை அண்மித்த பகுதிகள் உள்ளடங்கலாக மேலும் 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் வனப்பகுதிகளாக இருந்த இம் மாவட்டத்தின் இதன் எல்லைப்புறங்களும் அளவு கணக்குத் தெரியாமலேயே அபகரிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டொலர்பாம், ,கென்பாம் எனவும் வெலிஓயா எனவும் ஒரு பெரும்பகுதியை ஏப்பம் விட்ட சிங்களப் பூதம் தற்போது கொக்குளாய் கொக்குத்தொடுவாயில் ஒருபகுதி நிலமும், இங்கே செல்லும்; வீதியோரமுள்ள காடுகளைப் பார்வைக்கு விட்டபின்பு சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் புற்றுநோய் உள்ளிருந்தே கொல்வதைப்போல் பாரிய குடியிருப்புக்களையும் அமைத்துள்ளனர்.
இதேபோன்று அம்பகாமம், இரணைமடு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளையும், வயல்களையும் ஆக்கிரமித்துள்ள இராணுவம் குளங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இரணைமடு அம்பகாமம் பகுதிகளில் மட்டும் நான்கு குளங்கள் இன்றுவரை படையினரின் முற்றுகைக்குள் உள்ளன. இவ்விடத்தில் மட்டும் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்பகுதியில் அம்பகாமம், புலிமச்சி நாதகுளம்,கூழாமுறிப்புப் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையிலேயே குறித்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலம் பல ஆயிரம் ஏக்கர் உண்டு. இவ்வயல்களையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்த சுமார் 1500 குடும்பங்கள் இன்றுவரை அடுத்தவர் தயவை நம்பி வாழும் நிலையில் உள்ளனர்.
இவற்றினை விடவும் விசுவமடு,தர்மபுரம்,கேப்பாப்புலவு, கோம்பாவில் வட்டுவாகல் உள்ளிட்ட இடங்களில் பாரிய பிரதேசங்களும் ஏனைய இடங்கள் பலவற்றில் சிறு சிறு துண்டுகளாகவென மொத்தம் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தைச் சிங்களப்படைகள் ஆக்கிரமித்து முழுமையாக சுருட்டிவைத்துள்ளனர். இவற்றிற்கு அப்பால். மகாவலி எல் வலயம் என இன்னொரு பகுதியும் பறிபோனவண்ணமே உள்ளது
அமுதன் :- திட்டமிட்ட புற்றுநோயை போல் இலங்கை அரசு படைகளின் தமிழர் நில ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது ?
நிலவன் :-நாம் எமது வாழ்வையும், 3000 வருடங்களுக்கு மேற்பட்ட எமது அடையாளத்தையும் மிகவும் வேகமாக நாம் இழந்து வருகின்றோம். ‘வடக்கும் கிழக்கும் எமது பாரம்பரிய பிரதேசங்கள். வடக்கும் கிழக்கும் எமது தாயகம். எமது இந்தத் தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கப்படுவது என்பது எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதானது, எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது. தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதனை அரசாங்க திணைக்களங்களான தொல்லியல் திணைக்களமும் வனவள திணைக்களமும் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றன.ஆகவேதான் நிலஅபகரிப்பு ஓர் இனப்படுகொலை ஆகின்றது.
எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு என்பது சத்தமின்றி, எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பெரும் யுத்தமாக இன்று மாறியிருக்கிறது. நிலம் மட்டுமன்றி, நிலத்துடன் சேர்த்து, எமது வாழ்வும் அடையாளமும் வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது.தமிழ்மக்களின் தொன்மையான பிரதேசங்களுக்குள் முதலில் தொல்லியல் திணைக்களம் வலுவாக காலூன்றுகிறது. பின் தொல்லியல் சட்டங்களை காரணங்காட்டி அப்பகுதி மக்களை அந்த இடத்துக்கு செல்ல விடாது தடுக்கின்றது. அதன் பின் பலமாக நிறுவனமயப் படுத்தப்பட்ட அரசாங்க கட்டமைப்பு ஊடாக அப்பிரதேசத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது. இது காலம் காலமாக இலங்கைத்தீவில் இடம்பெற்று வந்தாலும், போர் முடிந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் இலங்கை அரசு தமிழர் பிரதேசங்களில் பரவலான பௌத்த ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
‘1970களில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம், எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. வட்டுவாகலில் சுமார் 500 குடும்பங்களுக்குரிய 617 ஏக்கர் காணிகள் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதனை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கில், சுவீகரிக்க கடற்படை எடுத்த முயற்சிகளை மக்கள் முறியடித்து வருகின்றனர்.
வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 613 ஏக்கரினைக் கடற்படையினரும் அதன் அருகில் சுமார் 180 ஏக்கர் நிலத்தை வான்படையினரும் அபகரித்ததைப்போல இம் மாவட்டத் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கேப்பாப்புலவு கிராமத்தில் 700 ஏக்கர் நிலம் இன்றுவரை படையினரின் அபகரிப்பில் உள்ளது. இங்கு வாழ்ந்த 313 குடும்பங்கள் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மாதிரிக் கிராமத்தில் வாழ்கின்றனர்.
இவ்வாறு ஆண்டான்குளத்தில் 39 குடும்பங்களின் 94 ஏக்கரும்,திருக்கோணம்பட்டியில் 04 குடும்பங்களின் 26 ஏக்கர் நிலமும், விண்ணகம் வயல்வெளியில் 3 குடும்பங்களின் 18 ஏக்கரும், ஆத்தங்கடவைப் பிரதேசத்தில் 17 குடும்பங்களின் 124 ஏக்கர் நிலமும் படையினரிடம் உள்ளதோடு மருதடிக்குள வயல்வெளியில் 9 குடும்பங்களின் 48 ஏக்கர் நிலமும் ஆலங்குளத்தில் 14 குடும்பங்களின் 74 ஏக்கர் நிலமும் படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.
இதேபோன்று சாமிப்பில் கண்டலில் 26 குடும்பங்களின் 143 ஏக்கர் நிலமும், ஈரக்கொழுந்தன் வெளியில் 8 குடும்பங்களுக்;குச் சொந்தமான 71 ஏக்கரும் அபகரிக்கப்பட்டுள்ளதோடு படலைக்கல்லில் 7 குடும்பத்திற்கு உரித்தான 48 ஏக்கரும், குந்தைகைக்குளத்தில் 24 குடும்பங்களின் 48 ஏக்கரும், செம்மலை புளியமுனையில் 125 குடும்பங்களின் 276 ஏக்கர் நிலப்பரப்பும் படையினர் வசமேயுள்ளது.
இவற்றினைப் போன்றே நீராவியடியில் 36 குடும்பங்களுக்குச் சொந்தமான 163 ஏக்கரும், உலாத்து வெளியில் 15 ஏக்கருடன், நீராவி வயலில் 20 ஏக்கர் வயல்நிலமும் வட்டுவனில் 10 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஒவ்வொரு நாளும் வடகிழக்கில் ஏதோ ஒரு இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றது. தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களிலிருந்து அகற்றப்படுவதும் விரட்டப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற விடயமாக மாறி விட்டது.
அமுதன் :- தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்பு கொள்கையில் சிங்கள கட்சிகளின் நிலைபாடு எவ்வாறு உள்ளது?
நிலவன் :-இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே. இலங்கையை அவ்வப்போது ஆண்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை.சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது சிங்கள தேசியவாத சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே பிளவுபட்டு புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தாய் கட்சிக்கு மாற்றாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி என்பன. தெற்கின் ஆட்சியாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அளித்த பொய்யான வாக்குறுதிகள் நிரூபணமாகியுள்ளது.
இலங்கைஅரசு ஒரு ஒற்றைஆட்சிஅரசு மட்டுமல்ல அது ஒரு இனத்துவ மேலாதிக்க மயப்படுத்தப்பட்ட, இராணுவமயப்படுத்தப்பட்ட, சகல மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கும் அரசு வடக்குக்கிழக்கில் இராணுவம் தனக்குத்தேவையான நிலத்தைச் சுவீகரித்துத் தன் விருப்பப்படி பயன்படுத்தி வருகிறது. இன்னொருபுறம் அரசாங்கம் பல தழிழர் பூர்வீக நிலங்களை பெளத்த புனிதபிரதேசங்களாகப் பிரகடனமப்படுத்தியுள்ளது. இந்தப் போக்குகள் வடக்கு கிழக்கின் இனப்புவியியலில் நிலத்தின் உடைமை உறவுகளில், நிலத்தின்பாவனையில், நிலத்தோற்றத்தில் அடிப்படையான மாற்றங்களை தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்பு கொள்கையில் சிங்கள கட்சிகள் ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன.
