அனைவருக்கும் வணக்கம் ! மரியாதைக்குரிய விழாத் தலைவர் அவர்களே! இங்கு அறிமுகமாகவுள்ள நூல்களான ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் 1, பாகம் 2ன் தொகுப்பாசிரியரான திரு நிலவன் அவர்களே! வணக்கத்திற்குரிய விருந்தினர்களான வரவேற்புரை திருமதி சாந்தினி, திரு சிவமோகன், திரு இராஜ முகுந்தன், வாழ்த்துரை வழங்கிய சகோதரி திருமதி சாந்தி அரவிந்தன் அவர்களே மற்றும் பெரியோர்களே! தாய்மார்களே! தாயக உறவுகளே! தோழர்களே! வாசகர்களே!விழா ஒருங்கிணைப்பாளர்களான சகோதரர்களே யாவருக்கும் அன்பு நிறைந்த தமிழ் வணக்கம்!
எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக, விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எலாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்!
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்த்தாமை வேண்டும். இலவச நூல்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறைகளைந்தோம். பல தகத்தகாயத் தமிழை ஸ்தாபிப்போம் வாரீர்… என பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரிகளால் உங்கள் யாவரையும் வருக வருகவென அழைக்கின்றேன்.
அன்பர்களே! உயிரைத் துச்சமாக நினைத்து யுத்த களத்தில் நின்று செய்திகளைச் சேகரிப்பது போன்று தமிழீழப் போர்க்கள அநுபவங்களையும் சடுகுழலால் சுடப்பட்டு துன்புறுத்தப் பட்டவர்களையும், சித்திரைவதைக்களான நமது சகோதரர்களையும், கண்ணீரும் கம்பலயுமாகக்காட்சியளித்தவர்களையும், கதறியழுதவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டோர்களைப் பற்றியும் நமது மண் எப்படி எதிரிப்படைகளினுல் சூறையாடப்பட்டு, சுடுகாடாக்கப்பட்டதையும், கழுகுகளும், கோட்டான்களும், வட்டமிடும் பூமியாக இரத்த வெடிலும் நிண்டும் – சதையுமாக துண்டிக்கப்பட்ட மனித உறுப்புக்களும், துப்பாக்கி ரவையின் மண்முகமாக பிணக்காடாக விளங்கிய போர்கால நினைவுகளை – தகவல்களை ஆதாரங்களுடன் விளக்கி ஆவணமாக வெளிவந்திருக்கும் திரு நிலவன், அவர்களின் தொகுப்பான ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பற்றி சில நிமிடங்கள் உங்களுடன் இணைந்து சிந்திக்கலாம். சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந் நூல்களின் பக்கங்களைப் புரட்டும்போது ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009
இரு தொகுப்புகளும் பொய்மை கலக்காத நிஜமான ஆவணமாகும். முதலில் இந்தப் பாரிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகண்ட திரு நிலவன் அவர்களுக்கு தமிழர் சமுதாயம் நன்றிக்கடன்பட்டவர்கள். ஒவ்வொரு தமிழ் ஈழப் பிரமையும் – புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் உட்பட ஆசிரியருக்குத் தங்கள் நன்றியறிதலையும் – பாராட்டையும் அறியத் தரவேண்டும். அவரை நலமுடன் வாழ வைக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போரின் பின்பு – ஈழத்துப் போர்க்கால இலக்கியம் எனும் புதிய இலக்கிய வடிவம் தோன்றியுள்ளதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஈழத்துப் போர் இலக்கியங்களும் ஒன்றுதான்.
ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009, என்று நான் கருதுகிறேன். இ ந் நூல் 1ம் பாகம் 503 பக்கங்களையும் – 2ம் பாகம் 1095 பக்கங்களையும் கொண்டு வெளிவந்த பாரிய நூல்களாகும். இதுவரை தமிழீழ அரசியல் வரலாற்றில் இப்படியொரு தொகுப்பு நூல் வந்ததாக நான் அறியவில்லை.
நால் திகதிவாரியாக சகல பதிவுகளும் – களச் செய்திகள், வீரமரணம் அடைந்தவர்கள் – காணாமல்போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் – இராணுவ நடவடிக்கைகள் ஆட்சியில் அமர்ந்தவர்களின் முன்னெடுப்புகள் அயல் நாடுகளின் அரசியல் வியூகங்கள் – பேச்சுவார்த்தைகள் ஆதாரம் காட்டும் நிழற்படங்கள் – மக்களின் பங்களிப்புகள் – அறவழிப் போராட்டங்கள் – வேற்று நாட்டு இராஜதந்திரிகளின் பேச்சுவார்த்தைகள் கவனயீர்ப்புகள் – ஊடகத் துறையினரின் நிலப்பாடுகள் என இன்றேரன்ன அனைத்து தகவல்களையும் தேடித்தேடி நிருபணங்களுடன் நிலவன் இந்த போரிலக்கியத் தொகுப்பை ஆவணப்படுத்தியுள்ளார். கொஞ்சம் பின்னோக்கி உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினோம். என்றால், உலகப் போரிலக்கியம் பற்றி அறியலாம். உலக வரலாற்றில் எங்கெல்லாம் போர்கள் நடைபெற்றனவோ அங்களெல்லாம் போரிலக்கியங்கள் தோன்றின. 1ம் உலக மகா உத்தம் 2ம் உலக யுத்தம் ஆகியவற்றின் விளைவுகள் மட்டுமன்றி, அதன் பின்னர் உலகெங்கிலும் நடைபெற்ற பல புரட்சிகளின் போதெல்லாம் போர் இலக்கியங்கள் மலர்ந்தன, தோன்றின!
