கிரைமீய தீபகற்பத்தின் கரையோரத்தில் உள்ள கருங்கடலில் ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவை இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறித்த பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலும் சதி நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் முயற்சியிலுமே இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப் பயிற்சி நடவடிக்கைகளின் போது ரஷ்யாவின் சிறப்புப் படையினரில் சிலர் எதிரிகள் போல பாவனை செய்ததோடு ஏனையோர் ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக வந்து எதிரிகளை தோற்கடிப்பது போன்று பயிற்சிகளை மேற்கொண்டனர்.
குறித்த பயிற்சி நடவடிக்கைகளில் சுமார் 2,000 படைவீரர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். நேற்று ஆரம்பித்த இந்த பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கிரைமீய தீபகற்பத்தை ரஷ்யா இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து இது போன்ற பல இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.