இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்கு மாறாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு தொடர வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த அமைப்பினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள், யுத்தக் குற்றச்செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது என அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில், ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிலைநிறுத்தப்படக் கூடாது என கோரியுள்ளார்.