சர்ச்சைக்குரிய சாமியார் சந்திரா சாமி இறந்து போனார். அவரோடு சேர்ந்து சர்ச்சைகளும் மறைந்து போய்விடுமா?
சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்… இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்’ என்றெல்லாம் சந்திரா சாமிக்கு அடைமொழி உண்டு.
இவரது திடீர் மறைவே இயற்கையானது தானா என்ற அளவில் பேசப்படுகிறது.
ரங்கநாத் சொன்னது என்ன?
ராஜீவ் கொலை வழக்கில் தேடப்பட்ட சிவராசன், சுபா உள்ளிட்ட சிலர் பெங்களூரில் தங்கியிருந்தார்கள். அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்கள்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக பெங்களூரு ரங்கநாத் என்பவரைக் கைது செய்தார்கள். அவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எட்டாண்டுகள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்த ரங்கநாத் சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.
சிவராசன் பெங்களூரில் தங்கியிருந்த போது அடிக்கடி சந்திரா சாமியோடு போனில் பேசுவார். அதற்கென்றே அங்கிருந்த ஒரு டெலிபோன் பூத்துக்கு அடிக்கடி சென்று வருவார். ‘நாங்கள் நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் சாமியார் செய்து வருகிறார்’ என்று என்னிடம் சிவராசன் கூறிவந்தார்.
இது உள்பட மேலும் பல தகவல்களையும் சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவரான கார்த்திகேயனிடம் கூறினேன். அதைக் கேட்டவுடன் அவர் ஆவேசமானார். பெரிய மனிதர்களைப் பற்றி எல்லாம் பேசாதே. அப்புறம் நடப்பதே வேறு. உன் உயிர் இருக்காது’ என்று கூறியபடியே டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் குண்டை எடுத்து என் முகத்தில் ஆவேசமாக வீசியடித்தார். அதில் என்னுடைய பல் உடைந்து விட்டது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரங்கநாத்தின் வாக்குமூலத்தை சி.பி.ஐ ஏற்றுக்கொண்டிருந்தால், அதன் பேரில் விசாரணை நடத்தியிருந்தால், சந்திரா சாமியின் தொடர்புகள் அனைத்தும் அம்பலத்துக்கு வந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மூடி மறைத்து திசை திருப்பும் போக்கிலேயே செயல்பட்டார்கள். அந்தளவிற்கு சந்திரா சாமியின் அரசியல் நெட்வொர்க் இருந்தது.
இலங்கையும் சிங்கப்பூரும்!
ராஜீவ் கொலை வழக்கில் சந்திரா சாமியை விசாரிக்க வேண்டும்’ என்று ஜெயின் கமிஷன் அறிக்கை கூறியது. ஏன் அப்படிச் சொன்னது தெரியுமா?
1987 ஜூலை 29. இலங்கையின் தலைநகர் கொழும்பில் ‘இந்திய- இலங்கை ஒப்பந்தம்’ நிறைவேறியது. ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டு கை குலுக்கிக் கொள்கிறார்கள்.
அதே சமயம், இலங்கையின் நீலக் கடலுக்கு வெளியே சற்றுத் தள்ளியிருந்த சிங்கப்பூரிலும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சப்தமின்றி நடந்த அந்த ஒப்பந்தம்தான், பின்னாளில் ராஜீவைக் கொல்வதற்கு அச்சாரமிட்டிருந்தது என்றால் அப்போது நம்ப முடியாதுதான்.
அமைதியாக நடந்தேறிய அந்த ஒப்பந்தம், ‘யுனிகார்ன் இன்டர்நேஷனல்’ என்ற அமெரிக்க ஆயுத நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்குமானது.
இரண்டு தரப்பும் கையொப்பம் போட்டுக் கொண்டது என்னவோ பச்சை மையில்தான். ஆனால், அது உறைந்த போது, ராஜீவ் காந்தியின் உடலில் இருந்து சிதறிய சிவப்பு நிறமாக மாறியிருந்தது.
