அமுதன் :- அன்றைய தமிழர்களின் விகிதாசாரம் இன்றைய நிலையில் வீழ்ச்சியுற்றமைக்கான காரணத்தை சான்றோடு பகிர முடியுமா?
நிலவன் :- ஈழ தேசத்தில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள், இந்த நாட்டின் சுதேச (முதலாவது) குடிமக்கள். 3,000 தொடக்கம் 3500 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அந்நியர்களின் காலணியாதிக்கம் 1505ஆம் ஆண்டு ஏற்படும் வரை ஈழம் முழுவதும் மூத்த குடியாக தமிழர் நாம் வாழ்ந்திருக்கின்றோம் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
வடக்கு, கிழக்கு பகுதிகளின் நிலப்பரப்பு தமிழ் மன்னர்களின் முழுமையான ஆளுகையின் கீழ் செழிப்பாக இருந்தது. பிரித்தானியர்களின் ஆட்சியின்போது 1833ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாகம் ஒன்றாக்கப்பட்டு பின்னர் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர், அதிகாரம் சிங்கள மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நாள் முதல் எமது நிலங்கள் அதிகார பலத்தின் மூலம் சிங்கள அரசாங்கங்களால் அபகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.
1970களில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம், எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு என்பது சத்தமின்றி, எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பெரும் யுத்தமாக இன்று மாறியிருக்கிறது. நிலம் மட்டுமன்றி, நிலத்துடன் சேர்த்து, எமது வாழ்வும் அடையாளமும் வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது.
தமிழர்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர், மலையகத்தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என குறிப்பிடப்படும் வகையில் 1881ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. திரிகோணமலையில் 1881-ல் 64.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 32.3 எனப் பாதியாகக் குறைந்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் 1963-ல் 28.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012-ல் 17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 2 கோடியே 40 இலட்சம் இலங்கையின் பிரதான மூலவளமாக சனத்தொகை காணப்படுகின்றது. இச்சனத்தொகை பற்றி அவதானிக்குமிடத்து ஆரம்பகாலங்களில் இருந்து இன்றுவரை அதன் நிலையில் மாறுபட்ட போக்கினையே காட்டி நிற்கின்றது.
தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே செல்கிறது. யுத்தம், நலிவுற்ற பொருளாதாரம், புலம் பெயர்வு, காலம் பிந்திய திருமணம், குடும்ப கட்டமைப்பு சிதைவுகள், நாகரீகம், கருத்தடைகள், குடும்ப கட்டுப்பாடுகள், என பல்வேறு காரணிகளைக் கூறிக்கொண்டே போகலாம். இந்தக் காரணிகளால் தமிழர்களின் சனத் தொகை குறைவடைந்து செல்கின்றமையை நாம் கண்முன்னே காண்கின்றோம்.
தமிழினத்தின் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளத் தவறின் 2028 இல் ஒரு தேசிய இனமாக இருக்கும் தமிழ்கள் எண்ணிக்கையில் இப்போது முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள். இது 2031 ஆம் ஆண்டின் சனத் தொகை மதிப்பீட்டில் புலப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப் படாவிட்டால், இன்னும் குறைந்தது 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
அதிகரிக்கும் சிங்களர் – குறையும் தமிழர்கள்
1981 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 74 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 12.6 சதவீதமாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 74.9 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 24.9 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 42.1 சதவீதமாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 23.1 சதவீதமாக இருக்கும் நிலையில், இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 39.8 சதவீதமாக குறைந்துள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் சிங்களர் எண்ணிக்கை 1981 ஆம் ஆண்டு 33.6 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழிர்களின் எண்ணிக்கை 36.4 சதவீதமாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 27 சதவீதமாக இருந்த நிலையில், இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 32.3 சதவீதமாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 37.8 சதவீதமாக இருந்த நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதமாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு சிங்களர் எண்ணிக்கை 38.7 சதவீதமாக இருந்த நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை 17.4 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ் மக்களின் இருப்பு என்பது, இன்று, இலங்கை தேசத்துக்குள் கேள்விக்குள்ளாகும் நிலையை அடைந்துள்ளது. தமிழருக்கான அரசியல் என்பது, வெறுமனே வடக்கு, கிழக்கு என்ற எல்லைகளுடன் குறுகியதாக இருக்குமேயானால், நீண்டகால நோக்கில், ஈழத் தமிழரின் அரசியல், பலமிழந்து போகும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அமுதன் :- தமிழ் ஈழவிடுதலை அரசியல் கொள்கை எவ்வாறு இருந்தது? தற்போது அதன் நகர்வை எவ்வாறு நாம் நிலை நிறுத்த வேண்டும்? உலக அரங்கில் அதற்கான பங்காற்றல் எவ்வாறு இருந்தது?
நிலவன் :-ஈழத்தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தேசத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடன் இணைந்து நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழீழ மக்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது . அப்படிப் பார்க்கும் அரசியலை வேண்டி நிற்போர், தமிழீழ மக்களிடத்தில் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்பணி என்பது தமிழீழ விடுதலைப் போரிற்குத் தலைமைதாங்கித் தமிழீழத் தனியரசை நடைமுறையில் நிறுவியமை என்றே சொல்ல வேண்டும். எமது மொழியையும், பண்பாட்டையும், வரலாற்றையும், தொல்லியலையும், அறிவார்ந்து வளர்த்துக்காக்கும் ஆற்றல்வளம் உட்பட எமது இனத்தின் பண்பாட்டையும் அடையாளங்களையும் பாதுகாத்து நின்றார்கள். தமிழீழ விடுதலைப் பயணத்தில் தமிழீழத் தனியரசு அமைக்கும் இலக்கு நோக்கி எமது விடுதலைப்போராட்ட நியாயத்தையும், தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற விடுதலை உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள்நிலை நிறுத்திய ஒவ்வொரு வெற்றியும் தமிழீழ மக்களுடையதே.
இனவிடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழர்களையும் தமிழர் நிலத்தையும் , வளத்தையும், இன அழிப்பு செய்து ஆக்கிரமித்திட பௌத்த சிங்க தேசம் தமிழ் மக்களையும் தமிழர் இராணுவமாகக் காப்பரண்களாக காத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பினர் என முத்திரைக்குத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் பெயரில் அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தைத் தீட்டி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற ஏராளமான நாடுகளின் உதவியோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றினர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இன விடுதலை இயக்கம் என அங்கீகரிக்கப் படுவதற்குப் பதிலாக பயங்கரவாத இயக்க மென்று உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன. ஈழத்தமிழர் சிக்கலானது சர்வதேச சமூகத்தின் பிடிக்குள் நசுக்கப்படும் போது , ஐக்கியநாடுகள் சபையின் பேரவையும் அந்தப் பேரவலத்தைக் கடைசி வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு தமிழ் இன அழிப்பின் பேரவலத்தைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டது.
விடுதலைக்கான வேள்வியோடு இருக்கும் நாம் எப்போதும் ஓயாது,எமது இலக்கு நோக்கிய பயணத்தை, முன்னகர்த்திக் கொண்டே இருத்தல் வேண்டும். இன அழிப்பு யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீள வேண்டிய தமிழ் மக்களுக்கு, அபிவிருத்தி என்ற தளம் தேவையாக இருந்த போதிலும் உரிமை, அபிலாசை, தேசியம் என்ற எண்ணக் கருக்களைக் கைவிட்டு, சரணாகதி அரசியல் தளத்தில் ஈடுபட்டு, அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளதா? என்பதையும் சிந்திக்க வேண்டும் .
சிங்கள அரசின் கொடுமைகளுக்கும் கொலை வெறிக்கும் இன அழிப்புக்கும் ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தங்களுக்கென்று இறைமையுள்ள ஒரு தேசிய இன தமிழர்கள் ஒன்றினைந்து எழுச்சி கொள்ள வேண்டும் . தமிழ் மக்கள் ஓர் தேசமக்களாக ஒன்றுபட்டு நின்று, தெளிவான அரசியல் நலன்கள் சார்ந்த நிலைப்பாடுகளுடனும் மூலோபாயச் சிந்தனைகளுடனும் செயற்படுவதானது மிகவும் அவசியமானது.
உலக ஓட்டங்களைப் புரிந்து, சற்றேனும் துணிவு பெற்று, செயற்பாட்டாளர்கள் தம்மை முன்னேற்றிக் கொள்ளவேண்டும். ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறி மாறிக் காவடி எடுக்கவேண்டியிருந்த ஒரு துருவ உலக ஒழுங்கின் அழிவில் இருந்து ஈழத்தமிழர் விடுதலை அரசியல் புதிய படிமைக்குள் புத்தாக்கத்தோடு அடுத்த நகர்வுகளை விரிக்கவேண்டும்.
அமுதன் :- பயங்கரவாதம் என்ற சொற்பதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான கருத்தியலா? போராளிகள் என்ற சொல் தாங்கி நிற்கும் பேருண்மையான நிலைப் பாடு யாதென விளக்க முடியுமா?
நிலவன் :- பயங்கரவாதம் என்ற சொல் இன்று உலகத்தைப் பிடித்து பேயாக ஆட்டிக் கொண்டு இருக்கின்றது. மாவீரர் நாளில் தலைவர் அவர்கள் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்து இருந்தார். “பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழியில் நடத்தப்படுகிற நியாயமான அரசியல் போராட்டங்களும் பயங்கரவாதமாக திரிபுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கவராதச் சேறு பூசப்படுகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறைக்கு அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று தலைவர் அவர்கள் கூறியிருந்த கருத்தின் நிதர்சனத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
பௌத்த சிங்கள பேரினவாதம் தொடுத்த தமிழ் இன அழிப்பு யுத்தத்தால் இழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பதும், தமது நிலங்கள் அபகரிக்கப் படுவது தொடர்பில் சுட்டிக்காட்டி உரிமையைக் கேட்பதும் இனவாதமா? தேசியத் தலைவர் தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரனாலோ அல்லது விடுதலைப் புலிகளாலோ எந்த ஒரு தனிப்பட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப் பட்டிருக்க வில்லை என்பதை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
நாம் சிங்கள தேசிய மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற இலட்சிய வேட்கையே இன்று மக்களிடம் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர வரலாற்றுக் காலகட்டத்தை உருவாக்கி உள்ளது. போர் வெறிகொண்டு ஆயுத மோகத்தின் வன்முறையாளர்களும் இல்லை. நாங்கள் விரும்பி ஆயுதங்கள் எடுக்கவில்லை ஆயுதங்கள் எங்கள் மீது சிங்கள அரச அடக்குமுறைகளினால் திணிக்கப்பட்டது. நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் பௌத்த சிங்கள அரசு புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம்.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலைப் புலிகள் இன விடுதலைப் போர் வீரர்கள். ஈழத் தமிழரின் விடுதலைக்காகத் துப்பாக்கி தூக்கிப் போராடிவர்கள் . இன விடுதலைப் போராளிகள் எப்படிப் பயங்கரவாதி ஆவார்கள்? ஈழத் தமிழர் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாகவும் ,கருத்துக் கூறுவதாகவும் தமிழர் மேல்அக்கறைகொண்டவர்கள் போல் தம்மைக் காட்டிக்கொள்ளும் வல்லாதிக்க நாடுகளும் அவர்களின் கைகூலி நாடுகள் பல அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தின் இன விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ மக்கள் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும் – தேசியத் தலைவனின் வழிகாட்டலில் போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் சர்வதேச நாடுகள் புரிந்துகொண்டு விடுதலைப்புலிகள்மீது பழி சுமத்துவது அபாண்டமே! என்பதைப் புரிந்துகொள்வர்.
தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள்மானம், மரியாதையோடு வாழ முடியாது – சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டு, நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும்.
அமுதன் :-இனவாதக் கொள்கையில் தமிழர் இருப்பதான தோற்றப்பாட்டை எவ்வாறு எடுத்துக் கொள்வது? அதற்கான விளக்கத்தைத் தருக?
நிலவன் :- தமிழர்களை இனவாதிகளாக ஒருபோதும் பார்க்க வேண்டாம். தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல. அவர்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக வாக்களித்திருக்க மாட்டார்கள். அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் இனவாதச் சிங்கள அரசு புரிந்து கொள்ளவில்லை. சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை.
தமிழ் எங்கள் இனத்தின் உயிர்மூச்சு இனம் மற்றும் மொழி காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். இன விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் ஈழமண் இது. இலங்கைத் தீவில் “தமிழீழம் என் தாய் நாடு தமிழ் எங்கள் இனம் எனக் கூனினால் இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்” ஆனால் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது…
எமது உரிமைகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அதனைப் பெறுவதற்கு நாம் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது. எமக்கே உரிய கலை, கலாசாரத்துடன் ஏனைய சமூகத்தினரைப் போல் எமது நிலங்களில் வாழ விரும்புகிறோம். இது மறுக்கப்படுவதால்தான் வாய் விட்டுக் கேட்க வேண்டியுள்ளது. தமக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று வாதிடுவது இன வாதமாகிவிடுமா?
யுத்தத்தில் தாய் – தந்தையரை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், பிள்ளைகளை இழந்த பெற்றோர் மற்றும் சகோதரர்களை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி நிற்பதுதான் இனவாதமா?
வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இராணுவப் பிரசன்னங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. பௌத்த பிக்குகளாலும், அமைச்சர்களாலும் இன்னும் இராணுவத்தினராலுமே இந்த நிலஅபகரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையான நில அபகரிப்பினை நிறுத்திக்கொள்ளுமாறும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுமாறும் கோருவதனைத்தான் இந்த அரசு இனவாதம் என்கின்றதா?
உண்மையினை எடுத்துக்கூறுவோமானால் தமிழ் மக்கள் இனவாதம் பேசவில்லை. அவர்கள் இனவாதிகளும் இல்லை. மாறாக பௌத்த பேரினவாத சிங்கள அரசுகளே இனவாத சிந்தனையைப் பரப்பி வருகின்றன. இனவாத செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கின்றன.
அமுதன் :- தமிழர் பகுதிகளில் இன்றைய காலகட்டத்தில் நடந்தேறும் இனவாதச் செயலாக எதைச் சொல்லலாம்?
நிலவன் :- தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல். வடக்கு, கிழக்குப் தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான இன்றைய காலகட்டத்தில் பௌத்த அடிப்படை வாதிகள் விகாரைகளை அமைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பௌத்த துறவிகளுக்கு ஒத்தாசையாக இராணுவமும், பாதுகாப்புத் தரப்பினரும் செயற்பட்டு வருகின்றார்கள். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மானிப்பதானது நாட்டில்இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும்செயலாகும்.தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப் படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போர் முடிவடைந்த கையோடு அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதுடன், புதிதாக விகாரைகளையும் அமைத்து வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பிரதேசங்களிலும் விகாரைகள் அமைக்கப் படுகின்றன. இந்நிலையில், வடக்கு,கிழக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வரும் விவகாரம் தொடர்பில் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தேரரிடம் “சுடர் ஒளி’ வினவியது.
யுத்தம் முடிவடைந்ததை அடுத்துத் தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்களை அரசு மீளப் பெற்றுக்கொடுத்திருக்கவேண்டும்; வயல் நிலங்களை கையளித்திருக்கவேண்டும்; மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழ்மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கியிருக்கின்றனர். அவர்கள் இருண்ட யுகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசு நாட்டில் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. நீங்கள் சொன்னதுபோல பௌத்தர்கள் இல்லாத, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குப் பிரதேசத்தில் விகாரைகளை அமைப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும்.
தெற்கில் நிறையவே விகாரைகள் உள்ளன. பிக்குகள் இன்மையால் அவை பராமரிக்கப் படாமல் உள்ளன. எனவே, உள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்ததாக எமக்குத்தெரியவில்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைப்பதோ? அல்லது புத்தர் சிலைகளை நிர்மானிப்பதோ? மதப்பற்று அல்ல. முதலில் இருப்பவற்றைப் பாதுகாக்க பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். இதில் இருந்து நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
அமுதன் :- எமக்கான இனவழிப்பு என்பதை அரசு எவ்வாறு நாசுக்காக கையாளுகின்றது?
நிலவன்:- தாய் நிலம் அழிக்கப்பட நிலம்,புலம் எனத் தமிழர்கள் போராடிய போதும் கூடதடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள அரசின் இன அழிப்புக்கு கெதிராக உலக நாடுகள் எதுவும் இதுவரை எந்த ஒற்றைச்சொல்லும் உதிர்க்கவில்லை என்பது தான் தமிழினத்தின் மீது உலகமே ஒன்று சேர்ந்து இழைத்த அநீதி. சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள் இகாணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்குறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு தீவிரமாக உள்ளது – வடக்கு மாகாணத்தில் ஆறு குடிமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் விகிதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குடிமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் விகிதமும் இருக்கிறது. இவ்வாறான சூழலில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதானது, எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது. ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு சிங்கள அரசினால் ஒரு பெரும் இன அழிப்புடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், எமக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை. மாறாக, மேலும் தீவிரம் அடைந்துள்ளது. எமது மக்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம் வடக்கு கிழக்கில் தற்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. அபிவிருத்தி, தொல்பொருள் ஆய்வு, காடுகள் ஒதுக்கீடு, வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் என்ற போர்வைகளில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, காட்டிலாக்கா, வீடமைப்பு அதிகாரசபை ஆகிய திணைக்களங்கள் உட்பட பல்வேறு அரச திணைக்களங்கள் எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.
