ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் நேற்று முதல் சுமார் 56 மில்லி மீற்றர் மழை வீழச்சி பதிவாகியுள்ளது.
இதனால் பல குளங்களினதும், நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கனிசமான அளவில் உயர்ந்துள்ளதுடன், பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே வீடுகளில் வெள்ள நீர் பாய்ந்துள்ளது.
இதேவேளை பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இது இந்த வேளையிலும் உடைந்து ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை நீடிக்குமானால் இந்த குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைவதுடன், பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.