சேயோன்:-ஆழிப் பேரலையின் தாக்கத்தின் போது தலைவர் மேதகு அவர்களின் மனிதாபிமான நிலைப்பாடு எவ்வாறு இருந்தது?
நிலவன் :- உலகை ஆண்ட தமிழன் என்ற சொற்கள் புனைவுக் கதைகளால் கட்டமைக்கப்பட்ட பெருமிதக் கதையாடல்களல்ல. அது தமிழர்களின் வீரத்தையும் அறத்தையும் பதிவுசெய்து காட்டும் காலக் கண்ணாடியின் பிரதிபலிப்பு. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்தின் வலி ஈழப்போராட்டத்திலும், ஆழிப்பேரலையின் ஆதிக்கம் ஆழிப் பேரலையின் அகோரம் ஈழத்தமிழர்களுக்கு அதீத இழப்புக்களை ஏற்படுத்தியது .
அன்று 26.12.2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா, யாவாத் தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப் பேரலைகளானது (சுனாமி) இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தம் இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தது. சுமார் 174,000 உயிர்களை இந்தச் சுனாமி பேரலைகள் காவுகொண்டது. இலங்கைதீவில் சுனாமியினால் உயிர் இழந்தவர்கள் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 36,594 என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம், கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் ஆழிப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாகப் பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிமான நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார். ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களிலிருந்து இன்னும் அகலாத நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள்.
சேயோன் :- ஆழிப் பேரலையின் அனர்த்தம் தொடர்பாகத் தலைவருடைய பணிப்பின் பேரில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டன.
நிலவன் :- ஆழிப்பேரலையினால் இலங்கைத்தீவில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை கொழும்பு மாவட்டத்தின் சில கரையோரப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட அனைவருக்கும் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆழிப் பேரழிவை அடுத்து அனுதாப இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டார்.
அதில் ‘ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களிற்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அது போலவே தமிழ்பேசும் தாயக மண்ணிலும் தென்னிலங்கை கடலோரப் பகுதிகளிலும் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து ஆறாத துயரில் ஆழ்ந்திருக்கும் இஸ்லாமிய, சிங்களச் சகோதரர்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் உரித்தாகுக. தென்னாசிய நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் உயிரிழப்புக்களைச் சந்தித்து துயருறும் மக்களின் சோக உணர்விலும் பங்கு கொண்டு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றேன். எனத் தலைவர் அனுதாபச் செய்தி ஊடாகத் தெரியப்படுத்தி இருந்தார்.
அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் தாயகத்தில் என்னென்ன உதவிகள் மக்களிற்குச் செய்ய வேண்டுமோ? அவற்றைத் தாராளமாகவே செய்யுமாறு போராளிகளிற்கும் தளபதிகளிற்கும் தலைவர் பணித்தார். சுனாமி அனர்த்தத்திற்குள் பௌத்த சிங்களப் பேரினவாத அரசைப்போன்று இனரீதியான அரசியலைப் புகுத்தும் சிறுமைத் தனத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செய்யவில்லை.
தற்காலிக முகாம்கள் அல்லது நலன் புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்ட வர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், தங்குமிடம் வழங்கல் இடமாக பாடசாலை வளாகங்களும் சில திறந்த வெளி மைதானங்களிலும் தற்காலிக முகாம்கள் அமைத்தும் பாதிக்கப் பட்டவர்களுக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது. குறிப்பாக மருத்துவம் சுகாதாரம், உளநல ஆற்றுப்படுத்தல் போன்றவற்றைத் தமிழீழ சுகாதாரச் சேவைகள் நிறுவனம் பார்த்துக் கொண்டார்கள். ஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி அபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடாத்திய எம் மக்களின் பெரும் துயரத்தைத் துடைத்திடக் கடல்புலிகள் அணிகளின் தளபதிகளும் போராளிகளும் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்குத் தாராளமாகவே உதவினார்கள்.
