இன்றைய நாட்களில் எம்மால் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ”துரோகம்” என்ற வார்த்தை அதிகளவான இடத்தை பிடிக்கின்றது. ”துரோகம்” என்றால் என்ன? இந்த துரோகத்தை நிர்ணயம் செய்பவர்கள் யார்? துரோகத்தின் வழிமுறைகளை நாம் எவ்வாறு விளங்கிக்கொண்டு இருக்கின்றோம் என்பது பற்றிய ஒரு சிறு தேடலாகவே இந்த பதிவு அமைகின்றது.
மனித வாழ்வில் ஒவ்வொருவரும் பலவிதமான இறுக்கமான சூழலையும் சந்தோசமான சூழலையும் கடந்து வந்துகொண்டு இருக்கின்றோம்.அநேகமான மனிதர்கள் தமது வாழ்வின் ஆரம்ப படிநிலைகளில் மனித நற்பண்புகளை உள்ளடக்கிய ஒருவராகவே வாழ நினைக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதரும் தாம் நினைப்பது சரி என்றும் தாம் மற்றவர்களுக்கு தவறு செய்யாமல் தமது செயற்பாட்டை நிகழ்த்துவதாக எண்ணிக் கொள்கின்றார்கள்.
அதனால் தான் ஒவ்வொருவரும் தாம் செய்யும் காரியங்களுக்கு இவை காரணம் என்று தமக்கு தாமே சமாதானம் செய்யும் மனிதர்களாக வாழ்கின்றார்கள். மனித வாழ்வின் ஓட்டத்தில் கோபம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் என்ற படிநிலைகளையும் அன்பு, பாசம், நம்பிக்கை. சத்தியம்.
விடாமுயற்சி என்ற படிநிலைகளையும் நாம் கடந்து வருகின்றோம்.இந்த வாழ்வியல் ஓட்டத்தில் வாழ்வின் தத்துவங்களையும் ”மரணம்” ஒன்றே இறுதி என்பதனை ஆணித்தரமாக நம்பும் மனிதர்கள் தமது வாழ்வின் ஓட்டத்தில் இத்தகைய இழிநிலை செயற்பாடுகளில் ஈடுபட விரும்புவதில்லை. ஆனால் வாழ்வின் மீது தீராத பற்றும் இந்த வாழ்க்கையில் ”மரணம்” என்ற ஒன்று எப்போதும் நிகழ்ந்திட போவதில்லை என்று நம்பும் மனிதர்களும் வாழ்வின் யதார்த்த சிந்தனையை புரிந்துகொள்ளாத மனிதர்களுமே அநேகமாக கோபம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் என்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
கோபம் என்றால் என்ன? இந்த கோபத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? கோபங்கள் இரண்டு வகைப்படும். 1)மிகவும் ஆழமாக நேசிக்கும் ஒருவர் மீது ஏற்படும் கோபம் 2)மிகவும் வெறுப்பவர் மீது ஏற்படும் கோபம் மிகவும் ஆழமாக நேசிப்பவர் மீது ஏற்படும் கோபமானது நீண்டு நிலைத்து நிற்பதில்லை. அந்த நொடியில் கோபம் ஏற்பட்டாலும் அடுத்த சில நொடிகளில் நேசிப்பவர் மீதான காதல் அந்த கோபத்தை முழுமையாக விழுங்கிவிடக்கூடிய சக்தி கொண்டது. மிகவும் வெறுப்பவர்கள் மீதான கோபமானது சூழ்ச்சி, வஞ்சகம், கபடத்தனம் என்பவற்றில் சிக்கி மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உச்சம் பெறுகின்றது. இதில் கோபம் என்ற உணர்வானது தெரியாத மனிதர்களிடம் என்றும் ஏற்படுவதில்லை. எமக்கு தெரிந்த அல்லது பழகிய ஒருவரிடமே ஏற்படுகின்றது.
தெரிந்த அல்லது பழகிய நபர்கள் என்ற வட்டமானது அதிகரித்த தொழில்நுட்பத்தால் விரிவாக்கம் பெற்றதும் இன்றைய கோபங்களும் வஞ்சக துரோகங்களும் அதிகரிக்க காரணமாகின்றது. எவ்வாறு நாம் பழகும் தெரிந்த மனிதர்கள் அதிகரித்து போனார்களோ அதேபோல துரோகி, வஞ்சகம் என்ற குற்றசாட்டுகளும் மிகவும் அதிகமான அளவில் அதிகரித்து செல்கின்றது.
இப்போது, ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாக கருத்து முரண்பாடு ஏற்பட்டாலே ”அவன் ஒரு துரோகி” என்ற முத்திரையை குற்றி அந்த மனிதரை அந்த இடத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு நகர்ந்துசெல்லும் மனிதர்களாக வேகம் கூடிய மனிதர்களாக நாம் வாழ்கின்றோம் என்பது மறுக்கமுடியாத உண்மையே. அதிகரித்த தொழில்நுட்ப வளர்ச்சி எமக்கு எவ்வளவு எவ்வளவு பயனுள்ளதாக மாறியுள்ளதோ அதே அளவிற்கு எமது நம்பிக்கையை இழக்கவைக்கும் செயற்பாட்டில் மறைமுகமாக ஈடுபடுகின்றது.
அத்துடன் எமது மூளைத்திறனை வெகுவாக பாதிக்க செய்கின்றது. மனிதர்கள் மீதான நம்பிக்கையை வெகுவாக குறைக்கும் செயற்பாட்டிலும் அதிகரித்த தொழில்நுட்பம் ஈடுபடுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையே. முன்னர் நாம் ஒரு இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்றால் எமது அறிவுத்திறனை பயன்படுத்தியும் வழித்தடங்களை பயன்படுத்தியுமே பயணித்து இருப்போம்.
நாம் சென்றடையும் இடத்தை சரியாக சென்றடையும் போது எமக்கு எம்மை அறியாமலே எம்மில் அதிக நம்பிக்கை உருவாகின்றது.அத்துடன் எமது மூளைத்திறன் செயற்பாடும் அதிகரிக்கிறது. எமது மூளைத்திறன் அதிகரிக்கும்போது மனிதர்கள் மீதான நம்பிக்கையும் மனிதர்களை இலகுவாக இனங்காணும் சக்தியும் உருவாகின்றது. ஆனால் இப்போது எம்மை சுற்றியுள்ள மனிதர்களை நாம் தவறானவர்களாக நோக்கவும் அவர்களை குற்றமானவர்கள் என்று பழி போடவும் துரோகிகள் என்று ஒரு சிந்தனை கதம்பத்தில் அடைத்துவிடவும் எமது மூளைத்திறன் செயலிழந்து போனதே காரணம் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது எமது மூளைத்திறனை செயற்பாட்டை குறைக்காமல் எமது முன்னேற்றத்தை நோக்கி நகர்த்த நல்ல விடயங்களை கற்கவும் அவற்றை சீராக்கி சமநிலைப்படுத்தி ஆராய நற்புத்தகங்களை கற்பதும் அவசியமாகின்றது. கருத்து முரண்பாடு ஏற்பட்டவுடன் ”துரோகி” என்ற வார்த்தையை நாம் பிரயோகிப்பது இலகுவாக இருந்தாலும் அந்த வார்த்தையின் கனதி மற்றவர்களின் துரோகம் நினைக்காதவர்களின் மனதினை எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்து கொள்வது அனைவரதும் தேவைப்பாடாகும்.
– அக்கினி