பிரான்ஸ், ஜெர்மனி – ரஷ்ய இலக்கியங்களில் போரிலக்கியங்களே உலகப் பிரசித்தி பெற்றவை. உரிமையும் உரிமைமறுப்பும், ஆயுதமும், ஆயுத எதிர்ப்பும், சமாதானமும், சமாதான மீறலும், மட்டுமன்றிக் காட்டிக் கொடுத்ததிலிருந்து பொருளாதாரத் தடைவரைக்கும் பழிவாங்கலிலிருந்து பண்பாட்டு அழிப்பு வரைக்கும் போரிலக்கியங்கள் பேசுகின்றன. ஒரு நாட்டுக்குள் இன மதரீதியான ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடிய உள் நாட்டுப் போர்களிலிருந்து பல உன்னத இலக்கியங்கள் தொன்றியதை ஐரிஷ் – பாலஸ்தீன, கியூபா நாட்டு இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன. எடுத்தியம்புகின்றன. தமிழில் போரிலக்கியமரபின் ஆரம்பமாகச் சங்கப் புறத்தினை நூலகளைக் கொள்ளலாம். புற நானூற்றிலிருந்து பதிற்றுப்பத்துவரையான புறாத்தின் நூல்கள் போரை மட்டுமின்றி அதற்கான மன்னராட்சி அரசியலையும் முன்னிறுத்தின. காவியங்களின் பெரும்பகுதியான காண்டம் கூட ‘யுத்தகாண்டம்’ எனும் பெயர்த்தன்மையுடையதாய் அமைந்துள்ளது. இராமாயணத்தில் யுத்தகாண்டம் மிக முக்கியம் வாய்ந்த பகுதியாகும். குறிப்பாக ஜெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி முதலிய சிற்றிலக்கியங்களின் தோற்றுவாய் போர் மற்றும் வெற்றியின் அரசியலைப் பாடுவதாக அமைந்தது.
20ம் நூற்றாண்டில் மகாகவி பாரதியின் வருகையானது நவீன தமிழ் இலக்கியத்தில் ஆழமும், அகலமுமான ஒரு பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டம் சார்ந்த தமிழ் நிலைப்பட்ட இலக்கியப் பிரதிகளையும் நவீன தமிழின் போர் இலக்கியங்களின் ஆரம்பமாகக் கொள்ளமுடியும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் எழுச்சியும் உணச்சியும் மிகுந்த போர் இலக்கியக் கவிதைகளை எழுதி மக்களிடம் கொண்டு சென்றவர்களான கவிஞர் புதுவை இரத்தினதுறை, கவிஞர் காசி ஆனந்தன் இருவரும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
ஈழத்தில் போர் இலக்கியம் எனுந்தொடர் தமிழ்தேசியத்தை முதன்மைப் படுத்திய ஆயுதப் போராட்டம் சார்ந்தது. எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஒரு நாட்டை அரசியல், பொருளாதார நலன் கருதி காலனிய அரசுகள் கைப்பற்றிய போது இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்திற்கும், உள் நாட்டுக்குள்ளேயே பாரம்பரிய, தார்மீக உரிமைகள் நசுக்கப்பட்டபோது இடம்பெற்ற போராட்டத்திற்கும் உணர்வுசார் வேறுபாடுகள் நிறையவேயுள்ளன. பொதுவாக ஒரு நாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் இடையிலான போரில் சுதேசிகள், மொழி – இன – மத பேதமற்று ஒன்றிணையும் உணர்வினைக் காணமுடியும்.