இத்தனை பணிகளையும் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை அண்ணா நேரடியாக அந்த மீட்புப்பணியை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியிருந்தார். சுனாமியின் பாதிப்பை அது ஏற்படுத்திய வலியை ஈழத்துக் கவிஞர்கள் பாடல்களாகப் பதிவு செய்திருக்கின்றனர். அத்தனை அவலங்களை யும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினர் இசைத் தட்டுக்களாக வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உயிர் ஆபத்திற்குள்ளும் தங்களை மீட்கவந்த கடல்புலிவீரர்களையும் ஏனையபடையணிப் போராளிகளையும் அந்த மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.
சேயோன் :- சுனாமி அனர்த்தத்தின் போது தலைவரின் நெறிப்படுத்தலில் போராளிகளின் செயற் பாடு மக்கள் மத்தியில் எவ்வாறு இருந்தது?
நிலவன் :- 2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 38195 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. (உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரங்கள் கூடுதலாக இருக்கும் .) , 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். பல்லாயிரக் கணக்கணவர்கள் தற்காலிகமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. பலர் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அவர்களுள் 75% ஆனவர்கள் கடற் தொழிலில் ஈடுபட்டவர்கள். அத்துடன் ஆயிரக் கணக்கான வீடுகள், வியாபார நிலையங்கள், உணவகங்கள் என்பன சேதமானதுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உட்பட பெரும் சொத்திழப்பும் ஏற்பட்டது.
மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், படகுகள் என்பனவும் சேதமாகின. அத்துடன் பல இடங்களில் வீதிகள், பாலங்கள் முற்றாகச் சேதமாகி பிரதேசங்கள் துண்டாடப்பட்டன. விவசாய நிலங்கள் உவராகி பயிர் வளர்ப்புக்குத் தகுதியற்றவையாக மாறின. விவசாய இயந்திரங்கள் நாசமாகின. இதனால் இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தமது வாழ்விடங்களை இழந்து (தற்காலிகமாக) உதவிக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிங்களப் படையினர் குறுக்கிட்டுக், குழப்பங்களை விளைவித்தாலும் பொறுமைகாத்து மக்கள் பணியாற்றும்படி தலைவர் போராளிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அலை அடித்து ஓய்ந்த உடனே, மிக விரைவாக, உடனடியாகவே களமிறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தலைவரின் கட்டளை கிடைத்தும் அதற்கான குழுமமாக வேகத்துடன் செயற்பட ஆரம்பித்தார்கள்.
உறவுகளைப் பறிகொடுத்தும், சொத்துகள் முற்றாக நாசமாகியும், ஒரே நாளில் நடுத் தெருவுக்கு வந்தவர்களை மீட்கும் பணியில் தமிழீழ இராணுவமாக புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் ,தமிழீழ காவல்துறை, போராளிகள், மற்றும் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் உள்ளிட்ட மனிதநேய உதவி அமைப்புகளின் தொண்டர்களை உள்ளூர் மக்களும் என ஒரு சிறப்பான அணியை உருவாக்கி தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அபாரமான தலைமைத்துவ ஆளுமையினதும், சீரிய உயர் பண்புகளினதும் அரசியல் வெளிப்பாடுகளை செயற்படுத்திக் காட்டினார்கள்.
சேயோன் :- ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்தின் பாதிப்பு தமிழ் பிரதேசங்களில் எவ்வாறு இருந்தது? அதன் போது அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது?
நிலவன் :- இலங்கைத்தீவில் ஆழிப்பேரலை தமிழீழப் பிரதேசங்களில் பெரும் பாதிப்பைஏற்படுத்தியது. சாவடைந்தவர்கள் மொத்தம் 38195-ற்கு மேற்பட்டோர். மாவட்ட ரீதியாக பார்போமானால் யாழ்ப்பாணம்: 1256பேர் ,முல்லைத்தீவு மாவட்டத்தில்: 2902பேர்,கிளிநொச்சிமாவட்டத்தில் 32பேர், திருகோணமலை மாவட்டத்தில், 984பேர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில், 2975பேர் பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு. தமிழர் வாழும் பகுதியில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது.
