ஈழ தேசத்தின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின், வலிகாமம் பகுதியில், யாழ்ப்பாண நகருக்கு வடக்கே சுமார் 8 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ஊர் தான் கலை, இலக்கியம் நிறை கிராமம் உடுவில் என்பதாகும் . நான்கு புறமும் நெல் வயல்களும், மரக்கறி விளை நிலங்களும் சூழ்ந்துள்ள ஊர். சுன்னாகம், கந்தரோடை, சங்குவேலி. மானிப்பாய், சுதுமலை, இணுவில் என்னும் ஊர்கள் உடுவிலின் எல்லைகளாக அமைந்துள்ளது . உடுவிலை வாழ்விடமாகக் கொண்ட சுவாமிநாதர் வேலுப் பிள்ளைக்கும் நல்லூரைச் சேர்ந்த கதிரேசு இராசம்மா தம்பதிகளுக்கு ஜந்தவது மகளாக 28-12-1948ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பேபியம்பாள் பிறந்தார் அவரது கலையுலக வரலாறு பற்றிக் கூறுகையில்…
நான் கூறுகையில்…. சிறு வயதில் இருந்தே பாடசாலையில் கற்கும் போதே கலை இலக்கிய ஈடுபாடு அதிகமாகவும், இருந்தது அவருக்கு. பாடசாலையில் படிக்கும் போதே பேச்சு, பாடல் இசை, நடனம், நாடக போட்டிகளில் பங்கு பற்றி பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளார். தரம் ஐந்து படிக்கும் போதே சைவ சமய நெறி சார்ந்துவிவேகானந்தகொழும்பு அமைப்பு நடத்திய பேச்சுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் தங்கம் பதக்கம் பெற்றார் . பாடசாலை ரீதியில் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக எல்லாத்திறனும் கடவுள் தந்த சொத்தாக நினைத்து அதைப் பய பக்தியுடன் கற்றுப் பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்ததை மறக்க முடியாது.
அவர் கலைமேல் ஈடுபாடு வருவதற்கு அவரது தாயார்தான் காரணம் என்று சொல்ல முடியும். அவரது மைத்துனி ஒரு கலைப்பட்டதாரி, அவரதுஅம்மாவிற்கு கலை என்றால் மிகப்பிரியம். பாடசாலை வாழ்க்கையில் பல போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி யீட்டுவதற்கு அம்மாதான் ஊக்குவித்தார்.. பல தத்துவப் படங்கள் நிறையப் பார்ப்பார் என்றும் நானும் கூடச் செல்வேன். சிறு வயதிலிருந்தே கலை என்றால் மிகப் பிரியம், ஆர்வத்துடன் செயல்படுவேன். நான் கல்வி கற்ற பாடசாலைக்கு நிறையப் போட்டி நிகழ்வுகளில் தேசிய மட்டத்தில் பரிசில்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆரம்பகால ஆர்வமே இன்றைய வளர்ச்சிக்கு அடிகோல் எனலாம் என்பதாக அவரது வார்த்தைகள் இருந்தன.
அவரது கலை உலக வரலாறு என்பது தான் கல்வி கற்ற பாடசாலையில் இருந்தே ஆரம்பமானது என்று சொன்னார். அவர் சிறுவயதிலிருந்தே மிகத் துடியாட்டமும் கலை இலக்கிய வரலாற்றுப் போட்டிகளில் பங்கு பற்றிவெற்றியீட்டுவதும்; விளையாட்டுக்களில் பங்கு பற்றி வெற்றி ஈட்டுவதும்; எப்போதும் அவரது குறிக்கோளாக இருந்தன. கல்வி கற்கும் போதே தான் கல்விகற்ற பாடசாலை இளவாலை மெய்கண்டான் பாடசாலைக்கு மிகப் பெருமை தேடி கொடுத்துள்ளார்.