தமிழ் மக்களின் தாயகமான வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் நோக்கத்துடனும், எமது வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அடையாளம் ஆகியவற்றை இல்லாமல் செய்யும் நோக்கத்துடனும் இலங்கை அரசாங்கங்களினால் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த இனவாத அடிப்படையிலான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு வகையில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. படையினரால் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பௌத்த விகாரைகளை நிறுவி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் மரபுரிமையை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு நிலத்தை ஆக்கிரமித்தல், மகாவலித் திட்டம், மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையின் கீழ் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
வட-கிழக்கை சிங்கள பெளத்த இராச்சியமாக மாற்றுகின்ற இலக்கிலிருந்து எந்த அரசு வந்தாலும் இம்மியளவும் விலகப்போவதில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு அத்துமிறிய சிங்களக் குடியேற்றங்கள் ஏ9 வீதியில் இரணைமடுச் சந்திக்கு அப்பால் முல்லைமாவட்டம் ஆரம்பிக்கும் பிரதேசத்தில் இருந்து கொக்காவில் பிரதேசமான சுமார் 7 கிலோமீற்றர் தொலைவு கொண்ட பகுதியில் வீதியின் முகப்பில் காடு அப்படியே காட்சியளிக்கப் புற்றுநோய் இங்கேயும் ஆக்கிரமித்து விட்டது. நீளம் ஏழு கிலோமீற்றர் எனின் அகலம் எத்தனை கிலோமீற்றர் என்பதனை வரையறுத்துக்கூற முடியாதவாறு காடு முழுமையாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதுடன் முறிகண்டி, வசந்தநகர்ப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் படையினரால் விரட்டப்பட்டு அப்பகுதிகளும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இங்கு மொத்தம் 4000 ஏக்கர் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் முறிகண்டிக்குளமும் இன்றுவரை படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்மக்கள் 2002ஆம் ஆண்டு சமாதான காலத்திலேயே புதிதாக வீடுகள் அமைத்து மீளக் குடியமர்ந்திருந்தார்கள்.
இவ்வாறு புதிதாக வீடுகளை அமைத்தவர்களில் சுமார் 150இற்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது படையினரின் பிடியில் உள்ளதால் இதன் உரிமையாளர்கள் சிதறுண்டுபோய் உள்ளனர். இவர்களுடைய பல காணிகளின் அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே உரிமையாளர்களின் கைவசம் உள்ளன. இதல் பல காணிகளைச் சுற்றி முட்கம்பிகள் அமைத்திருந்தாலும் சில இடங்களைச் சூனியப்பிரதேசம் போலக் கைவிட்டுள்ள படையினர் அதன் உரிமையாளர்களை மட்டும் வாழ்விடம் அமைக்க அனுமதிக்கவில்லை.
இவ்வாறு ஏ9 வீதியில். முறிகண்டிக் காட்டினை அண்டிய பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை அபகரித்துள்ள படையினரின் பயன்பாட்டிற்கெனக் காட்டின் நடுவே நூற்றிற்கும் மேற்பட்ட முகாம்கள் சீனாவின் பொருத்து வீட்டுப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளதோடு பல தார் வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் சகல விதமான வசதிவாய்ப்புக்களும் நடுக்காட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளுக்குள் ஒருபகுதி சிங்கள மக்களும் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் இங்கு சிங்களக் குடும்பங்களும் வந்து விட்டனவா? என்ற பெரும் அச்சம் எழுந்துள்ளது. இவ்வாறான அச்சம் பெரும் முன் எச்சரிக்கையாகவும் உள்ளது. நடுக்காட்டில் போதிய வசதி வாய்ப்பை உண்டுபண்ணியுள்ளோர் பிரதான வீதிகளில் இருந்து இறங்கும் வீதிகளை மட்டும் கிரவல் கொண்டே அமைத்துள்ளனர்.
இவ்வாறு செல்லும் குறுக்கு வீதியில் ஓரு குறுக்கு வீதியானது முறிகண்டிக் குளத்தின் ஊடாகச் செல்வதனால் அக்குளத்தின் நீர் சற்றேனும் தேங்கிவிடக் கூடாது என்பதற்காகவே குளக்கட்டினை நடுவில் உடைத்து வெள்ள நீரைத் தமிழர்கள் குடியிருப்புக்குள் செலுத்தியுள்ளது இராணுவம்.இவ்வாறாகச் சிங்கள மயமாக்கப்பட்ட பகுதிகளுக்குள் தமிழர்கள் எட்டியும் பார்த்து விடக் கூடாது என்பதற்காகக் காட்டினைச் சுற்றி முட்கம்பிப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமுதன் :- தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு தமிழர் பண்பாட்டு அழிப்பாக தீவிரமாக சிங்களவர்களால் முன்னெடுக்கப்படுவதின் நோக்கமாக எதை பார்க்கிறீர்கள்?
