எங்கள் ஜீவிதம் காக்க கல்லறை மீதிலே—நீங்கள் மேவிய தியாகங்கள் கண்டோம். கண்ணீர் பூக்களைக் காணிக்கை ஆக்கி…
நெஞ்சம் கதறிடும் போதிலே தீருமா இத்தியாகம் என்போம். எங்கள் கண்ணீரின் வெம்மையை உணர்ந்தா இந்த வானமும் மழைநீரை வாரி இறைக்கிறது…..
செங்காந்தள் பூக்கள் கரங்களை நிரப்புகையில்…..
நீங்கள் சிந்திய குருதியும் சேமித்த நம்பிக்கையும் காந்தள் மலரின் நிறமாய் வந்து நெஞ்சில் தைக்கின்றதே எம் மாவீரர்களே….
வருடாவருடம் வந்து அழுதும் புரண்டும் போகவா இந்தக் கார்த்திகை? இல்லை அகத்திலே நீங்கள் கொண்ட கனவுகளை கடத்தியே உயிர்ப்புடன் மீட்டெடுக்க நாம் உறுதிகொள்ளும் நாளா இந்தக் கார்த்திகை…
வரலாற்றுப் பக்கத்தில் நீங்கள் வாழ்ந்த காலங்கள் உங்கள் ஈகங்கள் என்றுமே உயிர்ப்புடன் இருக்க வேண்டும். வரும் இளையோரும் அதை மீட்க வேண்டும். இதற்காவும் இந்தக் கார்த்திகை..
இதிகாசம் சொல்லலாம் மறுபடியும் ஒரு பிறவி இருக்கென்று. ஆனால் உண்மை அதுவென்று யாருக்குத் தெரியும்? இப் பிறவி ஒன்றே நிலையானது அப்பிறவியை எமக்காகத் தந்தீர்கள். எதை நீங்கள் பெற்றீர்கள். வெயிலும் மழையும் உமை தீண்டவில்லை. காடும் கட்டாந்தரைகளும்உமை சலிப்பூட்டவில்லை. தேளும் பாம்பும் உமை பயம் கொள்ள வைக்கவில்லை. தூங்காத உங்கள் விழிகளுக்குள் தெளிவான பார்வை இருந்தது. துவளாத அந்த நெஞ்சில் துடிப்பான வீரம் இருந்தது. குட்டியான அந்த இதயத்தில் உங்கள் கொள்கை உறுதி கொண்டது. அதனால் தானோ நீங்கள் ஆதியும் அந்தமும் இல்லா
சோதி ஆகினீர்கள்.
அடுக்கி வைத்து அர்ச்சிக்க ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. உங்களை உயிர்ப்பித்து அழகு பார்க்க முடியல எனும் போது எங்கள் கண்ணீரில் இந்தக் கல்லறைகள் நனைகின்றது.
வீழி மூடிக் கொள்கிறேன்
நீங்கள் வழிவந்து போகின்றீர்கள். கடலோடு கலந்த என் சோதிகளே! நிலத்தோடு உரமாகிய மாவீரர்களே! காற்றோடு கலந்திட்ட காவிய மாந்தரே கைகூப்பி வணங்குகிறேன். உங்கள் நினைவுகளோடு வாழும் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் கார்த்திகை வந்து போகும். காலமும் இதைக் கொண்டு செல்லும்.
வணங்குகிறேன்
வன்னியூராள்
ஆர் ஜெ கலா