கிளிநொச்சி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 96ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
இந்த நிலையில் போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகள் தொடர்பில் அரசு இதுவரை எந்த ஒரு பதிலையும் வழங்குவதாக இல்லை.
அதேபோல அரசியல் கட்சிகள் எதுவும் இந்த விடயம் தொடர்பில் அக்கறை காட்டுவதாகவோ அல்லது அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாகவோ இல்லை.
இருப்பினும் எங்களுடைய கவனயீர்ப்புப் போரட்டமானது ஒருநாள் இரண்டு நாள் என இன்று 96 நாட்களைக் கடந்துள்ளது. ஆனால் இது தொடர்பில் அக்கறை கொள்வதாகவோ அல்லது தீர்வை வழங்குவதாகவோ எவரும் இல்லை.
தேர்தலின்போது காணாமல் போனவர்கள் தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் நாங்கள் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்காக நாங்கள் புதிய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்குவோம் என வாக்குறுதிகளை வழங்கிய அரசியல் தலைமைகள் இன்று அரசுடன் இணைந்து அவர்களுடைய உறவுகளின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
தங்களது சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள். நாங்கள் வயது முதிர்ந்தவர்கள் இன்று நிம்மதியான வாழ்வின்றி, உணவின்றி 96 நாட்களாக தெருவில் கிடக்கின்றோம்.
காணாமல் போனவர்கள் இறந்திருப்பார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு போயிருப்பார்கள் என கூறிய பிரதமரை, தனது வீட்டிற்கு கூட்டிச்சென்று விருந்து உண்ணுகின்றனர்.
எங்களுக்கான ஒரு தீர்வை தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் தெரிவு செய்தோம். ஆனால் அவர்கள் எவரும் எங்கள் விடயத்தில் எங்கள் வேதனைகளை புரிந்து கொள்பவர்களாக இல்லை.
எனவே நாங்கள் எவரையும் நம்பி எந்த பயனும் இல்லை. இனிவரும் நாட்களில் எமது போராட்டத்தை விரிவுபடுத்தி அரசுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் அழுத்தங்களை கொடுப்போம் என போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.