நிலவன் :- தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறித்து நிற்கின்றது.
தமிழர் பண்பாடு காலம் காலமாக பேணப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பினை கொண்டது
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட் பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும்.
ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியத்தை பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும் செந்தமிழ் – கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கண்டிருப்பீர்கள்
ஓவியம், சிற்பம் கட்டிடக் கலை முதலிய கலைகள் முதலியவற்றிலும் தமிழர் பண்பாட்டை காண முடிகின்றது. தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான வாழ்வியல் வரலாற்றில் அன்று தொட்டு இன்று வரை கூடவே பயணிக்கும் ஒன்றாக சமய வழிபாடுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன.
காலத்திற்கு காலம், வாழும் சூழலும் சமூகமும், வாழும் தேசமும் மாறிப் போனாலும் கூட தமிழர்களோடு இணைந்தே பயணிக்கின்றது தமிழ் பாரம்பரியமும் கலாசாரமும்.குறிப்பாக சமய வழிபாடுகளும், நடைமுறைகளும் ஏனைய மொழி பேசுபவர்களை விட தனித்துவமானதும், மேற்கத்திய நாடுகளே வியந்து பார்க்கும் வகையிலும் அமைந்திருக்கின்றமை தமிழர்களுக்கே உரிய தனிப் பெருமை என்றே சொல்லலாம்.
ஆயினும் பிறநாட்டுச் சமயங்களும் எம் கலாச்சாரத்தில் புகுந்த காலத்தில் தமிழ் மரபைக் காத்துவரப் பயின்றனர். எந்த கலாச்சாரத்திற்கும் இல்லாத சிறப்பு விருந்தோம்பல் பண்பாடு நம் தமிழர் கலாச்சார விழுமியங்களில் காணலாம். தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.’
பாவாணர் கூறுவது போல , பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் , நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை . முன்னது ‘அகக்கூறு ‘ பின்னது ‘புறக்கூறு’. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவிரண்டிலும் மெச்சத்தக்கது .
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமது ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்களின் பண்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளை தமிழர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக, இன்னமும் விஸ்தரித்துள்ளனர் இன்னமும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஈழத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் தொல்லியல் மற்றும் மரபுரிமை இன அழிப்பு வேலைத்திட்டம் விசுவரூபமெடுத்துள்ள சூழலில், தமிழ் அறிவுச் சமூகம் தற்காலத்துக்கான, எதிர்காலத்துக்கான தீர்வுகளை நோக்கிய கருத்துநிலைகளை வெறும் ‘அரசியல்’ ஆக மட்டும் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றனர்.
அமுதன் :- சிங்கள பேரினவாதத்தின் தமிழர் இனஅழிப்பு எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி பரிமாணித்து உள்ளது?
நிலவன் :- பௌத்த சிங்கள பேரினவாத தமிழ் இன அழிப்பு யுத்தத்தால் பேரழிவைச் சந்தித்த நாம் , இப்போது நில ஆக்கிரமிப்பாலும் , வளங்கள் பறிப்பாலும் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளோம். மீளக்குடியேறச் சென்ற கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்கள், தமது 2568 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதால், தமது வாழ்வாதாரம் இழந்துஉள்ளார்கள். இந்நிலங்களையும் வவுனியாவில் அபகரிக்கப்பட்ட நிலங்களையும் இணைத்து வெலி ஓயா என்று , புதிய, உத்தியோகபூர்வமற்ற பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு சகல வசதிகளுடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல , இயற்கைத்தாய் எமக்களித்த கொடைகளான நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆறுகளில் என்றுமில்லாதவாறு தென்னிலங்கை மீனவர்களின் தடை செய்யப்பட்ட தொழில்களின் ஆதிக்கம், அதிகாரங்களின் ஆசீர்வாதத்தோடு அதிகரித்துள்ளது. இதனால் அவற்றில் கடல் வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது .ஏனைய சிறுகடல்களுக்கும் இவை மிக விரைவில் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 18.10.2013 அன்று கொக்கிளாய் கடனேரியில் தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்த மீனவர்களுக்கு நடுக்கடலில் வைத்து நேரில் அறிவுறுத்தி எச்சரித்திருந்தேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்..
