இத்தாலியின் டார்மினா நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டின் ஒருபுறமாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இருநாட்டு இளம்தலைவர்களும் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
மேற்படி சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மக்ரோங், ‘பிராங்கோ-கனேடிய நட்பு ஒரு புதிய முகத்தை கொண்டுள்ளது. எங்கள் தலைமுறையில் சவால்களை நாம் சந்திக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ‘ இமானுவல் மக்ரோங்குடனான முதலாவது சந்திப்பில் தொழில்வாய்ப்புக்கள், பாதுகாப்பு மற்றும் காலநிலை உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது’ என ஜஸ்ரின் ரூடோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜஸ்ரின ரூடோ மற்றும் இமானுவல் மக்ரோங் ஆகிய இருவரும் பூங்காவில் நடந்து செல்வதும் இருவரும் சேர்ந்து சிசிலி கிழக்கு கடற்கரையோரத்தில் கடலோர நகரங்களை பார்வையிடுவதும் போன்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.