ஈழத்து இலக்கிய வரலாற்றில் இன விடுதலையில் ஆழமான தடத்துடன் ஆர்வம், திறமை, கடும் உழைப்பு, என்பவற்றோடு, கந்தசாமி பிரதீபன் அவர்கள் எழுதிய கன்னிப் படைப்பான “தன்னுரிமையும் தனியரசும்” என்னும் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
திகதி :- 29-09-2024 ஞாயிற்றுக் கிழமை
இடம் :- Hill House St Helier
Bishopsford Road
Morden SM4 6BL
நேரம் :- 04.30 PM
இன்றைய உலகில் நாடுகள் பன்முகத் தன்மை பாகுபாடுகள் ,பல்லின, மொழி, இன, மத, தேசிய வாதங்களை முன்னிறுத்தாமல், அனைவருக்குமான சமவுரிமை, அரசியல் சாசனங்களுடன், இன, மத, தேசிய வாதங்களே அங்கு மேலோங்கி இருக்கும். ஒற்றையாட்சி தத்துவத்தையும், இனவாதத்தையும், மக்களின் சுய நிர்ணயத்தை, சுயாட்சியை முன் நிறுத்தி ஒரு பலமான மக்களாட்சி கட்டமைக்கப் பட்டிருக்கின்றது. அனைவருக்குமான சுயநிர்ணயங்கள் அடையப்படாமல், நாடுகள், தேசங்கள் வளர்ச்சி, அபிவிருத்தியை, சிறந்த வாழ்க்கைத்தரத்தை அடைந்து கொள்ள முடியாது என்பதை “தன்னுரிமையும் தனியரசும்” நூல் சர்வதேச நாடுகளின் செயற்பாடுகள் பற்றி மிக ஆளமான பதிவுகளுடன் வெளிவருகிறது.
தன்னுரிமை’ என்பது ‘தன் தீர்மானிப்பு உரிமை’ தனது அரசியல் கதிப் போக்கை ஒரு தேசிய இனம் தன் விருப்பப்படித் தீர்மானித்துக்கொள்வதுதேசங்கள் உருவான போது தன் தீர்மானிப்பு உரிமையையும் பயன் படுத்தும் போக்கும் தொடங்கியது. ஒரு தேசிய இனத்துக்கு ஒரு நாடு என்பதுதான் தற்கால அரசமைவு முறை(Modern State System) ஆகும். தேசிய இனங்கள் தனித் தேசங்களைப் படைத்த போதெல்லாம் தன்னுரிமைக் கோட்பாடு செயல்படுத்தப்பட்டது. சர்வதேச வெளியைப் புரிந்து கொண்டும் செய்யப்பட வேண்டிய விடயங்களையும் சர்வதேச நாடுகளின் தனிநாடு கோரிக்கைகளும் குறிப்பாக சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான பல விடயங்களை வரலாற்றுடன் பரந்து மிக ஆளமாக இந் நூல் பதிவாக்கி இருக்கின்றது என்றால் மிகையில்லை .
“தன்னுரிமையும் தனியரசும்” என்னும் இந் நூல் ஈழத்தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான புதிய புதிய தகவல்களைக் கொண்டது மட்டுமல்லாமல் பல உசாத்துணை நூல்களின் பார்வையினைக் கொண்ட பொக்கிஷங்களாக விளங்குகின்றது. வரலாற்றைத் தேடுகின்றவர்களுக்கும், மாணவர் சமூகத்திற்கு “தன்னுரிமையும் தனியரசும் “என்னும் இந் நூல் அதிகளவுக்கு உசாத்துணை நூலாக உதவும். தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களின் வரலாற்றுப் பாட நூல்களில் தமிழ் மக்களின் வரலாறு தொடர்பான விபரங்களையும் தமிழரின் வரலாற்றுத் தமிழீழக் கோட்பாட்டினையும் உரிய முறையில் இந் நூல் வலியுறுத்து கின்றது.
