திரு விஜயரட்ணம் சிவநேசன் (ரகுபதி),
முன்னாள் பொறுப்பாளர்,
தமிழர் ஒருங்கினைப்புக் குழு,
சிவிஸ்.
வணக்கம்.
தமிழர் வரலாறு தந்ததொரு மாபெரும் தலைவன்,ஒரு விடுதலைப் பேரொளியாக, தமிழீழ தேசம் பெற்றெடுத்த புதல்வன், வரலாற்றின் உண்மை மனிதனாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக , வாழ்ந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவரை கட்டி அணைத்தேன் என்றும், உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்பி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி மக்களை ஏமாற்றுவதில் மட்டுமல்லாது, தொடர்ச்சியாக பணம் திரட்டும் செயற்பாட்டிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றீர்கள். இது தேசியத் தலைவர் பெயரை களங்கப்படுத்துவது மட்டுமல்லாமல், தலைவர் பெயரைப் பயன்படுத்தி இனவிரோத மோசடி செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும். இவை எல்லாவற்றையும் எப்போது நிறுத்தப் போகின்றீர்கள்!
தமிழீழத் தேசியத் தலைவர், அவரது துணைவியார் திருமதி மதிவதனி, மகள் துவாரகா, புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் திரு பொட்டம்மான் உட்பட சில போராளிகளும் இருப்பதாக உண்மைத் தன்மையை மறைத்து பல வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றீர்கள். விடுதலைப்போராட்டத்தினைச் சிதைக்கும் நோக்குடன் கடந்த 2023ஆம் ஆண்டு மாவீரர்நாளில், தேசியத்தலைவரைச் சந்தித்தது என்றும் தேசியத்தலைவரின் மகள் துவாரகாவின் பெயரைப் பயன்படுத்தி போலியாக ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தியுமிருந்தீர்கள். இதனை போலி நாடகமென புரிந்து கொண்ட எமது மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள். விடுதலைப் போராட்டத்தின் பங்காளராக இருந்துவரும் தமிழர் ஒருங்கினைப்புக் குழு சுவிஸ் கிளையில் முன்னாள் பொறுப்பு வகித்து வந்த நீங்கள் தற்போதய நிலையில் தேசியத் தலைவர் தொடர்பான உண்மைக்குப் புறம்பான அதாவது தலைவர் உயிருடனும், நோய் நிலையிலும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரப்பி வருவதை நிறுத்திக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கொண்டிராத முப்படைகளான, இராணுவ படைகளைக் கொண்ட விடுதலைபுலிகள், தரைப்படை, கடற்படையான கடற்புலிகள், வான்படையான வான்புலிகளோடு நான்காவது படையாக தற்கொடைப்படையான கரும்புலிகள் படையையும் உருவாக்கிய புகழ் மிக்க தமிழினத்தின் தானைத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும், அவர் குடும்பத்தையும், உன்னதமான , எங்கள் உயிரினும் மேலான தலைவனால் உருப்பெற்ற தமிழீழப் போராட்ட வரலாற்றையும், கொள்கைகளையும் இங்கு யாருமே எப்போதும் தவறாகப் பேசது, இழிவுபடுத்தாது, பதிவுசெய்ய விடாது தமிழர் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டிய நீங்கள் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபு ரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி செயற்படுவது இனத்துரோகச் செயல் என்பதை எப்போது உணர்ந்துகொள்ளப் போகின்றீர்கள்.
இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குகளை மீறி, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையைப் புறந்தள்ளி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வேரறுக்கும் செயலாக மக்களை எப்படி ஏமாற்றலாம். அதன் மூலம் நீங்கள் சேகரித்துவரும் நிதி நிலையை உயர்த்தலாம் என்பதற்காக தேசியத் தலைவரைச் சந்தித்ததாகவும், ஆரத் தழுவியதாகவும், அவருடன் உணவு அருந்தியது போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்கிக் கதைத்தும் வருகின்றீர்கள். இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து வருவது தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம். இது வரலாற்றுத்தவறு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாழும் நாடான சுவிஸ் நாட்டில் 10.08.2024 அன்று நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாமென்ற தமிழீழ செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை மீறி கலந்து கொண்ட உங்களை இன உணர்வாளர்களின், மற்றும் போராளிகளின் வேண்டுகோளினை நீங்கள் ஏற்கமறுத்ததன் அடிப்படையில் சுவிஸ் காவற்துறையின் அறிவுறுத்தலில் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தீர்கள். மறுநாள் 11.08.2024 அன்று மீண்டும் நிகழ்வில் கலந்துகொண்டு மேடையேற முற்பட்டபோது குழப்ப சூழல் உருவாகி மீளவும் நிகழ்விலிருந்து கடும் எதிர்ப்பையடுத்து வெளியேற்றப்பட்டிருந்தீர்கள். அரசியல் ஆதாயத்திற்காக உங்களை போன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. இப்படி செயற்படுபவர்கள் தமிழினத் துரோகிகள் எனக் கருதப்படுவார்கள் என்பதை மக்கள் விழிப்படைந்து எமது தேசியத் தலைவரையும் அவரது கும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளை முறியடிப்பார்கள் என்பதை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உலகின் எழுபதிற்கு மேற்பட்ட நாடுகளிலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழினம், மரபு வழியாக வாழ்ந்து வந்த தன் தாயகத்தையும் அதன் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் வாழிட நாடுகளிலே பிறந்து வளர்ந்து வருகின்ற அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேர்த்தியாகக் கடத்தவேண்டிய பெரும்பொறுப்போடு செயற்பட வேண்டிய நீங்கள் மக்கள் மத்தியில் தேசவிரோதியாகி சில குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி புலனாய்வு ரீதியாகத் தங்கள் செயற்பாடுகளை மக்கள் மீது திணித்து வருவதை நிறுத்த வேண்டும்.