ஆனால் ஒரு நாட்டிற்குள் பெரும்பான்மைச் சமூக மொன்று சிறுபான்மைச் சமூகமொன்றை அடக்கும்போது அதற்கெதிராக வெடிக்கும் போராட்டத்தின் உணர்வு நிலை இனம் – மொழி – மதம் மற்றும் பண்பாடு வேறுபாடுகள் காரணமாகக் கொதி நிலையுடையதாய் அமையும். அடக்குமுறைக்குட்பட்ட சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்ப்பு உணர்வில் அச்சமூகம் இறுகப்பற்றிய இன உணர்வு – மொழியுணர்வு – மதவுணர்வு மற்றும் பண்பாட்டு உணவுகள்மிக கூர்மையாகக் காணப்படும். இந்த உணர்வுக்கொதி நிலையைத் தமிழ்தேசியத்தை முதன்மைப்படுத்திய ஈழத்துப் போர்காலப் பிரதிகளுள் அதிகமாகக் காண முடிந்தது. இந்த உணர்வு கொதி நிலைதான்…
இந்நூலின் தொகுப்பாசிரியர் திரு. நிலவன் அவர்களை “போர்கால இலக்கிய ஆவணமாக பதிவு செய்யத் தூண்டியது என என்னால் உணரமுடிகிறது. ஆதாரங்களை நோக்கி தேடலில் ஈடுபட்டார். நிலவன் அவர்களது வரிகளுள் சொவதானால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலையானது 21ம் நூற்றாண்டில் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட முக்க்யக் குற்றங்களின் ஒன்றாகும். எமது மரபு வழித் தாயகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்றோம். திட்டமிட்டு பௌத்த சிங்களப் பேரினவாதம் எமது தமிழ் மக்களின் மீது இனப்படுகொலைகளை 1923ம் ஆண்டு ஆரம்பித்திருந்தாலும் 1956ம் ஆண்டு தொடங்கிய சிங்கள அரசு இன்றுவரை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தும் கடத்திவருகிறது. நேரடிப்படுகொலைகள், மொழி அழிப்பு, பண்பாட்டுச் சிதைப்பு, நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றம், வாழ்வாதார – கல்வி அழிப்பு, நூலக எரிப்பு – வழிபாட்டுத் தலங்களை நிர்மூலமாக்குதல் போதை வஸ்த்துக்கள் இளைஞர்களுக்கு அறிமுகம் செய்தல் எனப் பல்வேறு வழிகளில் நமது இன மக்களைத்திட்டமிட்டு சீர் குலைத்து வருகிறது. இன அழிப்பு என்பது புதுப்புது வடிவங்களில் நடைபெறுவது அறியாமல் வாழக்கூடாது என்பதை நினைவில் நிறுத்தி அதை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் எனும் விழிப்புணர்வும் – ஆவேசமும் – அக்கறையும் நமது பிள்ளைக்களுக்கும் – எதிரிகால இளைய தலைமுறையினருக்கும், வரவழைப்பதற்கு ஈழப்படுகொலையின் சுவடுகள் தினம் தோறும் அறியப்பட வேண்டும். வாசிக்கப்படவேண்டும்.
இ ந் நூலின் அவசியம் கருதி உங்கள் இல்லங்களில் உள்ள திருக்குறள் – தேவார திருவாசகப் பதிகங்கள், பாரதி பாடல் தொகுப்புடன் ஈழச் சுவடுகள் -2009 ம் வாசிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திச் சொல்கிறேன். – உலகின் முக்கிய நாடுகளின் பல்கலைக் கழகங்களின் அரசியல் வரலாற்றுப் பிரிவில், இ ந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற ஆவண செய்யப்பட வேண்டும்” தயவு செய்து தமிழன்பர்களே! பெற்றோரே! நிலவன் அவர்களின் இத்தொகுப்பு நூல் அவசியம் வாங்கி – தாயக விடுதலை நோக்கிப் பயணியுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
உலகில் ஒரு இன அழிப்பு நடைபெற்றூ வருகின்றது என்றால் அது மனிதகுலத்தின் பின்னடைவையும், இவ்வாறான கொடூரங்களைத் தடுப்பதற்கான அதன் இயலாமையையுமே முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் படுவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படிஅயில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே ஆகும்!
உலகத்தமிழர்கள் தமிழின அழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைக்கான உத்வேத்தோடு ஒன்றுபட்ட தேசியச் சக்தியாக வீச்சுடன் நகரவேண்டும்.
உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிங்கிடந்ததாக வரலாறு எங்குமில்லை. ஒன்றுபட்ட மக்களின் திரட்சியே போராட்ட எழுச்சியாகப் பரிமாணம் பெறும். காலங்கள் உருண்டோடிச் செல்கின்றன. ஆனால் எமது தமிழினம் அ நுபவிக்கும் அ நீதிகளுக்கோ இன்னும் நீதி கிடைக்கவில்லை, என்பது ஏற்க முடியாத உண்மை எனும் நிலவனது கூற்றை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த நீதிககாண பயணத்தில் உலகத்தமிழினம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், எனபதே இன்று காலத்தின் கட்டளையும் தேவையுமாகும் என்பதை உள்ளதால் உணர்ந்து அதற்காக அயராமல் போராடுவோம்!
உறுதி எடுத்துக் கொள்வோம்!