வடக்கையும்கிழக்கையும் புவியியல் ரீதியாகப் பிரிக்கும்அரசாங்கத்தின் முக்கிய நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றம்¸ பௌத்த விகாரைகள்¸ யுத்த வெற்றி நினைவுச் சின்னங்கள்¸ தொல் பொருள் நில ஒதுக்கீடுகள்¸ வனவிலங்குகள் சரணாலயங்கள்¸ வனப்பகுதி ஒதுக்கங்கள் மற்றும் விசேடப் பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ்க் கலாச்சாரத்தையும், வரலாற்றையும், திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன. வடக்கும் கிழக்கும் எமது பாரம்பரியபிரதேசங்கள். வடக்கும் கிழக்கும் எமது தாயகம். எமது இந்தத் தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கப் படுவது என்பது எமது இனம் அழிக்கப் படுவதற்குச் சமனானது.
அமுதன் :- திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் வவுனியா மாவட்டம் எவ்வாறான நிலையை எதிர்கொண்டு இருக்கின்றது?
நிலவன் :- திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் தமிழ்மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறுகிய காலத்தில் சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டு விட்டனர். இப்போது வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. மகாவலி திட்டத்தின் ஊடாகவும் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. வவுனியா மாவட்டத்தில் தமிழர்கள் 83 வீதமும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஏழு வீதமும், சிங்களவர்கள் பத்து வீதமும் ஆகும் . 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வவுனியா மாவட்டத்தை இலக்கு வைத்து சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் வவுனியாவில் குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்குச் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமும் சிங்களக் குடியேற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் வவுனியா வடக்கு பிரதேசச் செயலகமும் ஒன்று. அதன் மையப்பிரதேசமாக நெடுங்கேணி நகர்பகுதி அமைந்துள்ளது.
நெடுங்கேணியை அண்டிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிங்களக் கிராமங்களான நிகவெவ, சபுமல்தன்ன, போகஸ்வெவ உட்பட முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட வெலிஓயா, சம்பத்நுவர போன்றபகுதிகளிற்கான வாக்காளர் பட்டியல்கள் வவுனியா மாவட்டத்துடன், இணைக்கப் பட்டுள்ளது.2009 இற்கு முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னரான சூழலில் பல பௌதிக, சமூகரீதியான, மாற்றங்களை வுவனியா மாவட்டம் சந்தித்து வருகின்றது.
தமிழர்களின் பூர்விக நிலமான வவுனியா இன்று அதன் தனித்துவத் தன்மையை இழந்து நிற்கிறது. காரணம் சிங்களக் குடியேற்றங்கள். முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், போன்ற மாவட்டங்களோடு வவுனியா வடக்கின் கிழக்குப் பகுதி சங்கமிக்கும் அடர்ந்த பெருங்காடுகளைக் கொண்டமைந்துள்ளது. அதனால் அங்கு குடியேற்றங்களும் மிக இலகுவாக நடைபெறு வருகின்றது. தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் தமக்குள் இருந்த வேற்றுமைகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழர்களது மண்ணைப் பறிப்பது அபாயநிலை ஏற்பட்டுள்ளதுடன், சிங்கள பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமுதன்:-அரசின் சிங்களக் குடியேற்றத்தோடான முறையற்ற நிர்வாகச் செயலாகக் கருதும் விடையத்தைச் சான்று பகிர முடியுமா?
நிலவன் :- நெடுங்கேணி நகரிலிருந்து கிழக்கு புறமாக 15 மைல் தொலைதூரத்தில் காணப்படுகின்ற அடர்ந்த வனாந்தரப் பகுதியில் பரவலாகக் குடியேற்றங்கள் செய்யப்பட்டும், இனிமேல் செய்யப் படுவதற்கும் தயாராகி இருக்கும் நிலைமையை பார்க்க கூடியதாக உள்ளது.மருதோடைகிராமத்திலிருந்து நீண்டு செல்கின்ற வீதி இரு பக்கமும் வானளவு உயர்ந்த மரங்களை நிரப்பியபெருங்காடுகளாக உள்ளதுடன் மனிதர்கள் வசிப்பதற்குரிய நிலை அங்கு இரண்டாம் பட்சமாகவே காணப்படுகிறது.
அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அளிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியமர்த்த பட்டிருக்கிறார்கள். குறித்த பகுதியிலிருந்து வெலி ஓயாப்பிரதேசம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.அங்கு குடியேற்றப்பட்ட மக்களில் அனேகமானோர் அனுராதபுரத்தை சொந்த இடமாகக் கொண்டுள்ளதுடன் குடியேற்றப்பட்ட பின்னர் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டு, வீதிகள் அமைக்கப்பட்டு, யானை வேலி அமைக்கப்பட்டு சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு பிரச்னை என்னவென்றால் நெடுங்கேணியை அண்டிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிங்களக் கிராமங்களான நிகவெவ, சபுமல்தன்ன, போகஸ்வெவ உட்பட முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட வெலிஓயா, சம்பத்நுவர போன்ற பகுதிகளிற்கான வாக்காளர் பட்டியல்கள் வவுனியா மாவட்டத்துடன், இணைக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலிலும் அந்தமக்கள் வவுனியாவடக்கு பிரதேச சபைக்கே தமது வாக்கைஅளித்துள்ளனர்.ஆனால் அவர்களுடைய பிரதேசசெயலகப் பிரிவாக வெலிஓயா காணப்படுகின்றது. அது முல்லைதீவு மாவட்டத்தின் நிர்வாகத்திற்குட்பட்டது. இதேவேளை மின்சாரத் தேவைகளுக்காகவும், தொலைதொடர்பு சேவைகளைப் பெறுவதற்காகவும் அம்மக்கள் அனுராதபுரம் நோக்கியும் செல்கின்றனர். இது நிர்வாக ரீதியாகப் பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றது.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைதேர்தலில் சிங்களமக்கள் குடியேற்றபட்ட 17 கிராமங்கள்இணைக்கப்பட்டு 4 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த 17 கிராமங்களில் அதிகமாக வாக்குகளைக் கொண்ட சிங்களக் கிராமமான போகஸ்வெவ (தமிழ்கிராமமான கொக்கச்சான்குளமே சிங்களமக்கள் குடியேற்றபட்டு போகஸ்வெவ என்று பெயர் மாற்றப் பட்டுள்ளது)
தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களான வெடிவைத்தகல், கோவில்புளியங்குளம், ஊஞ்சல்கட்டிபோன்றவை இணைந்து ஒரு வட்டாரமாக உருவாக்கப்பட்டது. போகஸ்வெவகிராமத்தில் 350 வாக்குகள் இருப்பதுடன் குறித்த மூன்று தமிழ் கிராமங்களிலும் 175 வாக்குகளே இருக்கின்றன. இதனால் நடைபெற்றதேர்தலில் இந்த வட்டாரத்தில் சிங்களப் பிரதிநிதி ஒருவரே வெற்றி பெற்றுள்ளார்,அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தாவின் கட்சியை சார்ந்தவராகவும் இருக்கிறார்.அத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சிங்களக் கிராமத்திற்கும்,தமிழ் கிராமத்திற்கும் இடைபட்ட பகுதி 10 கிலோமீட்டருக்கும் அதிகமான பெரும் காடுகளைக்கொண்டமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தஇணைப்பு எவ்வாறு சாத்தியம் என்று எண்ணத் தோன்றுகிறது.
அமுதன்:- மீள்குடியேற்ற நடவடிக்கை இன்றி வடக்கு வலைய எல்லைக் கிராமங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
நிலவன் :- போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுடைய எல்லைக் கிராமங்கள் அபிவிருத்தியைஎதிர்பார்த்து நிற்கையில் அது தொடர்பில் கரிசனையின்றியே குறித்த எல்லை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.Nபோர்சூழல் காரணமாக ஏற்பட்ட அழிவுகள்,இடப்பெயர்வு,போரிற்கு பின்னர் முறையாக மேற் கொள்ளப்படாத, மீள்குடியேற்ற செயற்பாடுகள்காரணமாக வவுனியா வடக்கில் உள்ளஎல்லையோரக் கிராமங்கள் மக்கள் இல்லாமல் அழிந்து வரும்நிலையை சந்திக்கின்றன.
குறிப்பாக வெடி வைத்தகல் ,கோவில்புளியங்குளம்,ஊஞ்சல்கட்டிபோன்றவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்ணின் மைந்தர்களின் வரவுக்காக ஏங்கி நிற்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 40 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த வெடிவைத்தகல் கிராமத்தில் தற்போது ஒரேயொரு முதியவர் மட்டும்வாழ்ந்து வருகிறார்,அதுபோல கோவில் புளியங்குளம் பகுதியில் 6 குடும்பங்கள் வாழ்கின்றன.
இப்பகுதியில்உள்ள இரு பாடசாலைகள் புதர் வளர்ந்துமாணவர்களின் வருகைக்காக ஏங்கி நிற்கிறது.குளங்களும், வயல் ,நிலங்களும் அதிகம்காணப்பட்டாலும் அவற்றைப் பயன்படுத்த மக்கள்இல்லை என்பதும்,பெரும் குறையாக உள்ளது.
உலகமயமாதல் சூழலில் நகரத்தை நோக்கிய மனிதர்களின் பயணம் கிராமங்களைச் சோபை இழக்கச்செய்திருக்கிறது. எது எப்படியோ போர்ச் சூழல்காரணமாகச் சோபையிழந்து நிற்கும் கிராமங்களும்,மனிதர்கள் நடமாடாத வீதிகளும்,பாழடைந்த வீடுகளும்போர் அழிவுகளையும் மக்களின் முன்னைய இருப்பையும் தாங்கி நிற்கின்றன.இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப் படுவதற்கு இலகுவாக அமைந்து விடுகிறது.
முல்லைதீவு, திருகோணமலை, அனுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லைகளின் மையப்பகுதியான நெடுங்கேணியின் கிழக்குப் பகுதிகளில் அரசினால் மேற் கொள்ளபடும் வகை தொகையின்றிய சிங்களகுடியேற்றங்களால்அரசதிணைக்களங்களிற்கிடையே பல்வேறு நிர்வாகச் சிக்கல் நிலைமைகள் உருவாக்கியிருக்கிறது.
இதனைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் வடக்குமாகாணத்தில் புதிய சிங்கள மாவட்டம் ஒன்று உருவாக்கப்படும் நிலையையும் மறுப்பதற்கில்லை. இது அரசின்நீண்டகாலத் திட்டம் என்பது தமிழர் தரப்பின் நிலைப்பாடு. ஏற்கனவே தமிழ் மக்களின் இடப் பெயர்வுகளினால் பாதிப்படைந்திருந்த பகுதிகளை மகாவலி தனக்குள் விழுங்கிக் கொண்டுள்ளதுடன் சீரானசிங்களக் குடியேற்றங்களை பரவலாக மேற்கொண்டு வருகிறது.
