02.07.1982 இரவு ..!
“கள்ளன்……கள்ளன்……”
“ஓடுறாங்கள்……பிடி பிடி……”
“டேய் நில்லுங்கோடா”
என்று கத்தியபடி, கோபங்கொண்ட பெரும் கும்பல் ஒன்று எம்மைக் கலைத்துக்கொண்டு வந்தது. இந்தச் சூழலை இரவு மேலும் பயங்கரமாக்கியது.
எம்மைச் சூழ கற்கள் மழைபோல் வீழ்ந்து கொண்டிருந்தன.
சங்கரும் நானும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டே இருந்தோம்.
05-06-1974 அன்று.!
கோப்பாயில், அரச வங்கி ஒன்றில் இருந்து பணத்தைப் பறிப்பதற்காக சிவகுமாரனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றிருந்தனர். அந்த முயற்சி ஏனோ காரணத்தால் குழம்பியது. சிங்களப் பொலிசாருடன் சேர்ந்து, உண்மையை உணர்ந்திராத மக்கள் கூட்டமும் சிவகுமாரனைப் பிடிப்பதற்காகக் கலைத்தது. சிவகுமாரன் ஓடி……ஓடித் தனது கிராமமான உரும்பிராய்க்கு அருகாமையில் வந்துவிட்டார். “இனிமேல் பிரச்சனை இல்லை” என்று சிவகுமாரன் நினைத்திருப்பார்.
ஆனால், தோட்டமொன்றினுள் மிளகாய்ச் செடிகளுள் ஒளிந்திருந்த சிவகுமாரனை விவசாயி ஒருவர், தொடர்ந்து கலைத்து வந்த சிங்களப் பொலிசாரிடம் காட்டிக்கொடுத்தார். இதன் காரணமாக ஏற்பட்ட மோதலின்போது சிவகுமாரன் சயனைட் அருந்தி வீரமரணமடைந்தார்.
இவ்வளவிற்கும், சிவகுமாரனும் அவரது தீவிர அரசியல் ஈடுபாடும், இவற்றால் அவர் இருதடவை கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தது எல்லாம் பிரபல்யமான விடயங்கள்.
இங்கு மக்கள் சிவகுமாரனுக்கோ அல்லது அவரது தமிழீழ இலட்சியத்திற்கோ எதிரானவர்கள் அல்லர். அன்றைய காலப்பகுதியில் மக்கள் தீவிரப் போராட்ட வடிவங்களை அறிந்திருக்கவோ, அதைப்பற்றிச் சிந்திக்கவோ இல்லை. இதனால்தான் சிவகுமாரன் இறந்தார். சிவகுமாரன் இறந்த பின்னர் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் உரும்பிராயில் ஒன்று கூடினர். சிவகுமாரனுக்கு ஒரு தியாகிக்குரிய முறைப்படி – ஒரு மாவீரனுக்குரிய முறைப்படி – அஞ்சலியும் செய்தனர். சிலையும் எழுப்பினர்.
சங்கர், கீழே விழுந்துகிடந்தவனை எழுந்து விடாதவாறு சைக்கிளுடன் சேர்த்து தனது காலால் அழுத்திக் கொண்டிருந்தான். தனது கைத்துப்பாக்கியை எம்மைத் துரத்திவந்த கும்பலை நோக்கி நீட்டியபடி “சுடவா” என்று என்னிடம் கேட்டான்.
நான் கீழே கிடந்தவனைக் காலால் உதைத்துக் கெட்ட வார்த்தைகளால் ஏசினேன். இருட்டில் அவனின் முகம் எனக்குத் தெரியவில்லை.
“மகனே……” இனிமேலும் ஏதாவது செய்ய நினைத்தீர்களோ எல்லோரையும் சுடுவோம், எல்லோரையும் திரும்பிப்போகும்படி போய்ச் சொல்லு” என்றேன்.
“சுட வேண்டாம்……ஓடுவோம்” என்று சங்கரிடம் கூறினேன். கம்பி வேலி ஒன்றினைக் கடந்து, தொடர்ந்து வாழைத் தோட்டம் ஒன்றினூடாக ஓடினோம்.