தேசியம், சுயநிர்ணம் என்று பேசுவது வெறுமனே ஒரு கருத்தியல் சார்ந்த நிலைப்பாடல்ல. தமிழ் மக்களின் தனி நாட்டுக்கான கோரிக்கை திடீரென்று உருவாகிய ஒன்றல்ல . இத்தகைய எண்ணக்கருக்களை முன்னிறுத்தி வலியுறுத்தி அரசியல் தீர்வு தொடர்பில் “தன்னுரிமையும் தனியரசும்” இந் நூல் உண்மையான அர்த்தம் சேர்க்கும் என்பதை மிகக் கடினமான காலப் பகுதியில் ஆயுத ரீதியாக விடுதலைப் புலிகள் மௌனிக்கப் பட்டதைத் தொடர்ந்து, தனிநாட்டுக் கோரிக்கை பற்றிய பரந்த பார்வையுடன் தமிழீழ மக்கள் விடுதலை பெற்ற ஒரு தனி அரசை அமைக்க வேண்டும் என்பது பற்றி இலக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திடச் சிந்திப்பவனும் விடுதலைக்குப் போராடும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளன் என்பதை “கந்தசாமி பிரதீபன்” அவர்களின் “தன்னுரிமையும் தனியரசும்” என்னும் இந் நூல் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
ஒரு தேசிய இனத்தின் பலம், ஆன்மா, எதிர்காலம் எதனால் உருவாக்கப்படுகின்றது என்பதில் பல காரணிகள் பங்களிப்பு, செல்வாக்கு செலுத்துகிறது. தேசிய இனங்கள் அனைத்து விதமான சுதந்திரம், சுயநிர்ணயம், இறையாண்மைகளுடன் தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும் ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும் பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப்புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி, ஆட்சி நடத்திய தமிழ் இரணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும் .
தமிழர்களின் மரபுவழி மற்றும் வரலாற்று நிலப் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிகள் இணைந்த ஈழ நிலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிங்களவர்களை குடியேற்றம் செய்து அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்விடங்களை அழிக்கத் தொடங்கினர். ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
தமிழீழத்தில் சிங்கள இன வெறியர்கள் தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்த தந்தை செல்வா உள்ளிட்ட தமிழர் சார் அரசியல் தலைவர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பும் முன்னெடுத்த தனிஈழக் கோரிக்கையை தமிழீழத்தின் வரலாறு, தமிழீழ தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் ஆகியவற்றையும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தேசிய நெருக்கடி சூழல் தமிழர்களின் போராட்டத்தை வலுவாக்குமே தவிர, ஒரு போதும் விடுதலைக்கான போராட்டத்தை முடக்கிவிடாது. எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப் போவதில்லை” என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும்.
உலக அளவில் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் பற்றிய கருத்துகள் மேலோங்கியதனால்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் விடுதலைப் பெற்றன. அதன்பின் யூகோசிலோவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குரோசியா, போஸ்னியா கெசகோவினா, மெந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் தனி நாடுகள் ஆகின. அதேபோல 1971 ல் வங்காள தேசமும், 1993 ல் எரித்திரியாவும், 2002 ல் கிழக்கு தைமூரும், 2008 ல் கொசொவோவும் தனிநாடுகளாக மலர்ந்தன.
தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனம். அதற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு என்பதன் அடிப்படையில்தான் ஆயுதப் போராட்ட வடிவிலும், சாத்வீகப் போராட்ட வடிவிலும் தமிழீழக்கோரிக்கை பரிணாமமடைந்தது. தமிழ் தலைமை தமிழர்களுக்கு எவ்வித நியாயமான பலன்களையும் சிங்கள அரசுகளிடமிருந்து பெற்றுத் தர முடியாது என்ற உணர்விலிருந்தே தீவிர ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ஆயுதப்போராட்ட வடிவத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் தனித்து நோக்கப்பட வேண்டியது. அதேவேளை, இளைஞர் மத்தியில் ஆயுதப் போராட்டத்துடன் கூடியதமிழீழக்கோரிக்கை முதிர்ந்த பின்னணியில் தமிழர் கூட்டணி 1976 ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வாயிலாக தமிழீழக் கோரிக்கையை சாத்வீக- ஜனநாயக வழியில் “வட்டுக் கோட்டை தீர்மானம்” என்ற புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1977 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழரின் கனவு சுயநிர்ணய உரிமையே என்பதைபறைசாற்றியது. வட்டுக் கோட்டைத் தீர்மானம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழநாட்டை அமைக்க வேண்டுமெனக் கோரியது. வட்டுக் கோட்டைத் தீர்மானம் மிதவாத சக்திகளால் முன்வைக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் வளர்ச்சி பெற்ற ஒரு தேசிய இனமாக வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டதுடன் அதற்கான வரலாற்று இருப்பையும் மொழியையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் கொண்டவர்கள் என்பதை இலங்கைத் தீவு மட்டுமல்ல உலகமே ஏற்றுக் கொண்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தனியரசொன்றையே நிர்வகித்தார்கள். அதாவது பலமான ஆயுதப்படைகளைக் கொண்ட விடுதலைப் புலிகள் தனித்து தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தியதோடு ஓர் அரசை கட்டமைத்தார்கள். முப்படைகளையும் கொண்ட அரச இயந்திரத்தை நிறுவியது மட்டுமல்லாது அத்தகைய அரசுக்கான சட்டவாக்கம், நிர்வாக இயந்திரம், நீதிக்கட்டமைப்பு, என்பவற்றை நிறுவினர் அது மட்டுமன்றி இறைமை கொண்ட அரசுக்கான நியமங்களாக கடலிலும் தரையிலும் ஆகாயத்திலும் எல்லை வகுத்து அதில் வாழும் மக்களது உரிமைகளையும் சட்ட ஒழுங்கையும், பொருளாதார வாய்ப்புக்களையும், சமத்துவத்தையும், பாதுகாப்பதில் கவனம் கொண்டனர்.
1999-ம் ஆண்டின் போது சிங்கள ராணுவத்திற்கு எதிரான தொடர் வெற்றிகளை ஈட்டி சிங்கள ராணுவத்தைக் காட்டிலும், மிக வலிமையான ராணுவ நிலையில் விடுதலைப் புலிகள் இருந்த பொழுது, டிசம்பர் மாதம் ‘அமைதிப் பேச்சுவார்த்தைக்கான’ ஒருதலைப்பட்சப் போர் நிறுத்த அறிவிப்பை செய்தனர். 2002-ம் ஆண்டைய அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளானது விடுதலைப் புலிகளினுடைய ஆயுதப் போராட்டத்திற்கான நோக்கத்தினை வெளிப்படுத்தக் கூடியதாகும். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களின் தாயகப் பகுதிகளுக்கான தற்காலிக எல்லைகளை உறுதிப்படுத்திக் கொண்ட தமிழர் தரப்பு, தங்களுக்கான மெய்நடப்பு அரசையும் (Defacto State) அமைத்துக் கொண்டது. இலங்கைத் தீவிலும், சர்வதேச நாடுகளிலும் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பிரிவே பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்கு இட்டுச் சென்றது.
தமிழீழத்தின் எதிர்காலம் அதன் அரசியல் நிலைமைகளிலேயே தங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைத்தால் தமிழீழம் ஒரு வளர்ச்சிமிக்க சமூகமாக பரிணாமிக்க சந்தர்ப்பம் உண்டு. தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, விடுதலைப் புலிகள் இயக்கமும் தனிஈழக் கோரிக்கையில் ஏன் அவ்வளவு உறுதியாக நின்றார்கள் என்பதை நம் இந்த தன்னுரிமையும், தனியரசும் என்னும் இந் நூலை பார்க்கும் போது நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். தனித் தமிழீழமே ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர அரசியல் தீர்வாக அமையும்
2002 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் எழுச்சி நாளில் ஆற்றிய உரையினுள் பார்ப்போமாக இருந்தால் எமது போராட்ட இலட்சியத்தில் நாம் உறுதி பூண்டு நிற்கின்றோம். தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியனவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைகள். திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த அடிப்படைகளையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். இம் மூலக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு, போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது.
தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார் கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை எனத் தெரிவித்துள்ளோம்.
ஈழத்தில் தமிழர்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகள் மீது பூர்வீக உரிமை உண்டு. இன்றைய கால ஓட்டத்தில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் இளையோரிடத்தில் கட்டமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழர்கள் ஈழநிலத்திலும் , புலத்திலும் , தமிழகம் உட்பட்ட உலகத் தமிழர்களும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களின் தன்னுரிமை, தன்னாட்சி உரிமையினை உலக நாடுகளும், அமைப்புக்களும் ஏற்றல் என்பதன் வழியாகவே தமிழ் பேசும் மக்கள் தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்தது பற்றி இந் நூல் கூற்றுகளும் கட்டியம் கூறுகின்றன. புவிசார் அரசியல் புறச்சூழல், தமிழீழத் தனிநாட்டை அமைக்கச் சாதகமாக உரிமையோடு நாம் மக்கள் சக்திப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
உலகெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் தொன்மையான தேசிய இனமான தமிழினம், தனக்கான தன்னுரிமையை, இறையாண்மையை, தனக்கென்று ஒரு தனியான அரசை அமைக்க முடியாத அவல நிலையிலேதான், ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலையின் அடையாளமாக, வரலாறாக நாயகனாக தமிழர்கள் மக்களுக்கான தலைவராக மோதகு வே. பிரபாகரன் விழங்கினார். அவரின் சிந்தனை மற்றும் போராட்ட வரலாற்றைத் தாண்டி, தமிழர்களுக்கான தன்னுரிமையோ, தனியரசோ அமைந்துவிடப் போவதில்லை.
எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது’’-தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சித்தனைக்கு அமைவாக நாம் விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்களாய் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
- நிலவன்.