அவர் கடந்த 35 வருட காலமாகக் களப் பணியில் ஈடுபட்டு வருவதாயும். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட பாத்திரங்களில் நடித்தும் நடனப் பணிகளில் ஈடுபட்டும் ஒரு நெறியாளராகப் பணியாற்றியும் வந்துள்ளார். தற்போது நடன, நாடகக் கலைப் படைப்புகளைப் பயிற்றுவிக்கும் பயிற்று விப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.. இதே வேளை ஒரு படைப் பாளியாகவும் இருக்கின்றேனெனவும் கூறுகின்றார்.
இந்த வகையில் நடனம் அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவும்; பாடசாலையில் நடக்கும் கலை போட்டிகளில் பங்கு பற்றி பரிசீல்களைப் பெற்றுள்ளதாகவும். 1976 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தான் உயர் கல்வியைகா கற்றுக் கொண்டிருந்த நேரம் ஊரில் அவரைப் போன்ற சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களை ஒன்று சேர்த்து உதயசூரியன் கலா மன்றம்… என்ற மன்றத்தை உருவாக்கி பல கலைப் படைப்புகளை அதன் மூலம் வெளியீடு செய்ததாகவும் நல்ல நிர்வாக கட்டமைப்பில் அந்த ஊதயசூரியன் கலைக்கழகம் அவரது ஊரில் இயங்கியது. அதில் செயலாளராக அவர் பங்கு ஆற்றியதாகவும், “என்னுள்ளே என் உயிரோடும் ரத்தத்தோடும் உணர்வோடும் ஊறி இருந்த கலை வடிவங்கள் வெளிவர தொடங்கின”. எனவும் கூறினார்.
வரலாற்று கலை படைப்புகள் காலத்தின் தேவை கருதிய கலைப் படைப்புகள், நாட்டிய நாடகங்கள், இப்படி எமது கலை படைப்புகள் பல இடங்களுக்கு அரங்க நிகழ்வாகப் போடப்பட்டு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. உதயசூரியன் கலைக்கழகம் எல்லோரின் மதிப்பை பெற்ற கழகமாக இயங்கிக் கொண்டிருந்தது. மக்களிடையே நல்ல விழிப்புணர்வுகளும் காலத்தின் தேவை கருதிய கலை வடிவங்களும் அங்கு அவர்களுக்கு போய் சேர்ந்தது. வரலாற்று இலக்கியக் காவியங்கள் இவைகளும் கலைப் படைப்புகளாக வெளிவந்தன நல்ல வரவேற்பைப் பெற்றன.
1978-ம் ஆண்டு காலப்பகுதியில் அவர் ஊரில் பாடசாலை வாழ்க்கையில் பல ன்கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிப் பரிசில்களைப் பெற்றுள்ளதாயும், அந்த நேரமே கலை நிகழ்வுகளைப் பழக்குவதில் ஓரளவு ஈடுபாடிருந்தது எனவும் பின் இந்தியாவில் நடன, நாடக, அறங்கியர் துறையில் பயிற்சி பெற்றுத் தமது ஊருக்கு வந்து உதயசூரியன் கலைக்கழகம் ஒன்று உருவாக்கம் பெறவைத்து அதன் மூலம் அவரது கலைப் படைப்புகள் மக்கள் விரும்பும் வகையில் புதிய நாடகங்கள் எனும் வடிவங்களில் பல வெளிவந்ததன. இவை பல போட்டி நிகழ்வுகளிலும் பங்குகொண்டு வெற்றி கண்டன. அந்த வகையில் ‘தெய்வத்தாய்’ என்னும் வரலாற்று நாடகம் அவரது ஆக்கத்தில் அவரே நெறியாழ்கை செய்த நாடகமாக இருந்தது. பல போட்டி நிகழ்வுகளில் பங்குகொண்டு 12 தங்கப் பதக்கங்களைத் தட்டிக் கொண்டமை சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதையும் அவரே பெற்றுக் கொண்டது சிறப்பு என நாம் கூறலாம்.