2003ம் ஆண்டு தென்னிலங்கையில் பாரிய வெள்ளப் பெருக்கில் சிங்கள மக்கள் பெரும் பாதிப்படைந்தபோது இன வேறுபாடு இல்லாமல் பாதிக்கப் பட்ட சிங்கள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவிய மனிதாபிமானச் செயற்பாட்டையும் உலகம் அவதானித்த படியே இருந்தது.ஆனால் தமிழர் வாழும் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற் கொள்ள இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை. சில இடங்களில் விடுதலைப்புலிகள் பேரலையில் சிக்கிய சிங்களப் இராணுவச் சிப்பாய்களை மீட்டு இராணுவத்திடமே ஒப்படைத்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.
தமிழர் தாயகத்தில் நெடுங்காலப் போரின் வலியைச் சுமந்த மக்களிற்கு இயற்கை குறுகிய நேர இடைவெளிக்குள் பேரழிவை ஏற்படுத்தியது . போரினால் தொடரழிவுகளைச் சந்தித்தவர்கள் இயற்கையின் அழிவுகளாலும் மனம் உடைந்து போனார்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு தமிழ் இனத்தை இழிவுபடுத்தியது. துயர் மிகுந்த அந்த வேளையிலும் கூட தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன் மேதகு வே.பிரபாகரன் ஆழிப் பேரலையில் சிக்குண்டார் என்றெல்லாம் பொய்ப் பரப்புரைகளைச் செய்தது வந்தது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
சேயோன் :- தமிழீழ நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனர்த்தப் பணியானது வெளிபரப்பில் எவ்வாறு பார்க்கப்பட்டது?
நிலவன் :- ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு தமிழீழ தேசத்தின் அரசு (தமிழீழ விடுதலைப் புலிகள் )மீட்புப்பணியில் எவ்வாறு ஈடுபட்டார்களோ அதேபோன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாராலும் செயற்பட முடியாது என்பதையும் நிலைநிறுத்தி இருந்தார்கள்.
அதே வேளை பேரலை அனர்த்தத்தினால் பதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவந்த உலகத்தலைவர்களை முல்லைத்தீவு வரவிடாது தடுத்து அவர்களைச் சங்கடப்படுத்திய பௌத்த சிங்கள அரசின் பேரினவாதச் செயற்பாட்டை பெரிய விடயமாக எடுத்து அந்த உலகத் தலைவர்களை மேலும் சங்கடத்துக்குள்ளாக்காமல் அரசியல் நாகரீகத்துடனே தமிழீழ அரசு நடந்துகொண்டது.
2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழீழ அரசின் செயல்திறன் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன் பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது.
முல்லைத்தீவிற்கு 03 .01. 2005 அன்று பாதிப்புக்களைப் பார்வையிட வந்த யுனிசெப் தலைமை இயக்குநர் “கரோல் பெலாமி “ தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் செயற்பட்டுவரும் விதத்தினையும் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
2005 இல் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியால் சுனாமி பேரழிவில் திறமையாக செயற்பட்டதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு நன்மதிப்பு வழங்கப்பட்டது. இதே ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை மற்றும் அமெரிக்க முந்நாள் அதிபர் ஆகியோரும் சுனாமி பேரனர்த்தத்தில் தமிழீழ அரசின் செயற்பாட்டைப் பாராட்டினர்.
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களே வியந்து பாராட்டும் அளவுக்கு ஒரு அற்புதமான இடர்கால மீட்புப்பணியை தமிழீழ புலிகள் இயக்கம் செவ்வனே நிறைவேற்றியது என்றால் மிகையில்லை. ஆனால் இயற்கை அழிவுகளையும் தனது தமிழின அழிவிற்கான ஒரு பகுதி வேலையாகவே இலங்கை அரசு நோக்கியது. அதேசமயம், கிழக்கு மாகாணத்தில் இனபேதம் காட்டாமல் பாதிக்கப்பட்ட அனைத்துச்சமூக மக்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிவாரண உதவிகளை வழங்கி தலைவரின் மனிதாபிமான நிலைப்பாட்டை நிறைவேற்றிச் செயற்பட்டது. ஆழிப் பேரலையின் பின்னரான செயற்பாடுகளை வைத்து உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்..
சேயோன் :-போர்க்காலச் சூழலின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியில் பேரினவாத அரசு எவ்வாறு நடந்து கொண்டது?