கொக்கச்சான்குளம்(போகஸ்வெவ),முல்லைத் தீவின்மணலாறு(வெலிஓயா),,போன்றவை மகாவலி எல் வலயத்திற்குள் உள்ளடக்கபட்டு 3 ஆயிரம்குடும்பங்களைச்சேர்ந்த 12 ஆயிரம் சிங்களமக்கள் குடியேற்றப் பட்டுள்ளனர். மொரகாகந்தை நீர்தேக்கத்தில் இருந்து மகாவலிநீரை வவுனியாவின் சேமமடுக்குளத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் அரசினால்மேற்கொள்ளபட்டுவருகின்றது. இந்நிலையில் மகாவலி எல் வலயக்கருத்திட்டம் நிறைவுபெறும் போது சுமார் 6 ஆயிரம் சிங்களக்குடும்பங்களை அதனைஅண்டிய பகுதிகளில் குடியேற்றுவது என எல் வலயத்தின் கருத்திட்ட வரைபில்குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மீதமுள்ள சிங்களக் குடியேற்றத் திட்டங்களைச் செயற் படுத்தும் நடவடிக்கையே அண்மைய நாட்களில் நெடுங்கேணி கச்சல் சமனங்குளத்தில் புத்தர்சிலை ஓன்றை நிறுவி அக்கிராமத்தின் பெயரைச் சபுமல் கஸ்கந்த என்று மாற்றியிருந்ததுடன் அதற்கு அருகில் அமைந்துள்ள,ஊற்றுக் குளம் தமிழ் கிராமமும் அபகரிக்கப்பட்டுள்மையை கூறமுடியும்.
அமுதன் :- தற்போது இலங்கையில் இராணுவ மயமாக்கல் எவ்வாறு மாற்றம் பெற்று வருகிறது? சற்று விளக்கத்தோடு பகிர முடியுமா?
நிலவன் :- 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையின் அரசியல் – நிர்வாகம் என்பனவற்றில் இராணுவ மயமாக்கல் ஆரம்பமாகியது. போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப் பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது’
இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சி அரச இயந்திர இராணுவமயமாக்கல் ஆகும். ஓய்வு பெற்ற மற்றும் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப் பேற்றுள்ளார்கள். நாட்டில் ஜனநாயக ஆட்சிஇடம்பெறுகின்றது எனில் இராணுவ மயப்படுத்தல் தேவையே இல்லை. பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கையில் சிவில் சேவையில் பதவிகளைப் பொறுப் பெடுத்து வருகின்றார்கள்.
வல்லைவெளியிலே இராணுவத்தினர் உணவகங்கள் மற்றும் கட்டிடங்கள் அமைப்பதற்கான தேவை என்ன? வடக்கிலே இராணுவ மயமாக்கல் எனும் விடயம் கண்டிக்கத் தக்கது. யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என எல்லா இடங்களிலும் அவர்கள் இருக்கின்றனர்.
அவ்வாறு இருந்து கொண்டு இராணுவ முகாம்களில் அவசர அவசரமாகப் புத்தரின் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இராணுவ மயமாக்கல் பௌத்தமயமாக்கலாக மாறியுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணமே உலகில் மிகவும் ராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசம் என்று கணிக்கப்பட்டிருப்பதோடு, யுத்தம் முடிந்த இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட நிலைமை அப்படியே தான் இருக்கிறது.
அமுதன் :- வடக்கு கிழக்குப் பகுதிகளில் இன்னமும் இராணுவ முகாம் அகற்றப் படாததற்கு காரணம் யாது?
நிலவன் :- இலங்கை வரலாற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இனவாத அடிப்படையில் சிங்கள மக்களின் கவனத்தை பெற எத்தனித்து இராணுவம் சுமார் 60000 ஏக்கர் காணியை வடமாகாணத்தில் பிடித்து இன்றுந் தன் கை வசம் வைத்திருக்கின்றது. கேட்டால் அவ்வளவு இல்லை என்கிறார்கள். புள்ளி விபரங்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுகின்றன.
வடக்கு, கிழக்கில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதா? இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அவசரம் என்ன? இராணுவ முகாம்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா? வடக்கு, கிழக்கில் மேலும்; இராணுவ முகாம்களை அமைக்கும் அரசின் செயற்பாட்டை தடுக்க முடியாது, பாதுகாப்புக்காக இராணுவம் என்ற போர்வையில் வடமாகாணத்தில் தரித்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதிலும் பார்க்க வணிக நோக்குடன் இராணுவம் இயங்குகின்றது என்பதே உண்மை. இராணுவம் மட்டுமல்ல. கடற்படை, விமானப்படைகளும் இவ்வாறான வணிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன. வடகிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும். “இப்பொழுது ஒவ்வொரு மனிதப் புதைகுழிகளாக கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் பல புதைகுழிகள் வெளிவரும். ஏனென்றால் இராணுவ முகாம்களில் இருக்கின்ற இடங்களில் புதைகுழிகள் இருக்கும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பலரின் உண்மைகள் உறங்கும் இடங்கள்.
போர்மௌனிக்கப்பட்டபோது கையளிக்கப்பட்ட உறவுகளின் நிலை என்ன? அது தொடர்பில் இலங்கை அரசு இதுவரையில் முறையான பதிலை வழங்காததன் காரணமென்ன? சரணடைந்தவர்கள்கூட இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டு, பின்னர் இராணுவ சூனியப் பிரதேசமான இங்கே கொண்டுவந்து புதைக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்கள்கூட இருக்கின்றன. காட்டுப்பாங்கான பிரதேசங்களில் எமது வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இதுவரை சிறிது சிறிதாகத் திருப்பிக் கையளித்து வருங் காணிகள் தனியாருக்குச் சொந்தமான காணிகளே. இவற்றை விட பண்ணைகள், அரசாங்கக் கட்டிடங்கள், சனசமூக நிலையங்கள், அரச காணிகள், காடுகள் போன்ற பலவற்றையும் பிடித்து வைத்துள்ளார்கள் படையினர். விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இன்றுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஏறத்தாழ 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இன்று வரையில் அஞ்சலி செலுத்த முடியாதுள்ளது
இராணுவ முகாம்களை அகற்றாமைக்கு காரணம் என்ன வென்றால் தம்முடைய சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கும், பௌத்த விகாரைகளை அங்கு அமைப்பதற்கும் காரணம் புதைகுழிகளை மூடி மறைப்பதே ஆகும் . தமிழ் பிரதேசத்தில் பௌத்த விகாரைகள் ஒன்றும் அவசியம் இல்லை.
