தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பிரெக்சிற் மீது தனிக்கவனம் செலுத்துதல் மற்றும் உலக வர்த்தகத்தில் சாத்தியமான விளைவுகள் போன்ற விடயங்களில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உலகின் மிக உயர்ந்த தொழில்முறை நாடுகளின் ஆதவை வென்றுள்ளார்.
இத்தாலியில் 2017 ஆம் ஆண்டுக்கான ஜி-7 மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய அமர்வில், தீவிரவாதிகளால் இணையம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்தல்’ என்ற அறிக்கையில் ஜி-7 தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ‘ தீங்கிழைக்கும் பொருட்களை தாமாக அடையாளம் காணவும் அவற்றினை நீக்குவதற்கும் ஏதுவான கருவிகளை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். வெளிநாட்டு போராளிகளின் வருகை மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்த்து போரிடுவதற்கு ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். உளவுத்துறை பகிர்வுகள், ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும் நாட்டின் பொலிஸ் மற்றும் சட்ட நடைமுறைகளை மேம்படுத்துவதும் இவற்றில் அடங்கும். ஐ.நா தலைமையிலான முயற்சிகளுக்கு எமது ஆதரவுகளை இரட்டிப்பாக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிரிய விவாகாரத்தில் அரசியல் தீர்வு இன்றி தீவிரவாதத்தை தோற்கடிப்பது என்பது சாத்தியமற்றது என்பதை ஜி-7 தலைவர்கள் ஒருமித்து ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மே, சிரியா மற்றும் பரந்த பிராந்தியங்களில் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவாலாக விளங்க வேண்டும் என்பதையும் அணுவாயுத ஆற்றலை பெறுவதிலிருந்து ஈரானை தடுப்பதற்கான முயற்சிகளை தொடர வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை ஜி-7 தலைவர்கள் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.