இப்படியே நடை பயின்று வந்த அவரது கலைப் பயணம்தெய்வத்தாய் என்ற நாடக வடிவில் அகில இலங்கை ரீதியில் போட்டிக்கு எடுபட்டு (. ஒளவையாரின் சரித்திரம் ) 12 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. இதில் தெய்வத்தாய் ஒளவையாராக அவரே நடித்தார். அவர்கள் ஊரில் பள்ளி மாணவர்களை கலை ஊடாகஊக்குவிப்பதற்காக மாணவர் மன்றம் உருவாக்கி அதன் மூலம் ஒரு நிர்வாகக் கட்டமைப்புக்குள் அவரைப் போன்ற பெண்கள் இணைந்து கலை வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தாங்களைச் செப்பனிட்டு மாணவர்களை உள்வாங்கி மாலை நேர கல்விக் கலை வகுப்புகள் மற்றும் போட்டி நிகழ்வுகள் நடாத்திப் பரிசல்கள் வழங்கி மாணவர்களை யும் ஊக்குவித்தார்கள்.
அந்தக் காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத் தில் கம்பராமாயணம் எனும் நாட்டிய நாடகம் அவருடைய துணை நடன ஆசிரியை திருமதி மங்கையர்க்கரசி மனோகரன் அவர்களுடன் இணைந்து அவர்களுடைய மாணவர்களையும் இணைத்து அந்த நாட்டிய நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்றினார்கள். அந்த நாட்டிய நாடகம் பிரதி ஆக்கம் பாடல் எல்லாம் என்னால் ஆக்கம் பெற்றது. நிறைந்த அறிவாளர்கள் பெற்றோர்கள் பெரியவர்கள் இந்த நாட்டிய நாடகத்தைப் பார்வையிட்டனர். அதைப் பார்வையிட விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த திரு புதுவைஇரத்தினதுரை திரு.சிட்டு ஆகியோர் வந்திருந்தனர் என்று கூறினார். அத்தோடு அவர்கள்அவ்வேளையில் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் களாக இருந்ததாயும் முதல் முதலாகத் தங்களுக்கும் அவர்களுக்கும் அறிமுகம் ஏற்பட்டது என்றும்கூறினார். அவர்கள் இந்த நாட்டிய நாடகத்தை பார்வையிட்ட பின்னர் தங்களுக்கும் கலைப் பங்களிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு இணங்கிப் பயணித்து அவர்களோடான பற்றாளர்களாக மாறினார்கள் என்றும் அறிய முடிந்தது.
1980ஆம் ஆண்டு இந்தக் காலப்பகுதியில் இந்தியா சென்று அவர் கலையை மெருகூட்டும் வகையில் நடன, நாடகம் அரங்கியல் பயிற்சி. பெற்று வந்ததாகவும். அப்பயிற்சிகள் அவரது கலை வடிவங்களை சிறப்புற நெறியாள்கை செய்வதற்கு வழி வகுத்துத் தந்தன எனவும்கூறினார். குறிப்பாகக் கதை, கவிதை, கட்டுரை போன்ற எழுத்தாற்றலும்அவருக்கு உண்டு என்றும் அவருடைய நிகழ்வுகளைத் அவரே எழுதித் தயாரிப்பதாகவும் கூறினார். இந்தக் கலைப்பயணம் ஊடாகத் திரு.சிட்டு, திரு புதுவை ரத்தினதுரை, கேணல். கிட்டு,தியாக தீபம் திலீபன், ஆகியோருடைய தொடர்பு அவருக்கு ஏற்பட்டதெனவும் அவர்களுடைய கலந்துரையாடல்களு அமைவாக அறிவுரைகளைக் கேட்டு கடைப்படைப்புக்கள் தயாரிக்கும் பணியை அவர்மேற்கொண்டிருந்த தாகவும் அறிய முடிகிறது.
