“போரின் நாயகர்களான போராளிகளினால் எழுதப்பட்ட எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப் படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும், இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்”
⁃ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது 75 ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. தமிழீழப் போராட்ட வரலாறும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி மற்றும் வரலாற்றுப் பின்னணி , சாதனைகளும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் –தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்தி 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். பின்னர் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய மரபுவழித் தமிழ் இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” என (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி வீச்சுடன் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவால் தமிழ் இராணுவக் கட்டமைப்புக்களுடன் மிகப் பெரும் இன விடுதலை இயக்கமாக உருவாக்கினார்.
மக்களின் கனவை விடுதலைப் புலிகள் முன்னெடுத்ததால் அதற்குப் பிறகு மக்கள் முழுமையாக விடுதலைப் புலிகளை ஆதரித்து பெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்தினார்கள் போராளிகள்.
தனியான மொழி கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றை அழிப்பதினூடாக அவர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்து நாடு முழுவதையும் சிங்கள தேசமாக மாற்றிட மரபுரிமைகளை அழித்தும், அவற்றை திரிபுபடுத்தியும், பௌத்த மயமாக்கல் என்னும் சூழ்ச்சிகரமான வேலைத்திட்டத்தை மும்மரமாக நிகழ்ந்திட, தமிழர் தாயகத்தில் பல அக்கிரமங்களும் அடாவடிகளும் அரங்கேறிட, எதிர்த்து நின்ற தமிழ்த் தலைமைகள் , மக்கள்களும், சமூக ஆர்வலர்களும், சிங்களக் காடையர்களினால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். எத்தனை இனக்கலவரங்கள் மற்றும் படுகொலைகள், தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும். எத்தனை பெண்கள் வார்த்தைகளினால் சொல்லமுடியாத பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொண்டிருப்பார்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசுகள் தான் எமது கைகளிலே ஆயுதங்களை எடுக்க வைத்தார்கள்.
தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தமிழ் இராணுவமாக மரபுவழிசார் படையணிகளைக் கொண்ட போராட்ட இயக்கமாகவே வளர்த்தெடுத்தார். கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானங்களுக்கு அமைவாக வான்படை மற்றும் கரும்புலிகளையும் உருவாக்கிடப், போராளிகள் அறப்போருக்கு வலுச்சேர்த்து வழிநடத்தினர். தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னுதாரணமாக நிகழ்த்திக் காட்டினார்.
தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த ஒவ்வொரு போராளிக் கலைஞரும், வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு அறச்சீற்றம் கொண்ட விடுதலைப் போராளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகர்களாக வாழ்ந்து வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் தமிழீழ தேசத்தின் சுடராக எம் தேசமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு இனமானது, தனித்துவமான மொழியைக் கொண்டிருக்கின்ற போதும், தனக்கே உரித்தான பண்பாடு, கலை, கலாச்சார வழக்காறு வாழ்க்கை முறையில் ஈடுபடும்போதும், தனது பாரம்பரியப் பொதுப் பிரதேசத்தில் வாழ்கின்ற உரிமையைக் கொண்டிருக்கின்ற போதுமே முழுமை அடைந்ததோர் இனமாகக் கருதப்படும்.ஈழத் தமிழர்களின் வாழ்வியலில், கலையும் இலக்கியமும் இன்றியமையாத பங்கை ஆற்றியிருக்கின்றன. ஈழத்து இலக்கியத்தின் சொல்நெறி தனித்துவமானது. விடுதலையை வேண்டிப் போராடும் ஏனைய சமூகங்களைப் போல, ஈழத்தமிழர்களின் போராட்டங்களில், கோரிக்கைகளில், உரிமைக்குரல்களில் தவிர்க்க இயலாத பங்களிப்பைப் பண்பாடு மற்றும் கலை இலக்கியங்கள் ஆற்றி வந்துள்ளன.
தமிழ் மக்கள் மொழி,பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாறு என்பவற்றை தனித்துவமாக கருதுவதைத் தடுப்பதில் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் உறுதியாக இருந்து வருகின்றது. கலை என்பது காலத்தின் கண்ணாடி அது காலத்தைப் பேசவேண்டும்! காலம் சார் பண்பாட்டினைப் பேசவேண்டும்! வாழ்வியலைப்பேச வேண்டும்! என்பவற்றை செயற்பாட்டின் மூலம் காட்டியவர்கள் எங்கள் போராளிக் கலைஞர்கள்.
