காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை இராணுவத்தினர் உடைத்து எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைவாக நழுவிச் சென்றுள்ளனர் என இச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை வடக்கு, குரு வீதி என்ற இடத்தில் உள்ள பொதுக் கிணற்றினை நேற்றைய தினம் சுத்தம் செய்ய கிணற்று உரிமையாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
அப்போது கிணற்றில் உள்ள தண்ணீரை பம்பி மூலம் வெளியேற்றிக் கொண்டிருந்த போது கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் தென்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவலை வழங்கிவிட்டு பொதுமக்களே குறித்த மோட்டார் சைக்கிள்கள் (கீரோ கொண்டா பஷன், ரீ.வி.எஸ்) மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்கள் சிலவற்றை கிணற்றிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.
அப்போது அவ்விடத்துக்கு உடனடியாக வான் ஒன்றில் பதற்றத்துடன் வருகை தந்த இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் இருந்த இலக்கத்தினை உடைத்து எடுத்துக்கொண்டு மிக விரைவாக அவ் இடத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
அதன் பின்னரே பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்த இலக்கத்தகடு தொடர்பாக பொலிஸாரை கேட்ட போது தாம் வரும் பொழுது மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகட்டினை காணவில்லை என தெரிவித்தனர்.
இராணுவத்தினரின் இந்த செயல் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.