ஒப்பந்தப்படி அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில், 25 ஆயிரம் ‘SFG-87’ ரக வெடிகுண்டுகள் இலங்கை சென்று இறங்கியது.
இது அப்படியே இருக்கட்டும்!
ராஜீவைக் கொன்ற பெல்ட் பாமின் தன்மையைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தரும்படி சி.பி.ஐ கேட்கிறது.
யாரிடம் என்றால், மேஜர் சபர்வாலிடம். சர்வதேச அளவில் மிகச் சிறந்த வெடிகுண்டு நிபுணர்களில் இவரும் ஒருவர். இந்திய இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை, தேசிய பாதுகாப்புக் குழுவில் எல்லாம் வெடிகுண்டு நிபுணராகப் பணியாற்றியவர்.
இவர் தன் குழுவினரோடு எட்டரை மாதங்கள் கடுமையாக உழைத்தார். சர்வதேச தரத்திலான ஆய்வுகளுடன் ஒப்பீடுகளையும் செய்தார். இறுதியாக 5.2.92 அன்று மத்திய அரசுக்கும், சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கும் அறிக்கையை அளித்தார்.
அந்த அறிக்கையில், ‘சுமார் மூன்று ‘SFG-87’ கையெறி குண்டுகள் ‘பெல்ட் பாமில்’ பயன்படுத்தப்பட்டதற்கான பலமான சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்த வெடிகுண்டு, RDX மற்றும் TNT உள்ளடக்கிய, ‘Composition-B’ ரகத்திலானது. இதில் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சன்னங்கள் (pellets) தனித்தன்மை வாய்ந்தவை. அமெரிக்கத் தயாரிப்பான ‘SFG-87’ ரக கையெறி குண்டுகளில் மட்டுமே இவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன’ என மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டினார் அவர்.
மேஜர் சபர்வாலின் இந்த அறிக்கையைப் பார்த்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினருக்கு அதிர்ச்சி, கலக்கம், கலவரம். ஏனென்றால், அதற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே இங்கே உள்ள தடயவியல் துறையினர், ‘பெல்ட் பாமில் 400 கிராம் முதல் 500 கிராம் வரையிலான RDX வெடிமருந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் இருந்த இரும்பு சன்னங்கள் சாதாரண ரகமானவை’ என அறிக்கை கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், சபர்வாலின் அறிக்கையை ஏற்றுக் கொண்டால், விசாரணை சிங்கப்பூர், இலங்கை என்று போக வேண்டியிருக்கும். அப்படிப் போனால், இலங்கையின் முக்கிய நபர்களுக்கும் சந்திரா சாமிக்கும் இருந்த தொடர்புகள் வெளிவந்திருக்கலாம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் போது நடைபெற்ற இலங்கையின் இராணுவ மரியாதை அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டது வரை போயிருக்கும். எனவே, சபர்வாலின் அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, தமிழகத் தடயவியல் துறை கொடுத்த ஆய்வு அறிக்கையை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.
மறைக்கப்பட்ட இந்தச் சதிகளை எல்லாம் நீதிபதி ஜெயின் தன் விசாரணை அறிக்கையில் பிடித்து, வாங்கு வாங்கு என வாங்கியிருக்கிறார்.
சரி, இதற்கும் சந்திரா சாமிக்கும் என்ன தொடர்பு?
இப்படி மறைக்கப்பட்ட பல ஆதாரங்களின் பின்னணியில், அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் துணையிருந்தார். அவர், சந்திரா சாமியின் நெருங்கிய நண்பர். அதனால்தான் ராவ் தலைமையிலான மத்திய அரசிடம் இருந்து நீதிபதி ஜெயின் கமிஷனுக்குப் போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் போனது என்ற பேச்சும் அன்று இருந்தது. அந்த அளவிற்கு சந்திரா சாமி சக்தி படைத்தவராக இருந்தார்.
எல்லா வகையிலும் ஜெயின் கமிஷனின் விசாரணை போக்கை திசை திருப்பிக் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் ‘விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர், சுப்பிரமணியன் சுவாமியும் விசாரிக்கப்பட வேண்டிய நபர்’ என்று ஜெயின் கமிஷன் தன் அறிக்கையில் கூறியிருந்தது.