எமது தாயக விடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்தில் தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைப்படைப்புகள்,குறிப்பாக எழுச்சிமிகு கவிதைகள் , பாடல்கள் , கூத்துக்கள், வீதி நாடகங்கள் உட்பட பல கலை இலக்கியப் படைப்புகள் அதிமுக்கிய கருவியாக இருந்து வந்துள்ளன. தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை இலக்கியம், பண்பாடு, உணவு பழக்க வழக்கம், விளையாட்டு என்பன ஒருவகையில் ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்களாகவும் உள்ளன என்பதை கருத்தில் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு மக்களுக்கான நிர்வாக அலகுகள் மூலம் போராளிகள் செயற்படுத்தி காட்டினார்ககள். இதில் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஊடாக இயல் இசை நாடகம் மற்றும் திரைப்படம் எனப் போராளிக் கலைஞர்களின் பங்களிப்பு ஆரம்பம் முதல் இன்றுவரை இருந்துவருகின்றது என்றால் மிகையில்லை.
மக்கள் கலை இலக்கியம் என்பது, மக்களின் நன்மைக்கானது, மக்களை விழிப்பூட்டும், மக்களைக் கிளர்ந்து போராடத் தூண்டும், மக்களால் ஆக்கப்படும் மக்கள் நலனுக்கான கலை இலக்கியம். திறமையையும், துணிச்சலையும், சுறுசுறுப்பையும் கொண்டது. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் மொழிசார் கலையும் நுண்கலை, பயன்கலை, கவின் கலை, நிகழ்த்து கலைகள் என மொழிசாரா கலைகளும் தம் வடிவங்களில் வேறுபட்டிருப்பினும் தமது உள்ளடக்கங்களில் ஏதோ ஒருபுள்ளியைப் பற்றியே குவிந்திருப்பது. எமது தாயகத்திற்கான விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் பிணைந்த போராளிகளின் வாழ்வியலும் எந்த கலைஞனாலும் செதுக்கிவிடமுடியாத ஒன்று.
தமிழீழத்தில் ஒரு புனித இலட்சியப் போராட்டத்தோடு நாம் இணைந்தும், அச்சூழலில் எம்மை புதிய சமுதாயமாக மாற்றியமைத்து கலை பண்பாட்டின் ஊடாக மக்களோடு உணர்வுரீதியாகவும் கலக்கவேண்டிய ஓர் தார்மீகக் கடமையையும் எம் தோள்மீது சுமக்க வேண்டியவர்களாக ஒவ்வோரு போராளிக் கலைஞர்களும் படைப்பாளிகளும் காணப்பட்டார்கள். போராட்டத்தின் பழுவினைத் தாங்கியவண்ணம் எண்ணற்ற தியாகங்களிற்கும். அர்ப்பணிப்புகளிற்கும் மத்தியில் வாழ்ந்த, போராளிக் கலைஞர்களும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.
