தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்தினை மீட்டிட ஒரு விடுதலைப் போரொளியாக, வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, வாழ்ந்தவர்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான போராட்டமானது மாபெரும் விடுதலைப் போராட்டமாக விளங்குகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்! இயல்பாகவே உருவாகிய தலைவர் அல்ல அவர் உருவாக்கப்பட்டவர்.
தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் அவர்தான். எமது விடுதலைப் பயணங்கள் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்னும் பேராளுமையின் சிந்தனையின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் உங்களுடன் சில விடயங்களைத் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில் 2009 ஆம் ஆண்டு முள்ளி வாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்தும் தமிழின அழிப்பு நினைவு நாள் மே18 ஆகும். இந்த பதினைந்தாம் ஆண்டு நினைவேந்தலைக் கடந்து எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுற்சிக்கு வித்திட்டுச் சென்ற வரலாற்று நாயகர்களாக மகத்தான சாதனைகளை நிகழ்த்தி தமது உன்னத உயிரீந்த மாவீர்களாக மகுடம் தரித்து, எங்கள் இதயமெல்லாம் நிறைந்து வாழும் காவல்த்தெய்வங்களான மாவீரச் செல்வங்களை ஒருசேர நினைவிருத்தி உணர்வுபூர்வமாக நினைவேந்த ஒட்டுமொத்த தமிழினமும் தயாராகிறது. கார்த்திகை நெருங்கிவரும் இவ்வேளையில், வையகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடு நினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான மக்களையும், ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கொண்டு தேசவிடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் சிங்களப் பேரினவாத அரசிற்குப் பொருளாதார இராணுவ தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதன் காரணமாக 2009 மே 18 இல் தமிழீழ நடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப் போரியல் பின்னடைவைச் சந்தித்தது.
பல நாடுகளின் ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின் பின்னடைவை ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசு இறுமாப்புடன் கொண்டாடி வருகிறது. ஆனால் தமிழினத்தினதும் அவ்வியக்கத்தினதும் பலம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான் என்பதை சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டார்கள்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமை மறைந்து வாழ்வதாகக் கூறி உளவரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும்.
ஒருபுறம் தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின் வருகை என்னும் தமிழீழ விடுதலைப் போராட்ட மரபுகளைத் தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்பு நடவடிக்கை, மறுபுறம் தமிழீழத்தில் வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நோயான நிலையில் மறைந்து வாழ்வதாக கூறிப் பணம் சேகரிக்கும் நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக் கோட்பாடு என்னும் தேசியத் தலைவரின் சிந்தனை மூலோபாயத்தை அழிப்பதற்காக எதிரிகளினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை
ஆகும்.
தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவருமான மாவீரன் மேதகு வே. பிரபாகரன் இருப்பதாகக் கூறி காலத்தைக் கடத்தி தமிழீழ இரணுவ முப்படைகளுடன் தடைநீக்கிப் படையினையும் உருவாக்கிய ஈழ தேசத்தை வரையறுத்து ஆண்ட மாபெரும் தலைவனை எதிர்காலத் தலைமுறையிடம் இதன் வீரத்தையும் அறத்தையும் மறைத்துவிட்டால் விடுதலைப் போராட்டம் தன்னைத்தானே அழித்துவிடும் என எதிரிகள் கனவு காண்கின்றனர்.
தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப் பாரம்பரியங்களையும், கட்டுக்கோப்புகளையும் சிதைத்து தமிழீழ விடுதலைக் கோட்பாட்டை அழித்து தேசியத்தலைவரின் பெருமதிப்பை இல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றார்கள். தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல நுணுக்கமான இப் புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கும் தெளிவான நிகழ்ச்சி நிரல்எனலாம்.
அன்பார்ந்த மக்களே!
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற மாபொரும் தலைவன் மாவீரன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 15 ஆண்டுகளாக வீரவணக்க எழுச்சி நிகழ்வு செலுத்தாமல் இருக்கிறோம் . இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருந்திருக்காது.ஆனால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்.
உலகத் தமிழ் இனத்தின் விடுதலைக் குறியீட்டின் அரசியல் வழிகாட்டியாக, வரலாற்றில் வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் முள்ளி வாய்க்காலின் நந்திக்கடலோரப் பகுதியில் 17 இரவு தொடக்கம் 18 அதிகாலை வரை நடைபெற்ற இறுதிப் போர்க்களத்தில் அடிபணியாது தீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை தமிழினம் இழந்து விட்டது என்பதே உண்மை.
முள்ளிவாய்க்காலோடும், நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத் தளங்களில் தேசியத் தலைவரின் உருவப் படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிங்களத்துக்குத் துணைபோய் அடையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்கப் போராடுகிறது.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுத் தேச விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதும் யதார்த்த நிலையில்உண்மைதான். ஆனால் அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லை. அவர் புறமுதுகிட்டு ஓடவில்லை. இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..! மாவீரர் வழியில் தன்னை ஆகுதியாக்கி, தன் குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்த தேசத்தலைவனின் வரலாறுகள் விடுதலைப் போராட்டத்தின் எச்சங்களாக உயிர் வாழும் எமது காலத்திலேயே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு கடந்து போகப் போகின்றோமா..?
