மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட வேண்டிய பல வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வசதிகளை கொண்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் த.கலையரசனினால் இன்று கொண்டுவரப்பட்ட மல்வத்தை மற்றும் கோமாரி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான தனி நபர் பிரேரணையின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை மற்றும் கோமாரி ஆகிய வைத்தியசாலைகளில் தள வைத்தியசாலைகளில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ள பராமரிப்பு நிலையங்களாக இருக்கின்ற காரணத்தினால் அவற்றை ஆரம்ப வைத்தியசாலையாக உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.
ஒரு வைத்தியரையும், ஒரு தாதியரையும் நிரந்தரமாக நியமித்து வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை ஏனைய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கும் நிலையையாவது உருவாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
அதேபோன்று மட்டக்களப்பினை பொறுத்தவரையில் தரமுயர்த்தப்பட வேண்டிய பல வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படாமல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பல வசதிகள் கொண்ட வைத்தியசாலைகளுக்கு அண்டிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு அவற்றுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்ககூடிய நிலைமையினை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு வாவியினால் பிரிக்கப்பட்டு எழுவான் கரையென்றும், படுவான்கரையென்றும் இரு பிரிவுகளாக இருக்கின்றது. மாவட்டத்தின் அரைவாசிப் பகுதியைக் கொண்டுள்ள படுவான்கரை பகுதியில் ஒரு தள வைத்தியசாலை கூட அமைக்கப்படவில்லை.
கரடியனாறு வைத்தியசாலையும் மகிழடித்தீவு வைத்தியசாலையும் தரமுயர்த்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அறியப்படுகின்றது. அந்த நடவடிக்கைகள் துரிதமாக வழங்கப்பட்டு அந்த மக்களுக்கு ஏனைய பகுதிகளுக்கு சமமான வைத்திய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று கிரான் பிரதேச செயலகப்பிரவில் புலிபாய்ந்தகல் பகுதியை அண்டிய பல பிரதேசங்கள் ஆரம்ப பிரிவு கூட கிடைக்காத பிரதேசங்களாக இருந்து வருகின்றது. கடந்த போராட்ட காலத்தில் விடுதலைப்புலிகளினால் அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடம் ஒன்று கூழாவடி பகுதியில் உள்ளது.
அதில் மாவட்ட வைத்தியசாலை ஒன்றை அமைக்கவேண்டும் என பல பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களிலே எடுத்துக்கூறியுள்ளேன்.
தற்போது அந்த கட்டிடத்திற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. துரிமாக அப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை தற்போது தள வைத்தியசாலையாக இருந்தாலும் அங்கு அதிகளவான குறைபாடுகள் காணப்படுகின்றன.
அந்த வைத்தியசாலைக்கு பின்பு உருவாக்கப்பட்ட பல ஆயுர்வேத வைத்தியசாலைகள் பல வசதிகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் அம்பியுலன்ஸ் வசதிகளையும் கொண்டிருக்கின்ற போதிலும் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையில் மருந்துகூட தட்டுப்பாடு ஏற்படும் நிலையே இருந்து வருகின்றது.
தினமும் நூற்றுக்காண வெளிநோயாளர்கள் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றனர். இரத்தம் சோதனை செய்யக்கூடிய இரத்தப் பரிசோதகரும் இல்லாத நிலையே அங்கு காணப்படுகின்றது.
ஒரு நோயாளருக்கு 500மில்லி மருந்து வழங்கப்படவேண்டும் என்ற சிபாரிசு இருந்தும் கூட 200 மில்லி மருந்து கூட வழங்க முடியாத நிலையிருப்பதாக அங்குள்ள வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ஆரையம்பதி ஆதார வைத்தியசாலை சீ தரத்தில் இன்று உள்ளது. அதற்கு பின்பு அந்த பகுதியில் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகள் பி தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும்.
அந்த வைத்தியசாலையின் முயற்சியினால் அவுஸ்ரேலிய அமைப்பு ஒன்றின் உதவியுடன் எக்ஸ்ரே இயந்திரம் 81 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வைத்து இயக்குவதற்கு ஒரு அறையில்லாத நிலையே அங்குள்ளது.
கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வைத்தியசாலை கழிவுகளை எரிக்கும் இயந்திரமும் அந்த அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து இலட்சம் ரூபா செலவழித்து ஒரு அறையினை நிர்மாணித்து வழங்க முடியாத நிலையில் உள்ளனர்.
வீட்டுக்கழிவுகளையே எடுப்பதற்கு பிரதேசசபைகள் கஸ்டங்களை எதிர்நோக்கி கொண்டுள்ள நிலையில் அந்த கழிவுகளை அகற்ற இடமில்லாமல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த கழிவுகளை எங்கு கொண்டு கொட்டுவது,
இவ்வாறான நிலையில் குறித்த வைத்தியசாலையில் கழிவுகளை எரிக்கும் இயந்திரத்தினை பொருத்துவதற்கு ஒரு அறையினை நிர்மாணிக்க சுகாதார அமைச்சினால் பணம் வழங்க முடியாவிட்டால் ஒரு கோடி ரூபா பெறுமதியான இயந்திரத்தினை எவ்வாறு பெற்றுக்கொடுக்க போகின்றீர்கள்.
யாரோ பெற்றுக்கொடுத்த ஒரு கோடி ரூபா இயந்திரத்திற்கு ஐந்து இலட்சம் செலவளித்து ஒரு அறையினை கட்டிகொடுக்க முடியாவிட்டால் இந்த மாகாணசபை எந்தளவில் உள்ளது. அதற்கான நிதியொதுக்கீடுகள் எவ்வாறு உள்ளது. அந்த நிதிகள் எவ்வாறு சமமாக பங்கிடப்படுகின்றது என்பதில் பாரிய கேள்வியெழுந்துள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியேற்ற முதல் நிகழ்வில் நாங்கள் கூறியிருந்தோம். சுகாதார துறையில் வேறுபாடுகள் பார்க்க கூடாது. நோயாளர்களில் வேறுபாடுகள் பார்க்க கூடாது. நோயாளர்களை ஒரே நிலையில் பார்க்க வேண்டும் என்று கோரியிருந்தோம்.
மேலும், இந்த பிழை எங்கு ஏற்பட்டது என்பதை சுகாதார அமைச்சர் கண்காணிக்க வேண்டும். ஆரையம்பதியில் உள்ள இரண்டு இயந்திரங்களையும் இயங்க வைக்க கூடிய நடவடிக்கையினை மிகவும் விரைவாக எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குறிப்பிட்டுள்ளார்.