அமுதன் :- இலங்கையின் வடக்கில் இராணுவம் மற்றும் பொலிசின் ஆதரவுடன் பௌத்த பிக்குகள் இனவாத ஆத்திர மூட்டல்களைத் தூண்டி விடுகின்றார்களா?
நிலவன் :- உங்கள் கேள்வியில் பதில் மட்டுமல்ல மிக முக்கியமான ஒரு விடயமும் உள்ளது. இலங்கையில் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக் கேணியின் அருகில், கடந்த 2019 செப்டெம்பர் 23 அன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்களப் பேரினவாதக் குழு ஒன்று பௌத்த பிக்கு ஒருவரின் சடலத்தை பலாத்காரமாகத் தகனம் செய்தது. சிங்கள அதி தீவிரவாதப் பொதுபல சேனாவின் செயலாளர் கலேகொட அத்தே ஞானசார தேரோவின் தமையிலான இந்த இனவாதக் கும்பல், தகனக் கிரியை கடற்கறையில் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவைப் பகிரங்கமாக மீறியே இதைச் செய்துள்ளது.
அரசாங்கம் மற்றும் சிங்கள முதலாளித்துவ எதிர்க் கட்சித் தலைவர்கள் உட்பட முழு ஆளும் வர்க்கத்தினதும் பாதுகாப்பு படைகளதும் ஒத்துழைப்பைப் பெறும் பௌத்த அதி தீவிரவதிகள் ஏனைய இன மற்றும் மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இனவாத வன்முறைகளில் இது அண்மையதாகும். இந்த ஆலய வளாகத்தில் பாதுகாப்புப் படைகள் மற்றும் தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக பௌத்த விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க கீர்த்தி என்ற பிக்கு, கொழும்பு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
தமது ஆலய வளாகத்தினுள் ஆகம விதிகளுக்கு முரணாகத் தகனக் கிரியைகள் நடப்பதை பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்த்தபோது, இந்த இனவாத கும்பல் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைக் கலகம் அடக்கும் பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பாரிய இன மோதல் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியை உணர்ந்த தமிழர்கள் அதைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து விலகிக் கொண்டதால் அதி தீவிரவாதிகள் எதிர்பார்த்த மோதலை உருவாக்க முடியாமல் போனது.
அங்கு கூடிய தமிழ் பேசும் சட்டத்தரணிகள், நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை வலியுறித்தியபோது பிக்குகளால் சட்டத்தரணி சுகாஷ் தாக்கப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய போது, “இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனத் தெரியாதா” என ஒரு பிக்கு எரிந்து விழுந்தார். இந்த ஆத்திரமூட்டல் சம்பவங்களையும் மற்றும் சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதையும் கண்டித்து பொது மக்களும் சட்டத்தரணிகளும் கடந்த வாரம் பூராவும் பல்வேறு இடங்களில் பகிஷ்கரிப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் விஹாரையின் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து வந்துள்ளன. அந்த இடத்தில் “வரலாற்றுக்கு முற்பட்ட” காலத்தில் இருந்தே விஹாரை இருந்து வந்துள்ளதாக தொல்லியல்துறை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இராணுவம், அங்கு பௌத்த விகாரைகளை அமைத்து இனவாத பாகுபாடுகளை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் கன்னியாவில் உள்ள வெந்நீரூற்று கிணறுகளை ஜனாதிபதி சிறிசேன தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார். இந்த நடவடிக்கை, அங்கு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்காக முயற்சிக்கும் இனவாத கும்பலின் கைகளைப் பலப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு சம்பவத்தில் இருந்து தூர விலகிக்கொள்ள முயற்சித்த பிரதமர் விக்கிரமசிங்க, “பிக்குகள் செய்யும் அடாவடியால் வெட்கத் தலைகுனிகிறோம்” என அறிவித்தார். இதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியின் பக்கம் திருப்பிவிட்ட அவர், “நாட்டில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் ஒரு தரப்பினர், பௌத்த பிக்குகள் சிலரை தமது ஆயுதமாக பயன் படுத்துகின்றனர்,” என குறிப்பிட்டார். எனினும் அவரது கட்சி வடக்கில் இராணுவத்தால் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை முழுமையாக ஆதரிக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது ஐ.தே.க. வெளியிட்ட விஞ்ஞாபனம் “வடக்கு கிழக்கு எங்கும் 1,000 பௌத்த விஹாரைகளை அமைக்கவுள்ளதாக” பிரகடனம் செய்துள்ளது.
சிங்கள அதிதீவிரவாத அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புகளை வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் ஜனாதிபதி , முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய இராஜபக்ஷ, பிக்குகளின் நடவடிக்கையை வெளிப்படையாக நியாயப்படுத்தினார். பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இது சிங்கள பௌத்த நாடாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக வேறு நாடுகளுக்கு செல்லாம்” என அச்சுறுத்தினார்.
அமுதன் :- இலங்கைப் போர்க்கால இனவழிப்பு எத்தகைய அழிவையும் அதன் பங்காளிகளாக யார் யார் இருந்தனரெனச் சொல்ல முடியுமா?
நிலவன் :- இந்திய அரசானது இலங்கையின் மீதான தனது பொருளாதார அரசியல் ஆதிக்கத்திற்காகவும், தமிழீழ மக்களின் இனப்படுகொலையில் இந்திய அரசின் கூட்டும், சதியும் உள்ளது. ராஜீவ் காந்தியும், ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் தமிழர் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவெனும் போர்வையில் 1987 யூலையில் ஓர் ஒப்பந்தம் செய்தனர். அந்த ஒப்பந்தம் என்ன வென்றே தெரியாத வகையில் சீரழிந்த ஒன்றாக மாறிவிட்ட நிலை . மண்ணையும் மக்களையும் காப்பாற்ற, ஆயுதங்களை ஆயுதங்களால் சந்திக்க வைத்த விடுதலைப் போராட்டம், 2009 மே மாதம் உறைநிலை கண்டு 15 வருடங்களைக் கடந்துவிட்டது. எழு தசாப்தங்களுக்கும் மேலாகப் படு கொலைகளைச் சந்தித்து வந்த ஈழத்தமிழினம், கற்றுக் கொண்ட பாடங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும் .