உலகமே தமிழீழ மண்ணையும் மக்களையும் திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழீழ மக்களுக்கான தனி தமிழீழ அரசாங்கத்தை அமைத்து அரசியல்த் துறை, நிதித்துறை, நீதி நிர்வாகத் துறை, போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, சிறார் காப்பகம், முதியோர் காப்பகம் என ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கி, தனி நாடாக செயல் வடிவம் கொடுத்து, இயக்கி காட்டி உலகையே திரும்பி பர்க்க வைத்த மாவீரன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தன் குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டார் என்று பதினைந்து வருடங்கள் கடந்தும் பிதற்றிக் கொண்டு திரிகின்றீர்கள் உங்களுடன் இதற்கு ஒரு தொகுதியினரை பலியாக்கிக் கொண்டும் இருக்கிறீர்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டமும் விடுதலைப்புலிகள் அமைப்பு எதிர்கொண்ட சவால்கள் அபரிதமானவை. உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் எதிர்கொண்டு , ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்களை தகர்த்தெறிந்து மீளவேமுடியாத பலபொறிகளில் சிக்கி மீண்டு வந்தது மட்டுமன்றி அனைத்து தடைகளையும், தனது பேராற்றலால் உடைத்தெறிந்து, புதிய உத்வேகத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்ததையும் இவையனைத்தும் தலைவரின் நுட்பமான தலைமைத்துவத்தாலும், விடாப்பிடியான முயற்சியாலுமே சாத்தியமானதாக இருந்தையும் அதற்கு ஏற்பட்ட தடைகள் எவ்வாறு களையப்பட்டது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன்.
புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமைப்போராட்டங்களையும், ஒற்றுமையினையும் சீர்குலைத்து, சிங்கள இனவாத அரசானது தமிழ் இனவழிப்பையும் தனது கறைபடிந்த வரலாற்றுப்பக்கங்களையும் மறைக்க முற்படுகின்றது. இன்று சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த விடயங்கள் அனைத்தும் அம்பலமாகி இருக்கின்ற சூழ்நிலையில் உண்மைகளை சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்ற இத்தருணத்தில் நாம் எல்லோரும் ஒன்றுதிரண்டு சர்வதேச சமூகமே உன் மௌனத்தை கலைத்து எம்மினத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுத்தருவதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் தலைவர் இருப்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்வதை விட தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவின் வீரவணக்க நிகழ்வினை செய்வதில் தமிழ் மக்களின் ஒற்றுமையின் அவசியமும் அதாவது ஒன்றுபடுதல் அல்லது இணைந்து செயற்படுதல் என்ற வலிமை மிக்க கருத்தை முன்வைப்பது பொருத்தப்பாடென்றே கருதுகின்றேன்.