நிலவன் :- கிளிநொச்சியில் தலைவர் சந்தித்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழுவினருடனும் இனபேதமற்ற தனது மனிதாபிமான நிலைப்பாட்டையே தலைவர் முன் வைத்திருந்தார். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்துடன் சமாதான முயற்சிகளையும் இணைத்துச் செயற்படுத்துவதே சிறந்தது என்றும் ஆலோசனை கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்த விஷயத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது இலங்கையின் பிரிவினைக்குத் தான் வழிவகுக்கும் என்று சிங்கள அமைப்புக்கள் கூறுகின்றன. இதனால் புத்த மத தலைவர்களை சந்தித்து பேசியஅதிபர் சந்திரிகா அம்மையார், ஒப்பந்தம் கையெழுத்தானாலும் அது ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது என்று உறுதியளித்திருந்தார்.
தமிழீழ நடைமுறை அரசை வழிநடத்தும் தேசிய ஆளுமையையும் செயல்திறமையையும் கொண்ட தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் தலைமை செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை சிங்கள தேசத்தில் இனவெறி உணர்வை வெளிப்படுத்தி செயற் பட்டுக்கொண்டிருந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசு ஆட்சிப்பீடத்திடமிருந்து தமிழ்மக்களை எப்படி இன அழிப்பு செய்யலாம் எனத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தது.
போரினால் நெடுங்காலத் துயர் சுமந்தவர்களிற்கு ஆழிப் பேரலை ஏற்படுத்திய பாதிப்புக்களில் இருந்து தமிழர் மீண்டும் ஆற்றப்பட முன்னரே இலங்கை அரசு போரைத் தொடங்கியது. வந்தோரை வாழவைத்த வளம்மிக்க வன்னி மண்ணில் போர் தீவிரம் மாகி இனத்தையே அழித்திடும் நோக்குடன் செயற்பட்டு வந்திட இதனால் வடுக்களைச் சுமந்தபடி வாழும் மக்களின் சுயபொருளாதாரக் கட்டமைப்புக்களிலும் சிதைவுகளை ஏற்படுத்தி இருந்தன.
சேயோன்:- அனர்த்த முகாமைத்துவ ப்பணியானது பாதிக்கப்பட்ட இடங்களில் அரசாங்கத்தால் எவ்வாறு செயற் படுத்தப் பட்டன?
நிலவன் :- மனமொடிந்து விழுந்தவர்களை தூக்கிவிட அவற்றுக்கும் மேலாக பல சர்வதேச நாடுகளும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தாமும் இந்தப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டன. இதில் உடனடி உதவியிலிருந்து நீண்டகால அபிவிருத்தி உதவித் திட்டங்களும் உள்ளடங்கியதாக உலகநாடுகளின் நிதி உதவியுடன் 15 நகரங்களை புனரமைக்கப் போவதாக சந்திரிகா அம்மையார் அறிவித்திருந்தார். அதில் ஒன்றுகூட முல்லைத்தீவு மாவட்டத்திற்கோ – யாழ்ப்பாண மாவட்டத்திற்கோ ஒதுக்கப்படவில்லை.
சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கைக்கு வரும் நிதியுதவி சிங்கள அரசிடம் வழங்கப் படுவதால் அது தமிழர் பகுதி மீட்புப் பணிகளுக்கு உபயோகமாக இருந்திருக்கவில்லை. இதனால் இந்தநிதியை சிங்கள அரசும், புலிகளும் இணைந்து பயன்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் அரச அதிபராக உள்ள சிங்கள அதிகாரி அனர்த்தம் நடந்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்க வில்லை. அம்பாறையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதே அவரின் இந்த புறக்கணிப்புக்குக் இனவாதமே காரணமாகவும் அமைந்தது.
