எமது முன்னோர்கள் “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கென” வாழ்ந்தவர்கள். தாம் மடிந்தாலும் தமிழை வாழவைக்க வேண்டும் என்பது அவர்களின் பேரவா. தமிழனாய் பிறந்ததையிட்டு அவர்கள் பெருமைப் பட்டனர். தமிழ் அன்னையை அழகுபடுத்த அழகிய தமிழிலக்கியங்களைப் படைத்து தமிழ் வளர்த்தார்கள். இதனால் தான் தமிழ் என்றும் மங்கா புகழுடைய மொழியாக உள்ளது. இதனைப் பாரதிதாசன் பாடுகையில் “சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க பாடுகிறார்.தமிழிலக்கிய வரலாற்றுக் காலங்களில் எம் சான்றோர்கள் வளர்த்த தமிழை எமக்கு கற்பித்த ஆசான்கள் பாதம் பணிந்து எனது உரைக்குள் செல்கின்றேன் .
மொழியும், கலையும், கலாசாரமும் வளம் பெற்று… வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது. இது தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனையில் இருந்து ….
உலகின் வாழும் தொன்மையான மொழிகள் ஆறு. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்றாகும். இவ்வாறான தொன்மையான மொழியைப் பேசும் இனம் நம் தமிழினம். “குமரிக்;(லெமுரியா); கண்டத்தில் முதல் தோன்றிய மனிதனும் தமிழனே. முதல் பேசப்பட்ட மொழியும் தமிழே|| என, மொழி ஞாயிறுஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தமிழினம் தனக்கெனத் தனியான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் தொன் மையை இவ்விரண்டின் மூலமாகவே வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் கணக்கீடு செய்கிறார்கள்.
உலகச் செம் மொழிகளில் ஒன்றாகவும், மிகப் பழமையான இலக்கண, இலக்கியங்களில் கொண்டிருப்பதில் மூத்த மொழி எனவும், வரலாறு கொண்ட எங்கள் தமிழ் மொழி, ஈழ தேசத்திலும் , இந்தியத் துணைக் கண்டத்தின் தென் திசையிலும் தமிழ்நாடு,நாட்டிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகவும் மலேசியா, சிங்கப்பூர், பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவும் பர்மா, பிரான்சு, பிரித்தானியா உட்பட யூரோப் நாடுகள் போன்ற பகுதிகளில் சில நூற்றாண்டுகளாகவும் பேசப்பட்டு வரும் உலக மொழி ஆகும்.
இன்றைய நவீன உலகில் தமிழ் பேசக்கூடிய தமிழர்கள் சுமார் 175ற்கும் மேற்பட்ட நாடுகளில் வசித்தும் வருகின்றனர்.இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, மற்றும் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல் வெட்டுகளையே கொண்டுள்ளன.
தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும், தமிழ் இலக்கியத்தின தும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
• சங்க காலம் (கிமு 400 – கிபி 300)
• சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)
• பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)
• மையக் காலம் (கிபி 1200 – கிபி 1800)
• தற்காலம் (கிபி 1800 – இன்று வரை) கொண்டுள்ள எமது தாயகங்களின் வரலாற்றில்.. அந்நிய ஏகாதிபத்தியங்கள், அந்நிய ஆக்கிரமிப்புச் சக்திகள், அறிவுப் புகட்டல் அறியாமையை நீக்கி அறிவொளி பாய்ச்சுதல் எனும் பெயரில் எமது தன்னடையாள உணர்வுகளைத் தகர்த்தெறிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றார்கள்
பண்டைய தமிழர்கள் தமக்கென இறைமையுள்ள நாடுகளில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கென நாகரிகம். பண்பாடுகள் இருந்தன. அதனால் அவன் முழுமைபெற்ற சிறப்புமிக்க ஒரு இனமாக வாழ்ந்தான். அப்படியான ஒரு இனம் இன்று அடிமைகளாகவும், அகதிகளாகவும் பல நாடுகளில் வாழும் நிலையில் உள்ளது.
எமது மொழி கலை பண்பாட்டு வரலாற்று விழிப்புணர்வுகளை விரட்டியடிக்கின்ற அரசியலை எமக்குக் கற்பித்து நாகரிக வளர்ச்சி என எம்மை நம்பவைத்து…அறிவு வளர்ச்சி எனும் போர்வையில் நமக்குள் அடிமைத்தனத்தையும் அந்நிய மோகத்தையும் எம்மேல் பயிர்செய்து எம்மைப் பட்ட மரங்களாக்கி அன்பையும் அறத்தையும் அழிக்கும் அணுயுகத்தினை வலுப்படுத்தும் பயணத்தில் இப்பூகோளம் விரைந்து சென்று கொண்டி ருக்கின்றது .
மொழி என்பது ஒரு உரையாடல் கருவி மட்டுமல்ல. அது ஒரு அறிவுப் பெட்டகம். பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்த நமது மூதாதையர்களின் மொத்த அறிவும் / அனுபவமும் நூல் வடிவாக, செய்தியாக, கதையாக, பாடலாக மொழி மூலம் பரப்பப் படுகிறது.