எமது தேசியத்தலைவர் தூய்மையான போர்வீரனாகவே வாழ்ந்தார். ஒரு போர்வீரன் கைக்கொள்ள வேண்டிய பண்புகளில் எதிரியை மதிப்பதும் மிகமுக்கிமானது. களத்தில் வீழ்ந்த எதிரிப்படை வீரர்களின் உடல்களை உரிய மரியாதையோடு எதிர்த்தரப்பிடம் ஒப்படைக்க முயல்வதும், அவற்றை ஏற்கமறுக்கும் பட்சத்தில் உரிய இராணுவ மரியாதையோடு அவற்றைத் தகனம் செய்வதும் எமது போராட்டத்தில் தலைவர் கட்டிக்காத்த மரபு. தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படை யதார்த்த நிலைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் தமிழீழ விடுதலைப் போர் அதன் இலட்சிய இலக்குகளை அடையாவிட்டாலும், போராளிகள் இறுதிவரை செய்த தியாகம் என்பது அறநெறி வெற்றிகளும் எதிரியை மதிக்கும் பண்பையும் மரபையும் எமது தலைவர் இறுதிவரை பேணியே வந்தார் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகத்தையும் அதன் ஆளுகையின் கீழ் இயங்கும் கிளைகளையும் சிதைத்தழிப்பதேயாகும். இதன்மூலம், விடுதலைப்போராட்டச் சிந்தனையை மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவதாகும். இறுதிவரை போராடி இரத்தம் சிந்தினார்கள் என்பதைத் தொடர்ந்து நினைவுகூருவதன் மூலமே தேசம் தன்னை ஒருமைப்படுத்தி, இருப்பை தக்கவைத்து, குறிக்கோள்களை அடையமுடியும். இவ்வாறுதான் நம்மைப் போன்ற தேசியங்கள் வரலாற்றை அணுகுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது காலம் உங்களுக்கு அவற்றை உணர்த்தும் அப்போது தீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
எனது அன்பான தமிழ் உறவுகளே!!!
தங்களில் பலருக்கு தமிழீழம் பற்றியும் தமிழீழ தேசியத் தலைவர் பற்றியும் சரியான வரலாற்று புரிதல் இல்லை என்பதனையும் தமிழ் இன விடுதலையை தமிழீழ அரசை நிறுவி உலகறியச் செய்த மாபெரும் வீரனை வைத்து சமூக வீரோதிகள் நடத்தும் போலி நாடகத்தை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கும் போது எனக்கு மிக வேதனையாக இருக்கின்றது.
ஈழப்போராட்ட வரலாற்றில் உலகமே வியக்கும் எத்தனையோ சாதனைகளும் அற்புதங்களும் நிகழ்த்தப்பட்டதன் பின்னணியில் தலைவரின் அறம், தேசப் பற்று, விடாமுயற்சியிலுமே இருந்துள்ளது. தமிழ் மக்களிற்காகவும் தாயக மண்ணிற்காகவும் எந்த சுயநலமும் இன்றி பெரும் இன விடுதலைக் கனவுகளோடு தங்கள் உயிரையே மண்ணிற்கு விதையாக்கிய மாவீரர்களும் அந்த மாவீரர்களின் இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள் நாட்களை கடத்தும் மக்கள் மாவீரர்களின் நினைவுகளுடன் வாழ்கின்றார்கள்.
உலகத் தமிழ் இனத்தின் விடுதலையின் குறியீட்டின் அரசியல் வழிகாட்டியாக, வரலாற்றில் வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் கெரில்லா போரில் தொடங்கி மரபுவழி தேசிய இராணுவமாக தமிழினத்தின் தேசிய அடையாளத்தை இறைமையுடன் நிலைநிறுத்தி , முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடாத்தி, தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் , தனது வழி நடாத்தலையும் உளமாற ஏற்று , உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும், இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி , முள்ளி வாய்க்காலின் நந்திக்கடலோரப் பகுதியில் 17 இரவு தொடக்கம் 19 அதிகாலை வரை நடைபெற்ற இறுதிப் போர்க்களத்தில் அடிபணியாது எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை களமாடி , 2009ம் ஆண்டு மே மாதம்19 திகதி முள்ளி வாய்க்கால் பகுதி நந்திக்கடலோரம் தான் நேசித்த தாய்த்தமிழ் மண்ணில் தன்மானத்தோடு தன்னுயிரை மாவீரர்கள் வழியில் அர்ப்பணித்து விடுதலைக்கு விதையாக்கி விட்டார். தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை விடுதலைப் புலிகளின் வீரச்சா உறுதிப்படுத்தலின் மரபிற்கு அமைவாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்தும் அதேவேளை வீரவணக்க நிகழ்வை உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
தமிழினத்தின் ஒப்பற்ற மாபெரும் தலைவன் மாவீரன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 15 ஆண்டுகளாக வீரவணக்க எழுச்சி நிகழ்வு செலுத்தாமல் இருக்கிறோம் . இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருந்திருக்காது ஆனால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் அறிவிக்கப்படாமலே உள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்திய தன்னிகரில்லாத் தலைமையை தமிழினம் இழந்து விட்டது தான் உண்மை.
முள்ளிவாய்க்காலோடும், நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத் தளங்களில் தேசியத் தலைவரின் உருவப் படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிதைக்கும் சிங்களத்துக்குத் துணைபோய் அடையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்க நாம் போராடுகிறோம்.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டு தேசவிடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதும் யதார்த்த நிலையில்… ஆனால் அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லை… அவர் புறமுதுகிட்டு ஓடவில்லை… இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..! மாவீரர் வழியில் தன்னை ஆகுதியாக்கி, தன் குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்த தேசத்தலைவனின் வரலாறுகள்… விடுதலைப் போராட்டத்தின் எச்சங்களாக உயிர் வாழும் எமது காலத்திலேயே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு கடந்து போகப் போகின்றோமா..?
விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அரசியல் ரீதியாகவும், அமைதி வழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீச்சுப் பெற்றுள்ளது. தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு எங்கள் தலைவரின் வாழ்வும் ஒரு வழிகாட்டி. இன விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப் போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பு அதன் இறுதி இலக்குவரை அணையாது காத்திடும் தமிழீழத் தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும் கௌரவத்திற்கும் தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகின்றார்.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
புரட்சி,எழுச்சி, அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படுகிறது இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர். அதே வேளை மிகத் துள்ளியமான தெளிவுடன் தங்கள் இன விடுதலைச் செயற்பாடுகளை செய்தும் வருகின்றார்கள். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும், தமிழ், தமிழர், தமிழீழம் என்ற உணர்வோடு தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவனுக்கு வீரவணக்க நிகழ்வை செய்வதில் ஏற்பட இருக்கும் எந்த சூழ்ச்சிக்கும், எந்தத் துரோகத்திற்கும் தமிழினம் என்றும் அடிபணியாது. சத்தியத்தின் வழியில், தர்மத்தின் பாதையில், மாவீரர் தடம் பற்றிப் பயணிப்போம் என எம் தேசியத் தலைவர் மீது உறுதியெடுத்துக் கொள்கின்றேன் .
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி
நிலவன்போராளி /ஊடகவியலாளர்.
தொடர்புடைய செய்தி இணைப்பு
https://ibctamil.com/article/salute-to-the-ltte-leader-1715816433
தேசிய தலைவருக்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வு
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில், ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக அளப்பரிய தியாகங்களைப் புரிந்து முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் உயிர்களை தமிழீழ விடுதலைக்கு அர்ப்பணித்துள்ளார்கள்.
மேலும் இலட்சக்கணக்கான அப்பாவித்தமிழ் பொதுமக்களும் இந்த தேசவிடுதலைப்போராட்டத்தில் சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழீழ சுதந்திர விடுதலைப்போராட்டம் உலக வல்லாதிக்க அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் , எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி வரித்துக்கொண்ட இலட்சியம் மாறாது , உறுதியோடு வழிநடாத்தி இறுதிவரை அடிபணியாது தமிழீழ விடுதலைக்காக தமிழீழ மண்ணிலே, மாவீரர்கள் வழியில் தன்னுயிரையும் அர்ப்பணித்து விட்டார் என்பதில் தமிழீழ தேசியத்தலைவரையும் மாவீர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றுதலையும் மனவுறுதியையும் அவரை மிக ஆழமாக நேசித்து அறிந்து கொண்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பது திண்ணம்.
முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும்
முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும் எங்கள் தேசியத்தலைவர் தன்னை தமிழீழ மண்ணின் விடுதலைக்கு விதையாக்கி இற்றைக்கு பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே எமது விடுதலை இயக்கத்தின் மரபிற்கு அமைவாக எங்கள் தேசியத்தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழீழ மண்ணையும் தேசியத்தலைவரையும் நேசித்த தமிழ்மக்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் எமது விடுதலைப்போராட்டத்தின் நீட்சியாக தமிழ்த்தேசிய எழுச்சியுடன் அவரது உரித்துடையோர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புக்கள், தமிழீழ மண்ணையும் எம்தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்த பொதுமக்கள், மற்றும் தமிழீழத்தேசியத்தலைவரின் தலைமையின் கீழ் போராடிய போராளிகள் அனைவரையும் இணைத்து நடாத்த வேண்டும் என்ற தொடக்கநிலை கருத்துருவாக்கத்தை எட்டியுள்ளோம்.
எனவே இந்த முடிவை உலகமெங்கும் பரந்துவாழும் எம்தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் உரிமையோடு அறியத்தருகிறோம்.
இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தேசியப் புனிதப் பணியில் அனைவரையும் இணைத்துக்கொண்டு எம்மோடு தோளோடு தோள் நின்று செயற்படுவீர்கள் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடனும் உரிமையோடும் கேட்டு நிற்கிறோம்.
இந்த புனித வரலாற்றுக் கடமையை முன்னெடுக்க “காலக்கடமை ”எனும் பணிக்குழுவை உருவாக்கி அதனூடகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் போராளிகள் வெளியிட்ட ஊட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் முழு வடிவமும் அதன் காணொளி வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே புலம்பெயர்ந்து வாழும் 2009 ஆம் ஆண்டு மே இறுதிவரை களம் கண்ட போராளிகள் 05-05-2023 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கை துவாரகா எனத் தோன்றிய போலிப் பெண். எச்சரிக்கையுடன் இருப்போம் – நிலவன்.