இது தொடர்பாக மக்களின் பல அரசியல் அழுத்தங்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் கடுமையான அழுத்தத்தின் விளைவாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் அம்பாறையின் மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையிலேயே அம்பாறையில் அரச இயந்திரத்தின் இடர்காலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் முழுமையாக பாதிக்கப்பட மக்களுக்கு வழங்கப் படவில்லை. இத்தகையதொரு தேசிய அனர்த்தவேளையிலும் அரசும் அரச இயந்திரங்களாக சிங்கள அரச அதிகாரிகளும் இனவெறி உணர்வை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
திருகோணமலை மாவட்டத்திலும் இதே நிலைமைதான் இருந்தது. அரச நிவாரணங்கள் இனரீதியாக வரையறுத்து – பாகுபாடாகவே நடந்தன. தமிழ்மக்களுக்குச் சென்ற நிவாரணப் பொருட்கள் படையினராலும் இன்றையா அரசாக இருக்கும் ஜே.வி.பியினராலும் – சிங்களக் காடையர்களாலும் வழிமறிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டன. இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை அண்மித்திருந்த சிங்கள மக்கள் இந்த மீட்பு நடவடிக்கைகளிலும் – நிவாரண முயற்சிகளிலும் மனிதாபிமானமாக நடந்துகொண்டனர்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்பின் சிறப்புத் தூதுவராக உலகத் தமிழர்கள் மத்தியில் அறியப்பட்ட எரிக் சூல்ஹைம் அன்று மனிதாபிமானப் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர்களை வன்னிப்பகுதிக்கு வரவிடாமல் தடுத்து அநாகரீக அரசியலையே மேற்கொண்டா இனவெறிபித்த சந்திரிக்க அம்மையரைக் கண்டித்து கண்டன அறிக்கை கூட வெளியிட்டவில்லை. தேசிய அளவில் நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் தமிழீழ அரசும் தமிழ் மக்களின் இராணுவமாகவும் ஏகப் பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் நாகரீகத்தையும் – மனிதாபிமான நிலைப்பாட்டையும் கடைப்பிடித்தபடி பண்பாக நடந்துகொண்டதையும் இந்த உலகசமூக வல்லாதிக்க நாடுகள் அறியும்.
தமிழீழ தனி அரசின் வளர்ச்சியை கண்டு வியந்து வல்லாதிக்க நாடுகள் தமிழர்கள் மீதான இன அழிப்பினைக் கட்டவிழ்த்து விட்டது. தமிழர்களின் தேசக்கட்டமைப்பினை இல்லாதொழிக்கும் திட்டத்ததினையும் சமதான பேச்சுக்கள் மூலமாக தீட்டியது. அதன் அடிப்படையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கைத்தீவின் பேரினவாத சிங்கள அரசாங்கங்கள், விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து தமிழீழ தேசத்து தமிழர்களின் மரபுவழித் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை உட்பட , பொருளாதாரம், தனித்துவமான பண்பாடு, வரலாறு, பாரம்பரியம், மொழி ஆகியவற்றைக் குறிவைத்து தமிழ் இன அழிப்பை செய்தார்கள்.
சேயோன் :- முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்து இருந்தனர்?
நிலவன் :- இறந்தவர்கள் முள்ளியவளை கட்டைக்காட்டிலும், புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலுக்கு அண்மையிலும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.முள்ளியவளையில் “சுனாமி நினைவிடம் முள்ளியவளை” என பெயரிடப்பட்டு நினைவாலயம் பராமரிக்கப் பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம்.
ஆறு நீண்ட குழிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். ஒரு குழியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒரேயடியாக வைத்து அடக்கம் செய்ய நேரிட்டது . சாவடைந்தவர்களை இனம் காண்பதிலும் அவர்களின் உடல்களை அடக்கம் செய்வதிலும் போரால் பங்கெடுத்து இருந்தவர்கள்.இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டு அதன் மீது அவர்களது புகைப்படங்களோடு பெயர்கள் பொறித்து சுனாமியில் இறந்தவர்கள் என்பதை அறியும் பொருட்டு வாசகங்களையும் பொறித்துள்ளமையை மாமூலை,கள்ளப்பாடு சவக்காலைகளில் காணலாம்.