போராட்டச் செயற்பாடுகளினூடு போராளிகள் பலர் ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. கலைவடிவங்களில் எங்களுடைய பாரம் பரியக்கலையம்சங்கள் பல்வேறு வழி வகைகளில் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், படங்கள் குறும்படங்கள் வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன. மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டு அதனூடாக மக்களை ஆற்றுப்படுத்துவதில் நெறிப்படுத்துவதில் பெரும் பங்கினைக் கலைவடிவங்கள் கொண்டிருந்தன. இவைகள் அனைத்தும் பாரப்பரியம், கலை, கலாசாரம் என எமது பண்பாட்டு விழுமியங்களும் மக்களை நெறிப்படுத்தி இருக்கின்றன என்றே சொல்லமுடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் சிங்களப் பேரினவாதம் முன்னெடுத்த பண்பாட்டுச் சிதைப்பும் காரணம். விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காவல் தெய்வங்களாக காத்தது மட்டுமல்லாமல் கலை பண்பாடு வழக்காறு விழுமியங்களையும் இனத்தின் இருப்பையும் காத்து வந்தார்கள். எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளினால் தீர்க்கப்படும் என்ற உயர்ந்த நம்பிக்கையினையும், தன்நிறைவுப் பொருளாரதாரம். நீதி மற்றும் நிர்வாக அலகுகள் மூலமும் “மக்கள் என்றால் புலிகள் – புலிகள் என்றால் மக்கள்” எனப் போற்றப்பட்டார்கள். தமிழீழ தேசத்தின் உருவாக்கத்திற்கு உறுதுணையான உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுத்து அதைப் போராளிகள் செவ்வனே நடைமுறைப்பத்திக் காட்டினார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், எங்கிருந்து உருவாகினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்ன, ஏன் தமிழ் மக்கள் எதற்காகப் போராடினார்கள் என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி இன விடுதலைக்கு போராடியவர்களை “ஒரு தீவிரவாத இயக்கம்” என்ற சொல்லுக்குள் சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இன விடுதலையை நசுக்குகின்றார்கள். அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிரான மக்கள் தான், தங்கள் உயிர் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்புடன் , எழுச்சியடைந்து விடுதலைக்குப் போராடினார்கள். அந்த “மக்கள் தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள் தான் அந்த மக்கள்”! என்பதை உலகிற்கு எடுத்துரைத்தார்கள்.
இலங்கையில் இன ஒடுக்குதல் காரணமாக சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்தித்த காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள், இன ஒடுக்குமுறையால் எழுந்த சமூக, அரசியல் பொருளாதாரப் புறநிலைகள், தமிழ்த் தேசியவாத எழுச்சியை ஈழத்தமிழரிடையே வலுப்பெறச் செய்தன. தேசியவாதத்தால், தேசாபிமானத்தால் உந்தப்பட்ட ஆயுதப் போராட்டம், புரட்சிகர சித்தாந்தத்தையும் கொண்டதாகவே அமையப்பெற்றது.
தமிழீழ தேசியக் கட்டுமானங்களை நிர்வகித்து வந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் இராணுவமாக தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருந்தனர். உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, இனத்தின் மேல் பற்றுக் கொண்ட இவர்கள் தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா? தாயக விடுதலை நோக்கிப் பயணித்த உயரிய இலட்சியத்திற்காய் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரம் விளைநில மண்ணில் விதையாகிப் போனவர்கள் தான் மாவீரர்கள். விடுதலைப் புலிகள் இருந்தவரைத் தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு பாதுகாப்பு நிலை இருந்தது என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
மாவீரர்களின் தியாகத்தின் மூலம் சொல்லிச் சென்ற செய்தியை, அதன் முக்கியத்துவத்தை தன் பரிமாணத்தைச் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு போராளிக் கலைஞனாய் சுதந்திரப் போராட்டம் காட்டுத்தீயாய் சுதந்திரக் கனலாய்ப் பற்றி எரிந்திட அதைத் தனது கலைப் படைப்புக்களான பத்திரிக்கை, இலக்கியம், பாட்டு, கவிதை வடிவில் விடுதலை உணர்வை அவர் மக்களிடையே ஏற்படுத்தினார். அவரின் எழுச்சி வரிகளுக்கு கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கில் இன்று இருந்திருக்க வேண்டியவர்.
போராளிக் கலைஞர்கள் பல வகிபாகங்களைக் கொண்டிருந்தார்கள். போராளிகள் தங்கள் கல்வி விருத்தியிலும், கலைத்திறன் சார் விருத்தியிலும் செயல்திறன் கொண்டவர்களாய் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை பல கள முனைகளில் நின்று களமாடினார்கள். அவர்கள் மாவீரர்கள் பற்றி நெஞ்சு கனக்கும் கதைகளைச் சுமந்தவர்களாய் கலைகளின் வெளிப்பாட்டை ஆற்றுப் படுத்தினார்கள்.