ஒரு காலத்தில் மிகப்பெரும் கடல் வள வங்கியாகத் திகழ்ந்த , முல்லைக்கடலும் சிறு கடல்களும் இன்று தமிழ் மீனவர்களின் சோகமாக மாறி வருவதன் ரகசியமும் இதுவே. முல்லை மட்டுமல்ல, வடக்கு மட்டுமல்ல, தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் மேற்கொள்ளப்படுகின்ற நில, வள அபகரிப்பைத் தடுத்து நிறுத்தி , எம் தாயகப்பரப்பை பேணுவதற்கு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் போராடவேண்டும்.
மேலும், எங்கள் மண்ணிலே போரின் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதை நாம் இன்னும் உணர வேண்டும்.
அமுதன் :- முல்லைத்தீவில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பலாத்காரமாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா ?
நிலவன் :- கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு- நாயாறு பிரதேசத்திற்குத் தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்களிற்கே காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நிலங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என முல்லைத்தீவில் உள்ள இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்த உத்ரதரவையும் மீறிக் கொழும்பின் செல்வாக்குடன் சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், 1983 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரதேசங்களில் 2009 ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலில், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் குடியேறியுள்ள சிங்கள மக்கள் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் கேரியுள்ளனர்.
எனினும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியாது என்றும் அந்தப் பிரதேசங்களில் உள்ள காணிகள் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், கொழும்பு அரசியல் செல்வாக்கு மற்றும் முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் சிங்கள மக்கள் அங்கு தொடர்ந்து குடியிருப்பதாகவும், இலங்கை மாகாவலி அபிவிருத்தி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பாக முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள காணிப்பதிவு அதிகாரிக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள காணிப்பதிவு அதிகாரிக்கு அறிவிக்காமல் எவ்வாறு இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, முல்லைத்தீவில் உள்ள காணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கி உள்ளார்கள் என்றால் நீதி நிலைகொண்ட ஐனநாயக நாடு இல்லை என்பதையும், இராணுவம் ஆட்சி செய்கின்ற நாடு என்பதையும் இச் செயற்பாடுகள் சுட்டிக் காட்டுகிறது.
அமுதன் :- தமிழர் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மற்றும் சிங்களவர்களின் நில அபகரிப்பை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
நிலவன் :- குடியேற்றதிட்டங்கள் மேற்கொள்ளப்படும் பொழுது அந்தந்தமாவட்டங்களில் உள்ள மக்களிற்கு அல்லது மாகாணத்தில் உள்ள மக்களிற்கே முன்னுரிமைஅளிக்கப்பட வேண்டும்.13 ம்திருத்த சட்டத்திலும் அது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள தமிழ் மக்களிற்கு காணிகள் தேவைப்படும் நிலையில் அதனைகருத்தில் கொள்ளாது வெளிமாகாணங்களை சேர்ந்த மக்களை குடியேற்றுவதானது இலங்கை அரசினுடைய பேரினவாத மனோபாவத்தை வெளிக்காட்டி நிற்பதுடன், நிலங்களை அபகரித்து விட்டால் தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை நசுக்கி விடலாம் என்ற கபட நோக்கத்தையும் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்குமாறு போராடி வருகிறார்கள். தமிழ்மக்களைப் பொறுத்தவரை அவர்களின் அடிப்படையாக கோரும் நிரந்தர அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச நீதி என்ற போராட்டங்களிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களின் போராட்டத்தை வெறும் மதச் சின்னங்களை பாதுகாக்கும் போராட்டமாக மாற்றப் பார்க்கிறது. இதனூடாக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தை மதச்சின்னங்களை காப்பாற்றும் போராட்டமாக சுருக்கி மதவாதத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறது.