முல்லைத்தீவு நகரில் கடற்கரையில் பீட்டர் தேவாலயம் உள்ளது. சுனாமியினால் இந்த தேவாலயத்தின் முன்வளைவும் மணிக்கோபுரமும் சேதமடையவில்லை. தேவாலயத்தின் ஏனைய பகுதிகள் இடிந்துபோய்விட்டன. பங்குத்தந்தைகளின் முயற்சியால் தனவந்தர்களின் அர்ப்பணிப்பால் அந்த ஆலயம் மீளவும் கட்டப்பட்டு சுனாமி நினைவாலயமாக பேணப்பட்டு வருகின்றதாக முல்லைத்தீவுக் கடற்கரையோர மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பங்காற்றியவர்களின் பெயர் விபரங்கள் தாங்கிய தூண்களும் அந்த நினைவாலயத்தில் இருப்பதை அவதானிக்கலாம். பீட்டர் தேவாலயத்தில் உள்ள தாங்கு தூண்களில் இறந்தவர்களின் பெயர்களை அவர்களின் வாழிடத்தைக் குறிப்பிட்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்து வைத்துள்ளமையை அவதானிக்கலாம்.
சேயோன் :- இலங்கைத் தீவில் மறுபடியும் ஒர் அனர்த்தம் ஏற்படுமாயின் நாம் எப்படிப் பட்ட விளைவைச் சந்திப்போம்?
நிலவன் :- மிகப்பெரும் மனிதப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எதுவுமே நடவாதது போல உறங்கிக்கிடக்கும் கடல் இந்நிலையில், சுனாமி அனத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருகின்றோம் கடல் இன்னும் ஒரு முறை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. இன்னுமொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் அது ஏற்படுத்தும் அழிவு முன்பைவிட பன்மடங்கானோரைப் பலியெடுக்கும் பேரழிவாகவே அமையும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவின் கடல் வளத்தைப் பாதுகாத்து நின்றார்கள். இன்று கடல் மட்டுமல்ல இலங்கைத் தீவே மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது. இன்று சர்வதேச தலையிடுகள் உட்பட சீனா மற்றும் இந்தியக்கடல் வளத்தை கொள்ளை அடித்து வருகின்றார்கள்.இது ஒருபுறம் இருக்க கடலோரக் கண்டற் காடுகளை நாம் மென்மேலும் கபளீகரம் செய்வதை நிறுத்த வேண்டும். கடற்கரையோர மணல் மலைகள் தினம் தினம் கொள்ளை போகின்றன. அவற்றைக் கட்டுப் படுத்த வேண்டும் . சுண்ணக் கற்பாறைகள் அகல பாதாளத்துக்குத் தோண்டுவதை உடனே நிறுத்த வேண்டும். கடலருகே இறால் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. அவை உரிய முறைகளில் அமைக்கப்பட அல்லது அவற்றை மட்டுபடுத்த வேண்டும் . கடலக முருகைக் கற்பாறைகள் அழிக்கப்படுகின்றன அவைகள் உடனே நிறுத்தப்படவேண்டும். இழுவைப் படகுகள் கடலடி வளங்களை இடையறாது துவம்சம் செய்து வருகின்றன அவற்றை உரிய முறைகளில் கட்டுபடுத்த வேண்டும்.
இப்படி, தலைமுறை தலைமுறையாக வளமூட்ட வேண்டிய கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் தொடர்ந்தும் சூறையாடி வருகின்றோம். இவற்றை உரிய முறையில் இயற்கை கடல் சார் வளத்தை பாதுகத்தால் இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது போனாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிவிக்க முடியும்.எனவே, கடற்கோளின் படிப்பினைகளை ஏற்று இயற்கையோடு இசைவுற வாழ்ந்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம். உலகளவில் சுனாமி ஏற்படுத்திய வடு காய்வதற்கே நீண்ட காலமாகும். இதற்குள் இன்னும் எத்தனையே கோர அழிவுகளையும் தமிழ் இன அழிப்பையும் எமது மக்கள் கண்டு விட்டார்கள். பல அழிவுகளை ஏற்படுத்திய சுனாமியின் கோர பிடிக்குள் சிக்கி உயிரிழந்த அனைத்து மக்களின் ஆன்மாக்களும் அமைதி பெற நாமும் பிரார்த்திப்போம்.
“தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்”
நன்றி – நிலவன்.