1985 இனது இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கான கலைப் பணி ஆரம்பமாகியது. சிறிது சிறிதாகத் தொடங்கிய கலைப்பணி பிறகு முழு நேரப் பணியாகச் செய்யத் தொடங்கினாரெனவும் ,முதல் முதலில் அவர் ஆற்றிய கலைப்பணி “புறப்படுவீர் மண்ணுக்காக” இது நாட்டிய நாடகம் இதை அவரே எழுதித் தயாரித்து பொறுப்பாளர்களின் அனுசரணையுடன் பல மேடைகள் ஏற்றப்பட்டு பாராட்டு பெற்றது என்றும் கூறினார். இப்படியே நடை பயின்று வந்த அவரது விடுதலைக் கலைப்பயணம் மண்ணின் விடுதலை உணர்வாலும், அவரது விடுதலைக்கான கலைப்பணி 1985 ம் ஆண்டில் ஆரம்பமாகியது.
விடுதலைக்கான களப்பணியில் அவர் முதன் முதலாகத் தயாரித்த நாடகம் ‘புறப்படுவீர்!” மண்ணுக்காக’. இந்த நாடகம் 50 க்கும் மேற்பட்ட அரங்கம் கண்டது. அதன் பின் வீதியரங்க நிகழ்வுகள், வில்லுப்பாட்டு, தாளலயம் போன்ற விடுதலைக்கான கலைப்படைப்புகள் தமிழீழ நிலப்பரப்பில் அரங்கம் கண்டன. அது வளர்ச்சிபெற்று ‘சங்கநாதம்’ எனும் அரங்க நிகழ்வாக இரண்டாயிரம் (2000) மேடைகண்டு வெற்றிப்படைப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. சங்கநாதம் மகளிர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் அவரது நெறியாள்கையில் இன்றும் பல மேடைகளில் அரங்கம் கண்டு வருகின்றது.
காலத்தின் தேவை கருதி போராட்ட காலம் நிறைந்த கலைப் படைப்புகள், நாடகங்கள், வீதி நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், நிதர்சனம் மூலம் எழுச்சி பாடல்களுக்கான காட்சிப்படுத்தல் நடனங்கள், நாடக வடிவங்கள், கூத்து வடிவங்கள், ஆகியவை விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்திற்கும் “நிதர்சனம்” நிறுவனம் “புலிகளின் குரல்” வானொலிக்கான பாடல்கள், குறு நாடகங்கள். வில்லுப்பாட்டுகள் போன்றவை எனத் தயாரித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் திரு ஜான் ( தமிழன்பன்) அவருடைய அறிமுகமும் திரு சேரலாதன், ஆகியோரின் அறிமுகமும் கலை படைப்புகள் மூலம் உறவுகளாக அந்த கால கட்டத்தில் அவர்களுடன் வளர்ந்தன என்றும் சொன்னார். அத்தோடு “நான் கலைப்பண் பாட்டுக் கழக மகளிர் பிரவில் நடன, நாடக, அரங்கியல் நெறியாளராக பணியாற்றினேன் . எனது ‘சங்கநாதம்’ கலை நிகழ்வு தமிழீழ நிலப்பரப்பில் பல அரங்கம் கண்டதாகவும் பேபியம்மா பதிவு செய்ததை இங்குநான் பதிவு செய்கிறேன்.
மகளீர் கலை பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் மகேஸ் (அருண்நிலா) அவர்களின் ஆலோசனையில் பல நடன நாடகம் உட்பட வீதி நாடகங்களையும் நெறிப்படுத்தியிருந்தார். இவர் நெறிப்படுத்திய நாடகங்கள் மற்றும் நடனங்கள் பல நூறு மேடைகள் கண்டன சங்க நாதம் என்று ஒரு அரங்க நிகழ்வு போர்க்கால கட்டத்திற்காக ஆரம்பித்து அது ஒரு வித்தியாசமான நிகழ்வாகப் பத்துப் பாடல்கள் என ஒரு பாடலுக்கு ஒரு நடிகர் ஐந்து உடுப்புகள் மாற்றுவார் என்பதாக நிகழ்வு ஒரு திரைப்படம் பார்ப்பது போல் மனதைக் கொள்ளை கொண்டது. எழுச்சிப் பாடலுக்கான கருத்து உள்ளீடுகள் அதற்கான காட்சிப் பதிவுகள் தரம் வாய்ந்த தமிழ் ஈழத்தின் தலைசிறந்த கலைஞர்கள் என அவருடன் இணைந்து அந்தக் கலைப் படைப்பை மிக மிகச் சிறப்பாக 2000 மேடை ஏற்றினார்கள் என்பதையும் குறிப்பிட்டார். இது ஒரு வரலாற்றுக் காவியம். எந்த ஒரு நிகழ்வும் இப்படியான அதிக தொகையில் மேடை ஏற்றப்படவில்லை என்பதையும் குறிப்பிடுகின்றேன்.