வாழ்வின் பரிணாமத்தைப் பேசுவதும் பண்பாட்டு வரலாறு இனத்தின் இருத்தலைப் பேசுவதும் இன வரலாறு. தமிழர் பண்பாட்டு வரலாறும் இன விடுதலைப் வரலாறும் ஒன்றல்ல ஆனால் மிகவும் நெருக்கமானவை. தமிழர்களின் பண்பாட்டு கூறுகள் (காதல், வீரம், நட்பு, விருந்தோம்பல், ஈகை, கொடை, கற்புடமை, உலக ஒருமைப்பாடு) என போராளியின் போர்கால இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாக பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த ஈழத் தமிழினம், மாபெரும் பண்பாட்டு இழப்பை இன்று சந்தித்து வருகின்றது. ஒரு இனத்தின் அடையாளமாக இருக்கும் இவற்றை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டியது நமது பொறுப்பாகும். வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நினைவு கூரும் தமிழர் பண்பாடு ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்துக்குப் பொறுப்பாக இருந்த புதுவை இரத்தினதுரை அவர்கள் , கவிஞர் மட்டுமல்ல நல்லதொரு சிற்பக் கலைஞரும் கூட.அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பேச்சாளரும்கூட . நண்பர்களோடு பேசும்போதும் சரி, அரங்கிலே – மேடையிலே பேசும்போதும் சரி, இயக்கப் பரப்புரைக்கான பேச்சுகளின் போதும் சரி, பட்டிமன்றங்களில் பேசும்போதும் சரி பேச்சை அற்புதமான கலையாக வெளிப்படுத்தத் தெரிந்த கலைஞர். அவர் பேசும்போது அதில் வெளிப்படும் பேச்சு மொழித் தொனியே மக்களைக் கட்டிப்போட்டுவிடக் கூடியது. கரகரத்துத் தடித்த குரலில் ஏற்படும் மிடுக்கும் அதை மீறும் அதன் ஈர்ப்பும் பார்வையாளர்கள், பேச்சின் தொனிக்கு ஏற்ற மாதிரி ஏற்றி இறக்கிப் பேசி நகைச்சுவையையும் கலந்து அரங்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சிறப்பு பேச்சாற்றல் நுட்பமும் கலையும் கொண்டவர் .
தமிழீழ எழுச்சிப் பாடல்கள்
தேசியக் கவிஞர் இரத்தினதுரை தமிழீழத் தாயகம் தொடக்கம் தேசியத் தலைவர், தமிழ்த்தேசிய விடுதலை, மாவீரர்கள், கரும்புலிகள், அவர்தம் மகத்தான தியாகங்கள், இனமான உணர்வை, எழுச்சியை, போராளிகளின் நெஞ்சுரத்தை, மற்றும் தமிழீழ நிலவளங்கள், வெற்றிச் சமர்கள், காதலை, மண்ணை, மக்களை, தமிழர் பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக அவர் எழுதிய பாடல்களுள், தமிழீழ மக்களை அடையாளப்படுத்தும் தமிழீழத் தேசியக் கொடியின் கொடி வணக்கப் பாடலான “ஏறுது பார் கொடி ஏறுது பார்!” என்ற பாடல் உட்பட மலர் வணக்கத்தின் போது ஒலிபரப்பப்படும் “சூரியத் தேவனின் வேருகளே” என்ற பாடலையும் உருவாக்கியிருந்தார்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவெழுச்சி நாளின் போது ஒலிக்கப்படும் “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி” என்ற முதலாவதாக மாவீரர் வணக்கப் பாடல் 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் புலவர் புதுவை இரத்தினதுரை. மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும்.
1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இசைவாணர் கண்ணன் அவர்கள் இசையமைக்க அமரர் வர்ண இராமேஸ்வரன், மேயர் சிட்டு, அபிராமி, மணிமொழி ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவு வணக்கப் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது. அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல்.பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கொண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம், பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுடன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூரும் அந்த நாளை மீண்டும் நினைவு கூருகையில் மெய் சிலிர்க்கின்றது.
மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படும் நேரங்களில் வாசிக்கப்படும் உறுதிமொழி.“
எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலேகளமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கையும்……… சேர்ந்துகொண்டான்.
சாவு இவனது பேச்சையும், மூச்சையும் நிறுத்தியதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம். மீண்டும் வேர்விடுவான் விழுதெறிவான்.
புதிதாகப்பிறக்கும் புலிகளுக்குள்ளே இவன் புகுந்துகொள்வான்.
