அரசியல் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படாமைக்கு எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளே முழுக்காரணம் என ஈழவர் ஜனநாயக விடுதலை முன்னணியின்(ஈரோஸ்) கட்சி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளது.
ஈழவர் ஜனநாயக விடுதலை முன்னணியின்(ஈரோஸ்) கட்சியின் ஏற்பாட்டில் இன்று(26) பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவரும், ஸ்தாபகருமான ஏ.ஆர். அருட்பிரகாசம், கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஜெயக்குமார், கட்சியின் வடமாகாண இணைப்பாளர் சிவகுரு முருகதாஸ்(ரவிராஜ்), கட்சியின் பொருளாளர் ஏ.ஜி.இராசநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.
இதன் போது தொடர்ந்து கட்சியினர் கருத்து தெரிவிக்கையில்,
1983ஆம் ஆண்டில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சி சார்ந்து பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருந்த நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவுடன் நாங்கள் நேரடியாகக் கலந்துரையாடி மிகவும் இலகுவான முறையில் அவர்களை விடுதலை செய்வதற்கான அணுகுமுறையொன்றை உருவாக்கினோம்.
இதற்கிணங்க அந்தக் காலப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த பாஸ்கரலிங்கம் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகவுள்ளார்.
ஆகவே, தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான சாதகமான சூழலே காணப்படுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முன்னெடுப்புக்களைக் கூட எமது கட்சி கடந்த 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கொண்டது.
நீலன் திருச்செல்வத்தின் ஆலோசனையின் பேரில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைய ஆரம்பித்தமையால் இதற்கான முயற்சிகள் குழப்பங்களுக்குள்ளாக வேண்டி ஏற்பட்டது.
அது மாத்திரமன்றி நாம் மலையக மக்களுக்கான பிராஜாவுரிமையினைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். யுத்தத்தை நிறுத்துமாறு நாங்கள் பாராளுமன்றத்தில் கோரியும் யுத்தம் நிறுத்தப்படாமையால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார்கள்.
இவ்வாறான எமது மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கு ஈரோஸ் கட்சியினால் மாத்திரம் தான் முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இத்தகைய முடிவுகளை ஒருபோதும் எடுக்கவே முடியாது.
இலங்கை வரலாற்றிலேயே அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கு ஆதரவு தெரிவித்த முதலாவது எதிர்க்கட்சி என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். இதிலிருந்தே கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு விலை போய்விட்டனர் என்பது புலனாகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் யாழிற்கு வருகை தந்த போது அவரை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று நுங்கு வெட்டிக் கொடுக்கிறார்.
ஜனாதிபதி யாழிற்கு வருகை தந்த போது இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மகளின் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டிக் கொண்டாடுகிறார் எனில் எங்களுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் தேவையில்லை.
தமிழன் எத்தகைய துன்பங்களை எதிர்கொண்டாலென்ன? தமிழர் தாயகம் அழிந்து போனாலென்ன? நாங்கள் சந்தோசமாகவிருந்தால் மாத்திரம் போதும் என்ற மனநிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தலைமையும் செயற்படுகிறது.
அரசியல்கைதிகள் கைதிகளாகவே இருக்கட்டும்… விதவைகள் விதவைகளாகவே இருக்கட்டும்…. வேலையில்லாப் பட்டதாரிகள் வேலையில்லாமலேயே இருக்கட்டும்…. தாங்கள் மாத்திரம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்ற சுயநல சிந்தனையுடன் கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள்.
சிறையிலே அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் அராஜகவாதிகளல்ல. அவர்களை அரசாங்கம் நீண்டகாலமாகச் சிறைகளில் தடுத்து வைத்துள்ள நிலையில் அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள், உற்றார்-உறவினர்களின் மனநிலை எவ்வாறிருக்கும்? எனப் பொறுப்புவாய்ந்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வடக்கு-கிழக்கில் தங்கள் வேலைவாய்ப்பிற்காக வீதியில் நின்று போராடும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் உடனடியாகப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்சியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.