வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டத்தின் நூறாவது நாளில் மாபெரும் சர்வ மத பிரார்த்தனை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஒன்று கூடுமாறு காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கான நீதியை கோரி தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை அரசிடம் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை. அந்த வகையில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி 100 ஆவது நாளை எட்டவுள்ள நிலையில் குறித்த திகதியில் மாபெரும் சர்வமத பிரார்த்தனை ஒன்றை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த சர்வமத பிரார்த்தனையின் மூலம் சர்வதேசத்துக்கு இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தி தீர்வினை பெற்றுத்தர கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மாபெரும் பிரார்த்தனையில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் சிவில் சமூக உறுப்பினர்கள், மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.