பிரித்தானியாவுக்கு பாரிய தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா மே இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
டவுனிங் ஸ்ரீற் 10ஆம் இலக்க இல்லத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பங்குபற்றியதன் பின்னர் அது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரையாற்றிய தெரேசா மே, “பிரித்தானியாவில் கடந்த 10 வருடங்களாக இதுபோன்ற நிலைமை ஒன்று ஏற்படவில்லை. ஆனால் தற்போது அதிகரித்த தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரை 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விடயத்தில் பொலிஸாருடன் இணைந்து சுமார் 1,000 இராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை நான் இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளேன். அதன் போது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும். குறித்த தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவுக்கு இரங்கல் தெரிவித்தோருக்கு எனது நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.