பௌத்த சிங்கள பேரினவாதம் இன்று தன்னுடைய முகத்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டி இருக்கின்றது. வடக்கு கிழக்கு எங்கும் உடனடியாகவே பெருமெடுப்பில் பௌத்த பேரினவாத தாக்குதல்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கின்றோம். உண்மையில் ஒரு இடத்தில் நடக்கின்ற தாக்குதலை நாங்கள் எதிர்கொள்ள தயாராகும் பொழுது மற்றொரு இடத்தில் தாக்குதல் நடத்தப்படுகின்றது. பரவலான இந்த தாக்குதலை எதிர் கொள்வதற்கு உலகளாவிய ரீதியில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது. உங்களுடைய நாடுகளில் இருக்கின்ற தூதரகங்களின் முன்னால் நீங்கள் எங்களுடைய இருப்பை, எங்களுடைய பாதுகாப்பை, எங்களுடைய தொன்ம அடையாளங்களை பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிபுணத்துவ தந்துரோபாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அது நில ஆக்கிரமிப்பு போராக மாறியது. அதெற்கெதிராக தமிழ்மக்களும், மக்களை பிரதிநிதித்துவ படுத்துபவர்களும் போராடாவிட்டால் எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்திற்குள் சிங்கள மாவட்டம் ஒன்று இணைந்து கொள்ளும் நிலைமையை தவிர்க்கமுடியாது.
அமுதன் :- நாட்டின் பாதுகாப்பு ஒருமைப்பாடு எனக் கூறி தமிழகத்தின் திட்டமிட்ட ராணுவ மையமாக்குதலின் விளைவு எவ்வாறு அமையும்?
நிலவன் :- இலங்கைத்தீவில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் (தமிழ் இராணுவத்தின்) ஒப்பற்ற தியாகத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டுவரை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.சொந்த நிலங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.
ஆயினும் 2009 இலங்கை அரசு சீனா,பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் துணையுடன் நடத்திய இனவழிப்பு போரினால் தமிழர் தேசம் மோசமாக சிதறடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப் பட்டதுடன் வடகிழக்கு தரை,கடல், காடுகள் என முழு நிலப்பரப்பும் இலங்கை அரசபடை வசமாயின. இந்தியா உதவியிராவிடின் போரை வென்றிருக்க முடியாதென இலங்கைஅரசும் படைத்தளபதிகளும் பல தடவைகள் இந்தியாவை நினைவு கூர்ந்தமை நோக்கத்தக்கது.
போர் ஆலோசனைகள், பயிற்சிகள், தொலை உணர்வு தொழில்நுட்ப வழிகாட்டல்கள் அனைத்திலும் இந்தியா இலங்கைப் படைகளுக்கு உதவியுள்ளமை எல்லோரும் அறிந்த ஒன்றே.சிரிக்க வைத்தே கழுத்தறுத்தது போல ஈழத்தமிழர் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டன.போருக்கு இந்தியா உதவியிராவிடின் ஈழதில் தமிழர்கள் இன்றைய இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.
இலங்கைத் தீவில் உள்ள பத்தொன்பது இராணுவ டிவிசன்களில் பதினாறு டிவிசன்கள் வட-கிழக்கில் உள்ளன.வடக்கில் மட்டும் பதின்மூன்று டிவிசன்கள்.அதிலும் முல்லைத்தீவில் மட்டும் மூன்று டிவிசன்கள் உள்ளன.மொத்த படைத்தரப்பு எண்ணிக்கை மூன்று இலட்சத்து நாற்பத்து ஏழாயிரம் (3,47,000) என குறிப்பு ஒன்று கூறுகிறது.இவ்வருட (2022) பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 383 பில்லியன் ரூபா (15 வீதம்) ஆகும்.ஆகவே இவ்வாறான ஒரு நிலை இருக்கும் வரையில் “பிறக்காத எதிரிக்காக” தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் யுத்தமில்லா சூழலில் நில ஆக்கிரமிப்பும், விகாரைகள் அமைப்பும் தடையின்றி தொடரவே செய்யும்.
அமுதன் :- ஒற்றை வாத பௌத்த சிங்களப்பேரினம் எவ்வாறு தமிழர்களை விடுதலை நோக்கி இட்டுச் சென்றது?
நிலவன் :- இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம், ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத்தியம் ஆக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவிரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இன விடுதலை இயக்கம் முழு அளவில் மரபுவழி தமிழ் இராணுவமாக தோற்றம் கொண்டு கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது.
சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கலாயிற்று.
இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்ததுடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த இனக் கலவரம் தமிழ் மக்களது அரசியல் வரலாற்று செயல்நெறியை மாற்றி, திருத்தமான உகந்த தடத்தில் அதைத் தூக்கி நிறுத்தியதும் கவனிக்கத் தக்கது.
தொடரும்…