நெஞ்சுகனக்கும் தாயக விடுதலைக் கனவோடு எமைப்பிரிந்து செல்லும் இவனின் கனவை நாங்கள் நனவாக்குவோமென்று இவனின் விதைக்குழி மீது உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வீரச்சாவடைந்த இவ் வீரவேங்கைக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் இவ் வேளையில் எங்கள்; தாயக மீட்புப் போருக்கு மீண்டும் எங்களை தயார்படுத்திக் கொள்கின்றோம்.
ஒருகண நேரம் இந்த வீரனுக்காக குனிந்து கொண்ட எமது தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்.
“புலிகளின்தாகம் தமிழீழத்தாயகம்”
(எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை) உறுதியுரை.
மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை.“எமது தாயகமாம் தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் நிலைநாட்ட தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் தலைமையின் கீழ் அணிதிரண்டு இறுதிவரை தேசத்தின் விடுதலைக்காகவும் அனைத்து ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் உண்மையுடன் நின்று உழைப்பேன் என்று இத்தால் உறுதி யெடுத்துக்கொள்கின்றேன்.”
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளுக்கு வலுச்சேர்த்தவர் புலவர் புதுவை இரத்தினதுரை அவர்கள். அவரின் பாடல்கள் அழியா வரம் பெற்றவை.
மாவீரர்கள் விபரம்
2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழத்தில் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கரும்புலிகள் 259 உள்ளடங்குகின்றனர். எல்லைப்படை மாவீரர்கள்- 281 இதில் பெண்கள்-05 , ஆண்கள்-276 ஆகும் . காவற்து மாவீரர்கள் – 50 இதில் பெண்கள்-03 ,ஆண்கள்- 47 ஆகும் . மாமனிதர்கள் -19 மற்றும் நாட்டுப் பற்றாளர்கள்-480 இதில் பெண்கள்-28, ஆண்கள்-452 ஆகும் (31-10-2008 மாவீரர் பணிமனை மாவீரர் நாள் விரிப்பு) 31-10-2008 முதல் 27-11-2008 வரை 276 மாவீரர்கள் உள்ளடங்களாக 2008 மாவீரர் எழுச்சி நாள் வரையில் 22390 மாவீரர்கள் எனப் பதிவுகள் சுட்டிக் காட்டுகிறது. இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்கால இடப் பெயர்வு காரணமாக தற்காலிக நினைவுத் தடங்களாக மேலும் துயிலும் இல்லங்கள் 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் இறுதிவாரம் வரை 6 தற்காலிக மாவீரர் நினைவுத்தடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்றது. அதற்கு பிட்பட்ட காலப் பகுதியில் போராளிகள் வீரச்சாவடைகின்ற இடங்களில் மாவீரர்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்டது. வீரச்சாவடையும் மாவீரர்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளலாம்.
ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்து சக்திகளாக அமைந்து விட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு இலட்சியவாதி. ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.
உலகத்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழ் இனம் இன்றைக்குச் சொந்த நாட்டில் வாழமுடியாத ஏதிலிகளாக வாழ்கின்றோம். தமிழ் மக்கள் நாட்டைச் சிங்கள பேரினவாத அரசு ஆக்கிரமித்திட உறவை இழந்து, வீட்டை இழந்து, உடமை இழந்து, நடைப்பிணமாக வாழும் இனமாகத் தமிழ்த் தேசிய இனம் 130 நாடுகளில் ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து வாழ்கின்றோம். இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதி கேட்டு நிற்கின்றோம். தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கும் உரிமைக்கும் போராடிய மக்களின் தமிழ் இராணுவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, புரட்சிகர வரலாற்றுப் பயணத்திற்காக, தமிழீழத் தனியரசை அமைத்துக் காட்டினார்கள்.
இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களினால் தமிழர் தாயகக் கோட்பாடு திட்டமிட்டு சிதைக்கப்பட்டு தமிழ் மக்களைப் பெருந் தொகையில் படுகொலை செய்து இன அழிப்பு செய்திட தலை தூக்கிய இனக் கலவரங்கள் அனைத்தும் இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த “Axis Rule in Occupied Europe” என்ற புத்தகத்தில் பயன் படுத்தியுள்ளார். உலகில் ஆர்மேனியன் இனப்படுகொலை – Armenian Genocide, கிரேக்க இனப் படுகொலை, பெரும் இன அழிப்பு (2ஆம் உலகப் போரில் யூதர் இனப்படுகொலை) Holodomor இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, Communist genocide, ருவாண்டா இனப்படுகொலை, போசுனியன் இனப்படுகொலை, குர்துமக்கள் இனப்படுகொலை, தார்ஃபூர் போர் இனப்படுகொலை போன்ற பல இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில். தமிழ் இன அழிப்பின் கோர வெளிப்பாடுகளாகவே அமைந்தன. 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983ஆம் ஆண்டுகளில் வெடித்த இனப் பூகம்பங்கள், சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர்களை அழிக்கும் நோக்குடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கள் வரையில் இடம்பெற்ற இன அழிப்பில் 146697 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 2009 மே மாதம்,15, 16,17,18,19 ஆகிய தேதிகளில் வரை நடந்த கொடுரக் கொலைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல் முள்ளி வாய்க்காலில் படு கொலை செய்யப் பட்டார்கள். பௌத்த சிங்கள இந்திய வல்லாதிக்க இனவாத அரசு இன உரிமை கோரும் ஈழத் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வது அரை நூற்றாண்டு காலமாக நடந்தேறி வருகிறது. உலகில் இறுதியாக நடந்த மாபெரும் இனப் படுகொலையை ஈழத் தமிழர் இனப் படுகொலையாக பலரும் கருதுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்படப் பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டார்கள். இதற்கான சாட்சியங்களும் இருக்கின்றன. அவ்வாறு சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பற்றிய தேடுதல்களும் கேள்விகளுமே இந்தியாவின் வாக்குறுதிகளை நம்பியே போராளிகள் சரணடைந்தார்கள் என்ற முக்கிய விடயம் பற்றி யாரும் பேசுவதில்லை. இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டோர் விடயத்தில் பொறுப்புள்ள பதிலை இலங்கை இந்திய அரசுகள் கூறவேண்டும். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை தொடர்ந்தும் முயற்சிகளையும் அழுத்தங்களையும் பிரயோகித்துக் கண்டறிய வேண்டும்.
ஒரு இனத்தின் இருப்பும் அதன் சுயநிர்ணய உரிமையும் அதன் வாழ்விடமான நிலத்தில் தான் தீர்மானிக்கப் படுகிறது. அத்துடன் தொடர்ச்சியான நில அமைவு அதன் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தும். இதனை மாற்றியமைத்து தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைக்க சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து நில அபகரிப்பையும் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதிலும் ஜனநாயகச் சட்டங்களை மீறி நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டு வருகின்றனர்.எமது வரலாற்று ரீதியான மற்றும் ஆத்மார்த்த ரீதியான அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த ஈழ தேசத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் தனியான தேசிய இனத்தவர்கள். தாயகப் பிரதேசத்திற்கென்று தனியான வரலாறு, மொழிச்சிறப்பு, தனித்துவமான பண்பாட்டு விழுமிய வழக்காறுகள் என்பவற்றுடன் பொருளாதார வளங்களையும் இயல்பாகக் கொண்டிருப்பவர்கள். முன்னாள் ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தனியான தேசிய இனமொன்றுக்கு வகுத்த வரை விலக்கணப்படி தேவையான பரிமாணங்கள் முழுமையினையும் தன்னகத்தே கொண்ட இனமாகத் தனித்துவமாக வாழ்ந்து இருக்கின்றோம்.
தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகளா? ” கொடிய ஆயுதங்களை வைத்து தமிழ் தேசிய இன மக்களைக் கொன்று குவிக்கும் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் செய்த இனப் படுகொலைகள் இன அழிப்பு உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தரப்பினர், வடக்கு, கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை விரைந்து எடுத்து, துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களைப் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிப்படுவதுடன், திட்டமிட்ட வகையில் இன அழிப்பு நடை பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
2009 ஆம் ஆண்டின் பின்னர் நடந்துவரும் நில ஆக்கிரமிப்புக்கும் தமிழர் பிரதேசங்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் தமிழ் இன குறைப்பும் இன சுத்திகரிப்பும் செய்வதும் புலிநீக்க அரசியலை மேற் கொள்ளும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட நினைவிடங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும், அவற்றை முற்றாக நீக்குவதே! அரசாங்கத்தின் நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசுடன் தமிழ் மக்கள் இணக்கமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இனி இல்லை என்பது வெளிப்படையாக அன்றும் இன்றும் தெரிகின்ற விடயம்.