இவைகள் மட்டுமன்றி தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, குமுழமுனைப் படுகொலை, மணலாறு-தென்னைமரவாடிப் படுகொலை, கொக்கிளாய்-கொக்குத்தொடுவாய்ப் படுகொலை, வல்வைப் படுகொலை, குமுதினிப் படகு படுகொலை, தம்பலகாமம் படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, மயிலந்தனைப் படுகொலை, நவாலிப் படுகொலை, நாகர்கோவில் படுகொலை, குமரபுரம் படுகொலை, செம்மணிப் படுகொலை, வள்ளிபுனம் செஞ்சோலைப் படுகொலை என்று பெயர் குறிப்பிடும் இருநூறு ஐம்பதிற்கும் அதிகமான கொத்தணிப் படுகொலைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு பதிவில் உள்ளது . இவற்றுக்கும் அப்பால் ஆங்காங்கு அவ்வப்போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பல நூறுக் கணக்கைத் தாண்டி தொடர்கின்றது .
2009 ஆம் ஆண்டு பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அங்கு தஞ்சம் புகுந்த மக்கள்மீது தாக்குதல் நடாத்தியமை, உணவு, மருந்து முதலியவற்றை தடை செய்து மக்களைக் கொன்றமை, சுவாசிக்கும் காற்றில் விசம் கலந்து குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொன்றமை என உலகில் பெரும் இன அழிப்பில் நாசிப் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் செய்த அத்தனை இனவழிப்பு முறைகளையும் இலங்கை அரசும் பயன்படுத்தியது.
ஒரு புறம் முள்ளிக்குளம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை மறுபுறம் மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இரண்டரை ஆண்டுகால இலங்கை அரசின் போர் என்பது வெறுமனே இலங்கை அரசின் போர் அல்ல. பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்க வெறியே ஈழத்தில் போர் வெறியாக மக்களைக் கொன்று தீர்த்தது. ஆனால் இப் பிராந்தியத்தில் வேறெந்த ஒரு நாட்டின் பங்களிப்பையும் விட இந்தியாவின் பங்களிப்பே போரில் அதிகம்.
இவர்களே ஆயுதங்களைக் கொடுத்தார்கள், இவர்களே இராணுவத்தை அனுப்பினார்கள், இவர்களே இராணுவ டாங்கிகளையும், விமானங்களையும் அனுப்பினார்கள். இவர்களே கொலைகார ராஜபட்சே குடும்பத்தைப் பாதுகாத்தார்கள். போரை நிறுத்துங்கள் என்று தமிழகம் கேட்ட போது இறையாண்மை உள்ள இலங்கை தேசத்திற்குள் தலையிட மாட்டோம் என்றார்கள்.
அமுதன் :- நீங்கள் உலகத் தமிழ் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் யாதெனக் கூற முடியுமா?
நிலவன் :- தமிழீழம் என்கிற எங்கள் தாய்நிலத்திற்கு ஒரு தனித்த நாடாக உருவாவதற்குரிய அனைத்துத்தேவைகளும், தகுதிகளும் இருந்த காரணத்தினால்தான் எம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி அன்று தொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்க விடுதலைப்புலிகள் என்கிற தமிழீழ தேசிய இராணுவத்தை உருவாக்கி, வீரத்தையும், அறத்தையும் கொண்ட ஒரு மண்ணுரிமைப்போரை உலகமே வியக்கும் வண்ணம் எம் தமிழீழ மண்ணில் நிகழ்த்திக்காட்டினார்.
ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள ஈழத் தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் தமிழர் போராட்டத்தில் இந்திய, அமெரிக்க மேற்குலகச் சக்திகளின் உள்ளார்ந்தம் வெளிப் படையானதுமான உள்நோக்கமுடைய நயவஞ்சகம் கொண்ட செயற்பாடுகளை இன்றும் தமிழ் மக்களுக்கு உரியவாறு அடையாளம் காட்ட மறுக்கும் எவரும் அந்நியர்களின் அடிவருடிகளும் மக்கள் விரோதிகளுமே.
உலகத்தின் தொன்மையான ஒரு தேசிய இனம் ஒரு நாடு இல்லாமல் நாதியற்ற இனமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட அடிமைக்குலமாக மாறிவிடக்கூடாது என்கின்ற இலட்சியத்தாகத்தால்தான், தமிழீழம் என்ற நம் தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்தார்கள் நம் மாவீரத்தெய்வங்கள்
தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது.
உலகளாவிய தமிழர்களிடம் வேண்டுவது! நடக்கின்ற இந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத் திரண்டெழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன விடுதலை என்ற இந்த விடயத்தில் எம் மீது நிகழ்த்தப்படுகின்ற அடக்குமுறை விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து எங்களுடைய தொன்ம அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
உண்மையான மக்கள் விடுதலை என்பதோ? அல்லது ஒரு தேசிய இனத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பது என்பதோ? எத்தகைய அந்நியத் தலையீட்டின் மூலமும் வென்றெடுக்க முடியாதவைகளாகும். அமெரிக்க, இந்திய வெளியுறவுக் கொள்கைகளை விமர்சிக்கத் துணிந்த புதிய தலைமுறை ஈழத்தமிழர் செயற் பாட்டாளரின் வருகை தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும். மக்கள் போராட்டங்களாலும் அவற்றுக்குரிய சரியான கொள்கை தலைமைத்துவ தந்திரோபாயங்கள் என்பனவற்றாலுமே சாத்தியமாக்கப் பட முடியும்.
“தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
நன்றி – நிலவன்.