தினமும் அந்த நிகழ்வு மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் என்பதோடு தேசியத்தின் தலைமையும் அந்த நிகழ்வை விரும்பிப் பார்த்தது. ஒரு பெரிய வரலாறு அவருக்கு உண்டு .சங்கநாதம் என்றால் மிகவும் பிடிக்கும்என்பதாக இருந்தது. அரங்க மக்களுடைய மனதைக் கவர்ந்த நிகழ்வுகள் போராளிகள் மத்தியில் அவர்களுக்கு தேவை கருதி அடிக்கடி இந்த நிகழ்வுகள் களங்களில் மேடை ஏற்றப்பட்டன. தமிழீழ எழுச்சிப் பாடலுக்கு உயிர்கொடுக்கும் வகையில் இந்த நிகழ்வு உருவாக்கம் பெற்றது. பாடலாசிரியர்கள் உயிரோட்டமாக எழுதும் பாடலுக்குச் சிறந்த இசை யமைப்பாளர் களால் பாடல்கள் உருவாக்கம் பெறுகின்றன. இந்தப் பாடல்கள் காதோரம் சென்று மக்கள் மனங்களில் இடம் பெறுவதைவிட காட்சிப் படுத்தப்பட்டு ஆடலுடன் சேர்ந்து அபிநயமாக வெளிப் படுவதால் கருத்துக்கள் மக்கள் மனங்களில் நிற்கின்றன என்பதாயும் அவர் தெரிவுசெய்யும் பாடல்களில் முதலில் ‘கரு’ அதாவது பாடலில் உள்வாங்கப்பட்டுள்ள கரு முக்கியத்துவம் பெறுகிறது. அதன்பின் இசை, இரண்டையும் உள்வாங்கப்பட்டு அரங்கமைப்பைச் சரியாக வடிவமைத்து அதற்கேற்றப் பாத்திரத் தெரிவுடன் சிறந்த கலைஞர்களை பங்குகொள்ள வியத்தகு சரியான, அழகான உடை ஒப்பனையுடன் களைப்படைப்பு அரங்கேறுகிறது.
சமகாலத்தின் சூழ்நிலைக்கேற்ப பாடல்களின் தெரிவும், அந்தப் பாடலின் கருத்தாழத்திற்கேற்ப நடன அமைப்பும், அத்தோடு உணரவூட்டும் காட்சிப்படுத்தலும் சேர்ந்து சிறந்த கலைஞர்களால் உயிர் கொடுக்கப்பட்டது. சரியான முறையில் ‘ஆரங்கியலும்’ சேர்ந்து நெறிப்படுத்தப்படுவதால் சிறந்ததொரு கலைப்படைப்பாக அனைவராலும் கவர்ந்து பேசப்படுகிறது. அதாவது நிறைவான ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வுடன் மக்கள் சென்றார்கள்.