“எல்லாம் வா…….எல்லாம் வா; ஒருத்தரும் போக வேண்டாம்” என்று எமக்குப் பின்னல் ஒரே சமயத்தில் பல குரல்கள் கேட்டன.
நான் பெரிதாக மூச்சிரைத்தபடி, சங்கரின் பின்னால் சென்றுகொண்டிருந்தேன். சங்கர் என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். என்னால் கதைக்க முடியவில்லை. நாக்கு கீழ் வாயில் ஒட்டியமாதிரி அசைய மறுத்தது.
மேலும் ஒரு கம்பி வெளியைச் சங்கர் ஏறிக் கடந்தான். சுற்றாடலை அவதானித்தபடி என்னையும் ஏறிக் கடக்கும்படி கூறினான். என்னால் ஏற முடியவில்லை. கைகள், கால்கள் எல்லாம் நடுங்கின. நாக்குழறியது.
“என்ன சிறீயர். இந்தமாதிரிக் களைச்சுப் போனீங்கள்” எனக் கூறியபடி சங்கர் மீண்டும் வேலியைக் கடந்து, நான் வேலியைக் கடக்க உதவினான். இப்படியாகச் சங்கரின் உதவியுடன் மேலும் நான்கைந்து தடைகளைத் தாண்டிச் சென்றேன். பின்னர் நாம் வீதியொன்றை அடைந்தோம். எம்மைச் சூழ எங்கும் கும்மிருட்டு. எல்லாத் திக்கிலும் நாய்கள் பலமாகக் குரைத்து எமக்கு மேலும் அச்சமூட்ட முயன்றன.
என்னால் ஒன்று செய்ய இயலவில்லை. “இனிமேல் உவங்கள் கலைத்தால் சுடுவம்” என்றேன்.
“நாம் இன்னும் கொஞ்சத் தூரத்திற்கு வளவுகளையும், வேலிகளையும் தாண்டிப் போவோம். இங்கிருந்தே பாதையால் சென்றால் அவங்களைச் சந்திக்க வேண்டிவரும். வீணாகச் சுட்டுக்கொல்ல வேண்டி வந்திடும்” என்று கூறியபடி, சங்கர் எனக்கு முன்னே சென்றான்.
1982 பங்குனி மாதத்தில் ஒரு இரவு..!
எமது இயக்கத்தின் சில பொருட்களை ‘ரெலோ’வினருக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. அந்த நாட்களில், இவ்வாறு மற்றைய குழுக்களுக்கு நாம் உதவுவதுண்டு. இராசபாதையில் உள்ள ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அவ்விடத்தில் வந்து பொருட்களைப் பெற்றுச் செல்லும்படி அவர்களுக்குக் கூறியிருந்தோம்.
நாம் எப்போதுமே தடயங்களை விடாமல் செயற்படுபவர்கள். சிறிய – முக்கியத்துவமற்ற விடயங்கள் என்றாலும் மிகவும் இரகசியமாகவே செயற்படுவோம். உயிர் நண்பனையோ பெற்றோரையோ கூட நம்பி எதையும் கதைக்க மாட்டோம். அவர்களுக்குத் தெரிய ஒரு விடயத்தைச் செய்யமாட்டோம். எமது தோழர்களுக்கே தேவையற்ற விடயங்களைச் சொல்லமாட்டோம்; நாமும் அறிய முயலமாட்டோம். மிகவும் இரகசியமாகவே செயற்படுவோம். இதனால் நாம் எதிரியின் வலையில் சிக்குவதென்பது எப்போதுமே நடந்ததில்லை. மாறாக மற்றைய குழுக்கள் எமது நடைமுறைக்குத் தலை கீழான முறையிலேயே செயற்பட்டன. இதனால் அடிக்கடி பிடிபட்டனர். இவர்களின் பொருட்களும் ஆயுதங்களும் பிடிபட்டன. உதவிசெய்வோரும் பிடிபட்டனர். எனவேதான் தனிமையான இடத்தில் சந்தித்துப் பொருட்களைப் பெற்றுச் செல்லும்படி அவர்களுக்குக் கூறினோம்.
குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு ஐந்து பேர் வந்திருந்தார்கள். உண்மையில் அதற்கு இருவரே போதும். வேறு இடத்தில் பொருட்களுடன் ஒருவரை விட்டுவிட்டு, நான் மட்டும் அவர்கள் நின்ற இடத்திற்குப் போய் அவர்களில் இருவரை அழைத்துச் சென்று, பொருட்களை ஒப்படைத்தேன்.
மறுநாள் ‘ஈழநாடு’ பத்திரிகையில், “நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில், இராசபாதையில் உள்ள தோட்டங்களில் கிழங்கு திருடவந்த மூன்றுபேர் கொண்ட கோஷ்டியொன்றை, பதுங்கியிருந்த விவசாயிகள் பிடித்து நையப்புடைத்த பின்னர், பொலிசில் ஒப்படைத்தனர். சில நாட்களாக இப்பகுதித் தோட்டங்களில் கிழங்குகள் களவாடப்பட்டு வந்ததாலேயே விவசாயிகள் தோட்டங்களில் காவல் போட்டிருந்தனர். மேலும் இதே பாதையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு வேளையில் வந்த தம்பதியினரைக் கத்திமுனையில் மிரட்டி, தாலிக்கொடி அறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட மூவரிடமும் இவ்விடயம் தொடர்பாகவும் பொலிசார் துருவித் துருவி விசாரணை செய்கின்றனர்” என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பிசகு நடந்த இடத்தை விளங்கிக்கொண்ட நாம் கவனமாக இருந்தோம். ரெலோவினரைச் சந்தித்து விபரம் கேட்டோம். நடந்தது இதுதான்; இவர்கள் ஐவர் அந்த இடத்திற்கு வந்ததால், மூவரை அவ்விடத்திலே விட்டுவிட்டு , இருவர் மட்டும் பொருட்களை எடுக்க என்னுடன் வந்துவிட்டனர். இந்தப் பொருட்களை சைக்கிளில் வைத்துக் கட்டிச் செல்வதற்காக உரபாக், கயிறு, கத்தி என்பன அந்த மூவரிடமும் இருந்தன. இம்மூவரும் அவ்விடத்திலேயே தொடர்ந்து நின்றதை அவதானித்த விவசாயிகள் சந்தேகித்தனர். அவர்கள் மூவரையும் விசாரித்தபோது சரியான காரணம் கூறமுடியாமல் தடுமாறியுள்ளனர். மேலும் இவர்களிடம் உரபாக், கயிறு, கத்தி என்பனவும் இருந்தன. விவசாயிகளின் சந்தேகம் மேலும் உறுதிப்பட்டது. இதனால் மூவரையும் பிடித்துக் கட்டியுள்ளனர். இவர்கள், தாம் இயக்கம் என்று கூறியும் விவசாயிகள் நம்பவில்லை. “எல்லோரும் இப்ப இயக்கம் என்று சொல்லிக்கொண்டுதான் கள வெடுக்கிறார்கள்” என்று கூறி, நல்ல அடியும் போட்டு, பொலிசில் ஒப்படைத்துள்ளார்கள். மூவருக்குமே பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன என்ற நீண்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
02.07.1982..!
அன்று இரவு நெல்லியடியில், பொலிசார் மீதான தாக்குதல் ஒன்றைச் செய்திருந்தோம். பின்னர் அவ்விடத்தில் இருந்து விரைவாக வெளியேறுவதற்காக கார் ஒன்றைக் கடத்தி வந்தோம். மற்றைய தோழர்களையும், எடுத்த ஆயுதங்களையும் எமது மறைவிடத்திற்கு அருகாமையில் இறக்கிய பின்னர், அந்தக் காரை வேறு இடத்தில் கைவிட்டு வருவதற்காகச் சங்கரும் நானும் சென்றோம். விசாரணைகளைத் தொடர்ந்து வரும் பொலிசார் எமது இருப்பிடத்தை அறியமுடியாது திசை திருப்புவதற்காகவே, நாம் காரை வேறிடத்தில் விட வேண்டியிருந்தது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சமீபமாக உள்ள சுடலை ஒன்றில் காரைக் கைவிட்டுவிட்டு, சங்கரும் நானும் வந்துகொண்டிருந்தோம். எமது பயணத்தைத் தொடருவதற்காக துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஒருவரிடம் இருந்து சைக்கிளைப் பெற முயன்றோம். அப்பொழுது சைக்கிள் உரிமையாளன் “கள்ளன் கள்ளன்” என்று கத்திவிட்டான். எமது துரதிஷ்டம் அந்த இரவு வேளையில் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துவிட்டு வந்த பெரும் கும்பல் ஒன்று, அவ்விடத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தது. அந்தக் கும்பலும் அவனுடன் சேர்ந்து எம்மைக் கள்ளன் என்று பிடிக்க முயன்றது. நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நாம் வந்த கார் பழுதடைந்துவிட்டதால்தான் சைக்கிளைக் கேட்டதாகவும் கூறினோம். அவர்கள் நம்பவில்லை. அவர்கள் எம்மை நெருங்கினார்கள். நாம் சுழல் துப்பாக்கியைக் காட்டிய போதும் அவர்கள் பயப்படவில்லை.