இனப் படுகொலைகள்- இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கின்ற தருணத்தில், இவ்வாறான அடையாளங்களை அழித்து, மக்களின் எண்ணங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறைக்குள் தமிழர்களுக்கான நீதியைத்தேடும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்குள் ஒருபோதும் தமிழர்களுக்கு நீதியைத் தாம் தரப்போவதில்லை என்பதையே இனவாத சிங்கள பேரினவாத அரசைப் போலவே சிங்களவர்களும் அழுத்தமாகச் சொல்வதே இந்த மக்களின் ஐனநாயகப் போராட்டங்களை வன்முறைகளை ஏவிவிட்டு அடக்குவதை குறித்துக் காட்டுகிறது. இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் இனவாத ஆக்கிரமிப்புக்களே.
மாபெரும் இனவழிப்பின் பின்னர் பதினான்கு ஆண்டுகளைக் கடந்து நிற்கின்ற இந்தப் பொழுதுகளில் ஈழத்தில் இன்றுவரை இனப் படுகொலை ஓயவில்லை. திசையெங்கும் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து எம் உறவுகள் லட்சக்கணக்கில் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கின்றனர். ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம், உறவிழந்தவர் மறுபக்கம், உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே எனத் தேடும் உறவுகளின் சாட்சியங்களை கேட்டால் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலச் சம்பவங்கள் பல மனவடுக்களை சுமந்த மனிதர்களாய் வீதியோரங்களாக நாளாந்தம் போராடி வருகின்றார்கள். எங்களது பண்பாடுசார் கனதியான விடயங்களைத் தொலைத்து வாழ்வியலைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
மறுபுறத்தில் எமது மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியற்கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு என பலதரப்பட்ட தளங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்போது இனப் பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பு என்ற வடிவத்தை நோக்கி பேரினவாத அரசு நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கையை நிறைவு செய்யாத, பேரினவாத சக்திகளிடமிருந்து எவ்வித பாதுகாப்பையும் தமிழருக்கு வழங்காத இந்த அரசியல் யாப்பைத் தமிழ்மக்களின் ஆதரவோடு நிறைவேற்றிவிட மிகப்பெரிய சதித்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
தமிழ்மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் சிங்களப் பேரினவாத அரசின் இந்த நிகழ்ச்சி நிரலிற்கு பலர் பலியாகிவிட்டனர். நெருக்கடி நிறைந்த இந்தச் சூழலில் சுயலாப அரசியல் சக்திகளையும் அரசியல் சந்தர்ப்ப வாதங்களையும் இனங் காணத்தவறியதால் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்து வருகின்றார்கள். ஒட்டுமொத்த தமிழினமும் கூட்டாக சிங்கள – பௌத்த அடக்குமுறைக்கெதிராக எழுச்சி கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றது.விடுதலைப்பயணத்தில் உறுதியுடன் எழுச்சிகொண்ட. விடுதலைத்தீ தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்கு எடுத்துச்சென்ற வீரம் செறிந்த வாழ்வியலாலும் வளர்த்தெடுத்த தமிழ்த் தேசியம் எனும் பெருவிருட்சம் நாடுகள் எல்லைகள் கடந்தும், தலைமுறைகள் கடந்தும், பெருவளர்ச்சியுற்று நிற்கின்றது. தனித்தமிழீழம் அமைக்கத் தமிழரால் முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துடன் விடுதலைப் புலிகளை ‘தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் சர்வதேச சமூகம் நிகழ்த்தியிருந்த சந்திப்புகளும் பேச்சுகளும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதை வெளிப் படுத்தியிருந்தது.