பாடலாசிரியர்கள் ஒரு கற்பனையை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழீழ எழுச்சிப் பாடலை எழுதுகிறார்கள். அவரோ சங்கநாதக் கலைநிகழ்வு மூலம் அதற்கு உயிர்கொடுக்கின்றார். தாங்கள் கற்பனை வடிவத்திற்கு மேலாக நிகழ்வில் உயிரோட்டம் காணப்படுவதால் பல பாடலாசிரியர்கள் நிகழ்வு பார்த்தபின் பாராட்டுக்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். சங்கநாதம் ஒரு முக்கிய இடத்தில் அரங்கேறுகையில் பிரபல பாடகர்கள் எஸ். ஜி. சாந்தன், ஜெ. ஆர். சுகுமார், சந்திரமோகன் ஆகியோர் கண்ணீர் மல்க அவரிடம் வந்து உண்மையில் எங்களது உள்ளத்தை உருக்கி விட்டீர்கள். நாங்கள் பாடலைப் பாடியபோது இப்படியொரு உணர்வைப் பெறவில்லை. தரம்வாய்ந்த கலைஞர்களின் நடிப்பால், நடன நெறியாள்கை மூலம் எங்கள் மானங்களைக் கசிய வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்! என்று பாராட்டினார்கள் என்று குறிப்பிட்டார். அந்தப் பாடல்களில் மாவீரர் பாடலாக ‘கல்லறை மேனியர் கண்’ மற்றது ‘காலம் உன்னைக் களம் நோக்கி அழைக்குது மகனே’ ஆகிய இருபாடல்களும் ஆகும் என்றும் குறிப்பிடுகின்றார்.
இப்படியான கலைப் படைப்புகள் போராட்ட காலத்திலும், போர் இறுதிக் கால கட்டத்திலும் அசையாத நம்பிக்கையுடன் அவரது கலை பயணம் தொடர்ந்து கொண்டே வந்துள்ளது. தேசத்தின் விடியலுக்காக உடலால் உள்ளத்தால்,உணர்வால் உழைத்த அவரும் அவரது கலைஞர்களும் எல்லோராலும் மதிக்கப்பட்டனர். தேசியத்தின் தலைமை யின் அழைப்பின் பேரில் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் திரு தமிழ்செல்வன் அவர்களையும், பல தடவை சந்தித்து இருந்துள்ளார். காலத்தின் தேவைக் கேற்ற கலை படைப்புக்கள் உருவாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் 10..01..2004. இல் நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கலையரசி என்ற பட்டமும் அவருடைய கையால் ஐந்து பவுண் தேசிய விருதும் அவருக்குக் கிடைக்கப்பெற்றது. அது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் எனக் குறிப்பிடுகின்றார். இது போன்று தமிழ் ஈழ மகளிர் தினத்தில் மகளிர்ப் பகுதிப் பொறுப்பாளர் சாம்பவி அவர்களால் அவருக்கு தங்க விருது வழங்கப் பட்டது. பல கௌரவங்களும் சான்றிதழ்களும் விருதுகளும் தமிழ் ஈழத்தின் கலைப்பணிக்குத் தான் ஆற்றியதற்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஆகும்.
தமிழீழ வீடுதலைக்காக குப்பி தகடு அணியாத ஒரு போராளியாக 2009 மாசி மாத இறுதி வாரத்தில் செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலை பிள்ளைகளை வைத்து வான்கரும்புலிகள் பாடல் ஒன்றிற்கு நடனம் அமைத்து கேப்பா புலவில் காட்டில் தேசியத்தலைவர் பார்வை இட்டதையும் என்னால் மறக்கவும் முடியாது. தொடர்ந்து கலைப் பணியை ஆற்றாமல் இருக்கவும் முடியாது எனவும் கூறினார்.
2023 ஆம் ஆண்டு மண்ணுக்கு ஆற்றிய தமிழ் தேசிய கலைப் பணிகளை மனதில் நிறுத்தி “மண்ணின் மாதவம்” என்னும் விருதினை மாதர் முன்னணித் தமிழ் அரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்டம் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் பெண்கள் ஆண்கள் உட்பட வழங்கிக் கௌரவித்தனர்.