பேரன்புமிக்க எமது மக்களே !
விடுதலைப் புலிகளின் ஆயுதம் தமாகவே மௌனிக்கப் பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீச்சுப் பெற்றுள்ளது. தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே!, தமிழ் நாட்டின் பிறப்புக்களே!, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே!, உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு எங்கள் தலைவரின் வாழ்வும் ஒரு வழிகாட்டி. இன விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப் போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார்.
தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது காத்திடும் தமிழீழத் தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும், கௌரவத்திற்கும், தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகின்றார்.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட பல இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத் தீயை மூட்டியுள்ளது.
காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
தமிழீழத் தேசிய தலைவரின் சிந்தனையின் செயல் வடிவமாகப் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப் பட்ட தமிழீழக் கோட்பாட்டை நிலை நிறுத்தி செயற் பட்டுவரும் அமைப்புக்களை , சமூக நிறுவனங்களை குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை எந்த அன்னியச் சக்திகளாலும் அழித்து விடவோ, ஒழித்து விடவோ, முடியாது. தேசியம் சார்ந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட இவ்வாறான அமைப்பை, அல்லது குழுக்களில் இடம்பெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றை மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
துரோகங்களையும், ஊழல்களையும், மூடி மறைக்கமுற்படுபவர்கள் கூட்டுக் களவாணிகளே! தேசியப் பணியாற்றி வந்த சிலர் தேச விரும்பிகளாகத் தங்களை அடையாளம் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் தமிழர் ஒருங்கிணையும் கட்டமைப்புக்களில் இடம்பெற்ற செயற் பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கும் விதத்தில் செயற்படுதல் மக்கள் மத்தியில் உண்மைகளை எடுத்துரைக்க முடியாத நிலை காணப்படுகிறது. எத்தனை நாளைக்குத் தான் மறைப்பது. அமைப்புக்களுக்கு இடையில் நடைபெறும் குழப்பங்களை மக்களுக்குச் சொல்வதன் ஊடாக அது மக்களை மேலும் குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் .
மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம் கண்டறிந்து முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறான உண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப் புறந்தள்ளி இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழீழத் தேசிய இராணுவத்தை உருவாக்கி, வீரத்தையும், அறத்தையும் கொண்ட ஒரு மண்ணுரிமைப் போரை உலகமே வியக்கும் வண்ணம் தமிழீழ மண்ணில் நிகழ்த்திக்காட்டி வீரம் என்பதற்குப் புதிய அகராதி படைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் மாவீரர்கள்.
உயர்ந்ததொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள். என்பதைக் கருத்தில் கொண்டு நாம் அடுத்தகட்டப் போராட்டத்தினை முன்நகர்த்துவது குறித்து உறுதி யெடுத்துக் கொள்வதே – தலைவர் அவர்களின் இலட்சியக் கனவினை முன்னோக்கி நகர்த்த உதவும்.
எமது போராட்டம் அறத்தின் வழி முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளைப் பயன்படுத்தி , நெறிதவறாமல் நேர்மையுடன் வழி நடாத்தப்பட்டவர்கள் நாம். புலம்பெயர் நாட்டுச் சட்ட வரைமுறைமைக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் அமையப்பெறும் வகையில் இயக்கத்தின் மரபுகளை மீறாமல் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்ற செய்தியினை உரிய முறையில் காலம் இட்ட கட்டளையினை ஏற்று 2009 ஆம் ஆண்டு ஆயுதம் மௌனம் காணுவரை களம் கண்ட போராளிகளாக இருப்பவர்கள் இனியும் தலைவர் வீரச்சாவு விடயத்தில் உண்மையை உறங்கவிடாது இருப்பதே நல்லது.
நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமது வீர வரலாற்றை அழிய விடாது பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கு தமிழினத் தலைவன் என அனைவராலும் போற்றப்படும் தேசியத்தலைவனின் அற்புதத்தையும், அர்ப்பணிப்பையும் கடத்த வேண்டியது எமது கடமை.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், தளபதிகளுக்கும், வீரவணக்கத்தைச் செலுத்த வேண்டும். தேசிய உணர்வுடன் மக்கள் மாற்றங்களை நோக்கிச் செல்லா விட்டால் இந்தச் சதிகாரக் கும்பல் ஒரு இனத்தின் வரலாற்றையே குழி தோண்டிப் புதைத்து விடும். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. என்னும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடாய் அவரின் சிந்தனைகளைப் பின்பற்றிச் செயற் படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதிஉச்ச கௌரவம் ஆகும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”