எம் மண்ணின் மூதாதையரான வீரத்தமிழ் மறவர்கள் விதைத்த விதைகள் இன்னும் துளிர் விட்டுக் கொண்டே இருக்கின்றன. தமிழீழப் போராட்டத்தில் தனது காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளது. மேலும் பங்களிப்பை செய்து வருகின்றது. எதிர்காலத்தில் மிக மிகக் காத்திரமான விடயங்களை செய்யப் போகிறது. இந்த வகையில் தமிழர் பண்பாட்டையும், தமிழர் கலைகளையும் பேணவும், வளர்க்கவும் எடுக்கப்படும் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா உலகம் மூழுவதும் வாழும் தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் மாவீரர்கள் நிறைந்து இருக்கின்றார்கள். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக வேர்களின் இன விடுதலையின் விழுதுகளாக எங்கும் நிறைந்திருக்கின்றார்கள். எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம்.
தமிழர் தரப்பில் சிறந்த இராஜதந்திரப் பொறிமுறையைக் கட்டியயழுப்ப வேண்டும். உலகின் அனைத்துத் தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்து தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயப் பாடுகளை எடுத்துரைக்க வேண்டும்.பௌத்த சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலை , இன அழிப்பை நாடுகள் வாரியாக தீர்பாயங்களை உருவாக்கி இன அழிப்பு யுத்தத்தின் ஆவணப் பதிவேட்டைச் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கவேண்டும்.
இன்று மேற்கத்திய நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ள தமிழீழமக்களாகிய எம்மைப் பொறுத்தவரை, நாம் வாழும் நாடுகளில் உள்ள பல்வேறு தாக்கங்களின் நிமித்தமாக எம்மை ஓர் தனித்துவமான இளமாக இனம்காட்டும்தன்மை குன்றிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இன்று போராட்டத்தின் பழுவினைத் தாங்கிய வண்ணம் எண்ணற்ற தியாகங்களிற்கும். அர்ப்பணிப்புகளிற்கும் மத்தியில் தமிழீழமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கி ன்றார்கள்.
எமது சமூகமானது ஒரு நீண்ட போருக்கு முகம் கொடுத்துள்ளது. அது ஆயுதப் போர் மட்டுமல்ல. பொருளாதார, மற்றும் கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கியது. இதனால் இங்குள்ள பலரும் உளரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. உலகில் இனப்படுகொலை நடந்த வெவ்வேறு நாடுகளில் மக்கள் கூட்டாக எவ்வாறு இதனை எதிர் கொண்டார்கள் தொடர்ந்து எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதனையும் கற்றுக் கொண்டு எமது தமிழர் தாயகத்துக்கு ஏற்ற மாதிரியான மக்கள் எழுச்சிக்கான திட்ட வரைவுகளை வரைந்து செயற்பட வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒட்டு மொத்த தமிழர் அரசியல் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற் கொள்வது சாலச் சிறந்ததாகும். 12 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் காயங்களைக் கூடகுணமாக்க முடிய வில்லை என்பது பெரும் இடைவெளி.
15வருடங்களின் பின்னர் உலக ஒழுங்கில் ஒரு முக்கிய அமைவிடத்தில் பாரம்பரிய தாயகத்தை கொண்டிருக்கும் ஈழத் தமிழராகிய நாம் புறம் தள்ளி விட முடியாத ஒரு சக்தியாக இன்று எழுந்து வருகின்றோம். இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தல் தீபம் ஏற்றுதல், மலரஞ்சலி, உணர்ச்சி உரைகளையும் தாண்டி அந்த நாளில் என்ன செய்யலாம்? என்பதையும் ஒரு தேசமாக, தமிழ்த் தேசிய இனமாக சிந்திக்க வேண்டும். அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும் நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் எழுந்து நடக்கின்றோம். அவலக்குரல் எழுப்பிய எங்கள் உறவுகளின் குரல் நியாயம் கிடைக்காமல் ஓய்ந்துபோகாது. உலகில் எந்தவொரு தேசிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தில் சந்தித்திராத வெங் கொடுமைகளையும் பேரிழப்புக்களையும் சந்தித்துள்ளோம். நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூடநாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் எம்மை மன்னிக்காது.
”எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம்.”வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரைத் தொடர்ந்து போராடுவோம். தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப் படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்’– தேசியத் தலைவர் (2008) உரையில் இருந்து……
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும்!. ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும்!. இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக, உருப்பெறவேண்டும்.- “தேசியத் தலைவர்” “மேதகு வே.பிரபாகரன்”⁃ “
- நிஜத்தடன் நிலவன்
போராளிக் கலைஞர்கள் சார்பில்.