“தமிழர் இல்லாத தேசமும் இல்லை, தமிழருக்கென்று ஒரு தேசமும் இல்லை “ என்பார்கள் தமிழ்த் தேசிய நேசர்கள் !
தாய்மொழிதான் ஒருவரின் இன அடையாளத்தை பேணும் என்பதனை உணர்ந்து கொண்டார்கள் ஈழத் தமிழர்கள். தமிழர் புகலிடம்பெற்று வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்திலும், சிங்கப்பூர், மலேசியாவிலும் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிற அங்கெல்லம் தமிழ்ப்பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழகப் பிரவேசப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக கற்கும் வகையில் கற்கை நெறிகள் – பாடத்திட்டங்கள் நடை முறைப் படுத்தப் படுகின்றன. அறிவியலுக்கு மருந்து சொல்கின்ற தமிழிலக்கியங்களை எமக்கு அறிவாய்ப் புகட்டிஎமை வளர்த்து வருகின்றார்கள் எங்கள் தமிழ் ஆசான்கள்.
மெய்யறிவு’.. ‘மெய்பொருள் காணும் அறிவு’ ‘மெய்யுணர்வு’ ‘மெய்ஞானம்’ ‘அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவு’ ‘சுடர் மிகும் அறிவு’ ‘தன்னறிவு’ என்று அறிவுப்படிகளுக்கு வரம்பமைத்து… ‘அறிவு உணர்வு அனுபவம் அதிர்வு’ எனும் படி நிலைகளிற் பயிலல், கற்றல், கற்றுணர்தல் எனும் நிலைகளில் ஆசிரியன் ஆசான் ஆச்சாரியன் குரு எனும் கல்விக் கலைக்கான வழிகாட்டல்களை நிறுவிய ஒரு மேன்மையான மானிடத்தை நோக்கிய வாழ்வியலை முற்று முழுதாகப்புறக்கணித்து.. அணுயுகத்தை நோக்கி ஆன்றோரும் சான்றோரும் மௌனித்துவிடக்கூடிய அதர்மமும் அநீதியும் தலைவிரித்தாடுகின்ற ஓர் அழிவுப்பாதையிற் சுழன்று பயணிக்கும் ஒரு பூமிப் பந்தில் நாமும் நமது இளைய… சந்ததியினரும் வாழ்வதோடல்லாமல்… எமது நாளைய சந்ததியினரையும் இந்த வாழ்வியலுக்குள் வரவழைத்து நிற்கின்றோமென்பதனையும் நாம் உணரவேண்டிய தேவையொன்று நம்முன்னே விசுவரூபமெடுத் துள்ளது!
தமிழ் என்பது ஒரு மொழி என்பதைத் தாண்டி அது எமது இன, பண்பாட்டு, அரசியலின் அடையாளமாகவும் முகம்கொடுக்கும் இனவழிப்பிற்கு எதிரான ஆயுதமாகவும் இருக்கிறது.
எமது மொழியும் தேசியக் கருத்தியலும் எமது இனத்தின் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டத்திலிருக்கின்றன. தாய்மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை.
அவ்வாறான தமிழ் மொழியை வளர்க்கும் மிக முக்கியமான சேவையை ஆற்றிவரும்.
அம்மா, அம்மா சொன்ன மொழிஅப்பா, அன்பாய் அழைத்த மொழி அண்ணா அக்கா பேசும் மொழிபொதிகையிலே பிறந்த மொழி
சங்கத்திலே வளர்ந்த மொழிதென்பாண்டி வளர்ந்த மொழி
தேனினும் இனிய மொழிதெவிட்டாத செந்தமிழ் மொழி
தொன்று தொட்டு வாழ்ந்த மொழி
பாட்டன் பாட்டி தந்த மொழிபண்பாய்ப் பழக ஏற்ற மொழிமுன்னோர் போற்றி வளர்த்த மொழி
உலகம் எல்லாம் போற்றும் மொழி.
அதுவே எங்கள் தாய்மொழி.
தாலாட்டி மகிழ்வில் தினம்
சீராட்டி எம்மை வளர்த்த மொழி
எமதருமைத் தாய் மொழி
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி
கூன் விழாத மொழி, புலத்தில்
ஏன், வீணென்பாரும் உண்டு. – முதுகு
நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.
பறைகொண்டு இசைத்திடும் தாய்மொழியாம் தமிழ்மொழி அதுவே எங்கள் தாய்மொழி. தன்னடையாளத்தை தன்னொளியை இழக்காத அறிவியற் கொள்கையையே எமது தெய்வத்திருமொழியாம் தமிழ் மொழி நம்பி நிற்கிற தமிழை எமக்கு சிறப்புற கற்றுகொடுத்த ஆசான்களைப் போற்றுவோம் .
வளர்ச்சியடையச் செய்ய நாம் ஒன்று படுவோம். தமிழராய் பெருமை கொள்வோம்.சான்றோர் வளர்த்த தமிழை நாமும் வளர்த்துபெருமையடையச் செய்வோம். இனி ஒரு விதி செய்வோம். “திங்களும் கதிரும்… தென்றலும் தீயும்…பொங்குகடலும் ….பூமியும் உள் வரை…
எங்கள் தமிழ் இனமும் வாழும்”