கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் இன்று பிற்பகல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 88ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றக் கட்டளையைக் கிழித்தெறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த நால்வரும் திருகோணமலை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு கட்டளையைக் கிழித்தெறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அவ்வாறு செய்ததைச் சரியென்று கூறி நாங்கள் நியாயப்படுத்த முனையவில்லை. ஆனால், அவர்கள் தமது விரக்தியின் உச்சமாக அந்தத் தவறினை மேற்கொண்டிருக்கலாம். ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கடந்த 90 நாட்களுக்கும் மேலாக வடக்கு, கிழக்கில் பட்டதாரிகளான நாம் எமது தொழிலுரிமையை வலியுறுத்திப் போராடி வரும் நிலையில் இரண்டு மாகாண சபைகளும் எமக்கான வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தருவதில் பல தவறுகளை விட்டிருக்கின்றன.
இதன் காரணமாகவே நாம் பல நாட்கள் கடந்த பின்னரும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மாகாண சபைகள் எமக்கு இழைத்த தவறுகளை விடவா அந்த நான்கு பட்டதாரிகளும் தவறுகள் இழைத்துள்ளனர்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.