இந்திரா கொலையிலும் குற்றச்சாட்டு!
இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை பற்றி விசாரிக்கப்பட்ட கமிஷனிலும், சந்திரா சாமியின் சதிமுகம் தெரிகிறது.
இந்திரா அதிகாரத்தில் இருந்த போதே, இந்த ‘சாமிகள்’ இருவரும் லண்டன் செல்கிறார்கள். ஒரு விஷயத்திற்காக நிதி திரட்டுகிறார்கள்.
அப்போது லண்டனில் இருந்த பிரபல ஊறுகாய் நிறுவனத்தின் அதிபரான லக்குபாய் பதக்கைப் பார்த்து, ‘‘உங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தடையற்ற வர்த்தகத் தொடர்புக்கு ஏற்பாடு செய்கிறோம்’’ என நிதி கேட்கிறார்கள்.
இந்திரா காந்தி இருக்கும்வரை அப்படியான விதிமீறல் நடக்காது என்கிறார் லக்குபாய். அதற்கு சந்திரா சாமி, ‘‘இந்திரா பிரதமராக இருக்க மாட்டார். நரசிம்ம ராவ்தான் பிரதமராக இருப்பார்’’ என்று கூறுகிறார்.
பிறகு இந்திரா படுகொலை செய்யப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாக அப்போது நரசிம்ம ராவ் பிரதமராக முடியவில்லை. அதற்கு தமிழரான மூப்பனார்தான் காரணம்.
பெரும்பான்மை எம்.பி-க்களின் கையொப்பத்தோடு ஜனாதிபதியைச் சந்தித்தார் மூப்பனார். ‘‘ராஜீவ் காந்திதான் அடுத்த பிரதமர்’’ என்றார்.
‘சாமி’களால் அந்தப் பெரும்பான்மையை உடைக்க முடியவில்லை. ராஜீவ் பிரதமரானார்.ராஜீவ் பதவிக்கு வந்ததும், சதிமுகத்தின் சூத்ரதாரியான சந்திரா சாமியை அதிகம் கண்காணித்தார். அவரது ஆசிரமங்கள் வருமான வரி சோதனைக்கு உள்ளாகின. பல வழக்குகள் பாய்ந்தன. பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது. சந்திரா சாமி கொதித்தார்.
சின்னப்பையன். விளையாடுகிறான். என்னாகப் போகிறான் எனத் தெரியவில்லை. அவன் அம்மாவைப் போலவே மடிவான்’’ என்று அவர் பேசியதாக பின்னாளில் ஆசிரமத்தில் இருந்த முக்கிய நபர்களே ஜெயின் கமிஷனில் சாட்சியளித்தார்கள். சந்திரா சாமி கொதித்ததைப் போலவே ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு நடந்த விசாரணையில், சந்திரா சாமியின் ஆசிரமக் கணக்குகள், பணப் போக்குவரத்து எல்லாம் ஆராயப்பட்டன. அவர் வழியாக பல்வேறு இயக்கங்களுக்குப் பணம் போனதாகவும் தெரிய வந்தது.
இதையெல்லாம் வைத்துதான் ஜெயின் கமிஷன் அறிக்கை தந்தது. அதன் பேரில்தான் சி.பி.ஐ-யிலேயே ஒரு தனி பிரிவாக ‘பல்நோக்கு புலன் விசாரணைக் குழு’ போடப்பட்டது. அந்தக் குழு போடப்பட்டு 19 ஆண்டுகளாகின்றன.
சந்திரா சாமியை ஒரு முறைகூட அழைத்து விசாரிக்கவில்லை. ஒருவேளை சந்திரா சாமி தீவிரமாக விசாரிக்கப்பட்டிருந்தால், பல மர்மங்கள் வெளிவந்திருக்கலாம்.
அப்போது இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனேவுக்கும் இந்த கொலைக்குமான தொடர்பும் தெரிந்திருக்கலாம்.
எல்லாமும் மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றன.
– Vikatan