நாம் வைத்திருப்பது போலித்துப்பாக்கி என்று கருதி எம்மைப் பிடிக்க முயன்றனர். அந்த இரவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதான் வீதிவழியாக நாம் ஓடத்தொடங்கினோம். எம்மைத் துரத்திய கும்பல் “கள்ளர்……கள்ளர்……” எனக் கத்தியதால், வீடுகளிலிருந்தவர்களும் வீதியால் வந்தவர்களுமாகப் பெரும் கும்பலே எம்மைக் கலைத்தது. கற்களால் எறிந்தார்கள்; கைகளில் பொல்லுகளையும் எடுத்துக்கொண்டு கலைத்துவந்தார்கள்.
“இந்தக் கும்பலிட்டைப் பிடிபடக்கூடாது.பிடிபட்டால் கதையைக் கேட்காமலே எமது ஆயுதத்தைப் பிடுங்கி, அடித்து மடக்கிப் போடுங்கள், இப்படிப் பிடிபடுகிற நிலை வந்தால், சுடுவது என்றாலும் சுட்டுவிட்டுத் தப்பி விட வேண்டும்” என்று, நான் ஓடிக்கொண்டே சங்கரிடம் கூறினேன்.
எம்மால் தொடர்ந்து ஓட முடியவில்லை. ஒருமுறை மேல் நோக்கிச் சுடும்படி சங்கரிடம் கூறினேன். சங்கர் சுட்டான். கும்பல் பயப்படவில்லை. தொடர்ந்தது கலைத்தது. பின்னர் நான் சுடுகிறேன் என்று கூறி மேலும் ஒரு தடவை சுட்டேன். கும்பல் தொடர்ந்தும் கலைத்து வந்தது.
மல்லாகம் சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தோம். சந்திக்குப் போனால் நிலைமை இன்னும் மோசமாகும் என உணர்ந்து, சந்திக்குப் போகாமல், இருட்டில் மறைந்து ஒழுங்கைக்குள்ளால் ஓடத் தீர்மானித்தோம். இடது பக்கமுள்ள ஒரு ஒழுங்கையூடாகத் திரும்பி ஓடினோம்.
சிறிது தூரம் ஓடியிருப்போம். ஒருவன் சைக்கிளில் விரைந்து வந்து எமக்குக் குறுக்காக சைக்கிளை விட்டு எம்மை மறித்தான்.
சங்கர், அவனைச் சைக்கிளுடன் சேர்த்து காலால் உதைத்து வீழ்த்தினான்.
சங்கரும் நானும் தொடர்ந்து வளவுகள், தோட்டங்களின் ஊடாக வேலிகளையும் தாண்டி ஓடி, விடிவதற்கு முன்பாக எமது மறைவிடத்தைச் சென்றடைந்தோம்.
03.07.1982..!
காலை ஈழநாடு பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக, நெல்லியடியில் பொலிசார் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. அத்துடன் அதே பத்திரிகையில், துர்க்கை அம்மன் கோவிலடியில் சைக்கிள் பறிக்க முயன்ற திருடர்களை மக்கள் மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது திருடர்கள் சுட்டதில், இளைஞர் ஒருவர் காயமடைந்தார் என்ற செய்தியும் பிரசுரமாகியிருந்தது.
விடுதலைப்புலிகள் (கார்த்திகை 1992)