இலங்கையில் மே மாதம் அழிவின் மாதமாக பதிவாகியிருக்கிறது. சோகத்தையும், துன்பத்தையும், வடுக்களையும் கொடுக்கும் மாதம் என்பதை மறுபடியும் ஒரு கணம் நிரூபித்திருக்கிறது இயற்கை.
இலங்கை தேசம் அழகிய, சொர்க்கா புரி என்று வர்ணித்திருக்கிறார்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். இலங்கைக்கு படையெடுத்த ஐரோப்பியர்கள் இலங்கை ஆசியாவின் முத்து என்றும், நித்திலம் என்றும், தங்கச் சுரங்கம் என்றும் விதவிதமான பெயர்கள் வைத்து அழைத்தனர்.
இதற்கு காரணம் இலங்கையின் அமைவிடம் தான் முக்கியமாக இருக்கிறது. இந்து சமுத்திரத்தின் நடுவே நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு தனித் தீவாக இந்தியாவிற்கு கீழ் அமைந்திருப்பது இலங்கை உலக நாடுகளின் முக்கிய கேந்திர நிலையமாக மாறுவதற்கும் காரணமாக இருக்கிறது.
தவிர, நாட்டின் உள்ளே இருக்கும் வளங்களும் சர்வதேசத்தை இந்த நாட்டின் பக்கம் சுண்டியிழுத்தது. இயற்கைத் துறைமுகங்கள், மலைகள், நதிகள், அருவிகள், குளங்கள், மரங்கள் என்றும் அத்துணையும் இலங்கையின் சொத்துக்கள். இவை மற்றைய நாடுகளை விடவும் இந்த நாட்டிற்கு இயற்கையாகக் கிடைத்த கொடைகள்.
அவற்றை பாதுகாப்பு இலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகக் கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் இனங்களுக்குள் ஏற்பட்டு முரண்பாடுகள் இன்னமும் தீராமல், சக இனத்தை பகையாளியாகப் பார்த்ததன் விளைவு நாட்டில் உள்நாட்டு யுத்த வெடித்து, பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலியெடுத்து, இரத்த ஆற்றை ஓட வைத்தது.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்காலிலும், நந்திக் கடலிலும் ஓடிய இரத்த ஆற்றினால் மிகப் பெரும் மனிதப் படுகொலை இந்த நூற்றாண்டில் இலங்கையில் பதிவாகியது.
அது தமிழ் மக்களின் துயரத்தின் மாதமாக மே மாதத்தை மாற்றியது. ஆனாலும், தென்னிலங்கை அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும், இராணுவ வெற்றி என்றும் அறிவித்ததோடு வெற்றி விழாவையும் கொண்டாடியது.
ஒரே நாட்டில். ஒரு சமூகம் வெற்றி நாளைக் கொண்டாட இன்னொரு சமூகம் துக்க நாளைக் கொண்டாடிய வரலாற்றையும் இலங்கை பதிவு செய்து வைத்திருக்கிறது.
ஆக, இலங்கையில் மே மாதம் என்பது வெற்றி, துக்க நாள் என்பனவற்றை கொண்டதாக அமைந்துவிட்டது வரலாற்றில். ஆனால், இதுவே தான் இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதே தவிர, இன்னமும் அதில் இருந்து மீள்வதற்கான வழிவகைகளைத் தேடுவதாகத் தெரியவில்லை.
மே மாதம் முள்ளிவாய்க்கால் படுகொலையும் அதன் இழப்புக்கள் குறித்தும் இன்னமும் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கையில் இயற்கை இலங்கையர்களுக்கு இன்னொரு அழிவைக் கொடுத்திருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நாடு இன்று நிலைகுலைந்து நிற்கிறது. தென்மாகாணம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி மக்களை தடுமாற வைத்திருக்கிறது. இதுவரை வெளியான தகவல்களின்படி, நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
தென்மாகாணம் முழுவதும் நோக்கின் குறைந்தது ஆறு இலட்சம் பேர் நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் மீட்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வழமையாக வரும் அனர்த்தம் தான் என்றாலும் இம்முறை கொட்டிய மழையினால் குளங்கள், கால்வாய்கள், நதிகள் என்பன பெருக்கெடுத்து, வெள்ளம் கடலுக்குச் செல்லாமல் மக்களின் குடிமனைக்குள் புகுந்தது தான் காரணம்.
இதற்கான மிக முக்கியமானதாக அமைந்திருப்பது சட்டவிரோதமான கட்டடங்கள் என்றும், அதன் வாயிலாக நீர் வெளியேற முடியாமல் மக்களின் குடிமனைக்குள் புகுந்து பெரும் நாசத்தை விளைவித்திருக்கிறது.
அரசியல் வாதிகளினதும், அதிகாரிகளினதும் அசட்டையீனத்தின் விளைவுகளும், பணத்திற்கு ஆசைப்பட்டு அனுமதி கொடுக்கப்பட்டதம் பிரதானமான காரணியாக இவை அமைந்திருக்கின்றன.
நதிகளும், ஆறுகளும் தன் நிலையில் இருந்து குடிமனைக்குள் புகுந்தமைக்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் செய்த செயற்பாடுகள் தான் மிகப் பிரதானமாக மாறியிருக்கிறது. கட்டடங்கள் கட்டப்படவேண்டிய இடங்களில் கட்டியிருந்தால் வெள்ளம் இலகுவாக வடிந்தோடியிருக்கும்.
அனர்த்தத்தின் விளைவுகளை முடியுமானவரை குறைத்திருக்க முடியும். ஆனால், சட்டவிரோதமான கட்டடங்களை இவர்கள் கண்டும் காணாமலும் இருந்ததன் விளைவை இன்று தென்னிலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் விவசாயத்திற்கும், தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கும் மன்னர்கள் கட்டிய குளங்கள் தான் மிக முக்கிய பங்காற்றியிருந்தன. ஆனால் அந்தக் குளங்களில் இருந்து வெளியேறிய வெள்ளம் தான் மக்களை இன்று கொன்றும், நிர்க்கதி நிலைக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.
முறையான வடிகால்களின் அமைப்போடும், மதகுகளின் சிறப்புக்களோடும் கட்டிய குளங்கள் இன்றும் பாதுகாப்பான முறையில் தான் இருக்கின்றன. ஆனால் இன்றைய அதிகாரிகள் அவற்றை பராமரிக்காமலும், கண்டு கொள்ளாமலும் விட்டதன் விளைவினை இன்று அனுபவித்துக் கொண்டிக்கிறோம்.
எது எவ்வாறாயினும் இலங்கையின் கறுப்பு மாதமாக மே மாதம் மாறியிருக்கிறது. அது முள்ளிவாய்க்காலாகட்டும், தெற்கின் வெள்ளப்பெருக்காகட்டும். இரண்டிலுமே அனர்த்தத்தை சந்தித்தது இலங்கையர்கள் தான்.
அரசும், அரச அதிகாரிகளும் பொறுப்போடு செயலாற்ற வேண்டும். மக்களின் மனங்களில் வேதனை நிலை கொண்டால் அரசனால் நின்றி நிலைத்து ஆட்சி செய்ய முடியாது. கவனம்.