சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான கொள்ளைகளில் ஈடுபட்ட, ஈடுபட்டுவரும் ஓர் கொள்ளைக் கூட்டம் சர்வதேச காவல் துறையின் கண்களுக்கும் (Interpol) இன்று வரை மண்ணைத் தூவிக் கொண்டு வருகின்றது.
உலகம் முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட கொள்ளைகளை வெற்றிகரமாக நடத்திய கொள்ளையர்களே ஊதாப் புலிகள் (Pink Panther). இவர்களுக்கான இந்தப் பெயரினை இன்டர்போல் வழங்கி வைத்தது.
இந்த ஊதாப் புலிகள் இன்று வரை ஒட்டுமொத்த சர்வதேசத்திற்கும் பாரிய அச்சுறுத்தல்களாக திகழ்ந்து வருகின்றனர். மேலும் இத்தாலியில் உருவான பயங்கர மாபியா கொள்ளையர்களை விடவும் ஆபத்தானவர்களாக ஊதாப் புலிகள் கணிக்கப்பட்டுள்ளனர்.
1993ஆம் ஆண்டு செர்பிய நாட்டின் இராணுவத்தினால் உருவாக்கப்பட்டதே ஊதாப் புலிகள் எனும் கொள்ளைக் கூட்டம். இந்தக் குழுவில் சுமார் 600 தொடக்கம் 1000 கொள்ளையர்கள் இருப்பார்கள் என சர்வதேச புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த ஊதாப் புலிகள் எனப்படும் கொள்ளைக் கூட்டம், பாதுகாப்பு உச்ச நிலையில் உள்ள இடங்களிலும் பகலிலும் கூட நுழைந்து சர்வ சாதாரணமாக கொள்ளையிட்டுச் சென்று விடுவார்கள்.
மேலும் ஊதாப் புலிகள் கொள்ளையில் ஈடுபடும் போது யாரையும் கொல்வதோ அல்லது பயங்கர அளவிலான காயத்தினை ஏற்படுத்தவோ மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் இவர்கள் எந்த இடத்திலும் புகுந்து அதிவேகமாக, நுட்பமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டு விட்டு சென்று விடுவார்கள். இவர்களது வேகம் காரணமாகவே இன்று வரையிலும் இவர்கள் பிடிபடாமல் இருக்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒரு நகைக்கடையினை வெறும் 41 செக்கன்களில் 15 மில்லியன் யூரோக்கள் அளவிலான நகைகளை கொள்ளையிட்டனர் இந்த ஊதாப் புலிகள்.
மேலும் கடந்த ஆண்டு சுவிட்ஸர்லாந்து நாட்டில் 103 மில்லியன் பெறுமதியான வைரங்களை பலத்த பாதுகாப்பிலும் பட்டப்பகலில் கொள்ளையிட்டுச் சென்றனர்.
1993 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்பட்டு வரும் இந்த கொள்ளைக் கூட்டத்தில் வெறும் 7 உறுப்பினர்களே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2007ஆம் ஆண்டு ஊதாப்புலிகளின் பிரதான தலைவர்களாக கூறப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். என்றாலும் அதன் பின்னரும் அவர்களது செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை.
இவ்வாறு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்துவரும் ஊதாப் புலிகள் அண்மையில் பிரான்ஸ் நாட்டில் அவசர காலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோதும், சர்வசாதாரணமாக கொள்ளை ஒன்றினை வெற்றிகரமாகச் செய்திருந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல மாடல் அழகியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான கிம் கர்தாஷியன் (Kim Kardashian) என்பரிடம் இருந்து 10 மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்த நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இந்தக் கொள்ளையின் சுவாரசியப்பதிவு யாதெனின், கொள்ளையின் பின்னர் கொள்ளையிட்டவர்கள் சைக்கிளின் மூலமாகவே தப்பிச்சென்றுள்ளனர் என்பதே.
எந்தவித தடயமும் இதுவரையில் கிடைக்காத இந்த கொள்ளையை ஊதாப் புலிகளே செய்துள்ளார்கள் என பிரான்ஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுதும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட இந்த ஊதாப்புலிகள் இன்றும் சர்வதேசத்திற்கே ஆட்டம் காட்டுவிக்கும் பயங்கர கொள்ளைக் கூட்டமாக காணப்படுகின்றனர்.
எனினும் துல்லிய இலக்கு, கண்ணிமைக்கும் வேகம், நேர்த்தியான திட்டம் என்பதன் காரணமாக இன்டர்போல் இவர்களை எவ்வாறு பிடிப்பது என்ற குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது.