இன உரிமையை ஒருநாள் தமிழர் நிச்சயம் வெல்வர் என நாம் தெரிந்து கொண்டோம் என தெரிவித்துள்ள யாழ்.பல்கலை விஞ்ஞான பீடச் சிங்கள மாணவனான இந்திரஜித் குமார இன்று முடியாவிட்டாலும் நாளை முடியாவிட்டாலும் நூறு வருடங்களானாலும் அவர்கள் தமது உரிமையை வென்றெடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவரான இந்திரஜித் குமாரவினால் மே 20ம் திகதி அன்று முகநூலில் பதிவிடப்பட்ட பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு,
மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது, தமிழ் இன அழிப்பு நாள் மே-18 இவ்வாறே தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது.
அதில் மலர் ஒன்று இருக்கிறதே, அதுதான் ஈழ இராச்சியத்தின் தேசிய மலர், அந்த சிக ப்பு, மஞ்சள் நிறமே அவர்களின் கொடியின் வர்ணம்.இதைப் பார்க்கும் போது கோபமும் வெறுப்பும் வருகிறதா? மீண்டும் யுத்தம் புரிய தோன்றுகிறதா? ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை.
பெரிய ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்களை நினைத்து அல்ல, எம்மவர்களை (சிங்களவர்களை) நினைத்து.நாங்கள் கண்ணியமற்ற முறையில் நட ந்து கொள்கிறோம். ஒரு சிங்களவராக நான் இதை கூறுவதில் வெட்கமடைகிறேன்.
எங்களுக்குள் எந்த வித ஒற்றுமையும் இல்லை. இந்த யாழ்.பல்கலையினுள்ளே நாம் அடித்துக் கொள்கிறோம். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறோம். இப்படி எமக்குள்ளே ஆயிரம் பிரச்சினைகள்.ஆனால் இங்குள்ளவர்கள் அவ்வாறில்லை.
அவர்களுக்கு அன்றும் இன்றும் (நாளையும்) ஒரே பிரச்சினை. அது அவர்களின் இன உரிமையை பாதுகாக்கும் பிரச்சினை. இதுவே இங்கு நாம் தெரிந்து கொண்டோம்.
இவர்கள் எப்போதும் இவர்களுக்காக இறந்தவர்களை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் அவர்களை நினைவு கூருகின்றனர்.
இங்குள்ள அரசியல்வாதிகள் பணமோகம் பிடித்தவர்களில்லை. அவர்கள் எங்கும் எப்போதும் கதைப்பது அவர்களின் உரிமையை பற்றி மட்டும் தான்.
எமது நாட்டில் மூன்றோ நான்கோ தமிழ் பத்திரிகைகள் மட்டுமே உள்ளது. ஆனால் அவையும் அவர்களின் உரிமைப் பிரச்சினையை பற்றிக் கதைப்பதில் பின்னிற்பதில்லை.
தென்னிலங்கையில் இதுவரை எத்தனையோ பாலியல் துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. அவை எல்லாம் எமக்கு இன்று நினைவில் இல்லை.
ஆனால் வித்தியா படுகொலையை இவர்கள் இன்றும் மறக்கவில்லை. வித்தியா படுகொலைக்காக பெரிய போராட்டம் நடந்தது.
ஒரு இனம் என்ற ரீதியில் அனைவரும் முன்னின்றனர்.ஆனால் நீங்கள் இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நான் தமிழர்களுக்கு சார்பானவன் என்று திட்ட ஆரம்பிப்பீர்கள்.
இதோ அவர்களுக்கும் பதிலளிக்கிறேன். நான் இதை சிங்கள மொழியில் பதிவிட்டுள்ளேன். தமிழர்களுக்கு புரியப்போவதில்லை. நான் தமிழர்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளேன் என்றே எண்ணுவார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு இவ்வாறு பதிவிடும் ஒரே சிங்களவர் நான் மட்டுமே. நான் உங்களுக்கு (சிங்களவர்களுக்கு) புரிய வைக்கவே இவ்வாறு பதிவிடுகிறேன்.
ஒரு இனத்தவர்களாக நம்மால் முடியாத பல விடயங்களை அவர்கள் ஓர் இனமாக ஒற்றுமையுடன் சாதித்துள்ளனர்.
தமிழர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
அவர்கள் இன்று முடியாவிட்டாலும் நாளை முடியாவிட்டாலும் நூறு வருடங்களானாலும் அவர்களின் உரிமையை வென்றெடுப்பர்.
நாம் இதேபோல் என்றும் குறை கூறிக்கொண்டிருப்போமேயானால் நாம் முன்னேறுவது கடினம் என அந்த முக நூல் பதிவில் மாணவன் இந்திரஜித்தினால் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த மாணவனின் பதிவானது சமூக வலைத்தளங்களில் பலராலும் அவதானிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.