என் உடலில் உயிர் இருக்கும் வரை இந்த மண்ணையும் மக்களையும் மாவீரர்களையும் எங்கள் தலைமையையும் நேசித்து மண்ணுக்காகப் போராடிப் பல சாதனைகளைப் புரிந்த போராளிகளை மதித்து என் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் என்னால் முடிந்தவரை இளம் சந்ததியினர் கடந்த கால வரலாற்றை மறக்காது நல்லவர்களாக வல்லவர்களாக அறிவில் சிறந்தவர்களாக ஆற்றலை வளர்க்கும் உத்தமர்களாகத் தமிழன் என்ற சொல்லுக்கு ஒரு பெருமை தேடி மிக மிகச் சிறப்பாக வாழ வேண்டும் என்பதாகவும் நற் சந்ததிகளாக நாங்கள் சக்தி பெற்று எங்கள் பரம்பரையைக் கட்டி காக்க வேண்டும். என்ற கொள்கையுடன் என்னால் முடிந்த கலைப் பணிகளை இப்போது மண்ணுக்கு என்ன தேவையோ நம் இளம் சந்ததியை காப்பதற்கு தேவையான விடயங்களை என்னால் முடிந்தவரை அதற்காக எனது கலைப் பயணம் தொடர்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
தமிழே எங்கள் உயிர் என்ற மூச்சு தமிழீழமே எங்கள் தாய் நாடு என்ற கொள்கையுடன் என்னால் முடிந்த கலைப் பணிகளைச் செய்வதாகக் கூறுகின்றார். இப்போது மண்ணுக்கு என்ன தேவையோ? நம் இளம் சந்ததியை காப்பதற்கு என்ன தேவையோ? முடிந்தவரை அதற்காக தனது கலைப் பயணம் தொடர்கிறது எனவும் “நல்லதொரு சிறப்பு தமிழனுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை நமது மனதில் பதிந்து உள்ளது. அது நிச்சயம் நடக்கும் என்பதாய் அவர் கருத்து அமைகின்றது.
கலை தெய்வீகமானது, அதைப் புனிதமாகப் பேணி வளர்க்க வேண்டும் என்றும் ஏனெனில் எமது உடலால், உள்ளத்தால், முகபாவனைகளால் மக்களை ஈர்க்கச் செய்கிறோம். நாம் அதைப் புனிதர்களாக நின்று கலைஞர்களையும் புனிதப்படுத்தி வளர்க்கவேண்டும். அப்போது தான் அது வளரும். ஒழுக்கம் மிகவும் பேணப்பட வேண்டும். ஏனெனில் அது தவறின் எம்மையே இழக்கவைத்துவிடும். கலைஞர்கள் உள்ளத்தில் தீய சிந்தனைகளைத் தவித்து நல்லதுகளை நிறைத்து சந்தோச முகங்களாக காணப்படவேண்டும் என்று திடமாகக் கூறுகின்றார். காலத்திற்கேற்ற கலைப்படைப்புகளை படைக்கவேண்டும். ‘கலைப்பணி’ மூலம் தேசவிடுதலைக்காக நிறைய உழைக்க வேண்டும். ‘கலை’ என்பது எல்லோருக்கும் கிடைத்த ஒரு வரபிரசாதம் என்றே கூறுவேன் என்பது அவரது ஆணித்தரமாக கருத்தாக இருக்கிறது.
எங்கள் மக்கள் மானநிறைவுடன், முகமலர்வுடன் வாழவும் ‘சுதந்திரமாகவும் வாழ வேண்டியது அவசியம். அவரது கலைப்பயணம் தனது உடலில் உயிர் உள்ளவரை தொடரும் என்றும் எனது கலைஞர்களுடைய பணியும் தொடரும் என்றும் பதிவு செய்கிறார். தமிழினம் சுதந்திர ஈழம் நிறைவு கண்டு வாழவேண்டும் என்பதே அவரது பிரார்த்தனையும் நிம்மதிக்கான வேண்டுதலும் என்று அவர் தனது உள்ளத்தின் வேட்கைகளைப் பகிர்ந்து கொண்டார்.
- நிலவன்