இளமையின் வேகத்தில்
இயற்கையின் நியதியை
மறந்த மனம் வேகம்
வேகம் என்றே ஆர்ப்பாட்டம்
கொள்கின்றது.
அதிகாலையில் எழுந்து
சயனம் செல்லும்வரை
ஊன் சுமக்கும் உயிர்
இளைப்பாறுவதே இல்லை
வேகம், வேலை, வருமானம்
குடும்பம் ,சுமை என்றே
ஏதோ ஒன்றை போட்டு
அலட்டிக்கொள்ளும் மனமும்
அடுத்தவர்களின் வாழ்க்கை
நடைமுறையை சில சமயங்களில்
அளவெடுக்க மறப்பதுமில்லை
ஊன் களைத்து ஓய்வெடுக்கும்
நேரம் கடந்துவந்த பாதையை
நினைத்துப்பார்க்கும் போது
வாழும் போது புலப்படாத
வாழ்வின் தத்துவம் உணர
தொடங்க
பூஞ்சை விழுந்த கண்ணும்
கூன் விழுந்த முதுகும்
உணவை அள்ளிட முடியா கரமும்
வாயில் வைத்தும் சுவையறியா நாக்கும்
எமது இயற்கை உபாதைக்கு கூட
இன்னும் ஒருவரை எதிர்நோக்கும் நிலையும்
சாவினை எண்ணும் மனமும்
வாழ துடிக்கும் நினைவும்
தமக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொள்ள
உயிரை கொடுத்து வளர்த்த
குழந்தைகளும்
உயிரே நீங்கள் தான் என்ற
உறவுகளும்
எமது விடுதலைக்காய்
பிரார்த்திக்க தொடங்கும்
- காவியா