ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் போன்ற பதற்றமான சூழல்நிலைகள் ஏற்படும் போது, அவற்றை சமாளிக்க இராணுவம் சுயமான முடிவுகளை எடுக்கலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அருண்ஜெட்லி, ஜம்மு காஷ்மீரின் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அம்மாநிலத்தின் நிலைமை கட்டுப்பாட்டை மீறும்போது இராணுவம் உரிய முடிவுகளை மேற்கொண்டு, அதனை செயற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
போர்ப்பதற்றம் நிலவும் பகுதிகளில் பிரச்சினைகளை இராணுவம் எவ்வாறு கையாளுமோ, அதேபோல் ஜம்மு காஷ்மீர் நிலைமைகளையும் கையாள வேண்டும் என்று தெரிவித்த அவர், அதற்கான முடிவுகளை இராணுவ அதிகாரிகள் சுதந்திரமாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காஷ்மீரில் இக்கட்டான சூழல் நிலவும்போது, அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் ஆலோசனை கேட்க தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அண்மைக்காலமாக ஜம்மு காஷ்மீரில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிலில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.